Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2009

அகல உழாமல் ஆழ உழுது!
கணேஷ்

அவர் வாயில் இருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நெஞ்சில் கைவைத்தபடி காத்திருந்தனர். இரும்பு எஃகு தொழிற்சாலைகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்று சாவேஸ் கூறியவுடன் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்தனர். கொண்டாட்டங்கள் துவங்குவதற்கு முன்பாக வெனிசுலாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகின்றனர். தேசிய கீதம் நிறைவு பெற்றதுதான் தாமதம். ஒரே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். மடேசி, கான்சிகுவா, காரபோபோ, டாவ்சா உள்ளிட்டு நமது வாயில் அவ்வளவு எளிதாக நுழைய முடியாத பெயர்களைக் கொண்ட அந்த இரும்பு எஃகு தொழிற்சாலைகளின் நிர்வாகம் இனிமேலும் நம்மைச் சுரண்டாது என்ற நிலையே அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் என்று அந்தக் கொண்டாட்டங்கள் உணர்த்தின. இது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் போன்ற விஷயமல்லவே... அகல உழாமல் ஆழ உழுத பெருமை சாவேசுக்குதான் சேர வேண்டும். ஆனால் தனி ஆளாக இதை சாதித்து விடவில்லை. ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது லட்சக்கணக்கான வெனிசுலா மக்களின் கரங்கள் அவருக்கு ஆதரவாக இருந்து கொண்டே யிருந்தன.

Chavez மே மாதத்தில் மட்டும் இரும்பு எஃகு, இயற்கை எரிவாயு மற்றும் சில எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவை நாட்டுடைமையாக்கப்பட்டன. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்றெல்லாம் திடீரென்று கிளம்பிவிடவில்லை வெனிசுலா அரசு. வெனிசுலாவைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம் என்பது 1998லேயே ஏற்பட்டு விட்டது. ஆனால் மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஏற்கெனவே உருவாக்கிவைக்கப்பட்டிருந்த சட்டங்கள் பெரு நிறுவனங்கள் மற்றும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருந்தன.

தாண்டி வந்த பாதை

சினிமாவில் வரும் ஒன் மேன் ஆர்மி போல நாட்டின் பிரச்சனைகளைத் தீர்த்து விட முடியாது என்பதை மனதில் கொண்ட சாவேஸ், ஒரு அமைப்பின் தேவையைப் புரிந்து கொண்டார். ஐக்கிய வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டது. சோசலிசத்தை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் புதிய கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடப்பட்டது. பல்வேறு இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் புதிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டன. சோசலிசத்தை நோக்கிச் செல்லும் பாதையில் சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு முதலில் கையில் எடுத்த ஆயுதம் பிடிவிஎஸ்ஏ என்று அழைக்கப்படும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம்தான். சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானம் அன்னிய மற்றும் உள்ளூர் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தப்பட்டது. 1976இல் நாட்டுடைமையாக்கப்பட்ட கச்சா எண்ணெய்த் துறையை மீண்டும் தனியார் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி 1996இல் மீண்டும் துவக்கப்பட்டது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் 1998இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இருப்பினும் எண்ணெய் நிறுவன முதலாளிகளின் தூண்டுதலின்பேரில் 2002 ஆம் ஆண்டில் எண்ணெய் துறையை முடக்கும் முயற்சிகள் நடந்தன. உற்பத்தியே நின்று போகும் அளவிற்கு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. மக்களின் துணையோடு அதை முறியடித்த வெனிசுலா அரசு நிதானமாக, அதே வேளையில் தனது பாதை எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. 2007 ஆம் ஆண்டில் அரசியல் சட்டத்திருத்தங்களை மக்கள் முன் வைத்தபோது அது பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை. ஜனாதிபதி தேர்தல், பல பொது வாக்கெடுப்புகள் என்று தொடர்ந்து வெற்றியே பெற்றுக் கொண்டிருந்ததால் சாவேஸ் ஆதரவாளர்கள் அசட்டையாக இருந்ததுதான் அந்தத் தோல்விக்குப் பிரதான காரணமாக இருந்தது. மக்கள் ஆதரவோடு மீண்டும் பிப்ரவரி 2009இல் மிகவும் கவனமாக மக்கள் முன் சீர்திருத்தங்களை வைத்தபோது அவர்களின் புருவங்கள் உயர்ந்தன. இதையா தோற்கடித்தோம் என்ற எண்ணம் பரவலாகக் காணப்பட்டதை அமெரிக்கக் கண்காணிப்பாளர்கள் சிலரே தெரிவித்தனர். முந்தைய பொது வாக்கெடுப்பில் 49 சதவீத மக்களே அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்முறை 54 சதவீத மக்கள் சாவேசின் கரங்களை உயர்த்திப் பிடித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வளர்ச்சித்திட்டம் ஒன்றை வெனிசுலா அரசு முன்வைத்திருந்தது. பொதுவாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி அந்தத்திட்டத்தை செயல்படுத்த உதவியது.

அந்தத்திட்டத்தின் குறிப்பிட்ட அங்கமாகவே நாட்டுடைமை நடவடிக்கைகள் நடந்துள்ளன. நாட்டுடைமை என்று அறிவித்தவுடன் லியனார்டோ கொன்சால்ஸ் என்ற தொழிலாளி, அப்பாடா... பாவிகள் ஒழிந்தார்கள். எங்களுக்கு ஏழு மாதமாக சம்பளமே கொடுக்கவில்லை என்று கைகளை சொடுக்காத குறையாக திட்டித் தீர்த்தார். இழந்த சம்பளத்தை மட்டும் இந்த நாட்டுடைமை நடவடிக்கை மீட்டுத் தரவில்லை. ஒரு நாள் சம்பளத்தில் 14 டாலர்கள் உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் உதிக்கச் செய்தது.

ஒவ்வொரு நாட்டுடைமைக்கும் ஒரே மாதிரியான உத்தியை சாவேஸ் தலைமையிலான அரசு கடைப்பிடிக்கவில்லை. சில துறைகளை அப்படியே அரசுடைமை ஆக்கியது. சில நிறுவனங்களில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியது. பங்குகளை விற்க மறுத்த நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக் கையால் அரசின் கைவசம் சென்றன. அதிரடி சண் டைக்காட்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளில் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள், சிடோர் என்று அழைக்கப்படும் வெனி சுலாவின் பெரிய உருக்காலை, நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி, சிமெண்ட், தொலைத்தொடர்பு மற்றும் மின்துறை நிறுவனங்கள் ஆகியவை அரசுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

நிதானமான நடை

எட்டடி, பதினாறு அடிப்பாய்ச்சலெல்லாம் வெனிசுலாவின் நடையில் இல்லை. ஒவ்வொரு அடியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார்கள். நாட்டுடைமை நடவடிக்கை முழுமையடைந்தவுடன் சோசலிச தொழில் வளாகம் அமைகிறது. இதில் சிறிது சிறிதாக நிறுவனங்களும், ஆலைகளும் தொழிலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்படும். இது இத்தனை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. இது நடக்கும் என்பதோடு நிற்கிறார்கள். ஆனால் உறுதியோடு. ஏற்கெனவே பல நிறுவனங்களில் தேர்தல்கள் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகத்தில் பங்கேற்கும் நடைமுறை வந்துள்ளது. அதிலும் எந்த அவசரமும் காட்டப்படவில்லை. சோதனை முயற்சிகள் நல்ல பலனைத் தந்தது. சில இடங்களில் உடனடியாக நிர்வாகத்தில் பங்கு தர வேண்டியதில்லை என்ற நிலையும் காணப்பட்டது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செல்லாமல் பொறுமையுடன் இத்தகையப் பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. கால அவகாசம் தேவைப்படுவதால் தான் ஜனாதிபதியாகத் தொடர வேண்டிய அவசியத்தை உணர்ந்த சாவேஸ் அதற்கான சட்டத்திருத்தத்தையும் மக்கள் முன் வைத்தார்.

ஒருவர் தொடர்ந்து இரு முறைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில் அதிருப்தியும் இல்லாமலில்லை. பெரும்பான்மை பங்குகளை விலைக்கு வாங்கி நாட்டுடைமை ஆக்கும் உத்தியை சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டு வளத்தை சுரண்டிக் கொண்டிருந்தவர்களுக்கு தாம்பூலப்பை கொடுத்து அனுப்பும் வேலை எதற்கு என்பதுதான் அவர்களின் கேள்வி. அடுத்த திருமணம் எப்போது... மீண்டும்பத்திரிகை அடித்து தங்களை அழைக்க மாட்டார்களா... என்று காத்திருக்கும் எண்ணம்தான் சுரண்டல்வாதிகளின் மனதில் நிறைந்து கிடக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபுறத்தில் அரசியல் சீர்திருத்தங்களை நோக்கிய பாதையில் சரி செய்யும் வேலை நடக்கிறது. சில அரசியல் அம்சங்களில் பாதையே இப்போதுதான் போடுகிறார்கள். மாகாண அரசுகளின் அதிகாரங்கள் பற்றியெல்லாம் தெளிவாக வடிவம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முறையான தேர்தல் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு தேர்தல்கள் நடந்தன. ஒன்றுபட்ட வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான மாகாணங்களில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொள்கைகள் எதுவுமின்றி நீயா.. நானா.. என்ற போட்டிகளைத் தாண்டி சோசலிசக் கொள்கைகளை முன்னிறுத்தி இந்த வெற்றிகள் ஈட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தடைக்கற்களைப் பொறுக்கி ஓரமாக வைத்துவிட்டு புரட்சியை நோக்கி செல்கிறோம் என்கிறார் சாவேஸ். அதோடு தங்களைத் தாங்களே புனரமைத்துக் கொண்டு புரட்சியை எவ்வாறு நடத்தினோம் என்று வெனிசுலா தொழிலாளி வர்க்கம் விரைவில் உலகிற்கு பாடம் நடத்தும் என்று அவர் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கூறினார். அப்போது கூடியிருந்த தொழிலாளர்களின் உதடுகளில் ஏற்பட்ட வெறும் அசைவு கூடபுரட்சி வாழ்க என்ற உச்சரிப்பையே உணர்த்தியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com