Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007
சிறுகதை
பங்காளிகள்
- புதுகை சஞ்சீவி

இருபத்தைந்து நாளைக்குள் சின்னவன் ரொம்பத் தான், மாறிப் போயிருந்தான்.

Boys இப்போதெல்லாம் பெரியவன் வருகையை எதிர்பார்த்து, பெரியவனுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை, அழுந்தத் துடைத்து சற்று நேரம் அதையே உற்றுப் பார்க்கிறான், மாலை போட்டிருக்கும் ‘அவர்’ படத்திற்கு முன், கும்பிட்டவாறு நின்று கொண்டு. ‘‘அண்ணணுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதுப்பா....’’ என்று வேண்டிக் கொள்கிறான். ஊசி நூலால் ஆங்காங்கே தைத்த பழைய புடவையும், நெற்றி நிறைய திருநீறுமாக இருக்கிற என்னைப் பார்த்து, எந்நேரமும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தவன், பெரியவனைப் பற்றியே புலம்த் தீர்க்கிறான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, வேலைக்கு இடையே சாயங்காலமாய் வீடு வந்த சின்னவன், அரக்கப் பரக்க என்னிடம் ஓடி வந்தான்.

‘‘எங்க ஓனர் கடைக்கு சீனி, போன் பண்ணுனாம்மா... ஓசூர்ல பேரிங் கம்பெனியில வேலன்னு சொல்லி, கூட்டிப் போன புரோக்கரு இங்கேர்ந்து போன ஆறு பேரையும் ஏமாத்தி, ஆந்திராப் பக்கம் கூட்டிப் போயிட்டானாம், அடி பைப்பு மாதிரி, போர் போடுற வேலையாம். லாரியிலேயே சமைச்சு சாப்பிடுக்கனுமாம், ஒரு நாளைக்கு அம்பது ரூவா அறுபது ரூவா சம்பளத்துக்கு, ராப் பகலா கஷ்டப்படனுமாம். ஆள விட்டாப் போதும்னு ஊருக்கு வரலாம்னா விட மாட்டேங்கிறாங்களாம். அவனோட ஓனர். போன் நம்பர் குடுத்தாம்மா.... ஏதாச்சும் பொய் சொல்லி என்னை உடனே ஊருக்குக் கூப்பிட ஏற்பாடு பன்னுடான்னு அழுகுறாம்மா....’’ என்று குரல் உடைந்து கதறலாய்ச் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் பகீரென்றது. ‘காணாத எடத்துல புள்ள என்னெ கஷ்டப்படுறானோ?’ என்று மனம் பதற சட்டென்று கண்களில் நீர் திரண்டது. நான் அழுவது தெரிந்தால், சின்னவன் மனம் உடைந்து விடுவானே என்பதற்காக, கஷ்டப்பட்டு என்னை கட்டுப்படுத்திக் கொண்டு, இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டேன்.

வரிசை வீடுகளுக்குப் பொதுவாகக் கிடந்த ஆட்டுக்கல்லில் மாவாட்டிக் கொண்டே, சின்னவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த லதா அம்மா அவசரமாய்ச் சொன்னாள். ‘‘உங்கண்ணே மொத தடவையா வீட்டைப் பிரிஞ்சு இருக்கனால அப்டிச் சொல்லுவான். புடிக்கலன்னு சொல்றாங்கிறதுக்காக, திரும்பி வரச் சொல்லீராதடா... ரெண்டு மூணு மாசத்துல எல்லாம் பழகிப் போயிடும்.’’

இவன் சட்டென்று முகம் வாடி, கவலையோடு அவளிடம் சொன்னான். ‘‘சீனி இல்லாம வீடே வெறிச்சோடிக் கெடக்கு லதாம்மா... அவன் அழுகையைக் கேட்டதும் துடிச்சுப் போயிட்டேன்.’’

சற்று நேரத்தில் தெரு முக்கத்தில் எஸ்.டி.டி. பூத்திலிருந்து, பெரியவனின் முதலாளிக்கு போன் செய்தான். ‘‘எங்கம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். சீனியப் பாக்கனும்கிறாங்க. உடனே வரச் சொல்லுங்க....’’ என்று சொல்லி அவன் புறப்பட்டு வருவதை உறுதியாய் அறிந்து கொண்ட பின் தான், வீடு திரும்பினான் சின்னவன். வாசற்படியோரம் செருப்பைக் கழற்றும் போதே, சத்தமாய்ச் சொன்னான். ‘‘இன்னமே அவன் வேலைக்கேப் போக வேணாம். இங்கெ வந்து சும்மா இருக்கட்டும்’’
நான் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தேன்.

முன்பொரு நாள் இவன் வேலை முடிந்து வந்த இரவில், சைக்கிளை நிறுத்தி விட்டு, விறு விறுவென பின் பக்கம் சென்றான். வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. சாப்பிடக் கூப்பிட்டதற்கும் பதிலே இல்லை. விளக்கைப் போட்ட போது. கேனிக் கட்டையில் உர்ரென்று உட்கார்ந்திருந்தவன், முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

‘‘என்னாச்சு? யேன் உம்னு இருக்க?’’ என்று கேட்டு, ‘‘வீட்டுக்குள்ள வா....’’ என்று அவன் கையைப் பற்றிய போது வெப்பமாய் முறைத்த படி, கையை உதறிக் கேட்டான்.

‘‘நா... என்னைக் கேனயனா?’’

பைனான்ஸ் கடை முதலாளி, இவனை ‘பெண்டு’ கழட்டும் நேரத்தில் எல்லாம், அவரிடம் கோபத்தைக் காண்பிக்க முடியாமல் இப்படித் தான் வீட்டில் வந்து வெடிப்பான்.

ஒவ்வொரு கடைக்கும் பைனான்ஸ் கொடுக்கும் போது, முதலாளி வட்டியை எடுத்துக் கொண்டு, மல்லாக்கப் படுத்துக் கொள்கிறார். தினந்தோறும் சைக்கிளில் நாயாய் பேயாய் அலைந்து. அதை வசூல் பண்ணிக் கொடுப்பதற்குள், இவன் ரத்தம் சுண்டிப் போகும். அதிலும் சிலர் கட்டாமல் போட்ட பணத்திற்கெல்லாம். இவனைக் குதறி விடுவார் முதலாளி. ‘வசூலாகாமல் முடங்கிப் போன பணத்தை வசூல் செய்பவன் தான் பெரிய பைனான்ஸ்காரன்’ என்று அடிக்கடி சொல்வாராம். ‘இன்றைக்கென்ன நடந்ததோ?’ என்றென்னியவாறு மெள்ள அவன் தோளைத் தொட்ட போது, வெகுண்டு நிமிர்ந்தான்.

‘‘காலமெல்லாம் நா மட்டும் அவதிப்படனும்னு தலையெழுத்தா? அவனையும் ஒரு வேலைக்கு போகச் சொல்லு...’’

வழக்கமாய் பாய்கிற பாய்ச்சல் தான். பெரியவன் பத்தாவதை முடித்து, பத்து வருஷமாகியும் சும்மாவே இருக்கிறான். அவ்வளவாய் சுதாரிப்பு இல்லாதவன். பயந்த சுபாவம் வேறு. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கடைகளுக்கு வேலைக்குப் போனான். அடுத்தவர்களின் அதட்டலுக்கும், உருட்டலுக்கும் ஆளான போது, ‘இனி போக மாட்டேன்’ என்று அடம் பிடிக்கத் துவங்கினான். நானும் அவனை லேசில் விடவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தார்க்குச்சியாய் குத்திப் பார்த்தேன். எதற்கும் அசைய மாட்டான்.

இதற்கு மேல் அவனை என்ன தான் செய்வதென்று புரியாமல், விதியே என்று விட்டு விட்டேன். அவ்வப்போது, ‘‘ஏதாவது ஒரு கடையிலயாச்சும் போயி இருடா...’’ என்று கெஞ்சியும் மிஞ்சியும் சொல்லிப் பார்ப்பேன். சலிப்போடு ஒரு பார்வையை வீசுவான். அவ்வளவு தான். அடுத்த நிமிடம், தெருக்கோடியில், அவன் வேக வேகமாய் நடந்து போவது தெரியும்.

ஆனால், சின்னவன் பத்தாவதை படித்தக் கையோடு, சாடாரென வேலைக்குப் புறப்பட்டு விட்டான். கொஞ்சநாள் பெட்ரோல் பங்கில் வேலை, அப்புறம் லேத் பட்டறை, பிறகு மளிகைக் கடையில் பொட்டலம் மடித்தான். இப்போது பைனான்ஸ் கடை.

இதனிடையே என்னிடம் மல்லுக்கு நின்று பெரியவன் சும்மாயிருப்பதற்கு, நான்தான் காரணம் என்று குற்றம் சாற்றுவான். “சோறு போடாத... தானா வேலைக்குப் போவான்...“ என்று உத்தரவு போடுவான்.

“நா, பெத்த தாயிடா... ஒரு கண்ணுல வேண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வச்சு என்னாலப் பாக்க முடியாது...“ என்று பதிலுக்குச் சத்தம் போடுவேன்.

’எட்டாவது பாஸ், பெயில், டென்த், பிளஸ் டூ, டிகிரி என்று எல்லோருக்கும் வேலை. அவரவர் தகுதிக்கேற்ப, மாசம் மூவாயிரத்திலுருந்து, ஒன்பதாயிரம் வரை சம்பளம்’ என்று பஸ் ஸ்டாண்டில் இருக்கும் தூண்களில் எல்லாம் ’பிட்’ நோட்டிஸ்கள் ஒட்டப் பட்டிருப்பதைப் பார்த்து, அதிலிருந்த நம்பருக்கு ஃபோன் செய்து, இங்கேயிருந்து ஐந்தாறு பசங்கள் வேலைக்குப் புறப்பட்டார்கள். பெரியவனின் சேர்மானம் சுகுமார் கிளம்பிய போது, இவனுக்கும் ஆசை வார்த்தை காட்டி, புறப்பட வைத்தான்.

’புள்ளைக்கு திடீர்னு புத்தி வந்திருச்சே! என்கிற ஆச்சரியம் எனக்கு... கஷ்டமெல்லாம் இத்துடன் தீர்ந்து விட்ட மாதிரியும், கடனெல்லாம் அடைத்து விட்ட மாதிரியும், கனவு கண்டு, இனி வாழ்க்கை நன்றாக இருக்கப் போகிறதென நம்பிக்கை கொண்டிருந்தேன். பசங்கள் எல்லாம் சந்தோஷமாய் வேலைக்குப் புறப்பட, பெற்றவர்கள் கடனை உடனை வாங்கி அவர்களை வழியனுப்பத் தயாரானார்கள்.

இனி யாரையும் சார்ந்து வாழாமல், சுயமாய் சம்பாதித்து முன்னேறப் போகிற சந்தோஷத்தோடும், புதிய இடத்தில் உடன் வேலை செய்பவர்கள் எல்லாம், நன்றாகப் பழகுவார்களோ, மாட்டார்களோ என்கிறப் பயத்தோடும் அனைவரும் புறப்பட்டார்கள்.
சின்னவன் அவனுடைய முதலாளியிடம், ஐநூறு ரூபாய் கடன் வாங்கி, வெளிர்பச்சை நிறத்தில் சிறிய சூட்கேஸும் இரண்டு பணியன் ஜட்டிகளும் வாங்கி வந்து பெரியவனுக்குக் கொடுத்தான். அவன் சூட்கேஸில் துணிகளை அடுக்கி, சோப்பு, சீப்பு கையடக்கக் கண்ணாடி என்று வரிசையாய் வைத்துக் கொண்டிருந்தபோது, இவன் டிரெங்கு பெட்டியை திறந்து நல்ல சட்டையாக இரண்டை எடுத்து, “இதையும் கொண்டுபோ“ என்று பிரியத்துடன் நீட்டினான். பெரியவன் நம்பமுடியாமல் திகைத்துப் போய் கூர்ந்து பார்த்தான்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால்தான் சட்டைக்காக இருவரும் அடித்துக் கொண்டு, கட்டி உருண்டார்கள். பெரியவனின் சினேகிதன் சுகுமாரின் தங்கை கல்யானத்திற்கு அவன் புறப்பட்டபோது, சின்னவனின் பெட்டியில், அயர்ன் பண்ணி வைத்திருந்த வெள்ளை முழுக்கைச் சட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு மிடுக்காக கிளம்பினான். சாயங்காலம் திரும்பி வந்தபோது, சட்டை எதிலேயோ மாட்டி, தோள் பட்டையோரம் கிழிந்து, லேசாக காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

வேலை முடிந்து வீடுவந்த சின்னவன், வெள்ளைச் சட்டையைக் கண்டதும், “எனக்கு புடிச்சச் சட்டையை கிழிச்சுட்டியே...“என்று கத்திக் கொண்டே பெரியவனின் மீது பாய்ந்தான்.

அதற்குப் பின் இருவரும் கொஞ்ச நாட்களுக்கு பேசிக் கொள்ளவே இல்லை. அவர்களுக்குள் ஏதேனும் சேதிகேட்க வேண்டியிருந்தால், சுவரைப் பார்த்து ஒருவன் கேள்வி கேட்க முதுகைக் காண்பித்து மற்றவன் பதில் சொல்வான். கொஞ்ச நாட்களில் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமலேயே, ஆத்திர அவசரத்திற்கு சைக்கிளில் ஒன்றாய்ப் போக ஆரம்பித்தார்கள்.

பெரியவன் அவனுக்குப் பிடித்த சினிமா நடிகரின் படத்தை வாசற் கதவில் ஒட்டி வைக்க, இவன் சண்டையிட்டு, அதைப் பிய்த்து, தண்ணீர் தெளித்து சுரண்டியெடுப்பது ரேடியோவில் அவன் ஸ்டேசன் மாற்றினால், இவன் குஸ்திக்குக் கிளம்புவது சின்னவன் எங்காவது புறப்படும் நேரத்தில், பெரியவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் விடுவது என்று ஏதேனும் ஒரு காரணத்தால் இருவருக்குள்ளும் அடிக்கடி எதிர்ப்பும் வண்டையும் இருந்து கொண்டே இருக்கும்.

பெரியவனை கொஞ்ச நாட்கள் பிரிந்ததற்குள், சின்னவன் தலைகீழாய் மாறிப்போயிருந்தான். எப்போதுபார்த்தாலும் சதா பெரியவனைப் பற்றியே பேசித் தீர்த்தான். பைனான்ஸ் வசூலுக்காக சைக்கிளில் ஊரெல்லாம் திரிந்து விட்டு, சடசடத்துப் போய் திரும்பி வரும் போதெல்லாம், “அங்கே சீனி என்ன கஷ்டப்படுறானோ?” என்று புலம்பத் தொடங்கினான். ஆந்திராப் பக்கம் கூட்டிப்போய், போர்போடும் வேலையில் அவதிப்படுவதை அறிந்ததும் ’பெரியவனை அனுப்பிய புரோக்கர் தெரிந்தால் அடிச்சுக் கையக் காலை ஒடச்சிடுவேன்’ என்று ஆத்திரப் பட்டான்.

“அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக், சீனிய ஒடனே வரச் சொல்லுங்க” என்று பெரியவனின் முதலாளிக்கு ஃபோன் செய்து, இரண்டு நாட்களாகி விட்டது. இன்னும் அவன் வந்து சேரவில்லையென்றதும், பக்பக் என மனம் அடித்துக் கொண்டது. பெரியவனை எதிர்பார்த்து காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டவன் போல் தவித்துக் கொண்டிருந்த சின்னவன், இடைஇடையே நான்கைந்து தடவை ஃபோன் செய்து விட்டான். கையில் காசில்லாததால் உடனே புறப்பட முடியாமற் போனதென்றும், ஓனரிடம் சம்பளப் பணத்தை வாங்கத் தாமதமாகி விட்டதென்றும், தான் ஊருக்குப் புறப்பட்டுவிட்டதாகதவும், பெரியவன் ஃபோனில் தெரிவித்த பிறகு தான், சின்னவன் அமைதியானான். அது வரை தவியாய் தவித்துக் கொண்டிருந்த என் மனம் நிம்மதியடைந்தது.

ஓரம் கிழிந்த பாயை, பெஞ்சிக்கு அருகே விரித்து, எண்ணேய் ஊரிய தலையாணியை, அதில் போட்டுக் கொண்டே, “சீனி காலையிலே இங்கே வந்துருவான்லே...” என்று தானாய் பேசிக் கொண்டிருந்த சின்னவன், என்னைப் பார்த்து கெஞ்சலாய்ச் சொன்னான்.

“சீனி வந்ததும், எப்படியாச்சும் ஒரு டி.வி வாங்கிரனும்மா...“

“நக்கலா... வீட்டு வாடகைக்கே விதியைக் கானோம்...” என்றேன்.

அவன் தலையைக் குனிந்தபடி, கவலையோடு சொன்னான்,

சீனிய அங்கேயே இருக்கச் சொல்லு. இங்கே வந்தா, எங்க வீட்டு டி. வி முன்னால ஒக்காந்துட்டு அசைய மாட்டான்னு லதாம்மா சொல்றாங்கம்மா...“

குழாயடியில் பிளாஸ்டிக் குடத்தை அலசிக் கழுவி சேலையை சற்றே இடுப்பில் சொறுகியவாறு, தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, பெரியவன் முக்கம் திரும்பி, கையில் சூட்கேசுடன் நடந்துவருவதைப் பார்த்தேன். என்னைக் கண்டதும் மகம் மலர நடையை வேகமாக்கினான். ’அதற்குள் இப்படி துரும்பா இளைச்சுப் போயிட்டானே...’ என்று திகிலடைந்தது மனசு. புள்ள வாப்பிடாமக் கொள்ளாம பட்டினியாவே கிடந்திருப்பானோ...’ என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, வீட்டிலிருந்த சின்னவன் வேகமாய் ஓடிப் போய், பெரியவனின் கையிலிருந்த சூட்கேஸை வாங்கிக் கொண்டான்.

வேலை ரொம்ப கஷ்டமாக இருந்தது புதிதாய் சென்ற இவர்களை மொத்த வேலையும் பார்க்கச் சொல்லி விட்டு, பழைய ஆட்கள் எல்லாம் படுத்துக் கிடந்தது மூன்று நாட்களாய் தூங்கமுடியாமல் இரவு பகலாய் தொடர்ந்து வேலைப்பார்த்த பின் நான்காம் நாள் காலை “லீவு போட்டுத் தூங்கப்போகிறோம்” என்று சொன்னதற்கு முதலாளி அடிக்க வந்தது இவனுடன் வேலைக்குச் சென்றவர்கள் எல்லாம் சம்பளம் வாங்கியதும் திரும்பி வந்துவிட தயாராய் இருப்பது எந்த ஊரில் வேலை இருக்கிறதோ அந்த ஊரில் வசிக்கும் இளைஞர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளாமல், இவ்வளவு தூரத்தில் வந்து, விளம்பரம் செய்து, ஆள் பிடிக்க வேண்டியதன் சூட்சமம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நாள் முழுவதும் பெரியவன், விலாவாரியாகச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

சூட்கேஸில் மடித்துவைத்த துணிகளுக்கு அடியிலிருந்து மணிபர்ஸ் எடுத்து, (புதிதாக வாங்கியிருக்கிறான்) நூறு ரூபாய் சலவைத் தாள்களாக ஆயிரம் ரூபாயை , இரண்டு தடவை எண்ணி, என் கையில் கொடுத்த போது, அவன் கண்களில் பெருமிதம் தெரிந்தது.

அன்றிலிருந்து சின்னவன் நடந்து கொண்ட விதமெல்லாம் புதுசு புதுசாய்த் தெரிந்தது.
அரிசி வாங்க பெரியவனை கடைக்குப் போகச் சொன்னால், இவன் “என்ட்டக் குடும்மா... நா வாங்கியார்றேன்” என்று பையைப் பிடுங்குகிறான். சாப்பாட்டு நேரத்தில் பெரியவன் வெளியே சென்றிருந்தால், “சீனி வந்ததும் சாப்டுக்கிறேம்மா...” என்று சொல்லி, அமைதியாய் உட்கார்ந்து விடுகிறான். இரவு சாப்பிட்டு முடித்தப் பின், திடீரென பெரியவனைக் கூப்பிட்டு சினிமாவுக்குப் போவோமா? என்று உற்சாகத்துடன் கேட்டு சைக்கிளை எடுக்கிறான்.

ஒருமுறை எங்கள் தெருவில் மூன்றாவதாய் இருக்கும் ஐஸ்காரர் வீட்டில் பையனின் படிப்புச் செலவுக்காக, மூவாயிரம் ரூபாய் பைனான்ஸ் வாங்கித் தரும்படி கெஞ்சிக் கேட்டார்கள். நான் தான் சின்னவனிடம் எடுத்துச் சொல்லி, வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். தினந்தோறும் முப்பது ரூபாயை தவராமல் கட்டி விடுவதாக, வாங்கிச் சென்ற ஐஸ்காரர், பாதிக் கணக்கு நெறுங்கும் தறுவாயில், வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் மட்டும் கட்டியவர் பிறகு திடீரென அப்படியே நிறுத்தி விட்டார்.

“நம்மக் காச இருந்தால் பரவாயில்லை, விட்டுவைக்கலாம். ஒங்க ஓனரு ஒன்ன திட்டுவாரேடா..” என்று ஒருநாள் மதியம் சாப்பிட வந்த சின்னவனிடம் கரிசனமாய் கேட்டேன்.

“பாவம்மா மழைக் காத்துல ஐஸ் விக்காம அவுங்க படுற கஷ்டத்தப் பார்க்கும் போது, எனக்கு வெரட்டிக் கேக்க மனசு வரலம்மா” என்றவன், பிறகு கசந்த புன்னகையுடன் சொன்னான், “என்ன ...எங் ஓனர் என்னெய அடிப்பான், இல்லேண்ணா எஞ் சம்பளத்துலப் புடிப்பான்.”

பெரியவனோடு ஊருக்குப் போயிருந்த பசங்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டார்கள். வழக்கம் போல் அவர்கள், முக்கத்துல பாலக் கட்டையில் உட்கார்ந்து, கதைகள் பேசவும், செட்டு சேர்ந்து சினிமாவுக்குப் போவதுமாய் இருந்தார்கள்.

இப்பவெல்லாம் வீட்டுச் செலவுகளுக்கு காசு கேட்கத் துவங்கினாலே, கொஞ்சம் கொஞ்சம் முகம் மாறத் துவங்கியிருந்தான் சின்னவன்.

வாடிக்கையாய் வருகிற காய்கறி வண்டியில் ஒரு நாள் காலை, பூச்சியில்லாத கத்தரிக்காய் எடுத்துக் கொண்டிருந்தேன். வெண்டைக்காயும் முருங்கைக்காயும் பச்சைப் பச்சையாய் கிடந்ததைக் கண்டு அதையும் வாங்க ஆசை பிறந்தது. காசு பத்தாதென்று யோசித்தவேலையில், சின்னவன் சட்டையில் பட்டன் மாட்டிக் கொண்டே, வீட்டுக்குள்ளிருந்து ரோட்டுக்கு வந்து கொண்டிருக்க, அவசரமாய் மறித்து “காசிருந்தா குடுடா...” என்று சாதாரணமாய்தான் கேட்டேன்.

அவனுள் அடக்கி வைக்கப் பட்டிருந்த எதுவோ ஒன்று உடைத்துக் கொண்டார்போல், திடீரென கொபம் கொண்டு ஆவேசமாய் விரல் நீட்டிக் கத்தினான், “எதுக்கெடுத்தாலும் காசு காசுன்னு யென் உசுரையே எடுக்கிறீயே... அந்த நாய் சும்மா தானே கெடக்கு, அதை ஒரு வேலையில ஒழுங்கா இருக்கச் சொல்லு...”

நான் திடுக்கிட்டு அதிர்ந்து, செய்வதறியாது திகைத்து, சற்று நேரத்திற்குப் பின், மடியில் கத்தரிக்காயுடன் வீட்டுக்குள் நுழைந்த போது, தரையில் சூட்கேஸைத் திறந்து வைத்து, கொடியில் தொங்கிய சட்டை உருவிக் கொண்டிருந்தான் பெரியவன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com