Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2008

அபரிமித உணவும் பசிப்பிணியும்
சொ.பிரபாகரன்

இன்றைய உலகில் உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருவர் ஆரோக்கியமாக வாழ ஒரு நாளைக்கு 2800 கலோரி சக்தி தரும் உணவு தேவையென்றால், இங்கு உற்பத்திச் செய்யப் படுவதோ ஒவ்வொருவருக்கும் 2800 கலோரியை விடவும் அதிகம் சக்தி தரும் உணவாகும். இதைத்தான் ஐக்கிய நாட்டின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தனது புள்ளிவிபரங்களின் மூலம் உறுதிபடுத்துகிறது. ஆகவே இங்கு யாரும் பட்டினிக் கிடக்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் தினமும் 850 மில்லியன் மக்கள் பசியுடனும், குறைவான உணவுடனும்தான் இரவுத் தூங்கச் செல்கிறார்கள்.. உலகம் முழுவதும் தினமும் 18000 குழந்தைகள் பசியால் சாகிறார்கள். ஏன் இந்த அவலம்?

‘உலகத்தில் எந்த இடத்திலும் இல்லாதவாறு, உலகத்தில் எங்கு நடந்த இனப்படுக்கொலையிலும் இல்லாதவாறு, உலகத்தில் எங்கு நடந்த யுத்தத்திலும் இல்லாதவாறு, எக்கச்சக்கமான மக்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு நொடியும், பசியாலும், பட்டினியாலும் இங்குக் கொல்லப்படுகிறார்கள்,’ என்று பத்து வருடங்களுக்கு முன்பு 1998லேயே பிடல் காஸ்ட்ரோ சொன்னார். அது இன்றும் நிதர்சன உண்மையாகவே இருப்பதுதான், இன்றைய பரிதாபம். இங்கே போதுமான உணவு இருந்தும், பசிக்கொடுமையால் சாவது, அதுவும் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு சாவது ஏன்?

பசிப்பிணியைப் போக்க விவசாயத் தொழிற்நுட்பத்தைப் பெருக்க வேண்டும் என்று இன்றைய ஆளும் வர்க்கம் வழக்கமாக பாடும் பல்லவி ஒரு அப்பட்டமான பொய் என்பது மேற்படி உண்மையின் மூலம் விளங்குகிறது. பிரச்சினை விவசாயத் தொழிற்நுட்பத்தில் இல்லை; பிரச்சினை உணவைப் பகிர்ந்தளிப்பதில் உள்ளது. உண்மையில் இந்தப் பசியும், பட்டினியும், சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளால் ஏற்படுகின்றன.

இங்கே உலக உணவுத் தொழிற்சாலைகள் சந்தை விதிகளுக்கு உட்பட்ட முதலாளித்துவ சமூகத்தினால் இயக்கப்படுகிறது. ஆகவே அவைகள் உலக மக்களின் பசியைப் போக்குவதற்காக இங்கே தனது உற்பத்தியைச் செய்யவில்லை. மாறாக அவைகள் பூர்த்தி செய்ய முடியாத இலாப வேட்கையுடன் உந்துவிக்கப்பட்டுப் பணிபுரிகின்றன. ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லேண்ட் கடந்த வருடத்தை விட 55 சதவீதம் அதிக லாபம் ஈட்டியும், கார்ஜில் கடந்த வருடத்தை விட 86 சதவீதம் அதிக லாபம் ஈட்டியும், பன்ஜே கடந்த வருடத்தை விட 189 சதவீதம் லாபம் ஈட்டியும், இந்த பகாசூர நிறுவனங்களின் இலாப வேட்கை அடங்கவில்லை. இவைகள் உலக மக்களுக்குத் தேவையான உணவைக் காட்டிலும் அதிகமாகவே உற்பத்தி செய்தும், இங்கே பசியால் சாகிறவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடில்லை. ஏன் இந்த முரண்பாடு?

எப்படி இந்தப் பகாசூர கம்பெனிகள் பணிபுரிகின்றன-? ‘இலாபப்பசி’ (Hungry for Profit) என்ற பத்திரிகையின் ஆசிரியர்கள் கூறுவதைப் பாருங்கள்: பெரும் விவசாயவர்த்தக மற்றும் உணவுக் கார்ப்பரேஷன்கள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் தனக்கான மூலப்பொருட்களை வாங்குவதற்கும், அதே சமயம் பொது மக்களுக்குத் தங்கள் உணவுப்பண்டங்களை அதிக விலைக்கு விற்பதற்கும், அதன் மூலம் ஏராளமான இலாபம் ஈட்டுவதற்கும், தனது அதிகாரத்தை எக்கச்சக்கமாகத் துஷ்பிரயோகம் செய்கின்றன.

கடந்த முப்பது ஆண்டுகளில் உலக பகாசூர விவசாய நிறுவனங்கள் உலக விவசாயத்தில் பெரும் மாற்றுக் கட்டமைப்பைச் செய்திருக்கின்றன. தங்களது சொந்த சந்தைச் சக்தியை கொண்டு நேரடியாகவும், அரசுகள், உலகவங்கி, உலகநிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் மூலமாக மறைமுகமாகவும், உணவு உற்பத்தி முறையிலும், அதன் பரிவர்த்தனைச் செயல்பாட்டிலும், பெரும் மாறுதலை அவைகள் ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றம்தான் அவர்களது இலாபத்தை உயர்த்தியதுடன், உலகத்தில் தவிர்க்க முடியாத அளவுக்கு வறுமையையும், பசி பட்டினியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹெயித்தி போன்ற நாடுகளில் உணவுக்கலவரம் ஏற்படும் அளவுக்கு நிலைமையை இக்கம்பெனிகளின் நடிவடிக்கை மோசமாக்கி உள்ளது.

மேற்கத்தியப் பணக்கார நாடுகள், ஏழை நாடுகளை நிர்பந்தித்து ஏழை நாடுகளின் உணவுச்சந்தைகளைத் தங்களுக்குத் திறந்து விட ஏற்பாடு செய்துள்ளன. அப்படித் திறந்து விடப்பட்டச் சந்தையில், பணக்கார நாடுகள் தங்களது மான்ய உணவுப்பொருட்களை வெள்ளமென கொண்டு வந்து நிரப்பி விட்டன. அவர்களோடு போதுமான மான்யம் பெறாமல் விவசாயம் புரியும், தொழிற்நுட்ப வளர்ச்சியற்ற மூன்றாம் உலக நாட்டு விவசாயிகளினால் போட்டி போட இயலவில்லை. அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் மூச்சு மூட்டிச் சாகிறார்கள். அப்படித் தோற்றுப் போன விவசாயிகள்தான் நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள நகரச் சேரிகளில் புலம் பெயர்கிறார்கள்.

அடுத்தது ஏற்றுமதி விவசாயம் பெரும் சீரழிவை ஏற்படுத்துகிறது. தற்போது பல தெற்கத்திய நாடுகளில் ஏற்றுமதி விவசாயம் செய்யப்படுகிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கூட உற்பத்தி செய்து கொள்ளாமல், ஏற்றுமதிச் சந்தையை இலக்கு வைத்து ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ள உணவை உற்பத்திச் செய்கிறார்கள்.. விளைவாக அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இங்கும் சந்தைச் சக்திகள் புத்திசாலித்தனமாக வேலை பார்த்து, அவர்களது ஏற்றுமதி விவசாயப் பொருட்களுக்கு விலையில்லாதபடியும், ஆனால் அவர்கள் இறக்குமதி செய்ய வேண்டிய உணவுப் பொருட்களுக்கு அதிக விலைக் கொடுக்க வேண்டிய மாதிரியும் பார்த்துக் கொள்கிறது.

13 சதவீதம் குறைவான உணவினால் பரிதவிக்கும் கொலம்பியாதான், ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவைப்படும் 62 சதவீத ஆடம்பர அலங்கார பூக்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. அதுபோல ஏற்றுமதி விவசாயத்தில் ஈடுபட்ட கென்யா தனது 80 சதவீத உணவை இன்று இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னர், கென்யா தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்திச் செய்யும் திறனுடன் இருந்தது.

நமது இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஐந்தில் ஒரு பகுதியினர் கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். நமது குழந்தைகளில் பாதிக்கு மேல் குறைஉணவினால் அவதிப்படுகிறார்கள். இருப்பினும் 2004ம் வருடம் இந்தியா 1.5 மில்லியன் டாலர் அரிசியையும் 322 மில்லியன் டாலர் கோதுமையையும் ஏற்றுமதி செய்துள்ளது.

தொழிலக விவசாயம் என்ற புதிய கோட்பாடு ஏராளமான விவசாயிகளை அவர்களது நிலத்தை விட்டுத் துரத்தி, அவர்களை நகரங்களின் சேரிகளுக்குப் புலம்பெயர செய்துள்ளது.. தாங்களே தங்களுக்குத் தேவையான உணவை உற்பத்திச் செய்யும் திறன் படைத்திருந்த இந்த விவசாயிகள், தற்போது தங்கள் உணவுக்காகக் கூட, பகாசூர கம்பெனிகள் உறபத்திச் செய்து தரும் உணவுப்பொருட்களை அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.

பகாசூர விவசாய கம்பெனிகள் ஏற்படுத்தியிருக்கும் இந்த மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்று லா வியா காம்பென்சினா (ஸ்பானிய மொழியில் விவசாயிகளின் வழி என்று பொருள்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு கடந்த பதினைந்து வருடங்களாகப் பணி புரிந்து வருகிறது. அது 56 நாடுகளைச் சார்ந்த, 120 சிறுவிவசாயிகளின் அமைப்புகளை கொண்டுள்ளது. அவ்வமைப்பு உணவு இறையாண்மை என்ற புதிய கோட்பாட்டை பரிந்துரைக்கிறது. உணவு இறையாண்மை என்பதை, இவ்வமைப்பு உணவு பாதுகாப்பு என்ற கோட்பாட்டுக்கு மாற்றாக வைக்கிறது.

அதன்படி வெறுமனே உணவை அணுகுவதற்கான உரிமை என்பது போதாது. மக்களுக்கு நிலம், நீர், மூலதாரங்கள் ஆகியவற்றை அணுகுவதற்கான உரிமையும், உணவுக் கொள்கைகளைத் தெரிந்து கொள்வதற்கும், வடிவமைப்பதற்கும் உரிமை வேண்டும் என்று கோருகிறது. உணவு எங்கு உற்பத்திச் செய்யப்படுகிறதோ அந்த இனத்திற்கும், அந்த நாட்டிற்கும் மூலாதார பசிப்பிணி போக்கும் மருந்தாக இருக்க வேண்டுமேயழிய, அது பகாசூர விவசாய நிறுவனங்களுக்கு இலபாம் ஈட்டித் தரும் சரக்காக மாறக் கூடாது என்று உணவு இறையாண்மை என்ற கோட்பாடு கோருகிறது.

லா வியா காம்பென்சினா உணவு இறையாண்மையைக் கீழ்கண்டவாறு வலியுறுத்துகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கையை மானுட கௌரவத்துடன் வாழ்வதற்கு, பாதுகாப்பான, ஊட்டச்சத்து மிகுந்த பண்பாட்டு ரீதியாக பொருத்தமான உணவை போதுமான அளவு பெற உறுதி செய்ய வேண்டும்.

நிலமற்ற விவசாயிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு நிலத்தைச் சொந்தமாக கொடுப்பதுடன், அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களுக்கே கொடுக்க வேண்டும்.

இயற்கை மூலதாரங்களான நிலம், நீர், மற்றும் விதைகள் ஆகியவற்றை உபயோகிக்கும் போது போதுமான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் உலக வர்த்தக நிறுவனம், உலக வங்கி, உலகநிதி நிறுவனங்களின் கொள்கைகள் எதிர்க்கப்பட வேண்டும்.

உணவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி அச்சுறுத்தும் வேலை நிறுத்தப்பட வேண்டும். (பாரி வேந்தனுக்கு மூவேந்தர்கள் கொடுத்த நிர்பந்தம் போல)

காரல் மார்க்ஸ் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே சொன்னார்: முதலாளித்துவ சமுதாயம் பகுத்தறிவுவாத விவசாயத்திற்கு எதிராய் செயல்புரிகிறது.... ஒரு பகுத்தறிவுவாத விவசாயம் என்பது முதலாளித்துவ அமைப்புக்குப் பொருத்தமான விஷயமே இல்லை
அவர் சொன்னது இன்றும் பொருந்தும்.. இன்றும் விவசாயம் என்பது பசிப்பிணித் தீர்க்கும் தொழிற்நுட்பமாய் இல்லாமல், தனிநபர்களுக்கு இலாபம் ஈட்டித்தரும் வழிமுறையாக முதலாளித்துவ அமைப்பில் இருக்கிறது. விளைவாய் போதுமான உணவு உற்பத்திச் செய்யப்பட்டும், ஏராளமான மக்கள் பசியால் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை ஒழித்துக்கட்ட உணவு இறையாண்மையை நடைமுறைப்படுத்துவதும், பகுத்தறிவு விவசாயத்தை நடைமுறை படுத்துவதும்தான் ஒரே வழியாகும். அதற்காகவாவது நாம் முதலாளித்துவத்தை பலம் குன்ற செய்து, அதை ஒழித்துக் கட்டுவது அவசியமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com