Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

மும்பை ஓர் எச்சரிக்கை மணி
எஸ்.கண்ணன்

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்
நான் மறுப்பேதும் கூறவில்லை
நான் யூதனில்லை என்பதால்
அடுத்து அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தனர்
நான் மறுப்பேதும் கூறவில்லை
நான் கம்யூனிஸ்ட் இல்லை என்பதால்
பின்னர் அவர்கள் தொழிற்சங்சவாதிகளுக்காக வந்தனர்
நான் மறுப்பேதும் கூறவில்லை
நான் தொழிற்சங்கவாதி இல்லை என்பதால்
பின்னர் அவர்கள் கத்தோலிக்கர்களுக்காக வந்தனர்
நான் மறுப்பேதும் கூறவில்லை
நான் கத்தோலிக்கனில்லை என்பதால்
பின்னர் அவர்கள் எனக்காக வந்தனர்
ஒருவரும் மீந்திருக்கவில்லை
எனக்காக பரிந்து பேச
- பாஸ்டர் மார்டின் நீமில்லர்.

இந்தக் கவிஞர் ஒரு பாதிரியார், அறிவுஜீவி, 1930களில் ஜெர்மனியில் நாஜி வன்முறையில் பாதிக்கப்பட்டார். உண்மையை உலகம் உணரச் செய்த இக்கவிதையை எழுதியவர். ஜெர்மனியில் பொருளாதாரம் பெரு மந்த நிலைக்குச் சென்று, தொழிலாளர்கள் பிழைப்புக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, மிகக் குறுகிய இனவெறி நாஜிக்களால் தூண்டப்பட்டு, பாசிசத்தை நிறைவேற்றும் சக்திகளாக, ஆயுதங்களாக, மாற்றப்பட்டனர்.

இந்தியத் துணைக்கண்டம் மும்பையில், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக, ராஜ் தாக்கரே, தன் சகாக்களுடன், கொளுத்துவது, எரிப்பது, அழிப்பது என இறங்கியிருக்கிறார். வடஇந்தியர்களுக்கு எதிராக மராட்டியர்களின் போராட்டம் என, மற்ற இன மக்கள் வேடிக்கை பார்க்கலாமா? 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். பால் தாக்கரே சிவசேனாவின் ஸ்தாபகர், 1960களில் சிவசேனாவை உருவாக்குகிற போது, மண்ணின் மைந்தர்களுக்கான இயக்கம் என அறிவித்தார். பின்னர் தென்னிந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்தார். தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அடித்து விரட்டப்பட்டனர்.

இத்தகைய கடந்த கால வன்முறை நிகழ்வுகளுக்கும், இன்றைய ராஜ்தாக்கரேவின் ‘நவ நிர்மான் சேனா’வின் தாக்குதல்களுக்கும் வித்தியாசம் இல்லை. ராஜ் தாக்கரே, பால் தாக்கரேவின் மருமகன், குடும்பச் சண்டை இப்போது விஸ்வரூபம் எடுத்து கலகம் நடத்திக் கொண்டிருக்கிறது என மிகச் சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். சிலர் அப்படித்தான் பேசுகின்றனர். ‘‘பால்தாக்கரே, உத்தவ் தாக்கரேவுக்கு இடம் கொடுத்ததால், ஆத்திரம் அடைந்த ராஜ்தாக்கரே, வெளியேறி கலகம் செய்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்’’ என்கின்றனர். ஒரு வேளை இருக்கலாம்.

ஆனால் செயல், பிரச்சாரம், கொள்கை அனைத்தும் இனவாதத்தை முதலீடாகக் கொண்டது தான். ராபர்ட் ஓ பாக்ஸ்டன் குறிப்பிட்டதைப் போல், பாசிசம் ‘‘உணர்ச்சிகளைத் திரட்டுவதை’’ மையமாகக் கொண்டது. இந்தியாவில், இந்துத்துவா தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்து உணர்ச்சிகளைத் திரட்டும். இஸ்லாமியர்களைக் குறிவைத்தார்கள், என்பதற்காக, கிருத்துவர்களையும், இந்துக்கள் என்றழைக்கப்படுபவர்களில் தாழ்ந்தோரையும் விட்டு விடுவார்கள், என நம்ப வேண்டாம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் கௌகாத்தியில் ‘‘இந்திய நாய்களே வெளியேறுங்கள்’’ என கோஷமிட்டதும், அடிப்படைவாதம் தான். பஞ்சாபில் ‘‘காலிஸ்தான்’’ என முழங்கியது, காஷ்மீர், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னுக்கு வந்த இனவாதமும் அடிப்படைவாதம் தான். இவை அனைத்தும் ஆயுதம் தாங்கிப் போராடி, எண்ணற்ற இழப்புகளை உருவாக்கி, சமாதானம் கண்டவை. இப்போதும் சில பிணக்குகள் இருக்கலாம். அது அரசு நிர்வாகத்திற்கு எதிரானது. இன்னும் ஜனநாயகப் பூர்வமான தன்மையில், கூடுதல் உரிமைகளையும், வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி அணுகினால் சரி செய்யக் கூடிய பிணக்குகள்.

ஆனால், மகாராஷ்ட்ராவில் செயல்படும் சிவசேனாவும், நவ நிர்மான் சேனாவும், அரசுக்கு எதிராகப் போராடத் தயாரில்லை. அரசைக் கைப்பற்ற ஜனநாயகத் தளத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதில் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்களை உணர்ச்சி மயமாக்கித் திரட்டுகிறது. உணர்ச்சி மயமாக்கிட ‘‘வேலை இல்லை, வீடில்லை, அமிதாப் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்கின்றனர்.’’ என்பன போன்ற கோஷங்களை முன்வைக்கின்றனர்.

தேசிய அளவிலானால் இஸ்லாமியர்களுக்கும் கிருத்துவர்களுக்கும் எதிராக இதர இந்துத்துவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயாராகவும் இருப்பர். கடந்த ஒரு மாத காலமாகப் போராடி வரும் ராஜ்தாக்கரே, ஒரு முறையும் வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசின் கடமை என்றோ, மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை. அப்படியானால் தாக்கரேவின் வேலை வாய்ப்பு குறித்த முழக்கம் தீர்வை தராது என்பது வெளிப்படை.

1998 முதல் அதே மகாரஷ்ட்ராவில், வேறு மாநிலத்தவர் எவரும் பெரிய அளவில் இல்லாத, முழுக்க முழுக்க மராட்டியர்கள் வாழ்கிற பகுதியான விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனரே, அதற்கு யார் காரணம். இறந்து போன இரண்டரை லட்சம் விவசாயிகளில், இரண்டு லட்சம் பேர் மராட்டியர்கள். இந்த விஷயத்தில் குரல் கொடுப்பதும் மராட்டியர் நலன் சார்ந்த ஒன்றாகத் தானே இருக்கும், என்பதை தாக்கரேக்கள் ஏன் உணரவில்லை. இங்கு பிற மாநிலத்தவரின் போட்டியின்றி செத்துப் போவது திட்டமிட்டு அனுமதிக்கப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் விதர்பாவில், நாசிக் மாவட்டத்தில், கயர்லாஞ்சி கிராமத்தில் பையாலால் போட்மாங்கேவின் குடும்பமே நிர்வாணமாக்கப்பட்டு, பொது மக்கள் சாட்சியாக அசிங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்களே அப்போதும் தாக்கரேக்கள் அமைதி காத்த மர்மம் என்ன? அது ஓரு மராட்டியன் இன்னொரு மராட்டியனைத் தாக்கிய கதை, என்று பார்க்கப்பட்டது. ஒரு தாழ்த்தப்பட்டவனை கொடுமைக்கு உட்படுத்தியதாக சொல்லப்படவில்லை. சொல்லப்படக் கூடாது என்பது தான் சேனாக்களின் கோட்பாடு.

மேற்படி இரண்டு சம்பவங்களிலும் இனவாதம் பேசாத தாக்கரே கூட்டம் மும்பை நகரத்தை மையப்படுத்துவதும், பிற மாநிலத்தவர் காரணமாக மராட்டியர் பிழைப்பை இழக்கின்றனர் என்பதும் பாசிசத்தின் தந்திரோபாயம். இந்த தந்திரோபாயத்தை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இரண்டும் எப்போதும் உணருவதில்லை. மாறாக இது உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.கவிற்கு எதிரான ஓட்டாக மாறும், தங்களுக்குச் சாதகமாக அமையும் என, வழக்கம் போல் தப்புக் கணக்கு போடுகிறது.

பால் தாக்கரே தன்னுடைய சேனா பணியைத் துவங்கிய போது, இடதுசாரி தொழிற்சங்கங்களை அழிக்கப்பயன்படும் என காங்கிரஸ் அன்றைய தினம் கருதியது. அதில் ஓரளவு உண்மையும் உண்டு. அமுல்யா கங்குலி குறிப்பிடுகிறார். உண்மையில் இது போன்ற கலவரங்கள் பாசிசத்தின் தந்திரோபாயங்களுக்கு தான் துணை புரிந்துள்ளது. 1992 க்குப் பிந்தைய கலவரங்கள் மகாராஷ்ட்ராவில் சிவசேனை மற்றும் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.

காங்கிரஸிற்கு சாதகமாக மாறும் வாய்ப்பு இல்லாதது ஏன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆட்சியாளர்கள் தீர்க்கத் தவறிய பிரச்சனைகள் காரணமாக குறுகிய இனவாதத்தை முன்வைத்து உணர்ச்சி வசப்படுத்த முடியும் என்பது கடந்த கால வரலாறு. இத்தகைய வரலாற்று அனுபவங்களில் இருந்தே காங்கிரஸை எச்சரிக்கை செய்ய வேண்டிய தேவை முன்னுக்கு வந்துள்ளது.

உழைக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக அணிதிரட்டப்படவில்லையனில் பாசிசத்திற்கு ஆதரவாக திரட்டப்படுவார்கள் என்பதை, லண்டனைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இடம் பெயர்தலைப் பற்றிய அறிக்கையை, சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் சமர்பித்த போது, எச்சரித்துள்ளனர். ஆம் மும்பை ஒரு எச்சரிக்கை மணி என்பதை உணர வேண்டும். இல்லையெனில் இடதுசாரிகள் முன் வைத்த மக்களுக்கான கோரிக்கையை சேனாக்கள் பாசிச இனவெறிக்கு பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com