Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2008

வரவேற்கக் காத்திருக்கும் வரலாற்றுத் தடங்கள்
எஸ்.கண்ணன்

அன்புமிக்க தோழனே,
வணக்கம்.

ஒரு மாத கால இடைவெளி ஆனதால் மீண்டும் நலமறிய ஆவல். வர்த்தக நோக்கிலோ, இயந்திரத்தனமாகவோ இல்லை என உறுதியாகச் சொல்ல முடியும். சிலர் “வேலை ஆக வேண்டும் என்றால் கடிதம் எழுதுவீர்கள், இல்லையென்றால், எழுத மாட்டீர்கள்,’’ என்று சொல்கிறார்கள். இல்லை தோழா, வேலை வாங்குவதற்காக எழுதுவதோ, பேசுவதோ நமது அமைப்பில் இருக்கக் கூடாது. வேலையை குறிப்பிட்ட நோக்கத்தோடு செய்ய வேண்டும், குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டும், வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தவே நாம் தோழர்களுக்குக் கடிதம் எழுதுகிறோம் அல்லது பேசுகிறோம். எனவே, இதில் வேலை வாங்கும் எஜமானத்தனமோ, வேலை செய்யக் கடமைப்பட்ட தொழிலாளித்தனமோ இடம்பெற முடியாது.

இது ஒரு இயக்கம். தோழமை நிரம்பி வழியும் பேரியக்கம். டி.ஒய்.எப்.ஐ அமைப்பு எழுப்பிய சாதனை சுவர்களில், மைல் கற்களில் நம் அனைவரின் வியர்வையும், உழைப்பும் கலந்து மனம் வீசுவதை, சுவாசித்து உணர முடியும். ஆனாலும், போக வேண்டிய தூரத்தைப் பார்க்கிறபோது, இன்னும் சற்றுக் கூடுதலாக உழைத்தாலென்ன? என்று நமக்குள் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. 28 ஆண்டு காலமாகிவிட்ட இயக்கத்தின் வரலாற்றில் சில ரயில் பெட்டிகளைப் போல நாம் இருக்கிறோம். கொள்கை, கோட்பாடு, இலக்கு ஆகியவை எஞ்சினைப் போல் முன்னிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. கொள்கைக்கு ஒரு எஞ்சின் போதுமானது, சரியானது. ஆனால், இயக்கத்தை வழி நடத்துவதற்கு ஏராளமான எஞ்சின்கள் தேவைப்படுகிறது. முன்னணி பொறுப்பில் உள்ளோர்களும், பல கமிட்டிகளின் உறுப்பினர்களாக உள்ளோரும், இளைஞர் முழக்கத்தை சீரிய பார்வையுடன் படிப்போரும் தான் அத்தகைய எஞ்சின்களாக இருக்க முடியும்.

மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் கிளை, பகுதிக் குழு மற்றும் மாவட்ட மாநாடுகளில் எஞ்சின்களின் செயல்கள் குறித்து விமர்சனம் மற்றும் சுயவிமர்சனங்கள் செய்யப்படுகின்றன. சுயபரிசோதனை நடைபெறுகிறது. முன்னேற்றத்திற்கான புதிய உந்துதலுடன் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநாடுகளைத் தொடர்ந்து உறுப்பினர் பதிவு இயக்கம் ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறுகிறது. வெகுஜன உறுப்பினர் இயக்கம், வீடு, வீடாகச் சென்று சேர்ப்பதற்கான குழுக்கள் அமைக்கும் பணி பல மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி, மதுரை, விருதுநகர், நாமக்கல், குமரி, வடசென்னை, தூத்துக்குடி, நாகை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புப் பணி துவங்கியுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் 12 லட்சம் இளைஞர்களை நம் அமைப்பின் அங்கத்தினர் ஆக்குவது என மாநிலக் குழு முடிவு செய்திருக்கிறது. எல்லா மாவட்டங்களும் அவர்களின் இலக்கைப் பூர்த்தி செய்தால் தான், 12 லட்சத்தை அடைய முடியும். நமது மாநில மாநாடு விழுப்புரத்தில், செம்டம்பர் மாதம் கூடுகிறபோது, 12 லட்சம் என்ற இலக்கைப் பூர்த்தி செய்திருந்தால், புதிய மைல்கல்லைப் பதித்த உற்சாகத்துடன், பாய்ச்சல் வேக முன்னேற்றத்திற்கான வேலைகளைத் திட்டமிட முடியும்.

8 லட்சத்து 44 ஆயிரத்து 119 உறுப்பினர்களைச் சேர்த்து சில வேலைகளைத் திட்டமிட்ட நம்மால், 12 லட்சம் சாத்தியமா? என தயக்கம் காட்ட வேண்டியதில்லை. 573 கிளைகள் 2008_ஆம் ஆண்டு துவக்கத்தில் பொங்கல் விளையாட்டு விழாக்களை நடத்தியது. அதில் 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக, விளையாட்டு வீரர்களாக, போட்டிகளை நடத்துவோர்களாக பங்கேற்றுள்ளனர். ஒரு கிளையில் சராசரியாக 382 பேர் பங்கேற்றுள்ளனர். பல லட்சங்களை செலவிடும் கிளைகளாக மாறியுள்ளன. 2006 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் சுமார் 1000 கிளைகளில், மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்வைத்து ஸ்தல மட்டத்தில் போராட்டங்களை நடத்தியுள்ளோம். லட்சத்திற்கும் அதிகமானோர் நமது போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். பல கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளோம்.

1994இல் ஜெயலலிதா ஆட்சி வேலையில்லாக் கால நிவாரணத்தை நிறுத்தியதிலிருந்து, 2006 அக்டோபர் வரை, தளராமல், சோர்வடையாமல் 12 ஆண்டு காலத்தில் மாநிலத் தலைமையே 4 மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. மாவட்டங்களில் நிறைய மாற்றங்களைச் சந்தித்த போதும், நிலையாக நின்று போராடியதால், வேலையில்லாக் கால நிவாரணத்தைப் பெற முடிந்தது. தலைமுறை கடந்து இயக்க வளர்ச்சி இருப்பதால் சாத்தியமாயிற்று.

உலகின் வளர்ந்த நாடுகள் கூட, பொருளாதார பெருமந்தத்தை எதிர் கொள்ள முடியாமல், மக்கள் நலத்திட்டங்களை கைவிடலாமா? என யோசிக்கின்றன. உழைப்பாளி மற்றும் இளைஞர்களின் வீரச் சமர் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நம் தமிழகத்தில் வேலையில்லாக் கால நிவாரணம் பெற்ற அனுபவம் ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு இல்லாதுபோன நிலையிலும், நமது அமைப்பு நடத்திய இடைவிடாத போராட்டம் சாதித்திருக்கிறது. 48 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து இருந்தாலும், 3.5 லட்சம் இளைஞர்களுக்கு கிடைத்துள்ள நிவாரணத்திற்கு காரணகர்த்தா டி.ஒய்.எப்.ஐ. என்பதை ஆட்சியாளர்களால் கூட மறுக்க முடியாது. இது அரசின் சாதனை அல்ல, டி.ஒய்.எப்.ஐ நடத்திய போராட்டத்தின் சாதனை. எனவே, 3.5 லட்சம் குடும்பங்களில் உறுப்பினர் சேர்ப்பு பணியை நடத்த முடியும்.

உத்தப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நீதிக்காக எழுப்பிய குரல் தலித் மக்களுக்கான உரிமையில் சிறு பகுதியை வென்றடைய முடிந்துள்ளது. 19 ஆண்டுகாலம் “கொடும் மதில்’’ என காட்சி தந்த தீண்டாமைச் சுவரில் ஓட்டைபோட முடிந்துள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இடம் பெற்ற டி.ஒய்.எப்.ஐ.க்கும் இதில் பங்குண்டு. எனவே, முன்னிலும் கூடுதல் செல்வாக்கு தலித் மக்களிடம் டி.ஒய்.எப்.ஐ.க்கு ஏற்பட்டுள்ளது.

அருந்ததி மக்களுக்கான உள்ஒதுக்கீடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சூழல், சச்சார் கமிட்டியின் பரிந்துரையை அமலாக்க கோவை மாநகரில் நடைபெற்ற பாதயாத்திரை இயக்கம் பெரும் வரவேற்பை சிறுபான்மை பகுதி மக்களிடம் ஏற்படுத்திய சூழல், நாம் நடத்திய கிரிக்கெட் போட்டிகள் இளைஞர்களிடம் செல்வாக்கை ஏற்படுத்திய சூழல், ரசிகர் மன்றம் மற்றும் சுய உதவிக் குழுவினருடன் இணைந்து நடத்திய எண்ணற்ற போராட்டங்கள், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நமது தோழர்களின் வியர்வையால் கழுவப்பட்ட மருத்துவமனை அழுக்குகள், நாம் கொடுத்த ரத்தத்தால் உயிர்பிழைத்து இருக்கும் வீடுகள் இவை அனைத்தும் டி.ஒய்.எப்.ஐ இளைஞர்களை வரவேற்கக் காத்திருக்கும் வரலாற்றுத் தடங்கள் ஆகும். ஆம் இந்த பணிகள் அனைத்தையும் துண்டு பிரசுரங்களாக்கி வீடுகளில் விநியோகம் செய்ய வேண்டிய பெரும் கடமை காத்திருக்கிறது.

தோழா போ! வீடுகளில் இருக்கும் இளைஞனை, வாழ்க்கைத் தேவைக்காக வீதிக்கு அழைத்து வரும் காந்த சக்தியாகப் போ! வாய்ப்புகள் எல்லாக் காலத்திலும் வரும் என்பது உண்மையே! ஆனால், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். ஜோஸே மார்த்தி என்ற கியூப தேசத்து தலைவன், “நேரம் எப்போதும் யாருக்காவும் காத்திருப்பதில்லை, தாமதிப்போரை எட்டி உதைத்து முன்னேறிச் சென்று கொண்டே இருக்கும்’’ என்று கூறியுள்ளார். நூறு சதம் உண்மை. எதிர்கால வாய்ப்பை, எதிர்கால தலைமுறை பயன்படுத்த வேண்டுமானால், நிகழ்கால வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தும் விவேகமான தலைமுறையாக நாம் இருக்க வேண்டும். வேலையில்லாக் கால நிவாரணத்தை பெற்ற நாம், உதவித் தொகையை உயர்த்தவும், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்யவும், அதிரடிப் போராட்டங்களை நடத்திடுவதற்கு முன்னால் உறுப்பினர் சேர்ப்பை முடிப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com