Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

பொருளாதாரம் - நிர்பந்த வியாபாரம்
எம்.ஏ.தேவதாஸ்

இன்றைய உலகத்தில், பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டங்களில் அதிகமாகப் பேசப்படுவது பன்னாட்டு ஒப்பந்தங்கள், நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு, நிறுவனங்களை உடைமையாக்குவது போன்றவை. இத்தகைய நிகழ்வுகளில் பெரும் இந்திய வர்த்தக நிறுவனங்கள் அல்லது அரசே நேரடியாகப் பங்கு கொள்கின்றன. வர்த்தக நிறுவனங்களின் இலக்கு லாபம் ஈட்டுவதே. பொறுப்புள்ள அரசும் இந்த வழியைப் பின்பற்றுவது அவசியம் தானா? அது தனது பிரஜைகளின் நலன்களைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டாமா?

தன்னிச்சையான பல அரசுகள், குறிப்பிட்ட சில வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களின் அடிப்படைத் தேவைகளை மதிக்காமல் நடந்து கொள்ளும் பல உதாரணங்கள் நம்மிடையே உண்டு. ஆயின் ஒவ்வொரு குடிமகனின் நலனும் காக்கப்படுவதில், சாதி, சமய, நிற, சமுக பேதங்களின்றி செயல்படும் பெரும் பொறுப்பு நாகரிக அரசுகளின் தலையாயக் கடமையாகும். நாட்டின் பாதுகாப்பு, நலன் மற்றும் பெருத்த பொதுச் செலவுகள் பிடிக்கும் பெரும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடு முன் அரசு, அவ்வொப்பந்தங்களின் நிபந்தனைகள் மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் நம் நாட்டிற்கு பொருந்தக் கூடியவைதானா, அனைத்து மட்டங்களிலும் பாதிப்பின்றி ஏற்கப்படக்கூடியவைதானா என்பதை எதிர்காலக் கண்ணோட்டத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் முடிவெடுக்க வேண்டும்.

இந்தக் கட்டுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள 123 ஒப்பந்தத்தின் ஒரு இணைப்பாகப் படிக்கலாம். இதனை ஒரு ஒப்பந்தம் எனக் கூறுவதே சரியல்ல. ஏனெனில் ஒரு ஆவணத்தின் அம்சங்கள் அனைத்தும் இருதரப்பினராலும் பரஸ்பரம் ஏற்கப்பட்டு சட்டப்படி கையெழுத்திடப்பட்டால் மட்டுமே அது ஒரு ஒப்பந்தமாகிறது. இக்கட்டுரை அணுசக்தியின் பொருளாதார அம்சங்கள் பற்றியும், அன்பளிப்பாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் பற்றியும் ஒரு சாதாரணக் குடிமகனின் கண்ணோட்டத்தில் காண முற்படுகிறது. அணுசக்தி என்றாலே அதனுடன் இணைந்துள்ள ஆபத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியும் நாமறிவோம். நம்நாட்டில் பலருக்கு அணுசக்தியின் பொருளாதார அம்சங்கள் பற்றிய பல உண்மைகள் தெரியாமலிருக்கலாம்: அணு உலைகளின் கதிர் வீச்சு கொண்ட கழிவுகளின் மேலாண்மை, அணு உலைகளைப் பிரிப்பது, வியாபார நோக்கில் கணக்கிடப்படும் அபாயம் குறித்த காப்பீடு போன்றவை பெரும் செலவு பிடிப்பவை என்பது குறிப்பிடத் தக்கது.

அணு உலைகளை நிர்மாணிப்பது மிகவும் அதிகச் செலவுபிடிக்கும் விஷயம் என்பது நமக்குத் தெரியும். தற்போதுள்ள தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் அணுமின்சக்தி மற்ற வழக்கமான முறைகளில் தயாரிக்கப்படும் மின் சக்தியைவிட அதிகச் செலவு பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நம்நாட்டைப் பொறுத்தளவில் அணுமின்சக்தி தயாரிப்பிற்கான எரிபொருள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதால் மிகவும் கூடுதலான செலவு செய்ய நேரிடும். தற்போதுள்ள ராஜஸ்தானில் கைகாவில் உள்ள அணுமின்நிலையம் 3 மற்றும் 4, தாராப்பூரில் உள்ள அணுமின்நிலையம் 3 மற்றும் 4 ஆகியவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ஆகும் செலவு ரூ.2.70 - 2.95. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யவிருக்கும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு ஆகும் செலவு சுமார் ரூ.2.90 அளவில் இருக்கும் என அணுசக்தித்துறை மதிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அணுமின் உற்பத்திக்கும் இதரவகை மின் உற்பத்திக்கும் இடையே பெரும் செலவு வித்தியாசம் உள்ளது. மேலும் அணுமின்சக்தியின் செலவு பல்வேறு காரணங்களால் கூடுவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. அதே சமயம் அரசால் ஏற்கப்பட்டுள்ள மிகப் பெரிய அனல் மின் நிலையங்களுக்கான திட்டங்களில், உற்பத்தியாகும் மின்சாரத்திற்கான செலவு, அணு மின்சக்திக்கு ஆகும் செலவில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிட்டத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மத்தியப்பிரதேச அனல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்நிறுவனம், 1 யூனிட்டிற்கு ரூ.1.19 எனும் விலையில் விற்பனை செய்யவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் விவாதங்களில் சாதாரண மனிதன் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் (மேற்கூறியவாறு) ஒருபோதும் விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.

நமக்கு அணுமின் உற்பத்திக்கான சாதனங்களை ஏற்றுமதி செய்யப்போகும் நாடுகள் இது விஷயத்தில் தம் பொருளாதாரத்தை எப்படிக் காக்கின்றன எனப் பார்ப்போம். 123 ஒப்பந்தத்தில் நம்நாட்டுடன் இணைந்து கையெழுத்திடப்போவது அமெரிக்கா. நம் நாட்டில் அணுமின்நிலையங்களை அமைக்கவே இவ்வொப்பந்தம் என்பது நாமறிந்ததே. ஆயின் அமெரிக்காவில் 1970க்குப் பின்னர் ஒரு அணுமின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. அணுமின் சக்தியின் மிக உயர்ந்த விலையும், அதனால் ஏற்படக் கூடிய பொருளாதார நெருக்கடிகளையும் எண்ணியே அமெரிக்கா 1970க்குப் பின் திட்டமிட்டிருந்த 100 அணுமின் நிலையங்களைக் கைவிட்டுவிட்டது. அத்துடன் பென்சில்வேனியாவில் உள்ள “த்ரீ மைல் தீவில்’’ உள்ள அணுமின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்து அவர்களைத் தம் திட்டங்களைக் கைவிடக் காரணமாயிற்று.

2004 ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கணிக்கப்பட்ட அணுமின் சக்தியின் அடக்கவிலை 6.2 செண்டுகள் ஒரு யூனிட்டிற்கு. இதுவே நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் அடக்கவிலை 3.3 - 4.5 செண்டுகள் ஒரு யூனிட்டிற்கு. மற்றும் இயற்கை வாயுவைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் விலை 3.5 - 4.5 செண்டுகள் ஒரு யூனிட்டிற்கு. மாசாசெட் தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வுகளும் இதனையே உறுதி செய்ததால் அமெரிக்கா தனது அணுமின் உற்பத்தித் திட்டங்களை பின்வாங்கியுள்ளது. மற்றுமொரு பிரச்சனையாக உலகின் யுரேனிய சேமிப்பு போதிய அளவினதாக இருக்காது என்பதை அமெரிக்கா முன்னறிந்தது. தற்போதைய யுரேனிய உற்பத்தி, தற்போதைய அணு உலைகளின் தேவையில் 65 சதவிகிதத்தையே பூர்த்தி செய்யவல்லது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கு பகுதியில் உள்ள தனது சொந்த யுரேனியச் சுரங்கங்களிலிருந்து யுரேனியம் எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அமெரிக்காவின் தேவை ஆஸ்திரேலியா, கனடா, நமீபியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது.

மேலும் அமெரிக்கா தனது யுரேனியத் தேவையில் 50 சதவீதம் ரஷ்யாவை நம்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2013ல் முடிவுறுவதால் அமெரிக்கத் தேவையில் பெரும் இடைவெளி ஏற்படும் நிலை உருவாகும். அத்துடன் இந்தியா, சைனா, ரஷ்யா ஆகியவையும் அணுமின் உலைகளை நிர்மாணிக்கும் மிகப்பெரிய திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இதற்கான எரிபொருளுக்காக அமெரிக்கா வழக்கமாக வாங்கும் நாடுகளையே நம்பும் நிலையும் உள்ளது. இவ்வாறு தேவை மிகவும் அதிகரிக்கையில் இருப்பு குறையுமாதலால் யுரேனியத்தின் விலை பல மடங்குகள் உயர்வது நிச்சயம். இந்தியா எரிபொருள் மட்டுமின்றி அணுமின் உற்பத்திக்கான கட்டமைப்புகளுக்கும் இதர நாடுகளையே சார்ந்திருப்பதால் ஆகக்கூடிய செலவு மிக அதிகமாயிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கையில் அணுமின்சக்தியின் ஒரு யூனிட் விலை மற்றவகை மின்சக்திகளைவிட பல மடங்கு கூடுதலாகவே இருக்கும்.

இந்தியாவில் அணுசக்தித் திட்டங்களுக்கு உதவி செய்திருக்கும் ரஷ்யாவை எடுத்துக் கொள்வோம். ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட 4 அணு உலைகளை கூடங்குளத்தில் கட்டுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறது ரஷ்யா. இதற்கான ஒப்பந்தம் நமது பிரதமரின் சமீபத்திய ரஷ்ய விஜயத்தின்போதே தயார் நிலையில் இருந்தபோதும் ஏன் கையெழுத்திடப்படவில்லை என்பது விளங்காத புதிராக உள்ளது. இது அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் நடந்து வரும் பனிப்போரின் விளைவாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. ரஷ்யாவின் இந்த நிலைபாடு, அமெரிக்காவின் 123 ஒப்பந்தத்தைப் பின்னுக்குத் தள்ளும் என்று அமெரிக்கர்கள் கருதும் சாத்தியக் கூறுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது கூடங்குளத்தில் கட்டப்பட்டுவரும் இரு அணுஉலைகளுக்குத் தேவையான எரிபொருளை காலவரையின்றி அளிப்பதாக ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. ஆயின் மற்ற 4 அணு உலைகளைப் பற்றி பேசவே இல்லை. ஒரு சில நாடுகளின் சுயநலப்போக்கு எவ்வாறு இதர நாடுகளைப் பாதிக்கிறது என்பதையும், காலதாமதத்தினால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றி அந்நாடுகள் துளியும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இவர்களது தொடர்பில் ஏனைய நாடுகளில் செலவுகள் கட்டுக்கடங்காமல் பெருகியதையும் காண்கிறோம்.

பின்லாந்து நாட்டில் ஒரு புதிய அணுமின் உற்பத்தி நிலையம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் கூட்டு அமைப்பால் கட்டப்படுவது தற்போது 2 வருட காலதாமதத்தின் காரணமாக திட்டமிட்டதற்கு மேல் 2 பில்லியன் டாலர்கள் செலவில் (200 கோடி டாலர்கள்) தயாராகிவருவது இதற்கு ஒரு உதாரணம். நமது கூடங்குளம் திட்டமும் மிகுந்த காலதாமதமாகவே கட்டப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் இதனைக்கட்டும் ரஷ்யா பல முக்கியமான பாகங்களைத் தயாரிப்பதில் பெரும் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

மிகப் பெரிய பன்னாட்டு அமைப்புகள் தங்களது வியாபாரத்தை மிகுந்த சக்தியுடன் இதர நாடுகளில் திணிக்க முற்படுகின்றன. நம்நாடு யுரேனியம் அடிப்படையிலான அணுஉலைகளைப் பற்றிச் சிந்திப்பதைத் தவிர்த்து, உள்நாட்டிலேயே மிக அதிகமாகக் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி செயல்படும் அணுஉலைகளைக் கட்ட முயலவேண்டும். இந்தியாவின் உலக தோரிய அளவில் 25 சதவீதம் உள்ளதாக நம்பப்படுகிறது. எனவே நமது ஆராய்ச்சிகள் தோரியப் பயன்பாடு தொடர்பாக இருக்க வேண்டியது அவசியம். நிபுணர்களின் கருத்தின்படி, சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னும் 10 - 15 ஆண்டுகளில் நாம் இந்தத் தொழில் நுட்பத்தை நடைமுறைப்படுத்த முடிந்து விடும். அத்துடன் சூரிய சக்தி, காற்றுச் சக்தி, ஆகியவற்றின் பால் அதிகக் கவனம் செலுத்தி, அவை தொடர்பான ஆய்வுகளை பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும். இம் முயற்சிகளில் வெற்றி கண்டால் நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கத் தேவையின்றி சுயமாகவே மின்சக்தி உற்பத்தியில் தன்னிறைவு காண இயலும். மேலும், முக்கியமாக, இத்துறையில் உள்ள பன்னாட்டுப் பெரும் வணிக அமைப்புகள் நமது அரசை வசப்படுத்தாமல் தடுக்க வேண்டும்.

உலகின் ஜனத் தொகையில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தைக் கொண்ட நம்நாடு, அதுவும் குறிப்பிடத்தக்க சதவீதமக்கள் ஒரு நாள் உணவிற்கே படாதபாடுபட்டுக் கொண்டிருக்கையில், மேற்கூறிய மிகப்பெரிய செலவு பிடிக்கும் திட்டங்களை உரிய விவாதங்களும் சிந்தனைகளுமின்றி அமல்படுத்த முயல்வது தேவைதானா? என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. பல நூறுகோடிகள் பிடிக்கும் பிரம்மாண்டமான திட்டங்கள் டெல்லியில் உள்ள ஒரு சிலரால் முடிவு செய்யப்படக்கூடாது. இவை வெளிப்படையான விவாதங்கள் மற்றும் மொத்த ஜனத்தொகையின் ஒப்புதலும் பெறுவதே முழுமையான ஜனநாயகமுறை. இத்தகைய ஜனநாயக வழிமுறைகள் பலவிதங்களில் அலட்சியப்படுத்தப்படுவதை நாம் சமீபகாலங்களில் காண்கிறோம். இதன் விளைவு சமுதாயச் சீர்குலைவே.

மேலும் இந்தியக் குடிமக்களாகிய நாம் பெருமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வது நமது உரிமை. எந்த ஒரு நாட்டிற்கும் அதனை அடகு வைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எந்த அயல்நாட்டவரும் நம்மை அவர்களது சுயநலத்திற்கேற்ப கட்டுப்படுத்தக்கூடாது. எனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திடு முன், அவற்றின் வரிகளை மிகுந்த கவனத்துடன் படித்தறிந்து, அது வெளிப்படையானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும், மக்களுக்கும், நாட்டிற்கும் பயனுள்ளதுதானா என்பதையும் உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம். ஜனநாயக நாட்டில் மக்கள் குரலே அரசின் குரலாக எதிரொலிக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com