Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2008

சர்வதேச சகோதரத்துவத்தை வளர்க்கும் ஆதரவு மாநாடு
எஸ்.கண்ணன்

உலகில் மிகக் குறைந்த வயதில் புரட்சியை நடத்தி வெற்றி பெற்ற வீர மறவர்கள் ஃபிடலும், சேவும், அவர்களுக்கு அன்றைய கியூப ஆட்சியாளர் பட்டிஸ்டாவையும், அவருக்கு துணையாக இருந்த அமெரிக்கத் துருப்புகளை புறமுதுகிட்டு ஓடச் செய்வது, எளிமையாகவே இருந்துள்ளது. ஆனால் புரட்சிக்குப் பின் அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் 48 ஆண்டுகளாக பின்பற்றி வரும் வர்த்தகத் தடை எனும் கொள்கை, மனித குலத்தை தூக்கி எறிந்து விட்ட, அரக்க குணம் படைத்த ஒன்றாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரக்கத் தனத்தை எதிர்ப்பதில், கியூபாவில், புதிதாக கருவிற்குள் உருக்கொள்ளும் குழந்தையும் எதிர்க்கும் பழக்கம் கொண்டதாக மாறிவிட்டது. உலகில் அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு, கியூப ஆதரவு என்ற சகோதரத்துவக் கரங்களை பற்றி நிற்பதில், கியூபாவின், சர்வதேச நட்புக் கழகம், தீவிரப் பணியாற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகத் தான், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 4வது கியூப ஆதரவு மாநாடு இலங்கையின் தலைநகர், கொழும்புவில் நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போர் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை மக்கள், கியூப ஆதரவு மாநாடு குறித்த செய்தியை எப்படி எடுத்துக் கொண்டார்கள், என்பதை ஆராய நமக்கு, வாய்ப்புகள் இல்லை. எப்போது, எங்கு குண்டு வெடிக்கும்? எத்தனை பேர் பலியாவார்கள்? என்பதை தெரியாமல், பீதியுடனும், கலக்கத்துடனும் ஒடிக் கொண்டிருக்கும் தமிழர், சிங்களர் என எந்த இனத்தை சார்ந்த இலங்கை குடிமகனிடமும், இது குறித்து சர்வதேச அரசியல் குறித்து விவாதிப்பது, கடினமாக இருக்கவில்லை.

கியூப ஆதரவு மாநாட்டிற்காக, 18 நாடுகளில் இருந்து கொழும்பு வந்திருந்த பிரதிநிதிகள் கலதாரி என்ற பழமையான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மாநாடு நடைபெற்ற ஜூன் 14,15 தேதிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடித்து 10 பேர் பலியாகினர். என்ற செய்தி கொழும்பு மக்களுக்கு பழகிப்போன செய்தி, ஆனால் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சற்று கலக்கமடையச் செய்த செய்தி.

இப்படி உள்நாட்டு யுத்தத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களிடம், கியூப சோசலிஸத்தைப் பாதுகாக்கும் ஆதரவு மாநாடு, அவசியமா? என்ற கேள்வி எழலாம். கஷ்டத்தை அனுபவிக்கும் எவரொருவருக்கும், இன்னொருவரின் கஷ்டத்தை, துன்பத்தை புரிந்து கொள்ள முடியும், என்பதை அங்கு பார்க்க முடிந்தது. ஆம் இலங்கையில் உள்ள, பொது அரசியல் வெளியில் உலா வருகிற, அனைத்து அரசியல் கட்சிகளும், கியூப ஆதரவு மாநாட்டின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். மாநாட்டை நடத்துவதிலும் முன் நின்றனர். விமான நிலையத்தில் வரவேற்பது துவங்கி, தங்கவைப்பது, மாநாட்டு அரங்கிற்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்ட அனைத்து அமைப்பின் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றுதலுக்கு உரியது.

தமிழரா? சிங்களவரா? என்ற பாகுபாடுகள் அங்கிருந்த உபசரிப்பில் பார்க்க இயலவில்லை. வவுனியா, யாழ்ப் பாணம் என, இலங்கையின் பிரதான உள்நாட்டுப் போர் நிகழும் இடங்களில் இருந்தும் பிரதிநிதிகளாக சுப்பிரமணியம், மோகன், கதிர்காமர் போன்ற அன்புக்குரியவர்களும் பிரநிதிகளாக கலந்து கொண்டு உரையாடினர். பல தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோரும் கலந்து கொண்டனர். சிங்களர், தமிழர் என்ற உணர்வுகளைக் கடந்த சர்வதேசவாசிகளாகவே, இரு பிரிவு ஊழியர்களும் தெரிந்தார்கள்.

இத்தகைய சர்வதேச சமூக உணர்வை அமெரிக்காவே கியூபா மீதான பொருளாதார தடைகளை வாபஸ் பெறு என்ற முழக்கத்தின் கீழ் ஒன்று திரட்டிய பெருமை, கியூப மக்களுக்கு உண்டு என்று சொன்னால், அது மிகையல்ல. கியூபா ஒரு சோசலிஸத்திற்கான பாதையில் பயணப்பட்டுக் கொண்டி ருக்கும் நாடு பொருளாதாரத் தடை கிடைத்த ஆதரவு சோவியத் சிதைவிற்குப் பின் நின்று போனது, சிறப்புக் காலகட்டம் என்ற பெயரில் வறுமையை அனுபவித்தது. மின்தடை, உணவுப் பற்றாக்குறை போன்ற கொடிய சூழலை எதிர்கொண்டது.

இதுபோன்ற பல்வேறு அனுபவங்களைக் கொண்ட நாடு என்பதால், தனது எதிரிக்கும், தான் அனுபவித்த துயர நிலை வரக்கூடாது என்று நினைக்கிற நாடு கியூபா. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை அட்லான்டிக் பெருங்கடலில் புயல்கள் சூறையாடிய போது, உதவிக்கரம் நீட்டிட முதன் முதலாக முன் வந்ந நாடு கியூபா. அமெரிக்காவில் மார்பகப்புற்று நோய் காரணமாக இறக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகம். கியூபா தான் கண்டறிந்த மருந்தை விநியோகிப்பதற்கு முன் வந்த பெருமை கொண்ட நாடு.

பாகிஸ்தானில் பூகம்பம், இலங்கையில் சுனாமி, இந்தோனேசியாவின் பூகம்பம், அங்கோலா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர் என எந்தப் பகுதியில், இயற்கையும், செயற்கையும் மனித உயிர்களைப் பலிவாங்கினாலும், அங்கே மருத்துவர்களையும், மருந்துகளையும் அனுப்பும் முதல் நாடு கியூபா. கடந்த 15 ஆண்டுகளாக கடுமையான வறுமையை சந்தித்து, வெற்றி கொண்டு பின் முன்னேறிய நாடு கியூபாவைத் தவிர வேறு எந்த நாடும் இருக்க முடியாது. இப்படி தான் பெற்ற துயரத்தைப் பெறக்கூடாது, வையகம், என கியூபா செயல்படுகிற காரணத்தால் தான், கியூபாவிற்கான சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதில் இலங்கையின் பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டன.

கியூபாவிற்கு ஆதரவு தெரிவித்து உலகில் 145 நாடுகளில் 2000க்கும் அதிகமான நட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 2006ன் போது, நூறு குழுக்கள் மட்டுமே இருந்த நிலை 2008ல் மாறியுள்ளது. ஆசியக் கண்டத்தில் 21 நாடுகளில், கியூபாவுக்கு நட்புக் கரத்தை நீட்டுகிற 206 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உலகின் வேறு எந்த நாடும். எல்லைகளையும், அதிகாரத்தையும் கடந்து மனிதர்களை நட்பு கொண்டதாக வரலாறு இல்லை. கியூபாவிற்கான ஆதரவு என்பது, அமெரிக்காவிற்கு எதிர்ப்பு போன்ற அர்த்தத்தை, தெளிவுபடுத்தும், மந்திரச் சொல் என்றால், மிகையல்ல.

அமெரிக்காவின் 11 அதிபர்கள் 48 ஆண்டுகளாக கியூபா மீது வெறுப்பை உமிழ்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிரான தீவிரவாதிகளை தூண்டி வருகிற நாடு அமெரிக்கா. கியூபாவின் அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கு 600க்கும் அதிகமான முறை முயற்சிகள் செய்து, அம்பலப்பட்டுப் போன நாடு அமெரிக்கா. கியூபாவின் பன்றி வளைகுடாவின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்து தோல்வியைச் சந்தித்த நாடு அமெரிக்கா.

ஏலியன் என்ற 6 வயது சிறுவனும், அவன் தாயும் பயணம் செய்த படகு விபத்திற்குள்ளான போது, சிறுவனின் தாய் இறந்து போகிறார். ஏலியனை மியாமியில் பிடித்து வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி, கியூபா மற்றும் உலக மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 2 ஆண்டுகள் கழித்து விடுவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான நாடு அமெரிக்கா. இத்தனை தோல்விகளை அமெரிக்கா பெறுவதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அது கியூபா உலக மக்கள் மீது கொண்டிருக்கும் காதலைத் தவிர வேறில்லை.

அத்தகைய காதலும், அன்பும், நட்பும் இலங்கையின் மக்களிடமும் கியூபா கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 1959, ஜன 1 அன்று கியூப புரட்சி வெற்றி பெற்றது. புரட்சியின் நாயகர்களில் ஒருவரான சே உடனடியாக உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்து கியூப புரட்சியைப் பாதுகாப்பதற்கான உதவிகளையும், நேசக்கரத்தையும் பெறுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டார். அப்படி பயணம் செய்த நாடுகளில் ஆசியாவில் முக்கியமான நாடு இந்தியாவும், இலங்கையும், ஆகும்.

இந்தியா அணி சேரா நாடுகளை ஒன்றிணைத்து செயல்பட்ட போது, அதில் அங்கம் வகித்தது மட்டுமல்ல. இன்று அணிசேரா நாடுகளை ஒருங்கிணைத்து அதன் தலைவராக கியூபா செயல்பட்டும் வருகிறது. இலங்கைக்கு வந்து போன சே தனது பயணத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றினை யாகாலாகேலே என்ற தோட்டத்தில் நட்டு வைத்து சென்றதை, இன்னும் பாதுகாக்கின்றனர். 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி நடப்பட்ட மரம் தற்போது பொன்விழா ஆண்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் சிங்களர், தமிழர் இனவேறுபாடு காரணமாக, உருவான பல தமிழர் போர்க் குழுக்களில் ஒன்றாக, சேகுவேரா புரட்சிப் படையும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. அந்த அளவிற்கு, கியூபாவின் புரட்சியும், அதன் நாயகனாக இருந்த சேயும் இலங்கை மக்களிடம் மரியாதையைப் பெற்று இருந்திருக்கின்றனர்.

கியூபாவுக்கான ஆதரவை வெளிப்படுத்துவதில் இலங்கை, பல நாடுகளைப் போல் முன்னணியில் இருக்கிறது. இலங்கை, அமெரிக்கா கியூபா மீது விதித்த பொருளாதாரத் தடையை எதிர்த்து 12 முறை ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்து இருக்கிறது என்ற செய்தி நமது தலைமுறையினருக்கு மிக முக்கியமானது. கியூப ஆதரவுக்கான இலங்கை மக்களின் சர்வதேசப் பார்வை மென்மேலும் வளர்ந்து, இலங்கைக்குள்ளிருக்கும் இனவேறுபாட்டை ஒழிப்பதில் வெற்றி பெறுமானால், அது சேவுக்கு செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும். ஏனென்றால் உலகில் காணும் அநீதியை எதிர்த்துப் போராடுவாயானால் நீயும் நானும் தோழனே! என்ற வரிகளுக்கு சொந்தக்காரன் சே.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com