Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007

குடிமகன் திப்பு
- இரா. எட்வின்

ஏழை மக்கள் தங்கள் வயிற்றுக்காக இரவும், பகலும் உழைக்கின்றனர். உழைத்துக் கொண்டே இறந்து போகின்றனர். அவர்கள் ஓடும் ஆறுகளின் அழகைக் காணவோ, மேகத்திரள்களைக் கண்டு மகிழவோ, வனங்களையும், சோலைகளையும் ரசிக்கவோ, சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை.” இப்படி ஏழைகளின் இயலாமையை மிகுந்த பரிவோடும் மிகுந்த அக்கறையோடும் பதிந்திருப்பவன் ஒரு பொது உடைமை வாதியாகவோ, ஒரு தொழிற்சங்க வாதியாகவோ, அல்லது இத்தனை அல்லல்களையும் அனுபவிக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவனாகவோ இருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் உழைக்கும் மக்கள் இயற்கையை, வாழ்க்கையை ரசிக்க இயலாமல், அனுபவிக்க இயலாமல் உழைத்து உழைத்தே சாவது கண்டு ரத்தம் கசியக் கசிய ஆதங்கப்பட்டவன் ஒரு மன்னன் என்றால் உறைந்தே போய்விடுவோம். ஆனால் அதுதான் உண்மை. சாகும் வரைக்கும் “குடிமகன் திப்பு” என்றே தன்னை அழைத்துக் கொண்ட திப்புவின் வார்த்தைகளே மேலே சொல்லப்பட்டவை.

Tippu அதிகமாய் திரிக்கப்பட்ட, அளவுக்கதிகமான பொய்களால் எழுதப்பட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரன் திப்பு. திப்புவின் தந்தை ஹைதர் அலிக்கும் இது முற்றிலும் பொருந்தும்.

மைசூர் ராஜ்யத்தின் மன்னன் சிக்க தேவராயரின் மகனுக்கு காதும் கேட்காது, பேச்சும் வராது. அவன் மன்னனானதும் அவனை ஒரு பொம்மை போலாக்கி ராஜ்யத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் அவனது அமைச்சர்கள் நஞ்சராஜூம், தேவராஜூம். அப்போது ராஜ்யத்தின் தளபதியாக இருந்த ஹைதர் அந்த அமைச்சர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார். இந்துக்களிடமிருந்து ஹைதரை அந்நியப்படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் அவன் ஆட்சியை உடையார்களிடமிருந்து கைப்பற்றிதாய் கதை கட்டி விட்டனர். திப்பு இந்துக் கோவில்களை அழித்தவன், கோவில் சொத்துக்களை சூறையாடியவன், போரில் வென்ற பூமியின் மக்களை வாள் முனையில் மதம் மாற்றிய மத வெறியன் என்றே திரித்து வரலாறு எழுதினர் பரங்கியர்.

திப்பு ஒரு ஆழமான இஸ்லாமியன், தீவிரமான மதப்பற்றாளன், இன்னுஞ்சொல்லப் போனால் ஜோசியம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டிருந்தவன் என்பதை மறுக்கவில்லை. அவரது தோல்வி உறுதியான சூழலிலும் முல்லாக்களையும் பிராமணர்களையும் அழைத்து கணிக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். அவர்களின் ஆலோசணைப்படி அவர்களுக்கு நிறைய தானமாக வழங்கி தோஷம் போக்கியிருக்கிறார். இந்த அளவிற்கு மூடநம்பிக்கையோடுதான் இருந்திருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் மதவெறியனாக அவர் இருந்ததில்லை. மாறாக மாற்று மதத்தை மதிக்கிறவராக, மாற்று மதத்தினருக்கு குறிப்பாக இந்து மதத்திற்கு நிறைய செய்தவராக இருந்திருக்கிறார் எனபதையே சான்றுகள் சொல்கின்றன.

முனைவர்.மு.அ.முகமது உசேன் அவர்கள் தரும் திப்புவின் நன்கொடை பட்டியலை பார்ப்போம்

1)இந்து அறநிலையங்கள் மற்றும் அக்ரஹாரங்கள்.................. 1,93,959 வராகன்கள்

2) பிராமண மடங்கள........................ 20,000”

3) இஸ்லாமிய மத நிறுவனங்கள்.. 20,000”

ஆக கூடுதல்...................................... 2,33,959”

ஆக 2,33,959 வராகன்கள் நன்கொடையில் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு வெறும் 20,000 வராகன்கள் மட்டுமே வழங்கிய திப்புவை, சீரங்கப்பட்டிணம், குருவாயூர், மற்றும் சிருங்கேரி மடங்களுக்கு ஏராளமாய் அள்ளிக்கொடுத்த திப்புவை வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே உண்மை பேசுபவனால்கூட மதவெறியன் என்று கூற முடியாது.

உலகமயமாக்கல் வளரும் நாடுகள் ஒவ்வொன்றாய் காவு கொண்டுவரும் வேளையில் கம்ப்யூட்டர் முதல் கண்மை வரை இந்தியச் சந்தையை உலக நாடுகளுக்கு வெளிப்படையாக சொல்வதென்றால் அமெரிக்காவிற்கு தாரை வார்க்கும் பிரகஸ்பதிகளுக்கு திப்புவின் சந்தை நிர்வாகம் பாடம் சொல்லித் தருவதாகவே உள்ளது. ஊள்ளுர் சந்தையில் அவனது பொருளை விற்பதற்கு மட்டுமல்ல சுதேசி பொருளை அந்நியன் வாங்குவதற்கும் தடை விதித்திருந்த மன்னன் திப்பு.

அரசு முதலாளித்துவம் என்கிற வடிவத்தை மிக நேர்த்தியாக சமைத்துள்ளான். குறைந்த முதலீடு செய்யும் ஏழைகளுக்கு லாபத்தில் அதிக பங்கும், அதிக முதலீடு செய்யும் பணக்காரர்களுக்கு லாபத்தில் குறைந்த பங்கும் வழங்கி பொருளாதார சமனை கொண்டுவர முயற்சி செய்தவன் அவன். இப்படியாக நிதியமைச்சர்களுக்கு பாடம் நடத்தியவன் திப்பு. இன்றைய அமைச்சர் பெருமக்கள் பாஸ்மார்க் வாங்கும் அளவிற்கும் பாடம் படிக்காததற்கு எந்த விதத்திலும் அவனை பொறுப்பாளியாக்க முடியாது.

தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களை கசக்கிப் பிழிந்து பெரு முதலாளிகளுக்கு சலுகைகளாய் வாரி வழங்கும் இன்றைய ஆட்சியாளர்கள் மத்தியில் திப்புவின் வரி வசூலிப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகவே உள்ளது. விளைச்சல் குறையும் போதும் வறட்சி பூமியை வறுத்தெடுத்த காலங்களிலும் யாரும் கேட்காமலே வரி வசூலிப்பதை நிறுத்தியவன் என்பதும் இயற்கை பொய்க்கும் காலங்களில் இன்றைய விவசாயிபடும் அவஸ்தைகளும் திப்புவின் மேல் உள்ள மரியாதையை அதிகப் படுத்துகின்றன.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவன் என்பது மட்டுமல்ல யாரிடம் நிலம் இருக்க வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தான்.அதனால்தான் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்றான். கலப்பை வாங்க எளிதில் கடன், தரிசு நிலத்தை மேம்படுத்த முன்பணம், தேக்கு மற்றும் சந்தனம் போன்ற ஏற்றுமதிக்குரிய மரம் வளர்ப்போருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் சலுகைகள்; என்பவை அவனது கூர்மையான விவசாயப் பார்வையை உணர்த்துகின்றன.

1790ல் காவிரியில் கட்டப்பட்ட அணையில் “இறைவனின் இந்த அரசு கட்டும் அணையின் நீரால் தரிசு நிலங்களை விளை நிலமாக்குவோர்க்கு நிலம் உடைமையாகும்” என அவன் எழுதி வைத்திருப்பதை பார்க்கும்போதும் “15 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து ஒரே நிலத்தில் குத்தகைக்கு உழுதிருந்து குத்தகைப் பணமும் முறையாக செலுத்தியிருப்பின் அந்த நிலத்திலிருந்து அவனை வெளியேற்றக்கூடாது” என்ற அவனது பிரகடனத்தைப் பார்க்கும்போதும் அவன் காலத்தில் வாழ்ந்திருக்க்ககூடாதா என்ற ஏக்கம் எழுகிறது.

குற்றம் புரியும் விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதில் இரண்டு மாமரங்கள், பலா மரங்கள் நட்டு அவை மூன்று அடி வளரும்வரை அவற்றை பராமரிக்க வேண்டும்” என்ற அவனது தண்டனை முறை அபூர்வமானது மட்டுமல்ல ஆக்கப்பூர்வமானதுமாகும்.. அருமையான நூல்நிலையம் ஒன்று அவனிடம் இருந்திருக்கிறது. 4 மைல்களுக்கு ஒரு பள்ளி என்ற அவனது திட்டம் இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடம். ஏல்லாவற்றிற்கும் மகுடம் வைப்பது போல் அமைந்தது அவனது மரணம். தப்பித்துச் செல்வதற்கு வாய்ப்பு இருந்தும், தப்பிச் செல்லுமாறு அவனது உதவியாளன் வற்புறுத்தியும் களத்தில் ஒரு மாவீரனாய்ப் போராடி மாண்டவன்.

“ஆடுகள் போல் 100 ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் புலியைப் போல் சில நாட்கள் வாழ்வதே பெருமை தரும்” என்றவன். சாகும்வரை புலியாய் வாழ்ந்தவன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com