Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2009

திரை விமர்சனம் - பசங்க
சிந்தன்

பசங்க ரயில் ஒட்டியபடி படத்தின் பெயரை இழுத்துவரும் குழந்தைகள் கையில் ஆரம்பம் முதலே சிக்கிக் கொள்கிறோம். "அக்க புக்கா அமரா வள்ளி பாம்பே போனா சிக்கா" .. "ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு ..." போன்ற சிறு வயது மந்திரங்களோடு துவங்குகிறது படம். ஒவ்வொரு காட்சியும் "அட" போட வைத்தபடியே தாண்டிச் செல்கிறது. வகுப்பறையில் லீடர் தேர்ந்தெடுப்பது, ஆசிரியர் இல்லாத போது பேசுகின்ற பையன்களின் பெயரை கரும்பலகையில் எழுதி வைத்து மிரட்டுவது, ஒவ்வொரு மாதம் துவங்கும்போதும் அதிலிலுள்ள விடுமுறை நாட்களை எண்ணிப் பார்த்து சந்தோசப்படுவது .. என பள்ளி வாழ்வின் கடந்த காலத்தை நினைத்து லயிப்பதற்கான விசயங்கள் ஏராளம் வைத்திருக்கிறார் இயக்குனர். அன்புக்கரசு (ஐஏஎஸ் !), ஜீவா நித்தியானந்தம் (சிஎம் ! ) என்ற இரண்டு பள்ளிக்கூட மாணவர்கள், இவர்களின் நண்பர்கள் மங்களம், பக்கடா, மனோன்மணி, குட்டை மணி, மற்றும் குடும்பம் என்ற வட்டத்தை சுற்றி நகர்கிறது கதை. திருப்பங்கள் திகிலூட்டும் காட்சிகள் என்று மெனக்கெடாமல் இயல்பான வாழ்க்கையை திரைக்கதை ஆக்கியிருப்பது படத்துக்கு பலம். படம் முழுக்க குழந்தைகள், குழந்தைகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குட்டீசுகளின் சேட்டை பிரதிநிதியாக வரும் "அன்புவின்" தம்பி ஜூஜூவை படம் பார்க்கும் யாரும் மறக்க முடியாது.

Pasanga செட்டியின் உச்சமாக அவன் சொல்லும் "எப்பூடி" வசனம் கலக்கல். எல்லா தலைமுறை ரசிகர்களும் ரசித்து சிரிக்க வைக்கும் படம். சிரிக்க மட்டுமில்லாமல் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது. சிறியவர்கள் உலகத்திற்கும், பெரியவர்கள் உலகத்திற்குமான புரிந்துகொள்ளப் படாத இடைவெளி இந்தப் படத்தில் அவிழ்க்கப்பட்டிருக்கிறது. காதல் காட்சிகளில், இப்போதைய இளைஞர்களின் பிரதிநிதியாக "மீனாட்சி" (விமல்) ரசிக்க வைக்கிறார். வேகா தமோதியா புருவத்திலே பேசுவது அவருக்கு இன்னும் அழகு. செல்போன் ரிங்டோன் வைத்து காதல் காட்சிகளை நகர்த்தியிருப்பது அருமை.

காதலுக்கு பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு "பளிச்". ஒரு வெட்கம் வருதே வருதே பாடல் இசையும், எடுக்கப்பட்டிருந்த விதமும், பாடல் வரிகளும் மிக அருமை . ஆனால் "சுப்பிரமணியபுரம்" படத்தில் இருந்த ஜேம்ஸ் வசந்தினிடம் இதில் எதோ மிஸ்ஸிங். ஜீவா நித்யானந்தத்தின் அருகிலேயே இருக்கும் இரண்டு நண்பர்களின் படைப்புதான் கொஞ்சம் நெருடுகிறது. குட்டை மணியும், பக்கடாவும் ஜீவா வாங்கித்தரும் பண்டத்திற்காக அவனை வில்லத்தனமாக ஏற்றி விடுவதும், வறுமை நிலையே அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவதாக காட்டியிருப்பதும் ஏற்கும்படி இல்லை. கடைசி பதினைந்து நிமிடங்களின் சினிமாத்தனம் தவிர்த்திருக்கலாம். நெருடல் இல்லாத இயல்பான வசனங்களும், அவற்றை அர்த்தம் பிசகாமல் வெளிப்படுத்துவதில் இயக்குனர் காட்டியிருக்கும் கடின உழைப்பும் படத்தின் இன்னொரு ஹீரோ.

ஒவ்வொரு வீட்டிலும் அற்ப சண்டைகள் நடத்தும் பெற்றோர்களுக்கு "முன்ன பின்ன தெரியாத கஸ்டமர்கிட்ட கடையில் சிரிச்சு பேசறோம், பொண்டாட்டிகிட்ட சண்டை போடுறோமே?" என்ற கேள்வியை படம் முன்வைக்கும் போது யாரிடமும் பதில் இல்லை. நாம சொல்றதை புரிஞ்சுக்குறதுக்கும், ஏத்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும், அந்த மனசு உங்ககிட்ட இருக்கு ஒருத்தருக்கு ஒண்ணுக்கு வந்தா ஏண்டா எல்லாத்துக்கும் ஒண்ணுக்கு வந்துருது? என்ற கேள்வி குறும்பு. "நம்ம குழந்தைகளுக்கு நாமதான சார் ரோல் மாடல்" .. அட .. புதிய இயக்குனர் எம்.பாண்டியராஜன் மற்றும் அவரது குழுவினருக்கு முதலில் பாராட்டுகளை தெரிவிப்போம். ஒருமுறை கூட நெளியாமல் பார்க்க முடிந்த இன்னொரு நல்ல சினிமா.