Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

இறப்பிலும் இணைபிரியா போராளிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவரும் சிஐடியு மாநிலத் தலைவர்களில் ஒருவரான தோழர்.சி.கோவிந்தராஜன் 26.1.2008ல் காலமானார். அவரின் மறைவு தொழிலாளிவர்க்கத்திற்கு பேரிழப்பாகும். தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் சி.கோவிந்தராஜன் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று தென்னாற்காடு மாவட்டம் பெருமாத்தூரில் பிறந்தார்.

புவனகிரியில் மாணவர் சங்கத்தை அமைக்கும் பணியில் கோவிந்தராஜன் ஈடுபட்டார். சிறிது காலத்திற்குள் அவருக்கு கட்சித் தலைமையிடமிருந்து மற்றொரு தகவல் வந்தது. அவர் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிலாளரிடையில் வேலை செய்து அங்கே சங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அந்தத் தகவல் கூறியது. கோவிந்த ராஜன் உடனே அந்த ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார். நிர்வாகப் பிரிவில் அவருக்கு பணி தரப்பட்டது. அதைச் செய்து கொண்டே அங்கிருந்த தொழிலாளர் சங்கத் தலைவர்களுடனும், தொழிலாளிகளுடனும் நன்றாகப் பழகி அவர்கள் நம்பிக்கையைப் பெற்றார். 1943ம் ஆண்டில் பாரி ஆலை தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பொருட்டு தனது நிர்வாகப் பிரிவு பணியை அவர் ராஜினாமா செய்தார். அவர் செயலாளரானவுடன் அந்த ஆலைக்குள் நிலவிய தீண்டாமையை ஒழித்தார். அங்கே அலுமினியப் பாத்திரத்தில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிகளுக்காகவும், இதர மேல் சாதி இந்துக்களுக்காக பித்தளைப் பாத்திரத்திலும் தனித்தனியாக குடிநீர் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாகுபாட்டை போக்க வேண்டுமென்று நிர்வாகத்திற்கும், அரசாங்கத்திற்கும் அவர் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் பதில் எதுவும் இல்லை. எனவே, தொழிலாளிகளிடம் தனித்தனியாகப் பேசி இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தார். அனைவருக்கும் ஒரே பித்தளைப் பானையில் குடிநீர் வைக்கப்பட்டது.

1953ம் ஆண்டில் கோவிந்தராஜன் நெய்வேலியில் சங்கத்தை உருவாக்கினார். ‘‘பழுப்பு நிலக்கரி தொழிலாளர் சங்கம்’’ என்ற பெயரில் இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் நெய்வேலி சங்கத்தின் வளர்ச்சிக்கு கோவிந்தராஜன் அரும்பாடுபட்டார். பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகாலம் பாடுபட்டார்.

1977 மற்றும் 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோயின் காரணமாக அவரது இடதுகால் துண்டிக்கப்பட்டது. அதையும் பொருட்படுத்தாது அவர் கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கங்களுக்கும் வழி காட்டி வந்தார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னாற்காடு மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் ஷாஜாதி காலமானார். அவருக்கு வயது 80. இவர் நெல்லிக்குப்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் சி.கோவிந்தராஜனின் துணைவியாவார். அவரது மறைவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ரயில்வே தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த ஷாஜாதி, 1944 ல் ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1948ல் கொல்கத்தாவில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற மூவரில் தோழர் ஷாஜாதியும் ஒருவர். இதற்காக இவர் போலீஸாரால் தேடப்பட்டவர். 1948 ம் ஆண்டு முதல் 2 வருடம் தலைமறைவு வாழ்க்கையும், 1950ல் போலீசாரால் கைது செய்யப்பட்டு 1952ம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் சிறைவாழ்க்கையும் அனுபவித்துள்ளார்.

1952 ம் ஆண்டு இவரும், தோழர் சி.கோவிந்தராஜனும் காதல், கலப்பு திருமணம் செய்து கொண்டனர். கே.பி. ஜானகியம்மாளைத் தலைவராகக் கொண்டு தமிழக ஜனநாயக மாதர் சங்கம் உருவானபோது அவர் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மாதர் சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். தோழர் சி,கோவிந்தராஜன் கடந்த ஜனவரி 26ம் தேதி காலமானார். தோழர் ஷாஜாதி கோமா நிலையில் இருந்ததால் தனது அன்புக் கணவரின் முகத்தைக் கூடக் கடைசியாகக் காண முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 6 மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் 29.01.2008 அன்று காலமானார்.

மாத்திரைகளால் கல்லீரல் பாதிப்பு

நோவார்டீஸ் நிறுவனத்தின் வலி நிவாரண மாத்திரைகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டு பல நாடுகளில் அந்த நிறுவன மாத்திரைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மருந்துக் கடைகளில் இந்த நோவார்டீஸ் நிறுவன வலி நிவாரண மாத்திரைகள் தாராளமாகக் கிடைத்து வருகின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த மாத்திரைகளை உட்கொண்ட இருவர் உயிரிழந்தனர். இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாம். எனவே உடனடியாக நோவார்டீஸ் மாத்திரைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இதே போல நியூசிலாந்து அரசும் தடை விதித்தது.

ஐரோப்பிய நாடுகளில் நாளொன்றுக்கு நூறு மில்லி கிராம் அளவுள்ள நோவார்டீஸ் மாத்திரைகளை மட்டும் அனுமதித்து வந்தனர். அங்கும் கல்லீரல் பாதிப்புப் பிரச்சினைகள் முன்னுக்கு வந்தவுடன் பிரிட்டன், ஜெர்மன் ஆகிய நாடுகள் இந்த மாத்திரைகளுக்குத் தடை விதித்து விட்டன. எலும்பு, மூட்டு வலி, பல் வலி மற்றும் பெண்களுக்கு மாத விடாய் கால வலிகளுக்கு நிவாரணியாக இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாம். கல்லீரலை விலை கேட்கும் நோவார்டீஸ் மாத்திரைகளுக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்படுமா?

(டவுன் டூ எர்த்தில் இருந்து என்.டி.எம் - பிப்.2008)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com