Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2007

குடியரசுத் தலைவர் தேர்தல்
- எஸ்.கண்ணன்

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்தலைவிடவும், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் பரபரப்பாக அமைந்துவிட்டது. குடியரசுத் தலைவராக யார் வரவேண்டும்? என்பதை தீர்மானிப்பதில் பலரும் முன்னணிப் பங்கினை வகிக்கின்றனர். ஏன் பத்திரிகைகள்கூட வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கின. மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, “அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டாக மீண்டும் அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்தாவிட்டால், ஜூலை 10ல் வேலை நிறுத்தம் என்ற அறிவித்ததாக தினமணி தனது செய்தியை வெளியிட்டுக் கொண்டது.

Pratheepa Patil இந்திய நாட்டின் முதல் குடிமகனாக யார் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துவது தவறல்ல, அவரவர் விருப்பங்களை தெரிவிப்பதும் தவறல்ல. ஆனால் இப்படி விருப்பங்களை தெரிவித்த யாருக்கும், குடியரசுத் தலைவருக்கான வாக்குரிமை இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

பின்னர் ஏன் விருப்பங்களைத் தெரிவிக்கின்றனர்? ஒரே காரணம் தான். நீண்ட நெடுங் காலமாக, பி.ஜே.பி. தலைமையில் ஒரு கூட்டம், மற்ற நாடுகளைப் போல் நமது நாட்டிலும் அதிபர் ஆட்சி வந்தால்தான், இந்தியா முன்னேறும் என்ற மூடநம்பிக்கை விதைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சிதான், தினமணி போன்ற பத்திரிகைகளின் முயற்சி. குருமூர்த்தி போன்றவர்களின் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் மக்களாட்சியைவிட அதிபராட்சி, அல்லது மந்திரி சபையின் கூட்டு முடிவை விட முடிவெடுக்கும் அதிகாரம், ஒரு தனி நபரிடம் குவிப்பது, பெற்ற குறைந்தபட்ச ஜனநாயகத்தை பாதுகாக்க உதவாது. கொள்கை, மாற்றுக் கொள்கை மீதான விவாதத்தில் இருந்து மக்களை, மீண்டும் தனிநபர் (மன்னராட்சி போல்)களின் கருணைக்காக ஏங்கச் செய்வது அழகல்ல. எனவே இந்தியத் துணைக்கண்டத்திற்கு அதிபர் ஆட்சி பலன் தராது.

குடியரசுத் தலைவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவரா?

ஒரு கல்வியாளர், அறிவுஜீவி, விஞ்ஞானி போன்றவர்கள் குடியரசுத் தலைவராக வருவது, தேசத்தின் மரியாதையை உயர்த்தும். எனவே ஒரு அரசியல்வாதியைவிட, இதுபோன்ற அறிஞர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. கொல்கத்தா, பெங்களூர், மும்பை போன்ற மாநகரங்களில் பள்ளி மாணவர்களின் ஊர்வலத்தை நடத்தி, இன்றைய குடியரசுத் தலைவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த வெளிப்பாடுகளோ, எதிர்பார்ப்புகளோ தவறல்ல. ஆனால், அரசியல்வாதியைவிட கல்வியாளரே சிறந்தவர் என்ற வாதம் தவறானது.

கல்வியாளர், விஞ்ஞானி, அறிவுஜீவி ஆகிய யார் வேண்டுமானாலும் அரசியல்வாதியாக மாறலாம். கல்வியாளர் ஒருவர் தான் சிறந்தவர், அரசியல்வாதி கீழ்த்தரமானவர் என்ற கருத்தும், அரசியல் சார்ந்ததே. நமது நாட்டில் ‘அரசியல்’ அல்லது ‘பாலிடிக்ஸ்’ என்ற வார்த்தை கேவலமான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த கல்விமான்கள் அரசியலுக்குள் வந்து நல்ல அரசியல்வாதியாக மாறுவதற்குப் பதிலாக, ஒதுங்கி இருந்துவிட்டு, அரசியல்வாதியைவிட கல்வியாளரே சிறந்தவர் என்ற கருத்தும் உழைப்பாளிகள் அல்லது பின்தங்கிய மக்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதும் கேவலமான அரசியல்தான். இதைத்தான் சில பத்திரிகைகளும், தனிநபர்களும், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களும் செய்து வருகின்றனர்.

இத்தகைய இரண்டாந்தர அரசியல்வாதிகளுக்கு கல்வியாளர்கள் அலங்கார பொம்மைகளாக தேவைப்படுகின்றனர். மன்னராட்சியில் அலங்காரப் பதுமைகளுக்கு எந்த அதிகாரமும் தராமல் எப்படி வலம் வர அனுமதிக்கப்பட்டார்களோ, அதே விஷயத்தை, இன்றைய முதலாளித்துவம் நவீனத் தன்மையில் செய்து வருகிறது. இந்திய நாட்டைப் பொருத்தளவில் குடியரசுத் தலைவர் பதவி, இது காலம் வரை அலங்காரப் பதவியாக இருந்து வந்துள்ளது.

ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, குல்சாரிலால் நந்தா, பி.டி. ஜாட்டி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், கியானி ஜெயில்சிங் ஆகியோர் வரை காங்கிரஸ் கட்சி தீர்மானித்தவர்கள்தான் குடியரசுத் தலைவர். ஒரு கட்சியின் ஆதரவே போதுமானது. இருந்தாலும், சில பங்களிப்புகளை மேற்கண்ட நபர்கள் செய்துள்ளனர். ஜெயில்சிங் போன்றோர் சில தேவைகளுக்காக பிரதமருடன் தேவைப்பட்ட இடத்தில் மோதவும் செய்துள்ளனர்.

அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியுடன் குடியரசுத்தலைவருக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு பெரும் விவாதமாக மாறியது.

1992 முதல் தனி ஒரு கட்சியின் ஆதரவில் குடியரசுத்தலைவர் வெற்றி பெற முடியாத நிலை உருவானது பாராட்டுக்குரியது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகிய மூவரும் அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. இப்போதைய தேர்தலும் அப்படித்தான் அமைந்துள்ளது. அவ்வப்போது சில சர்ச்சைகள் உருவாகிறபோது அரசியல் சட்டம் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் குடியரசுத் தலைவர்கள் நடந்துள்ளனர்.

1992, டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது 1993 மும்மைக் குண்டு வெடிப்பின்போது 1998 முதல் 2004 வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் கே.ஆர். நாராயணன் ஒருசில பகிரங்க கண்டனங்களை வெளியிட்டவிதம் போன்றவை இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க உதவியது. மதச்சார்பற்ற அரசு என்பதை வலியுறுத்தியது.

1992க்குபிறகு மாநில அரசுகள் கலைக்கப்படும் விதமும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அநேகமாக 2 அல்லது 3 தவிர வேறெதுவும் இல்லை. அதேபோல் உ.பி,. பீகார் போன்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் தெளிவில்லாதபோது தலையிட்ட விதத்தில் குடியரசுத் தலைவருக்கு பங்களிப்பு உண்டு.

குடியரசுத்தலைவர் என்பவர் அரசியல் சட்டத்திற்கும், முப்படைகளுக்கும் தலைவர் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள நல்ல விஷயங்கள் அமலாவதில் பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனத்திற்கு காரணம், இந்திய ஆட்சியாளர்களின் வர்க்க நலன் சார்ந்த அணுகுமுறையும், கட்சி விசுவாசமுமே ஆகும். குடியரசுத் தலைவர்களும் அப்படிப்பட்டவர்களே. அப்துல் கலாம் கட்சிக்கு அப்பாற்பட்டவர், கல்வியாளர், விஞ்ஞானி அவர் ஏன் இந்திய அரசியல் சட்டத்தின் நல்ல விஷயங்களை அமல்படுத்திடும் முதல் குடிமகனாக விளங்கவில்லை? ஏனென்றால், அவரும் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதிதான். இளம் தலைமுறையுடன் ஆன உரையாடலிலும், இமெயிலுக்கு பதில் கிடைத்ததிலும் திருப்திபடும் நடுத்தர வர்க்க மனப்பான்மை கொண்டவர்களாக இளைஞர்கள் இருக்கக்கூடாது. நான் வெற்றி பெறுவேனானால் போட்டியிடத் தயார் என்ற வரிகள் அப்பட்டமான நிலப்பிரபுத்துவ சிந்தனையில் இருந்துதான் உருவாகி இருக்க வேண்டும். இந்த வரிகளை உதிர்த்ததன்மூலம் திரு. அப்துல் கலாம் தனது மரியாதையைக் குறைத்துக் கொண்டார்.

சட்ட நிபுணர்கள், தத்துவாதி, விஞ்ஞானி என்ற வரிசையில் முதன்முதலாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது. அதைத்தடுக்க முயற்சிப்பவர் அனைவருமே தங்களது அரசியலில் இருந்து தான் பேசுகிறார்களே ஒழிய அரசியலுக்கு அப்பாற்பட்டு அல்ல.

எனவே மாணவர்களே, இளைஞர்களே நாமும் அரசியல் பேசுவோம். மண்டபத்தில் எழுதித் தந்ததை பிரசுரித்து கொண்டிருக்கும் பத்திரிகைகளின் அரசியலை அல்ல. உழைக்கும் மக்களுக்கான அரசியலைப் பேசுவோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com