Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2008

குழந்தைகள் சுகாதாரத்திற்கு குழிதோண்டும் அன்புமணி
ப.குமார்

இந்தியா 9 சதம் வளர்ச்சி, 2020இல் வல்லரசு, உலக பணக்கார பட்டியலில் இடம் என்ற ஏகவசன பேச்சுக்களால் ஆட்சியாளர்கள் உண்மை நிலையை மூடி மறைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்நிய சுரண்டல்காரர்களை அடித்து விரட்டிய பின் இந்திய மக்களுக்குப் பணியாற்ற நிறுவப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் தற்போது உள்நாட்டு கொள்ளைக்காரர்களால் கபளிகரம் செய்யப்படுகின்றன.

அந்த வரிசையில் தற்போது மருத்துவத் துறையும் சிக்கிக் கொண்டுள்ளது. மக்களைப் பாதிக்கும் மருத்துவக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதில் முனைப்பு காட்டி வருகிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ். ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சியாக மாற்றி தனியாராக்கியபின் தற்போது குழந்தைகளின் உயிர்களுக்கு அதாவது நாளைய தலைமுறை சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் சவக்குழி தோண்டியுள்ளார்.

குழந்தைகளின் சுகாதாரத்திற்கு படுகுழி:

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டரை கோடி குழந்தைகள் பிறக்கின்றன. தமிழகத்தில் சுமார் 12 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் பிறந்து 9 மாதத்திற்குள் (தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க) அவர்களுக்கு அம்மை, கக்குவான் இருமல் போன்ற நோய்களைத் தடுக்க தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இத்தகைய தடுப்பூசிகள் கண்டுபிடிக்காத காரணத்தாலேயே 1960_70களில் பிறந்த 100 குழந்தைகளில் 15 குழந்தைகள் ஒரு வயதாவதற்குள் இறந்துவிட்டன. 5 வயதாவதற்குள் 35 குழந்தைகள் இறந்துவிட்டன.

1977இல் உலக சுகாதார அமைப்பு, இத்தகைய குழந்தை இறப்புக்களைத் தடுக்க பல ஆலோசனைகளை வழங்கியது. அதோடு “1977ஆம் ஆண்டே குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து வழங்கும் ஆண்டாக’’ அறிவித்தது. இந்தியாவிலும் இந்த ஆண்டு முதல் தடுப்பு மருந்துகளை வழங்குவதில் தனி கவனம் செலுத்தி குழந்தைகள் தொற்று நோயால் இறப்பது தடுக்கப்பட்டது.

1988ஆம் ஆண்டுக்குள் 90 விழுக்காடு குழந்தைகளுக்கு முத்தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு இறப்பிலிருந்து காப்பாற்றப்பட்டனர். போலியோ தாக்குவதால் ஏற்படும் ஊனமும், வைட்டமின் குறைவினால் ஏற்படும் பார்வை இழப்பும் இந்திய நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டது. இதற்கு நோய் தடுப்பு மருந்துகள் முக்கிய காரணமாக இருந்தன. இத்தகைய தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு தடுப்பூசித் திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் அளித்து வருகிறது. காசநோய் வராமல் தடுப்பதற்கு BCG என்ற தடுப்பு மருந்து ஒரு வருடத்திற்கு 240 இலட்சம் டோஸஸ் அளவுக்குத் தேவைப்படுகிறது.

கக்குவான், இருமல், தொண்டை அடைப்பான் மற்றும் ரண ஜன்னி வராமல் தடுப்பதற்கான DTP என்ற தடுப்பு மருந்து 150 இலட்சம் டோஸஸ் அளவும், DT என்ற தடுப்பு மருந்து 20 இலட்சம் டோஸஸ் அளவும் தேவைப்படுகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கு ரண ஜன்னி வராமல் தடுக்க TT என்ற தடுப்பு மருந்து 100 இலட்சம் டோஸஸ் அளவுக்குத் தேவைப்படும்.

வெறிநாய்க் கடிக்கான ARV என்ற தடுப்பு மருந்து 75 இலட்சம் டோஸஸ் அளவும் தேவைப்படுகின்றன. இத்தகைய தடுப்பு மருந்துகளை இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம், கிண்டியில் உள்ள பி.சி.ஜி. நிறுவனம், குன்னூரில் உள்ள பாஸ்டியர் நிறுவனம் ஆகியவை தயாரிக்கின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 1.30 காசு என்ற குறைந்த விலையில் மக்களுக்கு தரமானதாக மருந்துகளை வழங்கி வருகின்றன. 75 விழுக்காடு தடுப்பு மருந்துகளை இம்மூன்று நிறுவனங்கள்தான் தயாரித்து தருகின்றன. இம்மருந்துகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இப்படி இலவசமாக தரமான மருந்துகளை வழங்கி, மக்களுக்குப் பணியாற்றி வந்த பொதுத் துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்ட மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஓர் அறிவிப்பை வெளியிட்டு எதிர்கால இந்தியாவின் சுகாதாரத்திற்கே படுகுழி தோண்டியுள்ளார்.

தடுப்பு மருந்து நிறுவனங்களின் மூடலுக்கு பின்னால்....

LPG கொள்கைகளை அமலாக்கம் செய்த பின் மக்கள் நலனுக்கான மானியங்களை வெட்ட வேண்டும் என்ற உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் கோரிக்கையும், அதைத் தொடர்ந்த நிர்பந்தங்களும் இத்தடுப்பு மருந்து நிறுவனங்களின் மூடலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சரான அன்புமணி இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் இதுதான் நடக்கும் என்றும் பேசப்டுகிறது.

இன்னொரு முக்கியக் காரணம், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் தயாராகும் மருந்துகள் தரம் குறைந்தவையாக உள்ளன என்று கூறி இந்தியாவில் உள்ள நிறுவனங்களை மூடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக அன்புமணி கூறுகிறார். எனவேதான் மக்கள் உயிர்களைக் காக்கும் பொருட்டு அந்நிறுவனங்களை மூடிவிட்டு செங்கல்பட்டில் பொதுத் துறையும், தனியாரும் இணைந்து ரூ. 500 கோடி மதிப்பில் ஒரு புதிய மருத்துவப் பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மை என்ன? LPG கொள்கைகளால் சாமான்ய மக்களின் வாழ்க்கை பறிக்கப்படும் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்தகைய எல்.பி.ஜி கொள்கையை பயன்படுத்தி, இந்திய மருத்துவ துறையை கொள்ளையடிக்க அன்புமணி ராமதாஸால் எடுக்கப்பட்ட அப்பட்டமான செயல்பாடே இந்நிறுவனங்களின் மூடல் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். 2011ல் பா.மா.க தலைமையில் ஆட்சியமைப்பதற்கு தேவையான பொருளாதாரத்தை இப்போதிருந்தே திரட்ட தொடங்கி விட்டாரோ?

அம்பலமான அன்புமணியின் திட்டம்:

பயனீர், ஃபிரண்ட் லைன், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் நடத்திய ஆய்வுகளில் சில திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்துகளின் தரம் உலக தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

“எங்கள் நாட்டுக் குழந்தைகள் ஆரோக்கியம் தான் எங்களுக்கு முக்கியம். எனவே, தடுப்பு மருந்துகளை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம் என சீன அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.’’ ஆனால், இந்தியாவில் தரத்தை உயர்த்த முயல்வதற்குப் பதில் குழந்தைகளின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை நிறுத்தவே முடிவு செய்தார் அன்புமணி. அதோடு வெறும் 90 கோடி ரூபாய் செலவிட்டால் இம்மூன்று அரசு நிறுவனங்களையும் உலக தரத்திற்கு இணையாக உயர்த்த முடியும். ஆனால் இதைச் செய்யாமல் ரூ. 500 கோடி செலவில் புதியதாக தனியார் துணை கொண்டு மருத்துவப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சதிவேலைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

கிண்டி, பி.சி.ஜி ஆய்வகத்தின் இயக்குனராக செயல்பட்ட இலங்கேஸ்வரன் மீது பல ஊழர் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதோடு சகஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதகாவும் ஆய்வக ஊழியர்களே புகார் தெரிவிக்கின்றனர். இந்தப் புகார்கள் அனைத்தும் மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பட்டது. உடனே மத்திய சுகாதாரத்துறையமைச்சர் அன்புமணி அவர்மீது நடவடிக்கையில் இறங்கினார். இலங்கேஸ்வரன் பதவி உயர்வு செய்யப்பட்டு குன்னூர் ஆய்வகத்திற்கு அனுப்பட்டார். இலங்கேஸ்வரனுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள கொள்ளையடிக்கும் கூட்டணி இந்த தகவல் வெளியானது மூலம் அம்பலம் ஆகியுள்ளது.

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த அன்புமணியால் ஜனவரி 15, 2008 அன்று கடிதம் அனுப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே, அதாவது ஜுன் 12, 2007 அன்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செங்கல்பட்டில் மருத்துவ நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பொதுத்துறையால் 1.30 காசு என்ற அளவில் கிட்டத்தட்ட இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் உற்பத்தி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் குழந்தைகளின் சுகாதாரம் பணமயமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் பணம்பறிக்கும் கொள்ளை நிகழ்ச்சிதான் நடந்தேறும். நாள்தோறும் ரூ. 20க்குக் கீழே வருமானம் பெறும் 60 விழுக்காடு மக்கள் இன்றும் பொது மருத்துவமனையையே நம்பியுள்ளனர்.

இந்தியாவில் ஏற்கெனவே சிறப்பாக இயங்கி வரும் நிறுவனங்களை மூடிவிட்டு ஒரு புதிய மருத்துவப் பூங்காவை அமைப்பதைவிட, அந்த நிறுவனங்களின் தரம் உயர்த்தவேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனத்தைப் போலவே செங்கல்பட்டிலும் 5வது பொதுத் துறை நிறுவனமாக அமைப்பதே மக்கள் நலத்தில் உண்மையான அக்கரையுள்ளவர்களின் செயல்பாடாக இருக்க முடியும்.

ஆதாயம் இல்லாம அவன் ஆத்தோட போவானா.....?என்பது போல், குடி குடியைக் கெடுக்கும், புகை நமக்குப் பகை, பாட்டாளிகளுக்காக குரல் கொடுப்போம் என்றெல்லாம் போலி பாசாங்கு செய்து கொண்டு, மறுபுறம் தனியார் மருந்து கம்பெனிகளுடன் கூட்டாளியாக கைகோர்த்து, கொள்ளைக்காரர்களுடன் கள்ள உறவு வைத்திருக்கும் அன்புமணியின் முகத்திரையை கிழித்தெறிவோம்.! தடுப்பு மருந்து நிறுவனங்களை மீட்டெப்போம்.!!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com