Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

சமுதாயத்தில் சரிபாதி
ஆர்.சந்திரா

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் தங்களது சமுக, பொருளாதார, அரசியல் அந்தஸ்து பற்றியும், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் விவாதித்து, கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் முக்கியமான தினமாகும். பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்த போதிலும், வன்முறைக்கு ஆளான போதிலும், பொதுவாழ்வில் தடம் பதிப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்தக் கருத்தை வலுவாக முன்வைத்துள்ளார் ஜார்ஜ் ஹெய்ன்.

தெற்காசிய நாடுகளில், பெண்கள் அரசியல் தலைவர்களாக செயல்படுவது நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவில், ஒரு புறம் பெண் கருக்கொலை/சிசுக்கொலை நடைபெற்றாலும், மறுபுறம் பொது வாழ்வில் பெண்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளும் இப்படிப்பட்ட மாற்றத்தை சந்திக்கிறது என்கிறார் ஜார்ஜ் ஹெய்ன். 2006 தொடக்கத்தில் சிலி நாட்டு அதிபராக மிஷைல் பேச்லெட் பதவி ஏற்றார்.

அர்ஜென்டினாவில் தற்போது பெண் அதிபர் கிறிஸ்டீனா பெர்னான்டஸ் பதவிக்கு வந்துள்ளார். பெரு நாட்டில் அதிபர் ஆலன் கார்சியாவை எதிர்த்த போட்டியில் லூர்ட்ஸ் ப்ளோரஸ் 2006ல் தோல்வி அடைந்தாலும் பிரபலமாக பேசப்பட்டார். 2006ல் ஜமைக்காவில் போர்ஷியா சிம்சன்மில்லர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள பராகுவேயில் ஒரு பெண் அதிபர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் அதிபர்களாக பதவி ஏற்பது அதிகமாகியுள்ளதென தோன்றலாம். ஆனால், இவர்களுக்கு நிறைய முன்னோடிகள் இருந்தனர் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். 1974ம் ஆண்டிலேயே அர்ஜென்டினாவில், 2ஆண்டுகள் இசபெல் என்ற பெண் பெரோன் என்ற பெண்மணி அதிபராக இருந்தார். அதே போல, தொண்ணூறு களில், நிகாரகுவாவின் அதிபராக வையலெட்டா சமோரா என்ற பெண்மணியும், பணாமா நாட்டில் மிரேயா மோஸ் கோசோவும், கயானா அதிபராக ஜெனட் ஜகன் என்ற பெண்ணும் பதவி வகித்துள்ளார். பொலிவிய ஜனாதிபதியாக மிகக் குறுகிய காலம் லீடா கெய்லர் என்ற பெண் செயல்பட்டுள்ளார். வேறு சில சிறிய நாடுகளிலும், பெண்கள் அந்நாட்டு தலைவர்களாக குறுகிய காலம் செயல்பட்டுள்ளனர். கரீபியத்தீவு பகுதிகளில், டொமினிகா நாட்டில் யூஜீனியா சார்ல்சும், ஹைத்தி தீவு அதிபராக எர்த்தா பாஸ்கல்ட் ரூலாட்டும் பதவி வகித்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் அர்ஜென்டினாவில் தான் முதன் முறையாக, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டது (30சதவீதம்). அதைத் தொடர்ந்து 13 நாடுகளில் இடஓதுக்கீடு செய்யப்பட்டது. சிலி நாட்டு ‘காபினெட்’ அமைச்சர்களில் 50 சதவீதம் பெண்களாகவே மிஷைல் பேச்லெட் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலம்பியா, ஈக்வடார், மெக்சிகோ போன்ற நாடுகளில் பெண் அமைச்சர்களுக்கு ‘மென்மையான துறை’களாக கருதப்படும் கல்வி, ஆரோக்கியத்தை தவிர்த்து, இராணுவம், அயல்துறை பொறுப்புகள் தரப்படுகின்றன. 1980ல் 20 அமைச்சர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தார். 2000ம் ஆண்டில், 6 அமைச்சர்களில் ஒருவர் பெண் என்ற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

1975ல் மெக்சிகோவில் நடைபெற்ற முதல் ஐ.நா. பெண்கள் மாநாட்டிற்கு கூட ஒரு ஆண் தலைமை தாங்க வேண்டும் என மாநாட்டிற்கு ஏற்படும் செய்தவர்கள் கூறினார்கள். இதை ஏதோ ‘ஜோக்’ என ஒதுக்கி விட முடியாது. ஆணாதிக்க/பெண்ணடிமை சிந்தனைகள் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளன என்பதையே அது எடுத்துக் காட்டுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை, பெண்கள், ஆண்களை விட கல்வியில் முன்னிலை வகிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில், பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது அதிகரித்த போதிலும் முக்கிய பதவிகளுக்கு வருவதில் நிறைய இடையூறுகள் உள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அதே நிலை தான். 2008ம் ஆண்டிலாவது அமெரிக்காவில் ஒரு பெண் அதிபராக வர வாய்ப்பு உள்ளதா என அரசியல் ஆய்வாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் பெண்கள் பல துறைகளிலும் தடம் பதித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டு கடந்த பின் ஒரு பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா ஆசியாவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியன் வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த ரஞ்சனாகுமார், ‘நபார்டி’ன் வங்கியின் இயக்குனாரகவும் செயல்பட்டவர், ஆண்கள் உலகம் எனக் கருதப்படும் துறைகளில் தடம் பதித்தவர். தற்போது இந்திய அரசின் கண்காணிப்பு கமிஷனராக பதவி ஏற்றுள்ளார். ‘‘நான் ஒன்றும் சூப்பர் வுமன் இல்லை. சராசரி பெண் தான். சாதிக்கும் ஆர்வமும் வாய்ப்புகளும், வீட்டார் ஒத்துழைப்பும் கிடைத்ததால், நன்கு செயல்பட முடிந்தது’’ என்கிறார்.

‘நபார்டு’ தலைவராக இருந்த போது, கிராமப்புற பெண்களின் வாழ்வில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார். திருமணத்தை சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குடும்ப உறவு வலுவாக இருக்க கணவர், குழந்தைகளுடன் நேரம் ஒதுக்க வேண்டும். குடும்பத்தின் ஆதரவு மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார்.

உலக மகளிர் மாநாடுகளில் “பெண்கள் மீதான வன்முறை’’ முக்கிய விவாதப் பொருளாக இருந்து வந்துள்ளது. வன்முறையின் வடிவங்களும் மிகவும் கொடூரமாக மாறியுள்ளன. பொதுவாகவே வன்முறை என்றவுடன், பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல் என்றே பலரும் நினைக்கின்றனர். பெண்கள் மீதான வன்முறைக்கு பெய்ஜிங் மாநாட்டில் கொடுக்கப்பட்ட விளக்கம் பெண்ணியலாளர்கள் ஆய்வாளர்களால் ஏற்கப்பட்டுள்ளது. “ஒரு பெண்ணின் உடலை, மனதை, பாதிக்கின்ற எந்த செயலாக இருந்தாலும். பெண்ணின் சுதந்திரத்தை மறுக்கின்ற செயலாக, தனிப்பட்ட வாழ்க்கையிலோ, பொது வாழ்க்கையிலோ இருப்பின், அது வன்முறை எனக் கருதப்படும்’’. இத்துடன் மூன்று முக்கிய நோக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. பெண்கள் மீதான வன்முறையை தடுக்க, முற்றிலுமாக நிறுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 2. பெண்கள் மீதான வன்முறைக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி ஆராய்தல். 3. பெண்களை கடத்தி, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக நிறுத்துவது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதல். இந்த மூன்று நோக்கங்களில் எதையும் இந்திய அரசு முழுமையாக அமலாக்கவில்லை. வன்முறையை எப்படி வகைப்படுத்தலாம்? மறைவான வெளியே தெரியாத குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. பெண் கருவை அழிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறதென்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தேசிய குற்றப்பதிவகம் (என்சிஆர்பி) இந்திய தலைநகரான புதுடில்லியை குற்றங்களின் தலைநகர் எனக் கூறுகிறது. என்சிஆர்பியின் பெண்கள் மீதான வன்முறை செல்லின் துணை கமிஷனர் எஸ்.பி. எஸ்விர்க், “பெண்கள் மீதான வன்முறையில் வரதட்சணைக்கு பிரதான காரணம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்றும், இந்தியாவில் திருமணங்கள் 2 குடும்பங்களுக்கிடையேயான கொடுக்கல், வாங்கலாகவே உள்ளன’’ எனவும் கூறியுள்ளார். மேலும், சில சமூகங்களில் ‘வெளிப்படையான ஏலம்’ நடைபெறுகிறது என்றும், மணமகனின் குடும்பம் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் ‘ரேட்’ தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். வரதட்சணை தடுப்புச் சட்டத்தை பெரும்பாலும் வசதி படைத்தவர்களே மீறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டில் டில்லி குற்றப் பிரிவு ‘உதவிக் கரம்’ (ஹெல்ப் லைன்) ஒன்றை துவக்கியது. 2006ஆம் ஆண்டு தினமும் சராசரி 15 அழைப்புகள் இதில் பதிவாகியுள்ளன. மொத்தம் வந்த அழைப்புகளில் (13,061) 4907 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுத்ததில் 71 சதவீதம் அழைப்புகள் குடும்ப வன்முறை தொடர்பானவை. 4 சதவீதம் வழக்குகளில் தீர்வு எட்டியுள்ளது. குடும்ப வன்முறைக்கெதிராகப் பெண்கள் பேசத் துணிந்துவிட்டனர். 2007ஆம் ஆண்டு, 7838 அழைப்புகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்முறை

தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட பாலின விகிதம் குறைந்து கொண்டே வருவது என்பது பெண் கருவுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. 1961இல் 985/1000 என்றிருந்த விகிதம் 2001இல் 939/1000 என குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் பெண்கள் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சனை ஆழமாக உள்ளது.

மாநிலக் குற்றவியல் ஆய்வுப் பிரிவு பெண்கள் மீதான பல்வேறு வன்முறை வழக்குகள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. குடும்பத்திற்குள் கணவன் மற்றும் உறவினரால் துன்புறுத்தப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. “வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் உடல் கருகி வருவோரை பார்த்தாலே புரியும். இப்படி பாதிக்கப்பட்டு வரும் பெண்கள் திருமணமானவர்கள் 20-40 வயதுக்குட்பட்ட பெண்கள்.

ஒன்று தற்கொலைக்கு முயன்றவர்கள். இல்லையெனில் உறவினரின் கொலை முயற்சியால் தப்பித்தவர்களாக இருப்பார்கள்’’ (வித்யா வெங்கட், பத்திரிகையாளர், ஃபிரண்ட்லைன்), ‘ஸ்டவ் வெடித்தது’, ‘விபத்து’ என குடும்பத்தினர் கூறினாலும், உயிர் தப்பும் பெண்கள் கணவன், அவனது உறவினர் அல்லது கணவனின் “திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு’’ காரணங்கள் என மருத்துவமனை செவிலியர்களிடம் கூறுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 600 பெண்கள் (ஆண்டொன்றுக்கு) இறந்து போவதாக, கீழ்பாக்கம் மருத்துவமனை டாக்டர் தெரிவித்துள்ளார். இதைத் தவிர, தூக்கமாத்திரை, பூச்சி மருந்து சாப்பிடுவோர், தூக்குப் போட்டுக் கொள்ளும் பெண்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

நன்றி: மகளிர் சிந்தனை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com