Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007

இவர்தான் பெரியார்
- இரா.தெ. முத்து

‘தொண்டு செய்து பழுத்தபழம்
தூயதாடி மார்பில்விழும்
Periyar மனக்குகையில் சிறுத்தைஎழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்’

என்று பாவேந்தர் பாரதிதாசனால் கவிதையில் படம் பிடிக்கப்பட்ட பெரியார், முதன்முறையாக லிபர்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஞானராஜசேகரன் இயக்கத்தில் திரையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறார்.

பெருத்த எதிர்பார்ப்போரும் படிப்போரும் தான் படத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய 75 ஆண்டுகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இயங்கிய தலைவர் குறித்த திரைப்படம், சுயமரியாதை, பகுத்தறிவு வேண்டி பாடுபட்ட சிந்தனையாளர் குறித்த திரைப்படம், வாழ்நாள்முழுவதும் சமூகஇழிவை ஒழிப்பதற்காக சமர் செய்த போராளி குறித்த திரைப்படம் என்ற மனநிலையோடு திரைப்படத்தோடு ஒன்றிப் போகிறோம்.

‘இவர்தான் பெரியார்’ என்று அற்புதமான முன்னுரையோடு தொடங்குகிற மூன்று மணிநேரத் திரைப்படத்தில், 1929, சுயமரியாதை இயக்கம் அமைப்பது வரையிலான வரலாற்றுச் சம்பவங்களை இரண்டு மணி நேரமும் பின் 1973 செப்டம்பர் 24 ல் பெரியார் மரணமடைவது வரையிலான வரலாற்றை அடுத்து ஒரு மணி நேரமும் செல்லுலாய்டில் தீட்டியிருகிறார்கள்.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகின்ற கதைக்கு ஒரு காவிய அந்தஸ்து தருவதற்கு ஏற்ற ஒளிப்பதிவை, மஞ்சளும் கருஞ்சிவப்பும் கொண்ட ஒளிக்கலவையை பயன்படுத்தி தந்திருக்கிறார் தங்கர்பச்சான்.

பெரியார், பெரியாரின் மனைவிகள் நாகம்மாள், மணியம்மை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி, அய்யாமுத்து, ராமநாதன், சிங்காரவேலர், ஜீவா, காந்தி, ராஜாஜி, திரு.வி.க, காமராஜ், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனர்.

பிசிறில்லாத லெனினின் எடிட்டிங், கே.கே யின் கலை, வித்யாசாகர் வைரமுத்து கூட்டணியின் அற்புதமான பாடல்கள் இவற்றை ஒருங்கிணைத்து திரைக்கதை, வசனம், இயக்கப் பொறுப்பைப் ஏற்றுக் கொண்ட ஞானராஜசேகரன் பாராட்டுக்குரியவர்கள்.
பெரியாரின் வாழ்வில் இவைஇவைகள் எல்லாம் முக்கியமானவை என நாம் படித்த, கேட்ட செய்திகள் எல்லாம் பதிவாகி இருக்கின்றனவா என்றால் பதிவாகி இருக்கின்றன என சொல்லலாம்.

பொதுவாக பெரியாரை பார்ப்பன எதிர்ப்பாளர், கடவுள் மறுப்பாளர் என்ற கோணத்தில் மட்டுமே நாம் அறிய வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால் பெரியாரின் எழுத்தை, பேச்சை, அவர் குறித்து வெளியாகியுள்ள நூல்களை வாசிப்பவர்களுக்கு அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் கோணங்கள் தவறு என புரியவரும்.

பெரியார் கடவுள் மறுப்பாளர், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர், மனுதர்மத்திற்கு எதிரானவர், பெண்ணுரிமை, தலித் விடுதலையின் ஆதரவாளர், இட ஒதுக்கீட்டிற்காக ஒலித்த போர்முரசொலி, சிந்தனையாளர், தர்க்கவாதி, போராளி, பத்திரிகையாளர், மிகச்சிறந்த மனிதநேயர், சொல்லும் செயலும் வேறுபடாத நேர்மையாளர், தலைவர் என அவரின் பன்முகத் தோற்றத்தை பலர் அறியாத அவரின் தனித்துவங்களை அற்புதமாக திரையில் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் ஞானராஜசேகரன்.

கடவுள் பக்தியோடு புடவை கட்டிக் கொள்ளும் தனது தாயாரை கதர்புடவை கட்டுவதற்காக இளவயது ராமசாமி ஜோடிக்கும் ஸ்ரீலஸ்ரீ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி போன்ற கலகலப்பான காட்சிகள் உண்டு.

கள்ளுக்கடை அழிப்புப் போராட்டம், வைக்கம் போராட்டம் போன்ற ஆவேசமான கனல் தெறிக்கும் காட்சிகளும் உண்டு.

வாழ்வின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்ட பெரியார் நடுத்தர வயதை தாண்டி விட்ட மணியம்மை தம்பதிகளின் குழந்தை ஏக்கம் குறித்த சில வினாடிகளில் நகர்ந்து விடும் அந்தக் காட்சி மனதில் சலனத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பெரியார் என்கிற ஆளுமையை உருவாக்கியவர்களுள் முக்கியமான கைவல்யசாமியார், சிங்காரவேலர் குறித்த பதிவுகள் மிக மேலோட்டமாக உள்ளன.

பெரியாரோடு பின் தொடர்ந்த அவரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் ஆளுமை துலக்கப்படாமலே போய்விடுகிறது.

காலமாறுதலுக்கேற்ற சத்யராஜின் நடிப்பு, குரல் உச்சரிப்பு மெச்சக்கூடியது. படத்தைப் பார்க்கும் போது வழக்கமான அவரின் லொள்ளும் கொள்ளும் ஞாபகத்திற்கு வராததே அவரின் நடிப்புக்கு உதாரணம்.

ஜோதிர்மயி காட்டும் நாணம், கோபம், கொஞ்சல், ஆவேசம், சாந்தம் என நாகம்மையாக வாழ்கிறார். மணியம்மைக்கு ஏற்ற உடல்வாகு கொண்ட குஷ்புவின் தேர்வு சரியானதுதான்.

இத்திரைப்படத்தை வாலிபர்சங்கத் தோழர்கள் பெரியாரை இன்னும் தெரியாத மக்களுக்கு கொண்டு செல்லவும் அரைகுறையாக தெரிந்தோருக்கு சரியாக காட்டிடவும் ஊர்தோறும் பெரியாரை திரையிடலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com