Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2009

நமது கருத்து பொய்யானால் வரவேற்போம்!
எஸ்.கண்ணன்

காங்கிரஸ் கட்சிக்கு, தான் எதிர்பார்க்காத தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும், மே பத்தாம் தேதி வரையிலும், இடதுசாரிகளிடம் ஆதரவைக் கேட்டுப் பெறுவோம், ஆட்சியமைப்போம் என்று பேசினர், ஆனால் இடதுசாரிகள் ஆதரவில்லாமலேயே ஆட்சி அமைக்க கிடைத்த அங்கீகாரத்தை அமெரிக்கா கூட எதிர்பார்க்கவில்லை. தனக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே நாளில் ஆதிகாரத்தை வெளிப்படுத்தத் துவங்கியது கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் செயற்குழுவில் முடிவு செய்து தெரியப் படுத்துகிறோம், வெளியிலிருந்து ஆதரவு தருவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி பத்திரிகையாளர்களிடம் சொல்லவேண்டிய அளவிற்கு காங்கிரஸ் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியது.

Parliament கடந்த காலங்களில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வெற்றிபெற்ற காலங்களில் மாநில கட்சிகளை எப்படி உதாசீனப் படுத்தினார்களோ அதே பாணியை தற்போதும் பயன்படுத்துகின்றனர். திமுகவிற்கு ஏழு அமைச்சர்கள் போதாதா என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால் கடந்த முறை கேட்ட துறைகளை, கேட்ட எண்ணிக்கையை கொடுத்த காங்கிரஸ் தலைமை இந்த முறை தன்னை (மன்மோகன் சிங்) மிகப் பரிசுத்தமானவர் என்று வெளிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியே அ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் தரமாட்டோம் என்று கூறியதாகும். தனது எண்ணிக்கை உயர்வை காரணம் காட்டுகிற காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் போட்டியிடாமல் இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை உயர்வு சாத்தியமா என்பதை எண்ணிப் பார்க்கவில்லை.

மறுபுறம் மாநில முதலாளித்துவக் கட்சிகளின் எதிர்பார்ப்பும், அரசியல் நிர்பந்தங்களும் குறைந்திருக்கிறது. உதாரணத்திற்கு திமுக கடந்த தேர்தல் முடிவு வெளிவந்த நேரத்தில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திமுகவிற்கு ஏழு அமைச்சர்கள் கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து, தகவல்தொழில்நுட்பம், தொலை தொடர்பு, வனம் மற்றும் சுற்றுச்சூழல், ஆகிய கேபினட் பொறுப்புகள் கிடைத்தன. இந்த முறை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை உயர்வு பலன் தரும் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு அடி கிடைத்ததில் தப்பில்லை. முக.அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி என தன் வாரிசுகளுக்கு வெட்கமே இல்லாமல் அமைச்சர் பதவி கேட்பது மக்களாட்சிக்கான சவால் என்பதைத் தவிர வேறில்லை. இத்தகைய கட்சிகளின் நிர்பந்திக்கிற நிலை குறைவது தேவையும் ஆகும்.

இத்தகைய எண்ணிக்கை உயர்வையும், மாநில கட்சிகளின் நிர்பந்தம் குறைவாகவும் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, வாக்களித்த மக்களுக்கு என்ன செய்ய இருக்கிறது? சுமார் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பேற்று பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார் பிரணாப் முகர்ஜி, சீர்திருத்தக் கொள்கைகள் விரைவு படுத்தப் படும் என்றும் தெரிவித்திருக்கிறார். 2004 இல் பொறுப்பேற்ற உடன் மனித முகம் பொருந்திய சீர்திருத்தக் கொள்கைகள் அமலாகும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார் அவர்தான் 12 முறை பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் கேஸ்விலை உயர்வையும், விமானப் பெட்ரோலுக்கு விலை குறைவையும் அமலாக்கினார். சீர்திருத்தம் என்கிற வார்த்தை கி.வீரமணி பின்பற்றுகிற பெரியார் முன்வைத்த சமூக சீர்திருத்தமோ, திருமாவளவன் பின்பற்றுகிற அண்ணல் அம்பேத்கரின் சமூக சீர்திருத்தமோ இல்லை. இந்த சீர்திருத்தம் பொருளாதார சீர்திருத்தம்.

நமது நடுத்தர வர்கத்தின் அடிமடியில் கை வைக்கிற சீர்திருத்தம்தான் பொருளாதார சீர்திருத்தம். ஜூலை 22, 2008 இல் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசிற்கு கொடுத்துவந்த ஆதரவை விளக்கிக் கொண்ட பின்னர் எல்ஐசி இன் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 49 சதம் விற்பதற்கான மசோதாவை முன்வைத்தனர். பென்சன் நிதியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வைத்திருக்கிற ரூ.2.5 லட்சம் கோடி ரூபாய் பணத்தை ஐசிஐசிஐ வங்கிக்கும், ஹெச்எஸ்பிசி க்கும் கொடுத்து பங்குச் சந்தையில் பணத்தை இறக்கி நடுத்தர வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை அழிக்கும் முன்மொழிவை வைத்தது. ஆனால் 61 இடதுசாரி உறுப்பினர்கள் அந்த முயற்சியை தடுத்தனர். இன்றைக்கு இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் பிரணாப்பின் சீர்திருத்தம் இந்த நடுத்தர வர்க்கத்தை முதலில் பாதிக்க இருக்கிறது என்பதை எச்சரிக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் என்கிற மூட நம்பிக்கையும் தகரப் போகிறது. மத்திய அரசு முன்வைத்திருக்கும் சீர்திருத்தக் கொள்கைகளின் பாதிப்பிலிருந்து மாநில அரசு ஒருபோதும் விலகப் போவதில்லை. கடந்த ஆண்டுகளில் திமுகவின் கொள்கை மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில்இருந்து ஒருபோதும் விலகியிருந்ததில்லை. இப்போது இடதுசாரிகளின் ஆதரவு இல்லாத சூழலில் மாநில திமுக அரசு தேர்தல் முடிவு வெளிவந்த இரண்டு நாளில் அரசு ஊழியர்களின் உரிமையை பறிக்கும் அரசாணையை வெளியிட்டுள்ளனர்.18 அன்று வெளியான53/09 என்ற எண் கொண்ட அரசாணை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது என்றும் குறிப்பிடுகிறது. ஆரம்பப் பள்ளி அளவில் ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் வகையிலும், கல்வித் தரத்தை குறைக்கும் வகையிலும் 5000 ஆசிரியர் பணியிடங்களை அழிக்கும் ஒரு உத்தரவை மாநில திமுக அரசு பிறப்பித்துள்ளது. மேற்படி இரண்டும் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுகவினர் அங்கம் வகிக்கிற மத்திய அரசு அமைந்தபின் நிகழ்ந்தவை. இதுகுறித்து திமுக வெற்றியில் உறுதியாக இருந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகள் என்ன கருத்து சொல்ல இருக்கின்றன?.

இந்தத் தேர்தலில் மத்திய அரசு பின்பற்றிய சமூக பாதுகாப்புத் திட்டங்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக தேசிய கிராமப்புற, வேலை உறுதிச் சட்டம் முக்கியப் பங்காற்றியது என்று ஊடகங்கள் கருத்துப் பதிவு செய்து வருகின்றன. அது உண்மை என்றால் அதற்குக் காரணம் காங்கிரசா? கம்யூனிஸ்டுகளா? என்கிற விவாதத்தை நடத்துவதற்கு ஏன் ஊடகங்கள் முன்வரவில்லை? திட்டத்தை அமலாக்குவதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தை மக்களும், ஊடகங்களும் அறிவர் இப்போது நிர்பந்திக்கிற எண்ணிக்கையில் இடதுசாரிகள் இல்லாதசூழலில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறிப்பிட்ட தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் 150 நாட்களுக்கு விரிவு செய்யப்படும் என்பது அமலாகுமா?. நலத்திட்டங்கள் வகித்த பங்களிப்பிற்குப் பின்னர் இடதுசாரிகளின் நிர்பந்தம் உண்டு என்பதை மறுப்பது உள்நோக்க அரசியலை அடிப்படையாக கொண்டது என்பது தவிர வேறில்லை.

தேர்தல் விதிமுறைகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும், கருத்துப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை, பண பலத்தை தடுத்து நிறுத்துவதாகவும் இல்லை. பணம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் இழிநிலை உருவானது. இது இந்திய ஜனநாயகத்தின் முன் உள்ள மிக கொடிய சவாலாகும். பரிசுத்தத்தின் மறுபிறவி, இந்தியாவில் நேருவுக்கு பின் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமர் பதவி ஏற்பவர் என்றெல்லாம் புகழப்படுகிற மன்மோகன் சிங் மேற்படி பணநாயகத்தின் காரணத்தை விளக்குவாரா? ஆ.ராசா என்கிற ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளான தொலைதொடர்புத் துறை அமைச்சரை மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக்கியது பரிசுத்தத்தின் அடையாளம் எனக் கருதலாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் முடிவிற்கு முதல்நாள் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் முல்போஃர்ட் மன்மோகனை என்ன தேவைக்காக சந்தித்தார் என்பதும்,16 காலை 10.30 மணிக்கும் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் எதன் வெளிப்பாடுகள் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். நாம் விவாதித்திருக்கிற இந்த விவாதங்கள் அனைத்தும் மக்களுக்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே இவை தவிர்த்து மக்கள் நலன் காக்கும் அரசாக காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால்தான் நல்லது. நமது கருத்து பொய்யானால், அதை நாம் வரவேற்போம்!