Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

நூல் அறிமுகம் - பகவதீசரண் வோரா

நான் பயந்து விட்டேன் என்று நினைக்கிறீர்களா! பகத்சிங்கைச் சிறை மீட்கும் பணியில் பங்கு பெற முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்கு! இதே சாவு இன்னும் இரண்டு நாட்கள் தாமதித்து வந்திருக்கக் கூடாதா...

புரட்சியாளன் பகவதிசரண் வோராவின் உடல் சிதைந்து, குடல்வெளி விழுந்து உயிர் பிரியும் கடைசி நேரம் அவர் பேசிய வீர முழக்கமிது!

1930ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி பீகார் மாநிலம் ராவி நதிக்கரை. மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்த்தியான காட்டை நோக்கி ஒரு படகு செல்கின்றது. நெஞ்சிக்குள் தேச விடுதலை தீப்பந்தம் எரிந்திட கண்களில் லட்சிய வெறியோடும் கைகளில் வெடிகுண்டோடும் அவர்களின் பயணம் இருந்தது! வெள்ளைய போலீஸோடு நடத்தப்படும் அதிரடி தாக்குதலுக்கு வெடிகுண்டுகளை பரிசோதித்துக் கொள்ளச் சென்று கொண்டிருந்தார்கள். இளைஞர்களின் நாடி நரம்புகளுக்குள்ளும், இரத்த நாளங்களிலும் ஊடுருவி நிற்கும் மாவீரன் பகத்சிங் மற்றும் தோழர்களுக்கும் அரசாங்கம் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படலாம் என எதிர் நோக்கப்பட்டிருந்த காலம் அது!

செவிடர்களைக் கேட்க வைக்க வெடிகுண்டுச் சத்தம் தேவைப்படுகின்றது என்று நாடாளுமன்றத்தில் குண்டு வீசி தாமாகவே கைது ஆகிய அந்த மாவீரர்களை “பார்ஸ்டல்’’ சிறைச் சாலையில் இருந்து வெள்ளைய போலீசுடன் அதிரடி தாக்குதலை நடத்தி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை மீட்பதற்காகத் தாக்குதலுக்குத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை பரிசோதித்துக் கொள்ளச் சென்ற அந்த மூன்று தோழர்கள். பகவதி சரண்வோரா, சுகதேவ் ராஜ், வைகம்பாயன் ஆகியோர் அடர்ந்த அந்தக் காட்டில் ஒரு பெரிய பள்ளத்தில் வெடிகுண்டை வீசி சோதிக்க இரண்டு தோழர்களும் முயற்சித்த போது இருவரையும் தூரமாகப் போகச் சொல்லிவிட்டு பகவதிசரண் வோரா வெடிகுண்டை பரிசோதிக்க முயற்சித்த போது அவரின் கைகளிலேயே வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

அடர்ந்த புகை மூட்டம் விலகியப் பின் பார்த்தால் பகவதிசரண் வோரா குண்டடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றார். சுகதேவ் ராஜ்க்கு இடது காலில் பலத்த காயங்கள், வைகம்பாயனுக்கும் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. பகவதிசரணின் ஒரு கை மணிக்கட்டுடன் பிய்ந்து போய் இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது! மறு கையில் விரல்கள் எல்லாம் சிதறிப்போய் கிடந்தன. வயிறு கிழிந்து குடல்கள் வெளியில் சரிந்து கிடந்தன. பலத்தக் காயங்களுடன் இரத்தச் சகதியில் உடல் கிடந்தது. காயங்கள் கடுமையான வலிகளுக்கு இடையிலும் பகவதி சரணைக் காப்பாற்றுவதற்காக சுகதேவ் ராஜ் தோழர்களையும், மருத்துவர்களையும் அழைத்து வர ஓடினார்.

வைகம்பாயன் தனது உடைகளைக் கிழித்து பகவதி சரண் உடலிருந்து வெளியேறும் செங்குருதியை தடுப்பதற்குச் சிரமப்பட்டுக் கொண்டே காட்டு ஓடையில் இருந்து தனது தொப்பியின் மூலம் தண்ணீரை கொண்டு வந்து குடிக்க வைத்துக் கொண்டே கேட்டார். ஏன் அண்ணா இப்படி செய்து விட்டீர்கள் என்று. உயிர் பிரியும் கடைசி நிமிடங்கள் சாவை தைரியமாக எதிர் கொண்ட பகவதி சரண் புன்சிரிப்புடன் கூறினார். நல்ல வேலை தோழா இந்த வெடிகுண்டு சோதனையில் எனக்கு ஏற்பட்டதை போல வேறு தோழர்களுக்கு ஏற்பட்டிருந்தால் நான் சந்திரசேகர் ஆசாத்தை நேரில் பார்க்கவே முடியாது என இயக்கத்தின் தலைமை மீது வைத்திருந்த பற்றையும், உறுதியையும் வெளிப்படுத்தியதோடு அன்பு தோழர்களே பகத்சிங்கையும், சக தோழர்களையும் காப்பாற்றுங்கள் எனது மரணம் ஒரு தடையாகிவிடக் கூடாது என அவர் கூறிக் கொண்டிருந்த போதே அவரின் உயிர் பிரிந்தது.

1903ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பகவதி சரண் ஆக்ராவில் பிறந்தவர் அதற்கு வெகுகாலத்திற்கு முன்பு அவருடைய பாட்டனார் குஜராத்திலிருந்து ஆக்ராவில் குடியேறினார்! அவருடைய தந்தை சிவசரண்வோரா ஆக்ராவிலிருந்து லாகூர் சென்றுவிட்டார். அவர் ரயில்வேயில் உயர் பதவியிலிருந்தார். அவருடைய பணிகளைப் பாராட்டி வெள்ளைய அரசாங்கம் அவருக்கு ராவ் சாகிப் பட்டம் வழங்கியது. அவர்களின் குடும்பங்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த குடும்பம். இளம் வயதிலேயே பகவதி சரணுக்குத் திருமணம் நடந்து முடிந்திருந்தது. 1921இல் காந்தியின் அழைப்பை ஏற்று கல்லூரிப் படிப்பை விட்டு விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.

ஒத்துழையாமை இயக்கம் வாபஸ் பெறப்பட்டபோது தனது நண்பர்களுடன் லாகூர் தேசியக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. முடித்தார். 1924_25 ஆம் ஆண்டுகளில் புரட்சிக் கருத்துக்களால் கவரப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் இணைப்பை அதிகரித்துக் கொண்டார். ஐரோப்பாவில் இருந்து வரும் பொதுவுடைமை இலக்கியங்களைத் தனது விலாசத்திற்கு வரவழைத்து படித்தார். புரட்சிக் கட்சியில் இணைந்தார்.

பகவதீசரண் இளம் புரட்சியாளர்களுடன் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்து புரட்சிகர நடவடிக்கைகளுக்கு உரமூட்டியவர். வெடிகுண்டுகள் செய்வதில் கைதேர்ந்தவர். 1923 டிசம்பர் 23ஆம் தேதி வைஸ்ராய் செல்லும் ரயிலை வெடிகுண்டு வைத்துத் தகர்த்திட திட்டம் தீட்டி வைஸ்ராய் தப்பித்தபோதும் வெடிகுண்டு வைத்த இரயில் பெட்டிகளை தூள் தூளாக்கிப் புரட்சியாளர்களின் கோபக்கனலை அதிகப்படுத்தியவர்.

1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பகத்சிங்கின் ஆலோசனையை ஏற்று இளைஞர் இந்திய சபையின் நகல் அறிக்கையை பகவதி சரண் தயாரித்தார். அந்தக் காலத்தில் இளைஞர் இந்திய சபை (நவஜவான் பாரத்சபா) புகழேணியின் உச்சியில் இருந்தது. பகவதி சரண் பெயரும் எல்லோரின் நாவிலும் தவழ்ந்து கொண்டிருந்தது. பகவதி சரண் புரட்சிகர சிந்தனையாளர், கட்சி அமைப்பாளர், சிறந்த பேச்சாளர், பிரசாரகர், கொண்ட கொள்கையில் உறுதி மிக்கச் செயல்பட்டவர்.

லாலா லஜபதிராயை தாக்கிக் கொன்ற சாண்டர்ஸ் எனும் போலீஸ் அதிகாரியை பகத்சிங் ஆசாத் மற்றும் தோழர்கள் சுட்டுக்கொன்ற போது நாடு முழுவதும் புரட்சியாளர்களைப் பிடித்திட போலீஸ் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திக் கெடுபிடிகள் அதிகரித்த போது பிடித்தால் சுடப்பட்டு உயிர் போகும் எனத் தெரிந்தும் தைரியமாக போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி மாறுவேடமிட்டு பகத்சிங்கின் மனைவியாக நடித்து ரயிலில் பயணம் செய்து பகத்சிங், ராஜகுருவையும் காப்பாற்றிய தனது மனைவி துர்க்காதேவியின் துணிச்சலை மனம் மகிழ்ந்துப் பாராட்டி அகம் மகிழ்ந்தவர் பகவதி சரண்.

வைஸ்ராய் சென்ற ரயிலுக்கடியில் வெடிகுண்டு வெடித்தது. இதைக் கண்டித்து காந்தி, காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றச் செய்தார். மீண்டும் அதைத் தன் யங் இந்தியா பத்திரிக்கையிலும் கல்ட் ஆஃப் தி ஃ பாம் எனும் தலைப்பில் பிரசுரிக்கவும் செய்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பகவதிசரண் பிலாஸ்ஃபி ஆப் தி பாம் என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினார். அது காந்திக்கு புரட்சியாளர்களின் பதில் மட்டுமல்ல. அக்காலத்திய புரட்சியாளர்களின் அரசியல் அறிவையும் அவர்களின் நோக்கங்களையும் தெளிவாக்கியது! தேச புனர்நிர்மாணத்திற்கு பின்னால் இருந்து பணியாற்றக் கூடிய ஆயிரக்கணக்கான வாலிபர்களும், யுவதிகளும் வேண்டும். அவர்கள் உயர்ந்த லட்சியங்களையும், தாய் நாட்டையும், தமது நலன்களை விட, உயிரைவிட, நெருங்கிய உறவினர்களை விட உன்னதமானவைகளாகக் கருத வேண்டும் என்று அவர் இந்திய வாலிபர்களையும், யுவதிகளையும் அறைகூவி அழைத்தார்.

இப்படி புரட்சிகர இளைஞர்களுடன் இணைந்த தேச விடுதலைக்குப் புரட்சியை ஓங்கி உரைத்த பகவதிசரணைக் கூட ஒரு கட்டத்தில் சி.ஐ.டி.யின் ஆள் என பொய்யான பிரச்சாரங்கள் செய்யப்பட்ட பொழுதும் சக தோழர்கள் பகவதி சரணிடம் தேவையான தொடர்புகளை மட்டும் வைத்துக் கொண்டதோடு ஒரு கட்டத்தில் சுகதேவ் சொல்ல பகவதி சரண் இல்லாத போது அவரது அறையையும், புத்தகங்களையும் காகிதங்களையும் சோதனையிட்டனர். ஆனால், சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

சிலருக்குத் தலைவராக இருக்க வேண்டும் பேரும், புகழும் பெற வேண்டுமென்கிற பேராசை ஆட்டிப்படைக்கும், அப்படிப்பட்டவர்கள் போராட்டத்தில் இறங்கவே பயப்படுவார்கள். அபாயகரமான செயல் என்றால் கேளாதூரம் ஓடிவிடுவார்கள். அவர்கள் தியாகங்களை புரியாமலேயே புகழை அடைய விரும்புவார்கள். துன்பங்களை மற்றவர்கள் அனுபவிக்கப் பெயரை மட்டும் அவர்கள் தட்டிக் கொண்டு போய் விடுவார்கள். யாராவது வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருந்தால் அவர்களுக்கு இவர்கள் பிரேக் போடாமல் இருக்கமாட்டார்கள். என பொய்ப் பிரச்சாரத்திற்கு பகவதி சரண் துணைவியார் துர்க்கா தேவி பதிலளித்தார்.

இப்படி பகவதிசரண் வோராவைப் பற்றியும், அவர் எழுதிய வீரமிக்கக் கட்டுரைகளைப் பற்றியும் ஏராளமான விபரங்களைத் தாங்கி 48 பக்கங்களைக் கொண்ட சின்னஞ்சிறு பிரசுரம். பகத்சிங்கின் நூற்றாண்டு விழாவையட்டி டி.ஒய்.எப்.ஐ. அகில இந்திய மாநாட்டுச் சிறப்பு வெளியீடாக வெளியிட்ட இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதோடு மட்டுமல்லாமல் டி.ஒய்.எப்.ஐ.யில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களிடத்திலும் பிரசுரத்தின் கருத்தைக் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் நமது நாட்டில் எழுதப்பட்ட வரலாறுகளை விட மறைக்கப்பட்ட வரலாறுகள் தான் அதிகம்.

எனவே, வெண்கொடியின் வழிகாட்டிகளாக திகழும் வீரத் தியாகிகளின் வரலாற்றை உயர்த்திப்பிடிப்போம்! உரக்கக் கூறுவோம்!!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com