Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

சமூகப் பாதுகாப்பில் முதலிடம் வகிக்கும் நாடு
எஸ்.கண்ணன்

உலகமயமாக்கல், தனது கருத்தரித்த காலத்திலேயே உலை வைத்தது சமுகப் பாதுகாப்பு ’ எனும் அணுகுமுறையைத் தான். உலகம் முழுவதும் ‘அமர்த்து பின் துரத்து’ (Hire and Fire) கொள்கைப் பிரகடனத்திற்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கையே மூலகாரணம். பென்சன், விடுமுறை, பணிக்கொடை, தொழிலாளர் வைப்பு நிதி போன்றவற்றை வைத்தது போதாது என்று, பொது விநியோகத்திட்டம், பொதுக்கல்வி, பொதுசுகாதாரம் போன்றவற்றையும் ஒழித்து கட்டும் வேலையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் 1961ல் இருந்து 46 ஆண்டுகளாக பொருளாதாரத் தடையை அனுபவித்து வரும் கியூபா, ஒரு போதும் மக்களின் சமுகப்பாதுகாப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கவில்லை என்பதை நேரடியாகப் பார்க்க முடிகிறது.

கியூபாவில் நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர், தற்காலிக பணியாளர் என்ற ஏற்பாடே இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் கியூபாவில் பிரமாண்டமான ஹோட்டல்களைக் கட்டினாலும், தொழிலாளிகள் மீதான முழு கட்டுப்பாடும் அரசினுடைய சுற்றுலாத்துறையிடம் தான் இருக்கிறது. பன்னாட்டு தொழில் அதிபர்களுக்கு அதிகாரம் துளியும் இல்லை. வாடகை கார், ஆட்டோ போன்ற ஓட்டுநர்கள், அல்லது உரிமையாளர்கள் என யாராக இருந்தாலும், கியூபாவின் பொது விநியோக முறை மூலம் பயனடையும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து கியூப மக்களுக்கும் மிகப் பெரிய பொக்கிஷமாக விளங்கி வருகிறது.

நாங்கள் தங்கியிருந்த ஜூலியோ அந்தோனியா மேளா சர்வதேச முகாமில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ரோலன்டோ டயஸ். 43 வயதாகும் இவர் ராணுவத்தில் பணியாற்றி, விபத்து காரணமாக இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தவர். தற்போது மெக்கானிக்கல் இஞ்சினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். முகாமில் பெயிண்ட் அடிப்பதும், தோட்ட வேலை செய்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். படிப்புக்காக வாரம் இரண்டு நாளும் அவர் பணிபுரியும் இடத்தில் பணி நாளாக கருதப்படுவதுடன், சம்பளமும் தரப்படுகிறது. இவர் போல் உள்ள எல்லோருக்கும் இந்த உத்திரவாதம் இருக்கிறது. பெரும்பான்மையான நாட்களில் முகாமிலேயே காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேலை உணவினையும் பூர்த்தி செய்து கொண்டாலும், அரசு மானியவிலையில் தருகிற கூப்பன்களையும் பயன்படுத்துகிறார்.

கியூப நாட்டில் உள்ள பொதுவிநியோக கூப்பன் ஒவ்வொரு தனி நபரையும் கணக்கிட்டு கொடுக்கப்படுகிறது. குடும்பத்தை மையப்படுத்தி அல்ல. அதாவது, ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு மாதத்தில், 6 பவுண்ட் அரிசி (1பவுண்ட் =சுமார் 3கிலோ) 6பவுண்ட் சர்க்கரை, 3 பவுண்ட் பயறு வகைகள், 1பவுண்ட் சிக்கன், மீன் மற்றும் பன்றி கறி, 5 பவுண்ட் உருளை, மரவள்ளி, சக்கரைவள்ளி கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், 10முட்டை, 2குளிக்கிற சோப்பு, ஒரு துணி துவைக்கிற சோப்பு, ஒரு காஃபிபவுடர் பாக்கட், ஒரு பற்பசை பாக்கட் இவை அனைத்தும் அந்த நாட்டின் நாணய மதிப்பான 10 பெசோவிற்கு தரப்படுகிறது. நமது நாணய மதிப்பின் படி 20 ரூபாய்.

கியூபாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது போன்ற பொருள்கள் மேற்படி 10 பெசோவிற்கு வழங்கப்படுகிறது. முகாமில் பணிபுரியும், ரோலண்டோ துவங்கி பலரும் இந்த பொது விநியோக முறையை அனுபவித்து வருவதாக சொல்கிறார்கள். மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு 1991ல் கியூப தேசம் தள்ளப்பட்ட போதும், இந்த விநியோக முறையில் எந்த மாற்றத்தையும் கியூபா அரசு செய்யவில்லை. கியூபாவின் மூலையில் அல்லது மலைப்பிரதேசங்களில் இருப்பவர்களின் கல்வியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு மாணவனைக் கொண்ட பள்ளிகள் கியூபாவில் 122 உள்ளன. 1068 பள்ளிகள் 6 முதல் 8 மாணவர்களைக் கொண்ட பள்ளியும், 1032 பள்ளிகள் 8 முதல் 10 மாணவர்களைக் கொண்ட பள்ளிகளாகவும் இயங்குகின்றன. இவற்றை வேறு பள்ளிகளுடன் இணைக்க கியூப கல்வித்துறை விரும்பவில்லை. அப்படி இணைக்கிற முயற்சி அந்த மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடுமோ என தயங்குகின்றனர். நமது நாட்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் தான் உண்டு. சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருவதாக, தமிழகத்தில் ஒரு அறிக்கை சொல்கிறது,

கியூபாவினுடைய போக்குவரத்து செயல்பாடு கடும் சிரமத்திற்கிடையில் தான் இயங்குகிறது. 1991 ல் சோவியத் பின்னடைவு ஏற்பட்டதில் இருந்து 2002 வரையிலான காலத்தை சிறப்பு காலகட்டம் என்கின்றனர். அந்த காலகட்டத்தில் கியூபாவின் நிலைமை படுமோசமாக இருந்துள்ளது. அப்போது அரசு வாகன ஓட்டுனர்களுக்கு வாகன வசதியின்றி சாலையோரத்தில் நிற்கும் மக்களைக் கண்டால், வாகனத்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதாகும். அது இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. அரசுத் துறை அதிகாரிகள் சென்றாலும், நிறுத்தி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பது விதியாக்கப்பட்டுள்ளது. இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்காக காவல் துறை ஊழியர்களும். சமுகப்பணியாளர்களும் பணிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மின்பற்றாக்குறை மிகக்கடுமையாக இருந்தபோது, மின்சாரத் திருட்டு நடந்ததாக ஒப்புக் கொள்கின்றனர். இதைத் தடுக்க அரசு 37 ஆயிரம் சமுகப் பணியாளர்களை பணியமர்த்தி இன்று வரை செயல்படுத்தி வருகிறது. பற்றாக்குறை ஏற்பட்ட மேற்படி காலத்தில் சிலர் லஞ்சம் வாங்கத் துவங்கியதையும், இன்றும் ஒரு சில இடங்களில் இருப்பதையும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், சமுகப் பணியாளர் என்கிற இளைஞர்படை மூலம் இவற்றைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறது கியூப அரசு. 37 ஆயிரம் சமுகப் பணியாளர்களில் 72 சதமானோர் இளம் பெண்கள் ஆவர். இவர்கள் தண்டிக்கிற பணியைச் செய்யவில்லை. மக்களிடையே கற்பிக்கிற பணியைச் செய்கின்றனர். தவறுகளைத் திருத்துகின்றனர். உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக கியூபாவில் இதைப் பார்க்க முடிகிறது. மின் பற்றாக்குறை இருந்த மேற்படி 10 ஆண்டுகளில், இத்தகைய சமுகப்பணியாளர்களின் செயல்பாடு மூலமாக கியூப அரசிற்கு 20 பில்லியன் டாலர் (20 ஆயிரம் கோடி டாலர்) சேமிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இப்படிப் பல செயல்களில் சமுகப் பாதுகாப்பு இருக்கிற நாடாக கியூபா விளங்குகிறது.

நமது நாட்டில் மட்டுமல்ல: உலகம் முழுவதும் நகர்மயமாதல் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அதில் முன்னணியில் இருக்கிறது. தமிழகம் இரண்டாவது மாநிலமாக இருக்கிறது. கியூபாவில் ஹவானா தான் மிகப்பெரிய நகரம். 14 மாகாணங்களின் தலைநகர்களும் ஓரளவு பெரிய நகரம். அங்கிருக்கும் நகராட்சிகள் மிக அதிகமான வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது. நகராட்சி தான் கடைக்கோடி நிர்வாக ஏற்பாடாக இருக்கிறது. நகராட்சியில் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அரசு வேலைகள் அனைத்தும் அருகாண்மைப் பகுதி அல்லது நகராட்சிக்குள்ளேயே கிடைக்கும் வகையில் அரசு நிர்வாக ஏற்பாடுகள் இருக்கிறது.

உதாரணத்திற்கு மருத்துவமனை ஊழியர் இடமாற்றி பணியமர்த்தப்படுகின்றனர். அதையும் மீறி ஒரு ஊழியர் பெரும் நகரத்திற்கு செல்ல விரும்பினால், முதலில் தனக்கான வீட்டினை உறுதி செய்த பின் தான் இடம் பெயர முடியும். வீடின்றி சிரமப்படுவதை அரசு அனுமதிப்பதில்லை. நாங்கள் ஹவானா நகரில் 12 மாடி குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அந்த குடியிருப்பின் கீழ்தளத்திலேயே. ரிஜிஸ்தர் அலுவலகம் இருக்கிறது. வீட்டு வசதி வாரியத்தின் கீழ் நிர்வாகம் இயங்குகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த, வேறு வரிகள் கட்ட, வீடு விற்க அல்லது வாங்க, இதரத் தேவைகளுக்கு என பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் பரவலான நிர்வாக முறை காரணமாக மக்களுக்கு அலைச்சல் இல்லை.

நாங்கள் கைமிட்டோ நகராட்சியின் ஹவானா நகரத்தில், மடான்சாஸ் நகராட்சியின், வராதரோ நகராட்சியின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தோம். ஒரு இடத்திலும் குடிசை வீடுகளைப் பார்க்க இயலவில்லை. ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் ஓரளவு இருந்தாலும், அனைவருக்கும் வீடு இருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது. நாங்கள் சந்தித்த தொழிலாளி ரோலண்டோ டயஸ் இரண்டு படுக்கை அறை, ஒரு பெரிய அறை, சமையலறை, உணவு உண்ணும் அறை என்ற வசதிகளுடன் கூடிய வீட்டினைக் கொண்டிருக்கிறார். இதற்காக 6000 பெசோக்கள் செலவிட்டிருக்கிறார். 5000 பெசோக்களை அரசிடம் கடனாக வாங்கி திருப்பிச் செலுத்தியிருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும், டி..வி., ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் போன்றவை இருக்கிறது. அரசு மானிய விலையில் அல்லது கடனாகக் கொடுக்கிற வழக்கம் அங்கிருக்கிறது.

இவை அனைத்தையும் அரசு சமுகப்பாதுகாப்பு (Social Security) திட்டத்தின் கீழேயே செயல்படுத்துகிறது. கல்வி, மருத்துவம், சமுகப்பாதுகாப்பு ஆகிய மூன்றுக்கும் மொத்தமாக 63 சதமானம் தொகையை ஒதுக்கீடு செய்வதாகச் சொல்கிறார்கள். ராணுவத்திற்காக நமது நாட்டில் செலவிடுவதுபோல் இல்லை. கியூபாவைப் பொறுத்தவரை நாட்டு மக்களே ராணுவம் என்பதால், மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com