Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2008

சாதியம் வேரறுந்து விடவில்லை
நூல் அறிமுகம்

கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற இலங்கை தேசிய நாடக விழாவில் மேடையேற்றப்பட்ட யட்டியாந்தோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் கருணாகரனின் ‘நாங்கள் தலித்துக்கள்’ என்ற நாடகம் பற்றி மலையகத்தை சேர்ந்த நண்பர்கள் பலரும் அவர்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர். சாதிய அடையாளம் சிறந்ததென்றும் அந்த அடையாளத்தை மாற்றத்தேவை இல்லை என்றும் போதிக்கும் குறுகிய அல்லது குறுகிய சாதிவாதத்தைக் கொண்டதாக அந்நாடகம் இருந்தது என்பதே காரசாரமான விமர்சனங்களின் சாரம்சமாகும்.

இவ்வேளையில் “இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’’ என்ற நூலின் இரண்டாவது பதிப்பு கைக்குக் கிடைத்தது. வெகுஜனன் (சி.கா.செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) ஆகியோரின் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூல் சாதியம் பற்றியும் அதற்கு எதிரான போராட்டங்கள் சாதியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் வேறொரு கோணத்தில் அலசுவதாக அமைந்துள்ளது.

சாதியத்தின் தாக்கம் என்பது ஒடுக்கப்பட்ட சாதியினரின் பிரச்சினைகள் தான். ஆனால் அதற்கு எதிரான போராட்டங்களும் தீர்வுகளும் அவர்களுக்குரிய பிரத்தியேகமான நிகழ்ச்சி நிரலல்ல. சாதியம் என்பது இந்திய இலங்கைக்குரிய விஷேட சமூகப் படையாக்கமாக நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் இலங்கையின் சாதியக்கட்டமைப்பு இந்தியக் கட்டமைப்பிலும் வேறுபட்டதாகும். இலங்கையிலும் வடக்கு, சாதியமைப்பு கிழக்கிலிருந்து வேறுபட்டதாவதுடன் சிங்கள மலையகத்தமிழ் மக்களிடமும் முஸ்லீம்களிடமும் வித்தியாச வித்தியாசமான சாதியமுறை இருப்பதை அவதானிக்க முடியும். ஆனால் ஒடுக்கப்படும் சாதிகளும் ஒடுக்கும் சாதிகளின் ஆதிக்கம் அரசியலிலும், பொருளாதார சமூகப் பண்பாட்டு அம்சங்களிலும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான அம்சமாகும்.

சாதியத்தின் மிகவும் கொடூரமான தீண்டாமை வடக்கிலேயே மிகவும் கோரமாக இருந்ததுடன் தற்போது வடக்கிலும் அக்கோரம் பலமிழந்துள்ளமைக்கும் காரணம் 60 களில் நடந்த வெகுஜனப் போராட்டங்களின் தாக்கமாகும். இதனை வரலாற்றுச் சான்றுகளுடன் இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டகளும் என்ற இந்நூல் சமர்ப்பிக்கின்றது. தீண்டாமையின் குரூரத்தையும் விபரிக்கின்றது.

இந்நூலில் சாதியத்தின் தற்போதைய நிலை குறித்த அவதானிப்புகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டச் சூழலில் சாதியத்தை அணுக வேண்டிய முறைகள் பற்றிய முன் மொழிவுகளையும் முன்வைக்கிறது. சாதியம் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு ஒரு குழுவினருக்கான அடையாளத்தை மட்டுமின்றி அரசியல் பொருளாதார, சமூக, பண்பாட்டு விடயங்களை மறுதலிக்க முடியாதவாறு தீர்மானிக்கின்ற சமூகக் கட்டமைப்பாக தோற்றம் பெற்றது. இது கீழைக்தேய கூட்டு வாழ்க்கை அல்லது குழு வாழ்க்கை முறையின் பாதகங்களின் ஒன்றாகும்.

இச்சமூகக் கட்டமைப்பு தேசிய அரசுகளின் தோற்றத்துடன் எவ்வாறு அரச அதிகாரக் கட்டமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது என்பதைப் பார்த்தால் தேசிய அதிகாரப்படையாக்கம் சாதியக்கட்டமைப்புகளுக்கூடாக இயங்குவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் காலனியாதிக்க ஏகாதிபத்திய உலகமயமாதல் சூழ்நிலைகளில் சாதியத்தின் அடிப்படைகள் தாக்கப்படாமல் வேறுவேறு வழிகளில் தகவமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும்.

இது அரசியல் சமூக ஜனநாயகத்தை நிலை நாட்டவும் சமத்துவததையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவதற்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறது. இதனால் சமகால ஏற்றத்தாழ்வான சூழ்நிலையில் ஜனநாயகத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்குமான போராட்டங்களில் சாதியத்திற்கு எதிரான போராட்டமும் முக்கியமாகிறது. அதேபோன்று சாதியத்தின் பாதிப்புகளுக்கு தீர்வுகளை காண்-ப-தற்கான தேவையை பொருட்படுத்தாமலும் தற்கால சமூக அசைவியக்கம் நடைபெறமுடியாது.

இந்த அடிப்படையில் போராட்டங்கள் நிலப்பிரபுத்துவ காலம் தொட்டே நடைபெற்று வருகின்றன. தேசிய அரசுகளின் கீழும் காலனியாதிக்க ஏகாதிபத்திய சூழ்நிலையிலும் உலகமயமாக்கல் சூழ்நிலையிலும் வேறுவேறுவிதமாக அப்போராட்டங்கள் தொடர்கின்றன. சீர்திருத்தங்களை செய்து சாதியப் பாதிப்புகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு வகையான சட்டரீதியான ஏற்பாடுகள் கொள்ளப்பட்டது. இதனையே வடக்கில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் அணுகுமுறையாகக் காண முடிந்தது. இது சாதியக்கட்டமைப்பை தகர்ப்பதற்குப் பதிலாக அதனை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்படும் சாதியினருக்கு கொடுக்கப்படும் ஒத்தடமாகும்.

இந்தியாவில் ஒடுக்கப்படும் சாதியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு போன்ற விஷேட அம்பேத்காரின் சீர்திருத்த அணுகுமுறையைவிட தீவிரமானதாக இருப்பினும் சாதிகளிடையே வன்மங்களை உயிர்ப்பாக வைத்துக் கொண்டு பகை நிலைப்பட்ட தீர்வுகளை வேண்டி நிற்பதன் மூலம் சாதியக்கட்டமைப்பை பாதுகாப்பதாகவே இருக்கிறது. அதாவது ஒடுக்கப்பட்ட சாதியினர் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அதன் ஒரு வகை ஆதிக்கத்திற்காக போராடுவதாக இருக்கிறது. இது சமூகமாற்றத்தை அடிப்படையாக கொள்ளாதபடியால் ஏற்றத்தாழ்வுடைய இச்சமூக அமைப்பை பாதுகாக்கும் பாராளுமன்ற அரசியலுக்கே உதவும்.

ஒடுக்கப்பட்ட சாதியினரில் மேட்டு குடியினரை உருவாக்கும் நடவடிக்கையாகவே முடிகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட சாதியினரிலும் வர்க்க வேறுபாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. அவர்களின் மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்காகவும் சமூக மேநிலை ஆக்கத்திற்காகவும் அந்த சாதியடையாளம் தொடர்ந்து பேணப்படுவதாக இருக்கிறது. தலித்துவ அணுகுமுறை எதிர்ப்பைக் காட்டும் மீறலை எடுத்துக்காட்டும் தீவிர அணுகுமுறை என்பதில் சந்தேகமில்லை. அதனால் ஒடுக்கும் சாதியினரின் ஆதிக்கம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

இந்த தீவிர நடவடிக்கைகளின் விளைவு சட்ட நிவாரணங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்வதுடன் முடிவிற்கு வந்து விடுகின்றது. பெரியார் தலைமையிலான சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் தீவிரமும் வன்மமாகவும் இருந்தாலும் அவை சமூக மாற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. இது தலித்திய அணுகுமுறையிலிருந்து வித்தியாசமானாலும் பரந்தளவில் முன்னெடுக்கப்படவில்லை.

மேற்படி அணுகுமுறைகளான சிநேக அணுகுமுறைகளாக கொண்டு சாதியத்தை தகர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலுடனான வர்க்கப் போராட்ட வழிமுறைகளும் இந்தியாவிலும் இருக்கின்றன்றன. வெகுஜனன் இராவணா ஆகியோரின் இந்நூல் சாதிமுறைமையை தகர்ப்பதற்கான அவசியத்தை தர்க்கப்பூர்வமாக சான்றுபடுத்துகின்றது.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் என்ற பொதுவான பதாகைக்குள் சாதியம் முற்றாக தகர்க்கப்படாது மறைக்கப்படுகிறது அல்லது மறைந்து கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பொதுவாக தேசிய அரசிற்கான அல்லது சுயாட்சிக்கான போராட்டம் என்பதனால் மட்டும் அதற்கு சாதியத்தை தகர்க்கும் வலிமை வந்து விடுவதில்லை. ஏனெனில் தேசிய அரச அதிகாரம் காலனித்துவ, ஏகாதிபத்திய அதிகாரம் ஏகாதிபத்திய உலகமயமாதலின் ஆதிக்கம் வேறுவேறு விதங்களில் சாதிய சமூகக்கட்டமைப்பை உள்வாங்கிக் கொள்கின்றன.

சமூக மாற்றத்திற்கான தேசிய விடுதலைப் போராட்டங்களே உண்மையான சாதியத் தகர்ப்பைக் கொண்டிருக்க முடியும். அதற்கான கொள்கை நடைமுறைகளே வெறும் சுலோகங்களையும் வார்த்தைகளையும் விட அர்த்தம் நிறைந்ததாகும். போராட்டங்களின் பொது வான போக்கும் எதிர்பார்ப்பும் ஆயுத நடவடிக்கைகளும் சாதியமைப்பை வலுக்குறைந்துள்ளதாகத் தோன்றினாலும் அது உண்மையல்ல என்பதற்கு இந்நூலில் பல உதாரணங்கள் காட்டப்பட்டுள்ளன.

அதே வேளை தமிழ்த்தேசியப் போராட்டத்தில் தலித்திய அணுகுமுறையை வேண்டிநிற்கும் சிலர் தேசியத்தையும் சாதியத்தையும் சமமான எண்ணக்கருக்களாகவும் நிறுவனங்களாகவும் கொண்டு செயற்படுகின்றனர் அல்லது விளங்காமல் அவற்றை சமப்படுத்துகின்றனர். சாதியக்கட்டமைப்பை விட தேசியக்கட்டமைப்பு விரிந்ததும் வளர்ச்சியடைந்ததுமாகும். தேசிய அபிலாஷைகள் என்பதை தனியரசு கூட்டரசு, சுயாட்சி போன்ற ஏற்பாடுகள் மூலம் நிலை நிறுத்தப்படலாம் ஆனால் சாதியம் தனித்து அரச அதிகாரக் கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அதனால் தலித் தேசியம் என்றொன்று ஏற்பட முடியும் என்பது தேசியத்தை சாதியத்திற்கு தாழ்த்துவது அல்லது சாதியத்தை தேசியத்திற்கு உயர்த்துவது என்பது கோளாறு கொண்ட அணுகுமுறை ஆகும்.

ஜனநாயகம், மனிதன் உரிமைகள், சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய அணுகுமுறையில் சாதியத்திற்கு இடமிருக்க முடியாது. அதனால் சாதிய அடையாளம் கடந்த தேசியம் அமைய வேண்டிய புதிய வழிமுறை பற்றிச் சிந்திக்க வேண்டுமேயன்றி சாதிய அடையாளங்களின் அடிப்படையில் தேசியம் அமைய முடியாது என்பதுடன் ஒடுக்கும் சாதிய மேலாண்மை கொண்ட தேசியத்திற்கு எதிரான போராட்டம் தலித் மேலாண்மையாகவோ தலித் தேசியமோ அதன் தீர்வாக அமைய முடியாது. சாதியத்திற்கு எதிரான போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டமல்ல என்பதால் சாதிய அடக்கு முறைக்கு சுய நிர்ணய உரிமை தீர்வுமாகாது.

எனவே தேசிய விடுதலைப் போராட்டங்களில் சாதிய அடக்கு முறைகள் இல்லை என்பது எவ்வளவு தூரத்திற்கு மோசடியானதும் ஆபத்தானதுமோ அந்தளவிற்கும் தலித்திய மேலாண்மைக்கான கோரிக்கையும் மோசடியானதும் ஆபத்தானதுமாகும். ஒவ்வொரு போராட்டத்திலும் ஒவ்வொரு சமூக மேம்பாட்டு நடவடிக்கையிலும் சாதியம் தகர்க்கப்-பட வேண்டியதன் அவசியத்தை மறுக்க முடியாது. அதற்கான வழிமுறை சாதியத்தை தகர்க்கும் அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும்.

சாதியம் இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் போராட்டச்சூழலில் எவ்வாறு செயற்படுகிறது. தகவமைத்துக் கொள்கிறது என்பதை சரியாக புரிந்து அதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.. சீர்திருத்தவாத பெரியாரின் பகுத்தறிவு வாதம், தலித்திய அணுகுமுறைகள், மற்றும் சாதியமுறையை தகர்ப்பதற்கான அணுகுமுறைகள் போன்றவற்றை சரியாக மதிப்பிட்டு புதிய வளர்ச்சியடைந்தவாறான மக்களை பிளவுபடுத்துவதற்கு மாறாக ஐக்கியப்படுத்தும் அதனூடாக சமூக அமைப்பை மாற்றி சமத்துவம் சமூக நீதி அடிப்படையிலான ஜனநாயகத்தை மனித உரிமைகளை நிலை நாட்டும் வழிமுறைகள் காணப்படுவது அவசியம்.

பிறப்பால் குத்தப்படும் அடையாளத்தையும் அதனாலான கொடூரங்களையும், கேவலங்களையும் நிராகரிக்கும் புதிய அணுகுமுறைகள் பற்றி இந்நூல் பேசுகிறது. இக்கருத்துகள் மேலும் செழுமைப்படுத்தும் முயற்சிகள் தேவை. இதன் மீதான கருத்துப்பரிமாறல்கள் விமர்சனங்கள், விவாதங்கள் சாதியத்திற்கு எதிரான பொதுவான ஆரோக்கியமான அணுகுமுறை பல முனைகளிலும் தேவைப்படுகின்றன. அதன் மூலமே சமூகக்கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தம் அரச அதிகார படையாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் சாதியத்தை மேலும் தகர்க்க முடியம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com