Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2008

ஒவ்வொரு நிமிடமும் ஒரு மரணம்
சமூக மருத்துவன்

அன்றைய துணிகளை துவைத்து, காய வைத்து பிறகு, அவைகளை மூட்டை கட்டிக்கொண்டு, பொழுது சாயும் நேரத்தில் வீட்டுக்கு வேகமாக நடந்து கொண்டிருந்தான் சென்னப்பன். தன்னுடைய நான்கு கழுதைகளின்மேல் துணி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வழக்கமாக தனது மனைவி ராஜம்மாளுடன்தான் ஆற்றுக்கு துணி துவைக்க வருவது வழக்கம். ஆனால் ஒரு மாத காலமாக ராஜம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னப்பனே துவைக்கும் வேலையை செய்ய வேண்டி ஆனது. சென்னப்பன் துவைத்து எடுத்துவரும் துணிகளை அவனுடைய மகன் முருகனும், மருமகள் சங்கீதாவும் இஸ்திரி செய்து அடுத்தநாள் காலை சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கு கொண்டு கொடுப்பது வழக்கம்.

முருகனுக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் எனும் மகனும், 3 வயது நிரம்பிய வினோதினி எனும் மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக, 10க்கு 15 எனும் அளவிலுள்ள ஒரு ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டின் இடது ஓரத்தில், விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டனர். முருகனுக்கு திருமணமானவுடன் வீட்டிற்கு வெளியில் ஆஸ்பெஸ்டோஸ் சீட்டில் முன்புறம் நிழலுக்காக இழுத்து விட்டிருந்தனர். சமையல் செய்யும்பொழுது வெளிவரும் புகை ஓடுகளின் இடையே இருக்கும் ஓட்டைகள் வழியாக வெளியேற வசதியாக நான்கு ஓடுகளை கல்வைத்து தூக்கி விட்டிருந்தார்கள். இருந்தாலும் பல சமயங்களில் சருகுகளை எரித்தே சமையல் செய்வதால் வெளியேறும் புகை வீடு முழுவதும் பரவியிருக்கும். இருவர் வாழ்வதற்கே நெருக்கடியான இடத்தில் ஆறு நபர்கள் சேர்ந்து வாழக்கூடிய ஆரோக்கியமில்லாத சூழலில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், ராஜம்மாளுக்கு ஒரு மாதகாலமாக இருமலும், இரத்தம் கலந்த சளியும், லேசான காய்ச்சலும், பசியின்மையும் ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டாள். வழக்கமாக அப்பகுதியில் உள்ள மக்கள், உடல்நிலை சரியில்லாதபோது தங்கள் கிராமத்திலுள்ள ராஜாமணி எனும் மருத்துவரிடம் செல்வார்கள். ராஜாமணி D.Pharm., வரை படித்துள்ளார். சென்னையில் ஒரு தனியார் கிளினிக்கில் 2 ஆண்டுகள் மருத்துவ உதவியாளராக இருந்துவிட்டு, பிறகு இந்த கிராமத்தில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அந்த கிராமத்தில் எம்.பி.பி.எஸ். டாக்டர் இல்லாததாலும், சற்று அதிகமான டோசில் மருந்துகளை கொடுத்து உடனடியாக நிவாரணம் கொடுப்பதாலும் அப்பகுதி மக்களிடம் கைராசியான டாக்டர் எனும் பெயரை ராஜாமணி சம்பாதித்திருந்தார்.

சென்னப்பன், உடல்நிலை சரியில்லாத ராஜம்மாளை டாக்டரிடம் அழைத்து சென்றார் டாக்டர், ராஜம்மாளை பரிசோதித்துவிட்டு, ஒரு குளுக்கோஸ் பாட்டிலை ஏற்றியபிறகு, ஊசி போட்டார். காய்ச்சலுக்காக மாத்திரை, பசி எடுப்பதற்காக டானிக் ஆகியவைகளை கொடுத்து ரூ. 250 என பில் போட்டு கொடுத்தார். எம்.பி.பி.எஸ். டாக்டரிடம் சென்றிருந்தால் ரூ. 500 வரை செலவாகியிருக்கும், இவர் ரூ. 250 மட்டுமே பில் போட்டதால் குறைவான செலவில் மன நிறைவுடன் சென்னப்பன் வீடு திரும்பினான். ராஜம்மாளுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்டவுடன் காய்ச்சல் உடனடியாக நின்றுவிட்டது. ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் காய்ச்சல் வந்ததோடு, இருமலும், சளியில் இரத்தம் கலந்து வருவதும் தொடர்ந்து இருந்துகொண்டேதானிருந்தது.

தன் மனைவியின் உடல்நிலை குறித்து நண்பன் முனியனிடம் எடுத்துக் கூறி வருத்தப்பட்டான் சென்னப்பன். ஆற்றுக்குப் போகும் வழியிலுள்ள மொட்டை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பழனியம்மாளின் ஆவியால்தான் ராஜம்மாளுக்கு இப்படி நேர்ந்திருக்கிறது என்றும் பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் முனியன் ஆறுதல் கூறினான். அடுத்தநாள் கோழியை அறுத்து சாமிக்கு படைத்துவிட்டு கறி குழம்பு செய்தார்கள். அனைவருக்கும் கறி குழம்பு பரிமாறப்பட்டது. ராஜம்மாளால் கறியை சாப்பிட முடியாமல் தன் பேரக்குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு படுத்துக் கொள்கிறாள். ஒவ்வொரு நாளும் உணவு சரிவர எடுத்து கொள்ளாததால் ராஜம்மாளின் உடல் உருகி மெலிந்துகொண்டே சென்றது.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த கிராமத்தில் ஒரு வீட்டிற்கு கூரியர் போடுவதற்காக வேலுசாமி வருகிறான். தன் பள்ளி நண்பனான முருகனை சந்தித்துவிட்டு செல்லலாம் என வேலுசாமி சென்னப்பனின் வீட்டிற்கு வருகிறான். அங்கு முருகனை சந்தித்து தங்களுடைய பள்ளி நாட்களைப் பற்றி நினைவு கூர்ந்து வேலுசாமி பேசி கொண்டிருந்தான். அப்பொழுது முருகனின் அம்மா ராஜம்மாளின் இருமல் சத்தம் கேட்கவே, அம்மாவிற்கு உடம்பு சரியில்லையா என வேலுசாமி கேட்கிறான். அம்மாவிற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து இருமலும், காய்ச்சலும், பசியின்மையும், இரத்தம் கலந்த கோழையும் இருப்பதாகவும், உள்ளூர் டாக்டர் ராஜாமணியிடம் பார்த்ததாகவும், கன்னிமார் செய்ததாகவும், இருந்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் முருகன் கூறுகிறான். இது காசநோய்க்கான அறிகுறிகளாக தெரிகிறது என்றும், மாவட்ட தலைநகர மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு 6 மாத காலம் தொடர்ந்து மருந்தை எடுத்துக்கொண்டால் இதை முழுவதுமாக குணமாக்க முடியும் என்றும் வேலுசாமி கூறுகிறான்.

தங்கள் வீட்டில் மற்றவர்களுக்கோ அல்லது பக்கத்திலோ யாருக்கும் TB இல்லையே, பிறகு எப்படி எங்க அம்மாவிற்கு TB வந்திருக்குமென முருகன் கேட்கிறான். இந்தியா போன்ற மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு சாதாரணமாகவே சுவாச பாதையில் TB கிருமி தொற்றி கொண்டிருக்கிறது என்றும், ஆரோக்கியமில்லாத நெருக்கடியான வாழ்விடம், புகை வெயியேறமுடியாத சிறிய வீடு, போதிய அளவிற்கு ஊட்டச்சத்துமிக்க உணவின்மை, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி ஆகிய காரணங்களினால் வருடத்திற்கு 18 லட்சம் நபர்கள் TBயால் பாதிக்கப்படுவதோடு 5 லட்சம் நபர்களை TBக்கு பலியிடுகிறோம் என்றும் வேலுசாமி கூறினான். எனவே உடனடியாக அம்மாவை அழைத்துக்கொண்டு மாவட்ட தலைநகர மருத்துவமனைக்கு போகலாம் வா என வேலுசாமி முருகனிடம் கூறினான்.

கையில் பணம் ஏதும் இல்லையெனவும், பணத்தை திரட்டிக்கொண்டு நாளை காலை மருத்துவமனைக்கு வருவதாகவும் முருகன் கூறுகிறான். அடுத்தநாள் காலை 8.00 மணிக்கு ராஜம்மாளை அழைத்துக்கொண்டு மாவட்ட தலைநகர மருத்துவமனையிலுள்ள காசநோய் தடுப்பு பிரிவிற்கு முருகன் செல்கிறான். இவர்களின் வருகைக்காக காத்திருக்கும் வேலுசாமி, அவர்களை அழைத்துக்கொண்டு புற நோயாளிகளுக்கான சீட்டை வாங்கிக்கொண்டு மருத்துவரை பார்ப்பதற்கு காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்குள்ள சுவரில் உள்ள விழிப்புணர்வு பலகையை முருகனும், வேலுசாமியும் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்பலகையில்

உலக TB நோயாளிகளில் மூன்றில் ஒருவர் இந்தியர்
ஒவ்வொரு நிமிடமும் TB யால் ஒரு இந்தியர் இறக்கிறார்
பெண் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம் TBயே
TBயால் பாதிக்கப்பட்ட இந்திய உழைப்பாளி ஆண்டுக்கு 83 வேலை நாட்களை இழக்கின்றார்.
HIVயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு TB எளிதில் வர வாய்ப்புள்ளது.
TB கிருமியுள்ள நோயாளியின் சளி காற்று நுண் குமிழ்கள் மூலம் பரவுகிறது.
18 லட்சம் TB நோயாளிகளில் 8 லட்சம்பேர் மிக தீவிரமாக நோய் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு நோய் பரப்பக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
TBயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய மருந்து நம் அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக கிடைக்கிறது.

அடுத்ததாக ராஜம்மாளை மருத்துவர் பார்க்கவேண்டிய நேரம் வந்ததும் மூவரும் மருத்துவரிடம் செல்கிறார்கள். ராஜம்மாளின் பிரச்சினைகளை மருத்துவர் விசாரித்துவிட்டு, பிறகு உடலைப் பரிசோதித்துப் பார்க்கிறார். பின்னர் இது நீங்கள் நினைப்பது போல் TBயாக இருக்க வாய்ப்புள்ளது என்றும், அதற்காக எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் பரிந்துரைக்கிறார். அப்பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொண்டு மருத்துவரைப் பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.

ராஜம்மாளுக்கு TB இருக்குமா?

அடுத்த இதழில்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com