Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007

கே.என் பணிக்கர் - அ. மார்க்ஸ்
சச்சார் குழு அறிக்கை - இரு புத்தகங்கள்
எஸ்.ஜி. ரமேஷ்பாபு

பல சமூக இனக்குழுக்கள் சேர்ந்திசைந்து வாழும் ஒரு நாட்டில், பெரும்பான்மை சமூகத்தின் சமூக, அரசியல் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பெரும்பான்மையின் மத அடையாளத்தை முன்நிறுத்தி சிறுபான்மை சமூகங்களை கேள்விக்குள்ளாக்குவது மதவாத அரசியலின் அடிப்படையாகும். மதவாத அரசியலின் மூலம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற துணியும் சக்திகள் சமூகத்தின் பொதுபுத்தியில் சிறுபான்மை சமூகங்கள் குறித்து தவறான மற்றும் வெறியூட்டக் கூடிய கருத்துக்களை பதியவைப்பது தவிர்க்க முடியாத பொதுவிதியாய் உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல ஆண்டுகளாய் விதைத்து வரும் விஷமக் கருத்துக்கள், பொதுத் தளத்தில் அம்மக்கள் மீதும், அம்மக்களுக்குள்ளும் பல தாக்கங்களை ஏர்படுத்தி உள்ளது. குறிப்பாக 1992 டிசம்பர் 6க்கு பின் விளைந்த நிகழ்வுகள் மேலும் மோசமான விளைவை உருவாக்கின.

இஸ்லாமிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது அவர்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள பார்வையாகும். இஸ்லாமிய மக்களின் தனித்தன்மையான அடையாளங்களே பொது புலத்தில் அவர்களுக்கு கவலைக்குரிய விஷயங்களாகி விடுகின்றன. தாடி வைப்பவர் எல்லாம் வன்முறையாளர்கள் அல்லது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்ற கருத்தும், ஒரு பிரச்சினை நடந்தால் முஸ்லிம் இளைஞர்களை காவல் துறையினர் கேள்வி இல்லாமல் கொண்டுசெல்வதும் நடைமுறையில் அதிகமாகி வருகிறது. தான் விரும்பிய இடத்தில் சொத்து வாங்குவதோ இல்லை வாடகைக்கு எடுப்பதோ முஸ்லிம்களுக்கு நாளுக்கு நாள் கடினமாகி வருகின்றது. ஒரே நேரத்தில் தேசத்துரோகம் மற்றும் தாஜா செய்யப்படுதல் என்கிற முத்திரைகளைத் தாங்குகிற இரட்டைச் சுமைகளுள்ளவர்களாக இவர்கள் உள்ளனர். பல மாநிலங்களில் பாடநூல்களில் கூட வெளிப்படும் வகுப்புவாத தன்மையும் இன்னும் பலவும் தாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு பெரும்பகுதி முஸ்லிம்களை பிடித்தாட்டுவதால் அவர்கள் “ஒட்டுமொத்த அந்நியமாதலுக்கு” ஆளாகின்றனர்.

இந்த பின்னனியில் தான் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை மேற்கொள்ளப் படாத அளவில் விரிவான விசாரணை மேற்கொண்டு சச்சார் குழு தன் அறிக்கையை கொடுத்துள்ளது. 1. மக்கள் தொகை அறிக்கை 2001, 2. தேசிய மாதிரி சர்வேக்கள் - 55 மற்றும் 61ம் சுற்றுக்கள், 3. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள், 4. அரசு நியமித்த ஆணையங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தரவுகள், 5. அமைச்சகங்கள், அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் இவையில்லாமல் 13 மாநிலங்களுக்கு நேரடியாய் சென்று சந்திப்புகளை நிகழ்த்தி சுமார் 578 மனுக்களை பெற்று இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து கே.என் பணிக்கர் ஆற்றிய உரையை பாரதி புத்தகாலயம் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். மிக ஆழமான விவாத பொருளை எளிமையாக பணிக்கர் விளக்கி உள்ளார். புள்ளி விபரங்களுக்குள் சென்று மாட்டிக்கொள்ளாமல் சமூக பின்புலத்துடன் விவரிக்கிறார். 1881 ம் ஆண்டு வில்லியம் ஹண்டர் குழு வங்கத்தில் செய்த ஆய்வு துவங்கி, இஸ்லாமியர்கள் மீது பொது வெறுப்பை பிரிடிஷ் அரசு ஏன் எந்த காரணத்தால் விதைத்தது என விவரிக்கிறார். சச்சார் குழு குஜராத் கலவரம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும், இட ஒதுக்கீடு குறித்து திட்டவட்டமான வரையரை செய்ய போதிய கவனம் செலுத்தாதது குறித்தும் கூறுகிறார். மக்கள் சமுதாயத்தின் எண்ண ஓட்டம் மாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசனையை முன்வைக்கிறார். அவநம்பிக்கையால் விரக்தி மனப்பான்மையுடன் உள்ள இஸ்லாமிய மக்கள் பின்பற்ற வேண்டிய அரசியல் பாதை எது என்ற மாற்று ஆலோசனையுடன் தன் உரையை முடிக்கிறார். தத்துவார்த்த பின்புலத்துடன் மிகத் தேவையான நேரத்தில் வந்துள்ள புத்தகம் இது.

அடுத்து சச்சார் குழு பரிந்துரைகளை அ. மார்க்ஸ் விரிவாக எழுதி எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள புத்தகம். இதில் மார்க்ஸ் 1. ஓர் அறிமுகம். 2. ஒரு வேகமான அலசல். 3. தகரும் பொய்கள், மேலெழும் கேள்விகள், விமர்சனங்கள். 4. சில சிந்தனை உசுப்பல்கள் என நாங்கு தலைப்புகளில் மிகவும் எளிய நடையில் எழுதியுள்ளார். இது அல்லாமல் 7 பின்னிணைப்புகள் இந்நூலில் உள்ளது. (சிறுபான்மையோர் நலனுக்கான பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம் உள்ளிட்டு பல நல்ல தரவுகள் இதில் உள்ளது குறிப்பிடதக்கது)

“சச்சார் அறிக்கை என்பது முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை பேசும் பரிந்துரை அறிக்கை என பலரால் இங்கு முன்வைக்கப்படுகிறது. ஆனால் சச்சார் குழுவின் பரிந்துரைகள் மிகவும் விரிவான தளத்தில் தனது கருத்துகளை தொகுத்துள்ளது. பன்மைத்துவம் குறித்தும், முஸ்லிம்கள் மீது சமுதாயத்தில் நிலவும் புறக்கணிப்பு குறித்தும், அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பிரக்ஞையூட்டுவதையும் அது வற்புறுத்துகிறது. பாடநூல்களின் உள்ளுறையை மதிப்பிடுகிற சட்டபூர்வமான அமைப்பு ஒன்று உருவாக்கிடவும், உயர்கல்வியில் பன்மைத்துவம் செயல்படும் வகையில் ஒரு மாற்றுச் சேர்க்கை அளவுகோலையும், முஸ்லீம்கள் மேலும் மேலும் தனிமைப்பட்டு புவியியல் மற்றும் கலாச்சார அடிப்படையில் சுருங்குவதை தடுப்பதில் சிவில் சமூகத்தின் பொறுப்பையும் இக்குழு சுட்டுகிறது. மேலும் பஞ்சாயத்து, முனிசிபாலிடி, கார்ப்பரேஷன், கூட்டுறவு வங்கி, மார்கெடிங் கமிட்டி ஆகியவற்றில் முஸ்லிம் உறுப்பினர்களை நியமனம் செய்யும் ஆந்திர மாநில சட்டத் திருத்தங்களை இக்குழு கவனத்தில் கொண்டு வருகிறது.” என்று இக்குழுவின் பரந்த தளத்தினை முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுவது எத்துனை உண்மை என புத்தகத்தை படித்து முடிக்கும் போது தெரியும்.

1. பின்புலம், அணுகல் முறை, ஆய்வு முறையியல் 2.பொதுப் புத்தியின் பார்வைகளும் கண்ணோட்டங்களும் 3. முஸ்லிம்களின் மக்கள் தொகை பரவலும், ஆரோக்கிய நிலையும் 4. முஸ்லிம்களின் கல்வி நிலை 5. முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலைகள் 6. வங்கிக் கடன்களைப் பெறுதல் 7. சமூக வசதிகள் மற்றும் அகக் கட்டுமானங்களை பயன்படுத்தும் வாய்ப்பு 8. ஏழ்மை நுகர்வு வாழ்க்கைதரம் 9. அரசு வேலைவாய்ப்பும் இதர திட்டங்களும் 10. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களும் உறுதியாக்க நடவடிக்கையும் 11. சமுதாய முயற்சிகளை ஊக்குவித்தல்: வகாபை முன்வைத்து 12. எதிர்காலத்தை நோக்கி : பார்வைகளும் பரிந்துரைகளும் என அறிக்கை 12 தலைப்புகளில் பேசுகிறது.

அடையாளம் சார்ந்த பிரச்சினைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், சமத்துவம் சார்ந்த பிரச்சினைகள் ஆகிய இம்மூன்று பிரச்சினைகளும் எல்லாச் சிறுபான்மையினருக்கும் ஒரே மாதிரி இருக்கும் எனவும் சொல்ல இயலாது. அதே போல வேற்றுமைகள் நிறைந்த ஒரு சமூகத்தில் இவற்றில் சில பிரச்சினைகளைப் பெரும்பான்மைச் சமூகத்தில் சிலரும் கூடச் சந்திக்கக்கூடும். எனவே எல்லா ஏழைகளுக்குமான பிரச்சினைகள் (முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் ஏழைகள்), எல்லாச் சிறுபன்மையினருக்குமான பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்சினைகள் என்று மூன்று வகையில் இப்பிரச்சினைகளை அனுகியதுதான் சச்சார் குழுவின் சிறப்பு அம்சம்.

உலகமயம், தாராளமயம், முதலியன இம்மக்களின் பாரம்பரியத் தொழில்களைப் பாதித்துள்ளதால் வேலை வாய்ப்பு இன்னும் மோசமாகியுள்ளது. நிரந்தர வேலை, சமூக பாதுகாப்பு ஆகியவையின்றி எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலும், மற்றவர்களை ஒப்பிட்டால் குறைந்த கூலியை பெருபவர்களாகவும், பணி பாதுகாப்பில்லாத தெரு வணிகங்களிலேயே அதிகம் உள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்துள்ள பகுதிகளை பல வங்கிகள், “எதிர் மறையான அல்லது சிவப்பு பகுதிகள்” என அறிவித்து கடன் உதவிகளை செய்ய மறுக்கின்றன.

இந்தியாவில் உள்ள் 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 33 பேர்மட்டுமே முஸ்லீம்கள்

முஸ்லிம்களின் ஆரோக்கியம், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் அவர்களின் ஏழ்மையுடனும், தூய குடிநீர், சுகாதாரமான சூழல் முதலியன இல்லாமை ஆகியவற்றுடனும் உள்ளனர்.

6 - 14 வயதுள்ள முஸ்லிம் பிள்ளைகளில் 25 சதத்தினர் பள்ளிக்கூடங்களுக்கு சென்றதேயில்லை. முன்னணிக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயில்பவர்களில் 25 மாணவர்களில் ஒருவரும், பட்டமேற்படிப்பில் 50 ல் ஒருவரும் முஸ்லிம்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 13.4 சதமாக உள்ள இஸ்லாமியர்கள் அரசுத்துறையில் வெறும் 4.9 சதமே உள்ளனர். உதாரணமாக காவல்துறையில் 6 சதம், கல்வித்துறையில் 6.5 சதம், உள்துறையில் 7.3 சதம், போக்குவரத்து துறையில் 6.5 சதம், நலவாழ்வு துறையில் 4.4 சதம்,

நீதித்துறையில் 7.8 சதம், ரயில்வே துறையில் 4.5 சதம், ஐ.ஏ.எஸ், ஐ,பி,எஸ் ல் 3.2 சதம், பொதுத்துறையில் 7.2 சதவிகிதமே உள்ளனர்.

இவைகளில் குறைவாக உள்ளவர்கள் மற்றொன்றில் அதிக சதவீதத்தில் உள்ளனர். அது சிறைச்சாலை ஆகும். மகாராஸ்டிராவில் முஸ்லிம்கள் மக்கள் தொகை 10.6 சதம் ஆனால் சிறையில் உள்ள மொத்த தொகையில் 40 சதம் இவர்கள்தான். ராஜஸ்தானில் 9.6 சதம் முஸ்லிம்கள் உள்ளனர் ஆனால் சிறையில் உள்ள மொத்த தொகையில் இவர்களின் பங்கு 25 ஆகும். நமது நாட்டில் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 80 சதம் இஸ்லாமிய சகோதரர்கள்தான்.

இப்படி பிரச்சினைகளின் பட்டியல் இன்னும் பல தளங்களில் தொடர்கிறது. சச்சார் குழு எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொண்டு சில தீர்வுக்கான ஆலோசனைகளை கொடுத்துள்ளது. நமது அரசு அதை எத்துனை வேகத்தில் அரசியல் துணிவுடன் அமல் படுத்தப் போகிறது என்பதுதான் கேள்வி.

எல்லா சமூக மதப் பிரிவினர்களின் தரவுகளைக்கொண்ட “தேசிய தரவு வங்கி”, அரசின் திட்டங்கள் அணைத்து சமூக மதப் பிரிவினருக்கும் சென்றடைகிறதா என பார்க்க “மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு ஆணையம்”, தனக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை புகாராக கொடுக்க நம்பிக்கை வரவேண்டும். அதை நோக்கி புறக்கணிக்கப்பட்ட குழுக்களின் குறைகளைத் தீர்க்க “சம வாய்ப்பு ஆணையம்”, தொகுதிகள் ஒதுக்கீட்டில் நியாயமாக நடந்து கொள்ளுதல், கல்வி, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு, வீட்டு வசதி ஆகிய அம்சங்களில் எல்லா சமுதாய பிரிவினருக்கும் சமவாய்ப்பை உறுதி செய்ய “பன்மைத்துவ குறியெண்ணை” உருவாக்குவது. மத்திய அரசாங்கத்தின் திட்டங்களின் கீழ் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு என 15 சதமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டு சச்சார் குழு பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் மீது இந்துத்துவ சக்திகள் கட்டவிழ்த்து விடும் வன்மம் நிறைந்த பொய் பிரச்சாரத்தினை எதிர்கொள்ள பல்வேறு விபரங்களுடன், ஆதரத்துடன் வாதாட சமூக பண்பாட்டு ஊழியர்களுக்கு அ. மார்க்ஸ் எழுதிய “சச்சார் குழு அறிக்கை அறிமுகம் சுருக்கம் விமர்சனம்” என்ற புத்தகமும், பிரகாஷ் காரத் வெளியிட்ட கோரிக்கை சாசனத்துடனும், “சமுதாயம், அரசியல் தளங்களில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பதை உள்ளடக்கியதுதான் நமது ஜனநாயகத்தின் அம்சமாகும்” என்ற முழக்கத்துடன் கே.என் பணிக்கர் எழுதிய “நவீன இந்திய சமூகத்தில் சிறுபான்மையினர்” என்ற புத்தகமும் மிகவும் பயன்படும்.

புட்டின் சுவை சாப்பிடும் போதுதான் தெரியும். வெறுமனே புட்டு தயாரித்து வைப்பது என்பது சாப்பிடுவது ஆகாது தற்போதய கேள்வி அமலாக்கம் பற்றியதே. தேவையான நிர்ப்பந்தம் இல்லாமல் அரசு இந்த பரிந்துரைகளை அலம் படுத்தாது என கே.என் பணிக்கர் குறிப்பிடுவது மிக முக்கியமானது. இந்த உதாரணம் இப்படியும் பொருந்துமா பாருங்கள், இப்புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல போகிறோமா அல்லது புட்டை வேடிக்கை பார்க்க போகிறோமா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com