Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2009

எனக்கா சர்க்கரை நோய்?
யாழினி

தினமும் துணி தைத்துக் கொடுத்தால் தான் தன் குடும்பம் அன்றைக்கு அரைவயிறாவது நிரப்பிக் கொள்ளும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான் முருகேசன். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து கொண்டிருந்த அவரின் குடும்பம், போன தலைமுறை வரையிலும் உழவுத்தொழில் செய்து வந்தனர், பல தலைமுறையாக பாகம் பிரிக்கப்பட்டு வந்ததால் விவசாய நிலம் கடைசியில் முக்கால் ஏக்கர் தரிசு நிலமாக முருகேசனுக்கு பங்கு கிடைத்தது, சிறு வயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாத முருகேசனை, வறுமை காரணமாக அவரின் தந்தை ஒரு தையல் கடையில் காஜா எடுக்கும் வேலைக்கு அனுப்பி வைத்தார், வாலிபப் பருவம் வந்த பிறகு, வேறு வேலைக்கு செல்ல நாட்டமில்லாமல் தானே சொந்த முயற்சியில் ஒரு தையல்கடையை வைக்க நினைத்திருந்தான் முருகேசன், ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்கும் உகந்த தொலை நோக்கு பார்வையுடனான திட்டத்தை வகுக்காமல், சில உதவிகளை செய்து தன்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கிக் கொண்ட ஒரு முன்னாள் முதல்வரின் கட்சி பிரமுகரை தாஜா செய்தும், கொஞ்சம் பணம் கொடுத்தும் ஒரு தையல் இயந்திரத்தை முருகேசன் வாங்கினான்.

சொந்தமாகக் கடை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் நண்பர்களுடன் சேர்ந்து புகைபிடிப்பதும், சீட்டு ஆடுவது போன்ற செயல்களில் முருகேசன் ஈடுபட்டுள்ளான், இதனைப் பார்த்த அவரின் பெற்றோர் அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்; பழனியம்மாள் என்ற பெண்ணையும் அவனுக்கு மணமுடித்து வைத்தனர், திருமணமான பிறகு நண்பர்களின் சேர்க்கை குறைந்தாலும், அவர்களுடன் இருக்கும் போது பழகிய புகைப்பழக்கமும், நொறுவல், வறுவல் உணவு பழக்கமும் குறையவே இல்லை. சில வருடங்களுக்கு பிறகு முருகேசன், தனது மனைவி பழனியம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து வாடகை வீடு ஒன்றில் தனியாகக் குடித்தனம் புகுந்தான், ஒரு நாள் முருகேசன் தனது நெருங்கிய நண்பனுக்காக, தொடர்ந்து அவனது வற்புறுத்தலின் பேரில் தனியார் நிதி நிறுவனம் (பைனான்ஸ்) ஒன்றில் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டான். ஒரு சில மாதங்களுக்கு பிறகு அந்த நண்பன் ஊரைவிட்டே ஓடிப்போயுள்ளான், இதனால். பைனான்ஸ்காரர் முருகேசனின் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளார், அதில் அவனது தையல் இயந்திரமும் பறிபோய்விட்டது, குடும்பம் நடத்துவதே கஷ்டம் என்கிற நிலையில் அந்த பைனான்ஸியரின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி தையல் இயந்திரத்தை மட்டுமாவது கொடுத்தால், தான் மாதாமாதம் பணத்தை திருப்பி கட்டிவிடுவதாக உறுதிகூறி இயந்திரத்தை முருகேசன் வாங்கி வந்தான்,

அன்றாட குடும்பச் செலவுக்கு மத்தியில் குழந்தைகளின் படிப்பு செலவு, வீட்டு வாடகை, தவிர்க்க முடியாமல் ஏற்படும் மருத்துவ செலவுகளுடன், நண்பனின் கடனுக்கான வட்டியையும் சேர்த்து கட்டக் கூடிய சிக்கலான சூழ்நிலைக்கு முருகேசன் தள்ளப்பட்டான், முப்பத்தைந்து வயதிலேயே மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளான அவன், என்றாவது ஒருநாள் தன்னுடைய பிரச்சனைகள் தீரும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டு காலத்தை ஓட்டி வந்தான், இத்தனை இன்னல்களுக்கு இடையேயும் ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இந்த ஆண்டும்ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளான். ஐயப்பன் மலைக்குச் செல்ல 10 நாட்களே இருந்த நிலையில் ஒரு நாள் அதிகாலை குளித்துவிட்டு பூஜைக்கு செல்லும் போது வழியில் இருந்த கல்லில் முருகேசனின் கால்பட்டு இடது பெருவிரலில் சிறிய காயம் ஏற்பட்டது, அதனை பெரிதாக நினைக்காமல் துணி ஒன்றைக் கட்டிக்கொண்டு தன் அன்றாடப் பணிகளை தொடர்ந்தான், சாதாரணமான காயம் என்பதால் தானாக ஆறிவிடும் என்று எதிர்பார்த்தான் முருகேசன். ஆனால். அவனுக்கு பெரும் அதிர்ச்சியாயிருந்தது. அந்த புண் ஒரு வாரத்திற்கு மேலாகியும் ஆறவேயில்லை. இதனை கவனித்த முருகேசனின் அண்ணன் மகன் கோவிந்தன், சித்தப்பாவுக்கு சர்க்கரை வியாதி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளான், ஏனென்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாது என்பது கோவிந்தனுக்கு தெரியும், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து பாருங்கள் என்று தனது சித்தப்பா முருகேசனிடமும் கூறியுள்ளான், மறுநாள் காலை அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கினான்,

வழக்கத்துக்கு மாறாக அதிக சிறுநீர் கழிப்பது, அதிக பசி எடுப்பது, அதிக அளவு உணவு உட்கொள்வது போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா என்று முருகேசனிடம் மருத்துவர் கேட்டுள்ளார். சில மாதங்களாகவே இந்த அறிகுறிகள் தனக்கு இருப்பதாக முருகேசன் கூறியுள்ளான். முருகேசனுக்கு சர்க்கரை வியாதி இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும், அதை உறுதிப்படுத்துவதற்கு இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவரின் ஆலோசனைப் படி இரத்த பரிசோதனை செய்துவிட்டு அந்த அறிக்கையுடன் மீண்டும் மருத்துவரிடம் சென்றான் முருகேசன், அறிக்கையைப் பார்த்த மருத்துவர், முருகேசனுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 402 (மில்லி கிராம்) இருப்பதாக கூறியுள்ளார். இந்த அளவிற்கு அதிகமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருந்தால் காலிலுள்ள காயம் ஆறாது எனவே உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென முருகேசனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளியூருக்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று முருகேசன் மருத்துவரிடம் கூறியுள்ளான். உடனே சிகிச்சை பெறாவிட்டால் காயமேற்பட்ட காலையே இழக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார். என்ன செய்வது என புரியாமல் திக்கற்றவனாய் முருகேசன் சுகாதார நிலையத்திற்கு வெளியே சோகமாக அமர்ந்து கொண்டான். அப்போது அந்த வழியாக வந்த வேலுச்சாமி என்பவர் பார்சல் ஒன்றை மருத்துவமனையில் கொடுத்துவிட்டு வெளியேறினார். அங்கு புலம்பிக் கொண்டிருந்த முருகேசனை பார்த்து நீங்க கோவிந்தனின் சித்தப்பாதானே என்று விசாரித்தான். தன்னுடைய பிரச்சனையை யாரிடமாவது கொட்டி தீர்த்தால் மனபாரம் குறையும் என்றிருந்த முருகேசனுக்கு வேலுச்சாமியின் ஆறுதல் வார்த்தைகள் மன நிம்மதியை கொடுத்தது. தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருப்பதாகவும், அவருடைய உதவியுடன் உங்கள் வியாதியை குணமாக்க முடியும் என்றும் வேலுச்சாமி கூறியுள்ளான்.

மறுநாள் காலை வேலுச்சாமி மற்றும் கோவிந்தன் இருவருமாக சேர்ந்து முருகேசனை அழைத்து கொண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பயிற்சி மருத்துவராக இருந்த சுந்தரை சந்தித்து முருகேசனின் பிரச்சனையை விளக்கியுள்ளனர். பின்னர் சுந்தர் முருகேசனை பரிசோதித்துவிட்டு, தனது பிரிவு உயர் மருத்துவரின் ஆலோசனையை பெற்று, முருகேசனை உள்நோயாளி பிரிவில் சேர்த்தார். இன்சுலின் கொடுத்து முருகேசனின் இரத்த சர்க்கரை அளவை சரி செய்த பிறகுதான் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று அங்குள்ள மருத்துவர் கூறியுள்ளார். அன்றிரவு முருகேசனின் துணைக்கு வேலுச்சாமியை இருக்கும்படி கூறிவிட்டு, கோவிந்தன் ஊருக்கு சென்றான். முருகேசனின் மனைவி பழனியம்மாளிடம் நடந்ததை விளக்கினான். அடுத்தநாள் செலவுக்கு கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொண்டு குழந்தைகளுடன் பழனியம்மாள் மருத்துவமனைக்கு சென்றாள். இளம் வயதில் தனக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்றும், தன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என்றும் முருகேசன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கலங்கி கொண்டிருந்தான். அன்று கோவிந்தனை முருகேசனுக்கு துணையாக இருக்கும்படி கூறிவிட்டு, வேலுச்சாமியும் மற்றவர்களும் ஊருக்கு திரும்பினர்.

இரண்டு நாட்கள் கழித்து, முருகேசனின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியானதால் காலில் ஏற்பட்டுள்ள காயத்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். முருகேசனை பரிசோதித்த சிறப்பு மருத்துவரிடம் சுந்தர் ஆலோசித்து கொண்டிருந்தார். பின்னர் முருகேசனிடம் வந்து, காலில் ஏற்பட்ட காயத்தால் பாதத்தின் முன்பகுதி முழுவதும் சீழ் பரவியுள்ளது. ஆகவே பாதத்தின் முன் பகுதியை எடுத்துவிட வேண்டும் என்று சுந்தர் கூறியுள்ளார். இதை கேட்டதும் தலையில் இடி விழுந்ததைப் போல அதிர்ச்சியடைந்த முருகேசன், வாயடைத்து ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்தான். முருகேசனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, உடனடியாக கால் பாதத்தை சுத்தம் செய்யவில்லை என்றால் முழு காலையும் அகற்ற வேண்டிருக்கும் என்று சுந்தர் பின்விளைவுகளை பற்றி எச்சரித்தார். அங்கிருந்த கோவிந்தன் இந்த விசயத்தை வேலுச்சாமிக்கு தொலைபேசி மூலம் கூறிவிட்டு, மறுநாள் காலை ஆபரேசன் செய்ய உள்ளதால் சீக்கிரம் வந்துவிடுமாறு கூறினான். மறுநாள் வேலுச்சாமி மருத்துமனைக்கு உள்ளே வந்து கொண்டிருந்த போது, வாசலில் கோவிந்தன் மிகுந்த கலவரத்துடன் அலைந்து கொண்டிருந்தான் என்ன நடந்தது என வேலுச்சாமி கோவிந்தனிடம் விசாரித்தான். மருத்துவர் முன் பாதத்தை பாதி வெட்டி எடுக்க வேண்டும் என கூறியதை கேட்டு முருகேசன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதையும், தான் டைலர் வேலை செய்ய கால் மிகவும் அவசியம் என்றும், வேலை செய்யவில்லை என்றால் தன் குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்றும் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததாக தெரிவித்தான். ஆனால், அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் சித்தாப்பாவை ஆபரேசனுக்கு தயார் செய்யலாம் என பார்க்கும் போது....!! முருகேசனுக்கு என்ன நேர்ந்தது. !!

(தொடரும்)