Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007

பறவைகளைப் பாதுகாபோம்...
- சோ. மோகனா

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்ற உண்மையை தரிசித்து, நாமும் அதை உணர கவிதை புனைந்து, நமக்குத் தந்தார் முண்டாசுக் கவிஞர். நிஜமாகவே நாம், இவ்வாறுதான் உணர்கிறோமா, நினைக்கிறோமா, பார்க்கிறோமா? பெரும்பாலும் இல்லை என்பதே பதில். அவ்வகை நினைவு, நமக்கு இருந்தால், கோடை மழைமாதமான ஜூனில்... ஒரு சுற்றுச்சூழல்வாரம் கொண்டாட வேண்டிய நிலைமை உருவாகி இருக்காது. எப்போது ஒரு விஷயத்துக்கோ/பொருளுக்கோ, வாழ்தலுக்கான நெருக்கடியும், அபாயமும், அழிவும் நிலவுகிறதோ, அப்போதுதான், அதனைப் பார்த்து நெஞ்சம் பதைபதைத்து, அதனைக் காப்பாற்ற வேண்டி அபயக்குரல் கொடுப்பார்கள்... நேயமுள்ள சிலர்...! இன்று, நம் நவீன வாழ்க்கை முறையால் நெருக்கடிக்கு உள்ளாகி, குரல்வளை நெறியப்பட்டு உயிருக்குப் போராடும் ஒன்றுதான் நம் புவியின் சுற்றுசூழல்! அதனைக் காப்பாற்ற உலக நாடுகள் ஒன்றினைந்து, ஜ.நா சபையுடன் கலந்து பேசி, சூழலைச் சிக்கலின்றி விடுவிக்க நம் துணையுடன் உறுவானதுதான் உலகச்சுற்றுசூழல் தினமும்/ வாரமும்.

அழகுப் பந்தான பூமியில், நமக்கு முன்னே, தோன்றி உலகில் வாழ்ந்து, அதனை அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன, கோடான கோடி உயிரினங்கள். ஆனால், உயிரினங்களின் தற்போதைய கடைசி உருவாக்கமான மனித இனம், தன் மூளை வளத்தால், ஏராளமாய் பரிணமித்து, சகட்டுமேனிக்கு, பல்வேறு உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கிறது. உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் சந்தோஷமாய் வாழ , ‘சூழல் சமனம்’ (Ecological Balance) சரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். புவியில் உருவான ஒவ்வொரு உயிரும் உலகுக்கு முக்கியம்.

தனது இனத்தால், அளவில், தொகையில் சரியாக பராமரிக்க வேண்டும். எந்த ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்தாலோ / மிகுந்தாலோ ‘சூழல்சமனம்’ தடுமாறும், தகர்க்கப்படவும் நேரிடலாம். சூழலைக் காப்பது என்றால், வெறும் கல், மண், மரத்தை மட்டுமல்ல, அதனுடன் இணைந்த புழு, பூச்சிகள், எறும்பு, பாம்பு, பல்லிகள், பறவை, பாலூட்டிகள் மற்றும் மனிதனையும் சேர்த்துதான்! சூழல்சமனம், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தளங்களில், பல்வேறு நடவடிக்கைகளால் தகர்க்கப்பட்டுக் கொண்டுவருகிறது. எனவே இவற்றையெல்லாம் கவனத்திலும், கருத்திலும் கொண்டு, நாம் வாழும் புவியின் சூழலை.. உயிர்வாழ.. நாம் பெற்ற இப்பூமியின் வளத்தை (சொத்தை)... நம் சந்ததிக்கும் அப்படியே தரவே..’உலக சுற்றுச்சூழல் தினம்’ ஜுன் 5 ஆம் நாள் கொண்டாடுகிறோம். அவ்வுணர்வு... மேலும் கொஞ்சநாட்கள் நீடிக்க.. ஒருவாரம்.. ஜுன் 512 ... அதனை கடைபிடிக்கிறோம்! இந்நாட்களில் உங்களின் அற்புதப் பணி / பங்களிப்பு என்ன நண்பனே..!

நாம் எல்லோரும் அழகை ரசிப்பவர்கள்தான், எப்படி? நம் நெஞ்சைக் கவர, அழகாய் நடனமிடும் மயில், கொஞ்சிப் பேசும் கிளி/ மைனா, தத்திச்செல்லும் புறா, கூடிவிளையாடும் தவிட்டுக்குருவி, வானத்திலிருந்து ஒரே சறுக்கில் கீழிறங்கி கோழிக் கொத்தும் பருந்து, வானில் பறந்தே, தரையில் முயலைத் துரத்தும் வல்லூரு, (இவையெல்லாம் புவியைச் சுத்தப்படுத்தும்.. ஜாதிகள்.. உயிர்கள்) இரவில் கொட்ட கொட்ட விழித்திருக்கும் ஆந்தை, அவற்றைக் கண்டால், நம் மனசுக்குள் கொஞ்சம் வெறுப்பு கொப்பளிக்கும்! ஏன்? இவை மாமிச பட்சிகள்! மற்ற உயிர்களைக் கொன்று/ இறந்ததை உண்டு உயிர்வாழும் ஜுவராசிகள். (நாம் மட்டும்தான் கொத்துக்கறி, பிரியாணி, வெட்டலாம். பறவைகள் மாமிசம் சாப்பிடலாமா) எனவே நமக்கு ஆகாது...! இவைகளின் சமூகப்பணியை நினைத்துப்பார்த்தால், இந்தப் பறவைகள் செய்யுமளவு மனிதன் இப்புவியை சுத்தப்படுத்துகிறானா.. என்பது ஜயமே! பறவையின் உதவிகூட மனிதனால், பூமிக்கில்லை என்பது நிதர்சனமான உண்மை.

நண்பர்களே சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன், வியாழக்கிழமை வந்துவிட்டால் போதும்..! காலை, மதியம், மாலை என கால அட்டவனை போட்டுக் கொண்டு, குளம், குட்டையென நீர்நிலைகளின் கரையில், அண்ணாந்து பார்த்து, கழுத்து வலிக்க.. ஒருவரின் தரிசனம் நோக்கி தவம் இருப்பார்கள் கூட்டம் கூட்டமாய்... அவர்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான்... என்று கருதப்பட்ட கழுத்தில் அழகான வெண்மை நிறம் பூசிக் கொண்ட பிராமண கழுகு/ கிருஷ்ண பருந்து என்று அழைக்கப்படும்.. பெரிய விலங்கினங்களை உண்ணும் கழுகு. மாமிசம் உண்ணும் கழுகுகளைக் காண்பது.. கடவுளை தரிசித்தது போலாம், பாவம் கரையுமாம், இறந்தபின் மோட்சம் கிட்டுமாம்!
இப்படியெல்லாம் கதைத்தார்கள்.

இன்று காட்சி மாறிப் போனது..! அப்படிப்பட்ட கழுகு கூட்டம் மறைந்துவிட்டதா! எப்படி? நேரமில்லையா! கடவுள் காட்சித்தரவில்லையா? கிருஷ்ணப் பருந்து வரவில்லையா! கடைசியில் குறிப்பிட்ட கிருஷ்ணப் பருந்து வரவில்லை என்பதே 100 சதம் உண்மையான விஷயம். எங்கே போச்சு.. கிருஷ்ணப் பருந்து எங்கே போச்சு..?

கழுகு, பருந்து, வல்லூறு இனப்பறவைகள்தான், உலகில் இறந்துபோன கொஞ்சம் பெரிதான உயிரினங்களை, உண்டு உயிர்வாழ்தலும், உலகை சுத்தம் செய்யும் பணியை செவ்வனே கவனிக்கின்றன. அவை உலகில் இல்லையென்றால், உங்கள் ஊர் என்ன, உலகமே நாறிப்போய்விடும். நம் வீட்டில் என்னதான் கழிப்பறை இருந்தாலும், ஊரில் கழிவறை சுத்தம் செய்பவர்கள் இல்லையென்றால் ஊரின் கதி என்ன? அதே கதிதான், உலகில் கழுகு, பருந்து, வல்லூறு இனங்கள் இல்லை என்றாலும்...! உங்கள் ஊரின் கோடியில், மாடோ, ஆடோ, கழுதையோ செத்துக்கிடக்கிறது.

ஊரில் சுத்திகரிப்போரான கழுகு, பருந்து ஒன்று கூட இல்லை என்றால், ஊரே நாறிப் போய்விடும் நண்பா! உலகை சுத்தப்படுத்தும் ‘அழகு கலைஞகர்கள்’ கழுகும் பருந்தும்.. நாம் அவற்றை அழைப்பது ‘உலகின் தோட்டிகள்’ என்ற அடைமொழியால்தான்.
ஊரைச் சுத்தப்படுத்தி, நாற்றம் போக்கி, அழகு செய்வோரையும் அப்படித்தானே அழைக்கிறோம், ,ஒதுக்கிவைக்கிறோம்..மிகமிக பெருந்தன்மையாய்! இனி இவர்களின் பெருமையும், சிறப்பும் உணர்ந்து உலக அழகு கலைஞர்கள்/ அழகு சேவகர்கள் என அழைப்போமே!

இந்தியாவில் கழுகுகள் தனக்குகிடைக்கும் இறந்த உயிரினங்களின் வகைகட்கும், வாழ்விட தன்மைக்கும், தகவமைப்புக்கும் ஏற்ப, 8 வகைகளாக பரிணமித்துள்ளன. இவைகளில் 2 வகைகள் வடமேற்கு குளிர்நிலைப்பகுதியிலும், 2 வகைகள் இமயமலைப்பகுதியிலும், மீதி 4 வகைகள் பரவலாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கானப்படுகின்றன. தமிழகத்தில் வெண்முதுகு மற்றும் செந்தலைகள் கழுகு/ பருந்துகளே உள்ளன.கடந்த 10, 15 ஆண்டுகளில் இந்தியாவில் கழுகுகளின் எண்ணிக்கை, குழந்தைகள் கட்டிய மணல் வீடுபோல் மடமடவென சரிந்துவிட்டது. இப்போது அவை அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இது ஏன்?
மும்பை இயற்கை வரலாற்றுக் கழக (Bombay Natural History Society) கணக்கீட்டின் படி, ஜிப்ஸ் இன்டிகஸ் (Gyps indicus) ஜிப்ஸ் டெனிய் ரோஸ்டிஸ் (Gyps tenuirosteis) என்ற இருவகை கழுகுகளின் எண்ணிக்கையும், 1992 2003 ம் ஆண்டுகளில், 99.7 சதம் குறைந்து விட்டதாக, ஓர் அதிர்ச்சி/ அதிரடி அறிக்கைத் தருகின்றனர்.

அப்படியெல்லாம் இல்லை குறைந்தது 95 சதம்தான் என ஒருசிலர் தெரிவித்தாலும், இந்த தகவல், இயற்கையாளர்கள் அனைவருக்கும் கவலை தரக்கூடியது! கழுகுகளின் திடிர்சரிவு பற்றி, உலகில் உள்ள அனைவருமே கவலைப்பட்டே ஆகவேண்டும். உலக அழகு சேவகர்கள் இல்லையென்றால்.. புவியின் கதி..! கழுகுகளின் மறைவிக்கு காரணம் தேடினர். வாழிட கூடுகட்டும் பெருமரங்கள் அழிவதாலும், மனிதர்களின் நேரடி கொலைத்தாக்குதல்களாலும் தான் இந்நிலைமை என ஊடகம் மூலம் ரீல்விட்டனர் பலர் (இதில் 10 சதம் உண்மை உண்டு) 1990 வரை கழுகுகள் திடீர்திடீர் என கானாமல்போன காரணம் பூச்சிக்கொல்லிகளே என்றும் கற்பிதம் செய்தனர். சிலர் கழுகுகளின் சாவுக்கு வைரஸ் வியாதிகள்தான் என்றனர். நிஜம் என்ன?

ஆராய்ச்சியாளர்களின் தேடலின் முடிவில், கழுகுகளின் அழிவிற்கான உண்மையின் தரிசனம் கிடைத்தே விட்டது. 1998 வரை, பாரத்பூர் தேசிய பூங்காவில் 2000 கழுகுகள் இருந்தன! இன்று உள்ளவை வெறும் 4 மட்டுமே! எப்படி உலகை பிரிந்தன இவை? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான்! எனவே.. உலகின் அனைவரும் கூட்டாக இனைந்தே காரணம் தேடினர். முடிவில் கழுகுகளின் ஒட்டுமொத்த சமாதிக்கான துப்பு கிடைத்துவிட்டது...! அதுதான் டைக்ளோ ஃபெனாக் (Diclo fenac) என்ற வேதிப் பொருள்! நவீன வலிநிவாரணியான டைக்ளோ ஃபெனாக், காட்டில் பிறந்து, வளர்ந்து, வானில் பறந்து, இறந்த உடல்களை நாடும் கழுகுகளிடம் இப்படி தஞ்சமடைந்து இறந்த ஆடு, மாடுகள்தான் உள்ளுரில் திரியும் கழுகுகளின் உணவு..! கால்நடைக்கு நோய், நொடி என்றால் உடனடியாக தேவையானது டைக்ளோ ஃபெனாக் என்ற வலிநிவாரணிதான். இவை கால்நடைகளின் உடலில் சேமிக்கப்பட்டு, இவைகளைத் தின்னும் கழுகுகளின், சிறுநீரகத்தை குறிவைத்து, செயலிழக்கச் செய்து, கழுகுகளை எமலோகம் கான அனுப்புகின்றன. எனவே கழுகுகளின் தொடர் கொலையாளி.. டைக்ளோ ஃபெனாக்தான்!

‘டைக்ளோ ஃபெனாக்’ என்ற வலி நிவாரணி, கிட்டதட்ட மூன்றாண்டுகட்கு முன்பு தடைசெய்யப்பட்டட நிலையில் இருந்த மருந்தாகும். இதனைத் தடைசெய்ய பல வகை கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. கடந்த ஆண்டுகளில், ‘டைக்ளோ ஃபெனாக்கு’ எதிராக எழுந்த கோரிக்கைகளையும் எளிதில் மறந்து விட்டனர் மக்கள். ’டைக்ளோ ஃபெனாக்கை’ தொடந்து எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு பக்கவிளைவுகள் உண்டாகின்றன என்ற உண்மையும் நிருபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ‘டைக்ளோ ஃபெனாக்கை’ ஒருவர் உண்டால், இதயம், குடல், ஈரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், மயக்கம், தூக்கமின்மை போன்றவையும் ஏற்படும் என நிருபணமாகியுள்ளது.

கால்நடைகளும் அதிக பாதிப்பை உண்டு பண்ணுகின்றனவாம். உடலில் தங்கி கொஞ்சம் கொஞ்சமாய் தன் செயல்பாட்டை இயக்கும் தன்மையது ‘டைக்ளோ ஃபெனாக்’. இதனால் கி.பி 2005 ல் மட்டும் கோடிக்கணக்கான கழுகு/ பருந்துகள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கழுகுகளின் அழிவு, நாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாம்...! விளைவு எதிர்மறையாக .. ‘ரேபிஸ்’ வரும் வாய்ப்புகளும் கூடும். அதுமட்டுமல்ல, பார்சி இன மக்கள், இறந்த பின் உடலை, ஆகாய அடக்கம் செய்கின்றனர். அப்போது .. கழுகுகள்தான் இவற்றை உண்டு, சுத்தம் செய்கின்றன. கழுகுகள் இல்லையென்றால், பார்சி மக்களின்.. மதச்சடங்கு... மாற்றுவழி தேடவேண்டியதுதான்.

கழுகு, பருந்து, வல்லுறு என உலகு அழகு சேவைகளைக் காக்க.. தனியொறு இயக்கம் தேவை! இதனை கவனிக்கும் அரசு புறக்கணித்துவிட்டால்.. முழுபொறுப்பும் மக்களான... நம் கைகளில்தானே..!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com