Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2008

மத்திய அரசுக்கு அணு விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இடதுசாரிகள் கருத்துக்கு மதிப்பளித்திடுக

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டு செயல்படுத்தக்கூடாது என்று நாட்டின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த உடன்பாட்டை செயல்படுத்துவதற்கான முதல் கட்டமாக சர்வதேச அணுசக்தி கழகத்துடன் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்றும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச அணுசக்திக்கழகத்துடன் மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அணு எரிபொருள் சப்ளை தொடர்பான ஒப்பந்தத்தின் வரைவு நகலை அரசு எந்தவிதத்திலும் செயல்படுத்தக்கூடாது என்று மிக உறுதியாக வலியுறுத்துகிறேம், அதனுடைய விளைவுகள் குறித்து முழுமையாக உள்நாட்டிற்குள் விவாதிக்கப்பட வேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சிகளின் குழுவிற்குள்ளாவது விவாதிக்கப்பட வேண்டும் என்று அணுசக்தி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்திய அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவர் டாக்டர் பி.கே. அய்யங்கார், அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ஏ.என். பிரசாத் ஆகியோர் திங்களன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு என்பது ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சர்வதேச அணுசக்திக்கழகத்துடன் மேற்கொள்ளப் போகும் அணு எரிபொருள் சப்ளை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அது தொடர்பான விபரங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி இடதுசாரிக் கட்சிகள் குழுவில் கூட ஒரு பொதுக் கருத்தை எட்டும் பொருட்டு முழுமையாக முன்வைக்காமல் அவசரப்படுவது குறித்து இந்திய அறிவியல் அறிஞர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய மனச்சுமையை ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தற்போது அதிகாரத்தில் உள்ள அரசுகள் தமது ஆட்சிக்காலத்திலேயே இந்த உடன்பாட்டை எப்படியேனும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற வேகத்தில் அமெரிக்கா விதித்துள்ள காலவரையறைக்குள் மேற்கண்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அவசர கதியில் ஓடுவது தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த அவசரத்தைக் கைவிட்டு, உள் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கணக்கில் கொண்டு திறந்த மனதுடனும், பகுப்பாய்வு நோக்குடனும், சீரிய விவாதத்தை நடத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டிற்கு ஆபத்து

இந்த உடன்பாட்டை மத்திய அரசு மிகத்தீவிரமான ரகசியத்துடன் கொண்டு செல்லும் நிலையில், இதற்கு ஆதரவை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் மீடியாவின் மிகைப்படுத்தலும், இதில் குளிர் காய நினைக்கும் சில சந்தர்ப்பவாத தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நலன்களுக்காக நடக்கும் பிரச்சாரமும், இந்தப் பிரச்சனை தொடர்பாக நாட்டு மக்களின் துரதிருஷ்டவசமான அறியாமையும் சேர்ந்து இந்த நாட்டை ஒரு மிகப்பெரிய ஆபத்தான பாதைக்குள் கொண்டு செல்கிறது என்று அணுசக்தி விஞ்ஞானிகள் மிகவும் கவலையுடன் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பிற்கு வழி செய்யும் 123 உடன்பாடோ, அல்லது அதை வழி நடத்தும் ஹைடு சட்டமோ, இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் அணு உலைகளுக்கு இடைவெளி இல்லாமல் அணு எரிபொருள் சப்ளை செய்யப்படும் என்று எந்த இடத்திலும் உத்தரவாதம் வழங்கவில்லை என உண்மையை அம்பலப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், சர்வதேச அணுசக்திக்கழகம் என்பது, எந்த விதத்திலும் அணு எரிபொருள் சப்ளைக்கான உத்தரவாதம் அளிக்கும் அமைப்பாக அறியப்படாத நிலையில், அணு எரிபொருள் சப்ளை தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு இந்த அமைப்பு ஏதேனும் உறுதிமொழி வழங்கியிருக்கிறதா என்பதே மிகக் கடுமையான சந்தேகத்திற்குரியதாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அணு உலைகளுக்கு எரிபொருள் கிடைப்பதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் சர்வதேச அணுசக்திக்கழகத்துடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் இருப்பதாக அரசு கூறுகிறது. அப்படி கூறப்படும் சரி செய்யும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து மிகத் தெளிவாக நாட்டுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அமெரிக்காவுடனான உடன்பாடு ரத்து செய்யப்படுமானால், அதன் பின்னர் இந்தியாவுக்கு எதிர்காலம் முழுவதிலும் அமெரிக்காவிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது சர்வதேச அணுசக்திக்கழகத்தின் மூலமாகவே அல்லது இதர எந்த நாடுகளிடம் இருந்தோ அணு எரி பொருள் கிடைப்பதை அமெரிக்க அரசின் ஹைடு சட்டம் முற்றிலும் தடை செய்கிறது என்ற உண்மையையும் விஞ்ஞானிகள் தங்களது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
எனவே, மத்திய அரசு இந்த அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சிகளின் குழுவிடமும், இந்திய குடிமக்களிடமும் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் மிக முக்கிய அணுசக்தி அமைப்புகளின் தலைவர்களாக பணியாற்றிய மேற்கண்ட விஞ்ஞானிகள், சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் இந்தியாவால் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள கூடுதல் ஒத்துழைப்பு ஏற்பாடு என்ற உடன்பாட்டில் இந்தியாவுக்கென்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகளால் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போது விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை; சர்வதேச அணுசக்திகழகத்துடன் மேற்கொள்ளப்பட உள்ள அணு எரிபொருள் பாதுகாப்பு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திலும் இந்த அம்சங்கள் இடம் பெறவில்லை என்றும் தங்களது அறிக்கையில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

அணு எரிபொருள் மறுசுழற்சி

இப்பிரச்சனையில் மற்றுமொரு முக்கியமான அம்சம், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கான இந்தியாவின் உரிமை தொடர்பானது எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்தியா - அமெரிக்கா இடையிலான 123 உடன்பாடு, இந்தியாவின் இந்த உரிமை தொடர்பாக வெறும் வார்த்தைகளில் மட்டுமே லேசாக குறிப்பிட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த உடன்பாட்டின்படி, அவர்களிடமிருந்து இறக்குமதி செய்து அணு உலைகளை நிர்மாணித்து சில ஆண்டுகள் இயங்கிய பின்னர் தான், அணு எரிபொருள் மறு சுழற்சிக்கான உரிமையை மீண்டும் பெறலாம்; ஆனால் அப்போதும் அவர்களது அனுமதி வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இந்தக் குறைபாடுகளையெல்லாம் களையாமல் உடன்பாடு தொடர்பாக மேற்கொண்டு நகர்வது இந்தியாவுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மை என்றும் எச்சரித்துள்ளனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com