Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007

மாயாவதியின் வெற்றி: மக்கள் குமுறலின் மகத்தான வெளிப்பாடு
- எஸ்.வி. சசிக்குமார்

உத்தரப்பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி குறிப்பிடத்தக்க, பாராட்டத்தக்க வெற்றி பெற்றிருக்கிறது மாயாவதியின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றிருக்கிறது. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனியாகப் போட்டியிட்டுத் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. நானூற்று ஞுமூன்று உறுப்பினாகள் கொண்ட சட்டமன்றத்தில், தோர்தல் நடைபெற்ற 402 இடங்களில் 206ஐக் கைப்பற்றி பகுஜன் சமாஜ் கட்சி பதவிக்கு வந்திருப்பது ஒரு வியக்கத்தக்க சாதனை தான். அவர் கட்சி பெற்ற வாக்குகள் 30.5 சதவீதம் ஆகும்.

Mayavathi மாயாவதி இதற்கு முன்னர் மூன்று முறைகள் முதலமைச்சர் பதவிவகித்திருந்தாலும், இம்முறைதான் கூட்டணி நிர்ப்பந்தங்கள் அச்சுறுத்தல்கள் போன்ற அபாயங்கள் இல்லாமல் தனிக்கட்சி ஆட்சியை முழு சுதந்திரத்துடன் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

மத்தியிலும், பல மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி நிலைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், உ.பி.யில் இம்மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதே மாயாவதியின் மாபெரும் சாதனைதான். இருபது ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஒரு தலித் கட்சி கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மத, சாதி அடையாளங்களைக் கொண்டவர்களையும் தனது அமைப்பில் சேர்த்துக் கொண்டு இன்று ஆட்சியைத் தனித்தே கைப்பற்றும் வல்லமையை பெற்றது என்று செய்தியாளர்களும், அரசியல் பார்வையாளர்களும் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் இரண்டுமே படுதோல்வி அடைந்திருக்கின்றன. பா.ஜ.க. தன் அபிமானத்திற்குரிய இராமர் “பிறந்த'' மண்ணிலேயே வரலாறு காணாத தோல்வியைத் தழுவ நேர்ந்தது பரிதாபகரமானது தான். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளி மதக்கலவரத்தை நாடுமுழுவதும் தொடங்கி வைத்துப் பன்னூறு மக்களைப் பிணங்களாக்கி அதிரடியாகத் தன் பலத்தைப் பெருக்கிக் கொண்ட பா.ஜ.க. இன்று செல்வாக்கிழந்து நிற்கிறது.

தேர்தல் களத்தில் ஊர் ஊராகக் காட்டித் திரிந்த முஸ்லீம் மக்களுக்கு எதிரான சி.டி.க்கள் மக்களிடமிருந்து தன்னை மேலும் அன்னியப் படுத்திவிட்டதே என்பதுதான் அக்கட்சியின் பெரும் வேதனை. பா.ஜ.க. பெற்ற இடம் 50, வாக்குகள் 17 சதவிகிதம்.

மக்கள் எதிர்ப்புக் கொள்கையும், நடவடிக்கைகளும் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் அவலங்களைப் பற்றிக் கவலைப்படாமல், நாளும் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள், பட்டினிச் சாவு. மக்கள் குடும்பம் குடும்பமாகக் கிராமப் புறங்களிலிருந்து வெளியேறிச் செல்லும் பரிதாப நிலை, நூற்றுக்கணக்கான ஆலைகள் மூடி லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து தவிக்கும் துயரம் என்று பல்வேறு பகுதி மக்கள் பல்வேறு மாநிலங்களில் செய்வதறியாது துயருற்றிருக்கும் நிலையில் மக்களின் மறுவாழ்வு பற்றி எந்த விதமான சிந்தனையுமின்றி இன்னமும் ஜவகர்லால் நேருவின் குடும்பப் பெருமையையும், இந்திரா, இராஜீவ் பரிதாபச் சாவுகளையும் மக்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் கொண்டுவந்தே கட்சி வளர்க்க முடியும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரமே இதற்குப் பெரிதும் காரணமாக இருந்திருக்கிறது. காங்கிரஸ் பெற்ற இடங்கள் 22, வாக்குகள் 8.47 சதவிகிதம்.

இவ்விரு தேசியக் கட்சிகளைத் தவிர தோல்வியைத் தழுவிய இன்னொரு பிரதான கட்சி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி, ஆட்சியை இழந்தாலும் தனது வாக்குவங்கியில் அப்படியொன்றும் பெரும் சேதம் ஏற்பட்டுவிடவில்லை என்று தன்மைத் தேற்றிக் கொண்டிருக்கிறது. (சமாஜ்வாதிக் கட்சி வென்ற இடங்கள் 97, வாக்குகள் 26.14 சதவிகிதம்) வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாதது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்கத் தவறி வன்முறைச் செயல்களும், குற்றங்களும் அச்சுறுத்தும் அளவிற்கு அதிகரிக்கவும் காரணமாயிருந்ததாக எதிர்க்கட்சிகள் எடுத்துவைத்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வகையறியாது திணறியது முலாயம் சிங்கின் கட்சி. தன்கட்சியின் பெயரிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும் சமதர்மத்தைப் புறக்கணித்து பெருமுதலாளிகளின் ரிலையன்ஸ் அம்பானி பெருமுதலாளிகளின் துணை கொண்டு மாநிலத்தைத் தொழில் மயமாக்கப் போவதாகப் போலி சமதர்மம் (அதற்கு “கார்பொரேட் சேஷலிசம்'' என்ற பெயர் வேறு) பேசிப் பொருளாதாரத் சீரழிவிற்குத் துணை போன முலாயம் சிங்கிற்கு உ.பி. மக்கள் நல்ல பாடம் கற்பித்துவிட்டார்கள்.

ஓடுக்கப்பட்ட சமூகத்தைச் சோந்த மாயாவதி நாடே அதிசயிக்கும் வண்ணம் 16 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்து உள்ள நிலை அடைந்திருப்பது எப்படி சாத்தியமாயிற்று? இது திடீரென ஏற்பட்ட, எதிர்பாராத ஒரு நிகழ்வா? இல்லை இரண்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டிய திட்டத்தை மிகுந்த முனைப்புடன் கவனத்துடன் செயல்படுத்திப் புதிய வியூகத்துடன் தேர்தலைச் சந்தித்த மாயாதேவியின் கடுமையான உழைப்பு இவ்வெற்றிக்குப் பெரியதொரு காரணம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

மாயாவதியின் திட்டம் என்ன? அவர் வகுத்த வியூகம்தான் என்ன? சுமார் 20 ஆண்டுகால அரசியல் அனுபவம் கற்றுத் தந்த பாடம் தான் அவரது கட்சியின் வளர்ச்சித் திட்டத்திற்கு வழிவகுத்திருக்கக் கூடும். பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழும் தலித் மக்கள் ஆட்சியில் பிரதான பங்கு வகிக்கும் அளவிற்கு உயர்ந்தே அவர்களது குறைகளை நிரந்தரமாகக் களைந்து சம அந்தஸ்த்தைப் பெறமுடியும். அவர்களது எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அரசியல் அதிகாரம் பெறும் வாய்ப்பு அவர்களுக்குச் சிறிது குறைவுதான். ஆனால், தனித்துப் போரிடாமல், தங்கள் அளவிற்கு சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டாவிட்டாலும், அரசின் தவறான கொள்கைகளினால் பாதிக்கப்பட்டு, கொடுமைகளையும், சிறுமைகளையும் தாங்கிக் கொண்டு தவியாய்த் தவிக்கும் பிற பகுதி உழைக்கும் மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும், அல்லல்களில் உழல்வோர் அனைவரையும் இணைத்துப் போராடுவதன் மூலம்தான் தலித் மக்கள் அதிகார மையைத்தை நோக்கி உறுதியாக அடியெடுத்து வைக்க முடியுமென்பது நிதர்சனமான உண்மை.

இப்புரிதல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ? பல்வேறு பகுதி மக்களின், மக்கள் குழுக்களின், சாதியினரின் துணை இன்றி தலித் மக்கள் தங்கள் இலக்கை அடைய இயலாது என்ற புரிதலாவது மாயாவதிக்கு ஏற்பட்டிருக்கிறது என்றே கொள்ளலாம். வலுவான கட்சிகள் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கேற்ப அமைக்கும் கூட்டணிகளில் தன்கட்சியையும் சேர்த்துக் கொண்டு பதவியிலமர்வதிலும், அதன் மூலம் தலித் மேம்பாட்டைச் சாத்தியமாக்குவதிலும் மாயாவதிக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டதாலேயே புதிய திட்டம் வகுக்கும் கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது.

மதவாதக்கட்சியான பா.ஜ.க.விற்கே அதிக பலன் அளிக்கிறதென்பதையும் அவர் உணர்ந்திருப்பார். அதுமட்டுமல்ல, பா.ஜ.க.வின் வகுப்புவாதக் கொள்கை இந்துத்வா. கணிசமான எண்ணிக்கையுள்ள பகுதியினரான முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் போன்ற சிறுபான்மைச் சமூகத்தினரிடமிருந்து தலித்துக்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்கியது என்பது தலித் கட்சிகளின் அனுபவம். அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க. போன்ற கட்சிகள் அவர்களது அடித்தளமான பார்ப்பனர் மற்றும் பிற “உயர் சாதி”'யினரைக் கொண்ட வாக்கு வங்கிகளில் ஒரு சிறுபகுதியைக் கூட தலித் கட்சிகள் ஈர்க்க முடியவில்லை என்பதையும், அவர்களிடம் மனமாற்றம் ஏற்படுத்துவது சாத்யமில்லை என்பதையும் அனுபவம் அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

ஆனால் என்ன? பா.ஜ.க.வின் வாக்கு வங்கியில் உள்ளவர்கள் போல் எல்லா உயர்சாதி (பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத ``உயர்'' சாதியினரும்) சாதிய மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர்களாகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் தலித் கட்சிகள் உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்றவர்களின் ஆதரவையும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத “கீழ்'' சாதி மக்களிலும் தங்களுக்கு நண்பர்களும், நல்லெண்ணம் கொண்டவர்களும் இருக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் அவர்கள் தலித்கட்சிகள் உணரவாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பு பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சிறிது அதிசமாகவே கிடைத்திருக்கிறது. இதுவே மாயாவதியின் புதிய வியூகத்திற்கு அடிப்படையாக அமைகிறது.


பார்ப்பனர், பிறஉயர்சாதியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து ஒரு கணிசமான பகுதியினரைத் தன்கட்சிக்குள்ளேயே கொண்டு வருவதன் மூலம் தனது கட்சியின் அடித்தளத்தை வலுவாக்க முடியும் என்பதும், கிறிஸ்துவர், முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெறமுடியும் என்பதும்தான் மாயாவதியின் எதிர்பார்ப்பு. இந்த எண்ணத்தின் அடிப்படையிலெழுந்தது தான் அவரது புதிய வியூகம்.

மாயாவதியின் புதிய கட்சியை வானவில் கூட்டணி என்றெல்லாம் அழைத்தாலும் உண்மையில் அது பல்வேறு கொள்கைகளுடைய பல கட்சிகளின் பிரிவினரையும் தலித்துக்களையும் உள்ளடக்கிய தலித் தலைமையிலான ஒரே கட்சியாக உருவாக்குவதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஒற்றுமையை உருவாக்கியிருப்பது மாயாவதியின் ஒரு பெரும் சாதனைதான். இதைத் தொடக்க நிலையிலேயே “தலித் ஆதிக்க சாதி' கூட்டணி என்று சொல்லி ஒதுக்க நினைப்பது எவ்வளவு தூரம் சரியாக இருக்குமென்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகத் தெரிகிறது.

மக்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி உருவான கட்சிகள் எத்தனையோ தேசிய, மாநில அளவில் இருந்திருக்கின்றன. சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் தோன்றிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் அந்நிய ஆட்சியை எதிர்க்க அனைத்துப் பிரிவு மக்களையும் இணைத்துச் செயல்பட முடிந்தது தெரிந்த விஷயம்தான். மத, சாதி பேதங்களைக் கடந்து சாதிக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றனவே, எனவே, மாயாவதியின் புதிய முயற்சியை வரவேற்கலாம்.

முயற்சி கைகூட அவர்காட்டிய முனைப்பையும் பாராட்டலாம். ஆனால், அவரது சொந்த மதியூகத்தினாலும், திறமையினாலுமே சமூக மாற்றம் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதும் தேவையில்லை.

உ.பி.யில் ஏற்பட்டிருக்கும் அதிரடி அரசியல் மாற்றத்திற்குப் பொருளாதார, அரசியல் காரணங்களும் இருந்திருக்கின்றன என்பதையும் கணக்கில் எடுக்கத் தவறக் கூடாது. ஒருவகையில் பார்த்தால் உ.பி.முடிவுகள் 2005 பீகார் தேர்தல் முடிவுகளுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. வெறும் சாதி அடையாளங்களையும், மத அடையாளங்களையும் மட்டுமே நம்பி அரசியல் தொடர்ந்து இருக்க முடியாது. மக்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, தொடர்ந்து அவர்களைத் தாக்கிவரும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுபடும் வழியைக்காட்டாது அரசுகள் சாதியின் பேராலும், மதத்தின் பேராலும் காலத்தை ஓட்டுவது என்பது இனியும் முடியாது என்று கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும்.

இந்திய மக்கள் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே இந்த இரண்டு வெற்றிகளும் தோன்றுகின்றன. பீகாரில் நிதிஷ்குமார் சங்பரிவாரின் பிடியை உதறித்தள்ளிவிட்டுத் தேர்தலை சந்தித்ததினாலேயே வெற்றியை உறுதிப்படுத்த முடிந்தது, இங்கேயும் மதம், சாதி என்ற அம்சங்களை முற்றிலும் நிராகரிக்காமல் அதேநேரத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் இணைந்ததுக் கொண்டு அரசியல், பொருளாதார சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறதென்பதை இப்போதைக்கு உ.பி.தேர்தல்கள் 2007 மக்களுக்குத் தரும் செய்தியாகத் தெரிகிறது.

மாயாவதி அரசின் திட்டங்கள் அவரது புதிய முயற்சியின் லட்சியத்தை நிறைவேற்றும் திக்கில் சென்றால் தான் அதுமுழுமையடையும். இதற்கான தத்துவார்த்தப் பார்வையும், அரசியல் பொருளாதார, சமூகக் கொள்கைகளும் மாயாவதியிடம் உருவாகியிருக்கிறதா என்பதும் அவற்றைப் பின்பற்றுவதில் அவருக்கு எந்த அளவு உறுதிப்பாடு இருக்கிறது என்பதும் தான் அவரது புதிய வியூகத்தைப் பிற மாநிலங்களில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதற்குப் பதில் சொல்வதாய் அமையும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com