Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2007

மாற்றுப் பாதையில் தென் அமெரிக்க அரசுகள்
- எஸ்.வி.சசிகுமார்

கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் தென்அமெரிக்க நாடுகளில், குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களும், புதிதாக அரசு அதிகாரம் பெற்ற இடதுசாரிக் கட்சிகளின் ஆரம்ப முயற்சிகளும் உலக நாடுகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றன. சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் அந்நாடுகள் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி, வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றில் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பினால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறது.

South America 1990களின் தொடக்கத்தில் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் அமெரிக்க அரசின் முழு ஆசிகளுடன் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையை சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, தயாரிக்கப்பட்ட கட்டுமானச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் எல்லா நாடுகளையும் ஏகாதிபத்திய நாடுகளின் பகாசுரப் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் கொள்கையை _ பரிசோதித்துப் பார்க்கும் பரிசோதனைக் களமாகத் தென்அமெரிக்க நாடுகள்தான் முதலில் பயன்படுத்தப்பட்டன என்பதை மறக்க முடியாது.

மிகக் குறுகிய காலத்திலேயே பிரேசில், அர்ஜென்டைனா, வெனிசுலா, மெக்சிகோ போன்ற பெருவாரியான நாடுகள் கடுமையான கஷ்டநஷ்டங்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “வாஷிங்டன் கான்சென்சஸ்’’ (வாஷிங்டனில் ஒருமித்த மனத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்) என்ற பெயரில் புகுத்தப்பட்ட இக்கொள்கை அந்நாடுகளின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தவில்லை. மாறாக அவற்றை மேலும் பின்னுக்குத் தள்ளி நிலைகுலையச் செய்தன என்பதே உண்மை. அந்நாடுகளில் அப்போது இருந்த அரசுகளும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த முயற்சிகளில் பங்குகொண்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பெரும் தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்குவதிலும், வர்த்தக, தொழில் முயற்சிகளுக்கு தாராளமாக உதவிசெய்யும் வகையில் சட்டமாற்றங்கள் செய்வதிலும், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கதவு திறந்து விடுவதிலும் தென்அமெரிக்க நாடுகள் பலவற்றின் அரசுகள் பேரார்வத்துடன் இயங்கின. உண்மையில், உலக வங்கியும், சர்வதேச நிதியமும் பாராட்டும்வண்ணம் அவை செயல்பட்டன. “நல்ல மாணவன்’’ என்ற பட்டத்தைக் கூட அர்ஜென்டைனாவிற்குச் சூட்டி மகிழ்ந்தன இந்த சர்வதேச நிறுவனங்கள். ஆனால், விரைவிலேயே எத்தகைய படுகுழியில் தாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோ என்ற உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது.

வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது. ஜனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையில் உழன்றனர். விவசாயம், சிறுதொழில், சிறுவர்த்தகம் எல்லாம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தன. நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்து தவித்தனர். வேலையற்றோர் எண்ணிக்கையை இது மேலும் அதிகப்படுத்தியது. கடுமையான விலைவாசி உயர்வும், தாங்கொணா வறுமையும் மக்களை வாட்டி வதைத்தன. பல இடங்களில் மக்களின் போராட்டங்களும், வன்முறைச் செயல்களும் அரசுகளை திக்குமுக்காடச் செய்தன.

மக்கள் புதிய அரசுகளை, நாட்டின் பொருளாதாரத்தை மாற்றிச் சீர்படுத்தும் அரசியல் தலைமையை தேர்ந்தெடுத்தனர். இடதுசாரிக் கட்சிகளும், பொருளாதாரச் சமச்சீரின்மையைப் போக்கி மறுமலர்ச்சியை ஏற்படுத்த விழையும் முற்போக்கு சக்திகளும் மக்களின் பேராதரவைப் பெற்றுப் புதிய அரசுகளை அமைத்தன. 2006ஆம் ஆண்டில் பிரேசிலில் லூலாவின் வெற்றியைத் தொடர்ந்து அர்ஜென்டைனா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் சோஷலிச மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுக்க உறுதி கூறிய இடதுசாரிக் கட்சிகள் பதவிக்கு வந்தன. உலக சமூக அமைப்பு (world social forum) நடத்திய மாநாடுகள் மக்களிடையே மாற்றுப்பாதை பற்றிய நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தின.

புதிய அரசுகள் ஈட்டிய தேர்தல் வெற்றியை நாடுகளின் பொருளாதாரப் புனரமைப்பிற்கு உடனடியாகப் பயன்படுத்த முயன்ற பல நாடுகளில் தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்கள் படிப்படியாக நாட்டுடைமை ஆக்கப்படும் நிலை உருவாயிற்று. உலக வங்கி, சர்வதேச நிதியம் இரண்டும் நிர்ப்பந்தித்தற்கேற்ப கைவிடப்பட்ட சமூகக் கடமைகளை அரசுகள் மீண்டும் நிறைவேற்றும் பணியைத் தொடங்கின.

இம்முயற்சிகளெல்லாம் அரசுகள் மத்தியில் மட்டுமின்றி மக்களிடையேயும் பெரிய அளவில் ஒற்றுமையை ஏற்படுத்த உதவின. தங்கள் துயரங்களுக்கெல்லாம் காரணமாயிருந்த சர்வதேச அமைப்புகளின் மீதும், அவற்றை இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசின் மீதும் மக்கள் கடும் கோபம் கொண்டனர். அதிபர் புஷ்ஷின் செல்வாக்கு அவரது அண்டை நாடுகளிலேயே பெரும் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிட்டது.

தென் அமெரிக்க அரசுகளிடையேயும், மக்களிடையேயும் மலர்ந்துவரும் ஒற்றுமை உணர்வையும் அரசுகளின் இடையிலான நல்லுறவையும் வலுப்படுத்தும் முயற்சியில் வெனிசுலா அதிபர் சாவேஸ் போன்றவர்கள் இறங்கி இருக்கின்றனர். அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மாற்றுப் பொருளாதாரப் பாதையைக் கண்டறிவதிலும் அதனைச் செம்மைப்படுத்திப் பயன்படுத்துவதிலும் பெரிதும் பயன்தரும் என்று தென் அமெரிக்க நாடுகள் நம்புகின்றன.

கடந்த ஜனவரியில் மீண்டும் ஆறாண்டு கால ஆட்சிக்குப் பெருவாரியான மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சாவேஸ் மாற்றுப்பாதையின் திசைவழியைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறார். அவரது வெற்றியையே கியூபாவிற்கும் அதன் மாபெரும் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கும் அர்ப்பணித்த சாவேஸ், “சோஷலிசம்’’ தான் தனது கொள்கை என்பதை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். “சோஷலிஸம்’’தான் ஆனால், 21ஆம் நூற்றாண்டு சோஷலிஸம். ஒவ்வொரு நாட்டின் சூழலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘சோஷலிஸம்’தான் சிறப்பானது என்பது அவரது கருத்து.

இந்த உணர்வுடன் தென் அமெரிக்க நாடுகளின் அரசுகளிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தும் முயற்சியின் முதல்கட்டமாக சாவேஸ் உருவாக்கி இருப்பதுதான் ‘அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று’ (Bolivarian Alternative to Americas) என்ற அமைப்பு. வெனிசுலா தவிர கியூபா, பொலிவியா, நிகரகுவா போன்ற நாடுகளும் இவற்றில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நான்கு நாடுகளின் அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழு இப்பொழுது செயல்படத் தொடங்கிவிட்டது. இந்நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகள் ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுவிட்டன.

வர்த்தகம் தவிர பாதுகாப்பு போன்ற அம்சங்களையும் இக்கூட்டமைப்பு முன்னிறுத்தும்போது மேலும் பல நாடுகள் இவற்றோடு இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஆயுதங்கள் பகிர்வு இரண்டையும் பிரதானப்படுத்தும் பாதுகாப்பு அணி முயற்சியும் தொடங்கப்படும் என்று சாவேஸ் கூறியிருக்கிறார். அர்ஜென்டைனா, உருகுவே, சிலி, ஈக்குவடார் போன்ற நாடுகளும் விரைவிலேயே இந்த அணியில் சேர்வதற்கான வாய்ப்பு தெரிகிறது. ஒரு வலுப்பெற்ற அணி அமெரிக்க நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பிற்கு உத்திரவாதமாக இருக்கும் என்று அவை எதிர்பார்க்கின்றன.

இவற்றையெல்லாம் விட முக்கியமான முயற்சி தென்அமெரிக்க நாடுகளுக்கான பொருளாதாரத் தேவைகளை ஓரளவாவது நிறைவேற்றுவதற்கு ஏதுவாக ஒரு வங்கி அமைப்பை உருவாக்குவது. சாவேஸ் இதற்கான உடனடி நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

வளரும் நாடுகளின் மிகப்பெரிய பிரச்னையே நாளும் பெருகிவரும் கடன் சுமையே அமெரிக்க ஆதரவுடன் சர்வதேச நிதியமும், உலக வங்கியும் வர்த்தகக் கடன் வலையிலிருந்து மீண்டு வருவது என்பதை வெனிசுலா, அர்ஜென்டைனா போன்ற நாடுகள் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளதால் ‘பாங்க் ஆஃப் தி சௌத்’ என்ற வங்கி விரைவில் உருவாகும் பொழுது இப்பிரச்னை எளிதில் தீர்க்கப்படும் என்பது சாவேஸ் மற்றும் பிற தென்அமெரிக்கத் தலைவர்களின் நம்பிக்கை. சாவேஸின் முயற்சியில் உருவாகும் வங்கியில் அர்ஜென்டைனா தனது நிதிச் சேமிப்பிலிருந்து 10 விழுக்காடு பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. பொலிவியாவும் இம்முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும்பொழுது மேலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளும் இணைந்து செயல்பட முன்வருவார்கள் என்பது சாவேஸின் நம்பிக்கை.

வேறுவழியின்றிக் கடுமையான கடன் சுமையைக் குறைக்கும் கடைசி நேரத் தேவைகளுக்காக உலக வங்கியிடமும் சர்வதேச நிதியத்திடமும் செல்ல வேண்டிய அவசியத்தைத் தவிர்த்து ‘பாங்க் ஆஃப் சௌத்’ உதவியுடன் நிலைமையைச் சமாளிக்கும் நிலை ஏற்பட்டால் வளரும் நாடுகளுக்குப் பெரிதும் உதவியாயிருக்கும் என்பதோடு சர்வதேச நிறுவனங்களின் ஏகபோகத் தன்மையை முடிவிற்குக் கொண்டு வருவதிலும் இது பெரும் பங்காற்ற முடியும் என்பது சாவேஸின் நம்பிக்கை.

எண்ணெய்க் கிணறுகளின் எண்ணிக்கையில் அமெரிக்க நாடுகளில் முதல் இடத்தையும், உலக நாடுகளில் ஐந்தாவது இடத்தையும் பெற்றிருக்கும் சாவேஸின் வெனிசுலா இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது ஒன்றும் நிறைவேற்ற இயலாத ஆசை இல்லை என்பது தென்அமெரிக்க நாடுகளின் நம்பிக்கை. இதுவே அமெரிக்க அதிபர் புஷ்ஷிற்குத் தாங்கிக்கொள்ள இயலாத தலைவலி. நாள் தவறாமல் அவரது ஊதுகுழல்களாகச் செயல்படும் அமெரிக்க ஊடகங்கள் சாவேஸிற்கு எதிரான கண்டனக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. பொய்ச் செய்திகளைப் பரவவிட்டு சாவேஸிற்கு எதிரான சதிச்செயல்களைத் தொடங்க புஷ் அரசு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றது. ஆயினும், சாவேஸ் சக அரசுகளுடைய துணையுடன் ‘தென் அமெரிக்க வங்கி’யை இன்னும் சில மாதங்களில் உருவாக்க முடியும் என்று உறுதியுடன் செயல்படுகிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com