Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2007

மாநகரம் புனிதமாகிய ஒரு நாள்
- ச.தமிழ்ச்செல்வன்

Scaanger மலக்குழிகளிலிருந்து
மனிதர்கள் எழுந்து வந்தார்கள்
மாநகர வீதிகள் அன்று புனிதமாகின.

பீக்கூடைகளை உதறிப் பெண்கள்
பீடுநடை போட்டு வந்தார்கள்
பெருநகரமே அன்று மணத்துக்கிடந்தது.

செருப்பாய்த் தேய்ந்த மனிதர்கள் அன்று
சேர்ந்து நடைபோட்டு வந்தார்கள்
சென்னை அன்றுதான் உண்மையாகவே சிங்காரமானது.

தோழமை என்னும் சொல் அன்று
ஆழம் கொண்டது கூடுதல் அர்த்தம் பெற்றது
வா என் தோழனே என்றவர் அழைத்த
வாஞ்சையில் கரைந்த மக்கள்
வந்தே கூடினர் வழிகளெங்கும்
வாழ்வுக்கு விடைகாணும் வேகத்தோடு
வங்கக் கடலலையும் வாழ்த்துச்சொல்ல
செங்கொடியும் அவர்கை சேர்ந்த சிலிர்ப்பில்
விம்மித் தணிந்தது புதிதாய் வீறு கொண்டெழுந்தது!

அருந்ததியர் மக்களின் விடுதலையை நோக்கி முதல் தப்படியை எடுத்து வைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கடந்த ஜூன் 12ஆம் தேதி கோட்டை நோக்கிப் பேரணி என அறிவித்து தமிழக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது. ஒரு சாதியைச் சேர்ந்த மக்களுக்காக ஒரு பேரணி. மலமும் சாக்கடையும் செருப்பும் சுடுகாடுமே அன்றாட வாழ்வென விதிக்கப்பட்ட அருந்ததியர் மக்களை அணிதிரட்டிப் போராடுவது தன் வர்க்கக் கடமை என்பதை முற்றிலுமாக உணர்ந்து முன் கை எடுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் 34 மாவட்டங்களிலும் அருந்ததியர் வாழும் பகுதிகளுக்கு வீதி வீதியாகச் சென்று அம்மக்களை அழைத்து வந்தனர். பஸ்களிலும் வேன்களிலும் லாரிகளிலுமாக சென்னைக்கு வந்த மக்கள் மன்றோ சிலையிலிருந்து கோட்டை நோக்கி அணி அணியாகச் செங்கொடியேந்திப் பவனி வந்தனர்.

அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, பகடை, ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா, மாதிகா என்று பலப்பல பெயர்களால் பல்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகிற இம்மக்கள் அருந்ததியர் என்னும் ஓர் குடைக்கீழ் அணிதிரட்டப்பட வேண்டும் என்கிற புரிதலோடு மார்க்சிஸ்ட்டுகள் தம் கட்சி அணிகளைக் களமிறக்கினர். முதன்முதலாகக் களம் கண்டது விருதுநகர் மாவட்டம். 7.9.2006 அன்று விருதுநகரில் அருந்ததியர் விடுதலைக்கான முதல் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. அழைப்பு விடுக்கப்போன கட்சி அணிகள் இம்மக்களின் வாழ்நிலை கண்டு அதிர்ந்து திரும்பினர்.

அதற்கு மேலும் காலம் தவறவிடக்கூடாது என்கிற அவசரமான உணர்வுடன் கட்சி அம்மக்களின் பிரச்னைகளைக் கையிலெடுக்கத் துவங்கியது. கந்துவட்டிக் கொடுமையில் கசந்து கிடக்கும் வாழ்விலிருந்து அவர்களைமீட்க வேண்டும். 1993ஆம் ஆண்டிலேயே “கையால் மலம் அள்ளும் முறை மற்றும் உலர்கழிப்பறை கட்டத் தடைச்சட்டம்’’ ஒன்றை மத்திய அரசு நிறைவேற்றியிருந்தபோதும் மேற்குவங்கம் போல ஓரிரு மாநிலங்கள் தவிர பிற எந்த மாநிலமும் இச்சட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில் கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்டுவதை மார்க்சிஸ்ட் கட்சி முதல் பிரச்னையாகக் கையில் எடுத்தது. விருதுநகரை அடுத்து திண்டுக்கல்லில் 26.4.07 அன்று இன்னும் கூடுதாக திட்டமிடுதலோடு அருந்ததியர் மாநாட்டை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது.

இம்மாநாடுகளுக்கு அருந்ததியர் மத்தியில் ஏற்கனவே பணி செய்து கொண்டிருக்கும் அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டனர். அவர்களோடு ஒரு தோழமைபூர்வமான கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. அசலான கோரிக்கைகளை வடித்தெடுக்க அவர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன.

மண்டல வாரியாக மாநிலம் முழுக்கக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தி கோரிக்கைகள் இறுதிப்படுத்தப்பட்டன. ஊர் ஊராகத் தோழர்கள் நேரில் சென்று அருந்ததியர் மக்களை அணிதிரட்டினர். எல்லா மாவட்டங்களிலும் மத்திய தர வர்க்க கட்சி ஊழியர்கள் பஸ் ஏற்பாடுகளுக்குக் கை கொடுத்தனர். கட்சியின் அனைத்துப் பகுதி ஊழியர்களும் எழுச்சிகொண்ட இயக்கமாக இது மாறியது.

CPM Rally பேராசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொலைத்தொடர்பு ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் என பலதரப்பு மக்கள் பேரணிக்கு வந்தனர். தங்கள் பதாகைகளோடு சாலை ஓரங்களில் நின்று பேரணியை வரவேற்று கோஷங்கள் முழக்கினர். புதிய கூட்டணி ஒன்று இயல்பாக உருவானதை அன்று கண்ணாரக்காண முடிந்தது. இது தொடர வேண்டும்.

செருப்பில்லாத கால்களோடு பெண்களும், குழந்தைகளும் சென்னை நகரத்து வீதிகளில் அன்று நடந்து வந்தனர். காலமெல்லாம் சேரிகளுக்கும் அப்பால் ஒதுக்கப்பட்ட மக்கள் நடுவீதிகளில் நாயகமாக நடந்து வந்தனர். பாருங்கள் பெரியோர்களே நாங்கள் உங்கள் சக மனிதர்கள்தான் என்று உரக்கப்பேசி வந்தனர். ஆதரவாகக் குரல் எழுப்பிய அமைப்புகளைக் கண்டு அம்மக்கள் இதெல்லாம் நமக்கே நமக்கா என்று நம்பமுடியாமல் வியந்தனர்.

பேரணியிலும் சாலையிலும் பொதுக்கூட்டத்திலும் சென்னை வீதியிலும் மட்டுமல்ல நீங்கள் வாழும் ஊர்களிலும் தெருக்களிலும் நாங்கள் உங்களோடு உறுதியாக நிற்போம் என்பதை நாம் எதிர்வரும் காலத்தில் செய்துகாட்ட வேண்டியிருக்கிறது. பேரணிக்கு முன்பாக தமிழக முதல்வரைச் சந்திக்க தலைவர்கள் குழு தோழர் என்.வரதராஜன் அவர்கள் தலைமையில் கோட்டைக்குச் சென்று கோரிக்கை மனு அளித்து வந்தது. மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்ட முதல்கட்டமாக இந்த ஆண்டு 54 கோடி ரூபாய் ஒதுக்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப உள்ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது இன்னொரு முக்கியமான கோரிக்கை. இதுபற்றி ஆய்வு செய்ய குழு அமைப்பதாக முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்காக ஒரு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நிச்சயமாக இப்பேரணிக்குக் கிடைத்த வெற்றிகள்தான்.

கிடைத்ததை உறுதிசெய்து உரிய மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் முன்நிற்கும் கடமையாகியிருக்கிறது. இன்னும் அடைய வேண்டிய இலக்குகள் எத்தனையோ காத்துக் கிடக்கின்றன.

சாதிரீதியாகக் கூட இம்மக்கள் பெருமளவுக்கு அணிதிரட்டப்படவில்லை. பத்துக்கு மேற்பட்ட அமைப்புகள் இம்மக்கள் மத்தியில் இயங்குகின்றன என்றபோதும் நிகழும் கொடுமைகள் கண்டு கோபப்பட்டுத் தம் மக்களை அணிதிரட்டுகிற அளவுக்குத் தேவையான ஒரு மத்திய தர வர்க்கம் இச்சாதி மக்களிடையே இன்னும் உருவாகவில்லை. திண்டுக்கல்லில் 135 கிராமங்களில் ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் தோழர்கள் ஒரு பட்டதாரியைக்கூடக் காணவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆகவே இன்றைய அறிவுசார் உலகத்தில் அவர்களுக்காகப் பேச அவர்களுக்காக வலுவாகக் குரல் கொடுக்க வேறு யாரும் இல்லை. அருந்ததியர் அமைப்புகளும் இடதுசாரிகளும் மனசாட்சியுள்ள பிற மனிதர்களும் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து பேசியாக வேண்டும். அவர்களுக்கு வரலாறு நெடுகிலும் காலமெல்லாம் அள்ளப் பீக் கொடுத்த நாம் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம். நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய முதல் கடன் அவர்களுக்குரியது.

அவர்களின் வாழ்வு இன்னதென்று கூட அறியாதிருக்கும் நாம் குற்றஉணர்வு கொள்வோம். சக மனிதர்களைக் குற்றஉணர்வு கொள்ளச் செய்வோம். பெற்ற தகப்பன்கூட வெளிக்கிருந்த பிள்ளைக்கு ஆய் கழுவி விடுவதில்லை. மனைவியைத்தான் அழைப்பான். பெற்ற தாய் மட்டும் முகம் சுளிக்காமல் நமக்குக் கால் கழுவி விடுகிறாள். அத்தனை சாதிகளுக்கும் ஆண்டாண்டு காலமாய் மலம் அள்ளிச் சேவகம் செய்கின்ற அருந்ததியர் இனம்தான் தமிழ்ச்சமூகத்தின் தாய்.

தாயை மறந்த சமூகம் உருப்படாது. இனியாவது கவனிப்போம். இயன்றதைச் செய்வோம். இயலாததையும் செய்ய முயற்சிப்போம். இது நம் ஒவ்வொருவர் கடமை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com