Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

மகாத்மா - மதச்சார்பின்மையின் முகவரி:
ஆர்.வேலுச்சாமி

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் (சிப்பாய் புரட்சி) இந்தியாவின் பெரும்பகுதியான பகுதியில் 1857ல் நடைபெற்றதற்கு பின்னர் 12 வருடங்கள் கழித்து பிறந்தவர்தான் காந்தி. லண்டனில் உயர்கல்வி முடித்து வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியின் கோரத்தாண்டவம் இவரையும் தீண்டியது. அதற்கெதிராகப் போரடிய அவர் இந்தியா திரும்பியதும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல்லாயிரம் மக்களுக்கு தலைமைப் பாத்திரம் ஏற்றார். விடுதலைப் போரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்திய மக்கள் திரண்டனர். காந்தியும், காங்கிரஸ் கட்சியும் அறைகூவல் விடுத்த போராட்டங்களில் மக்கள் பெரும் திரளாய், தன்னெழுச்சியாய் பங்கேற்றனர். இவையெல்லாம் நாம் அறிந்தவையே.

1932ல் ஒத்துழையாமை இயக்கம் முழு வீச்சுடன் நடந்த போது சௌரி-சௌராவில் ஆவேசப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு எதிராகவும், நிலப் பிரபுக்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காவல்துறை மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். காவல் நிலையத்தை தாக்கி தீவைத்து 22 காவலர்களை உயிரோடு கொளுத்தினார்கள்.

அகிம்சை வழியை மேற்கொண்ட காந்தி இச்செயலால் மனம் வருந்தியதோடு நிற்கவில்லை. இந்த ஒரு சம்பவத்தை காரணமாக வைத்து, நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வந்த ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார். தனது வாழ்நாளில் கடைசி காலம் வரை காந்தி, இந்திய முதலாளிகளுடன், நிலப்பிரபுக்களுடனும் மோதிக் கொள்வதை தவிர்த்தார். இவர்களாகவே திருந்த வேண்டும் என்று விரும்பினார்.
துப்பாக்கி கொண்டு இந்திய மக்களை நரவேட்டையாடிய, சிறைச்சாலைகளில் கொடுமைப்படுத்திய, லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த ஏகாதிபத்திய சக்திகளையும், இந்திய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளையும் இந்திய மக்கள் ஒரு பூவைக் கொண்டு கூட அடித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்தான் காந்தி. அதுதான் அவரது அகிம்சை.

காரல் மார்க்சின் மூலதனத்தை படித்த காந்தி, அப்போதும் அகிம்சையைத்தான் முன்வைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் பலர் இதுகுறித்து வாதிட்டுள்ளனர். ஏழைகள் இந்நாட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள் அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கூறுவர். இதற்கு காரணமான ஏழைகளின் உழைப்பை அட்டை பூச்சியைப் போல் உறிஞ்சும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, நிலப்பிரபுக்களை எதிர்க்காமல், வீழ்த்தாமல் சாத்தியமில்லை என்பதை அறிய காந்தி மறுத்தார். உண்மைதான் கடவுள் என்று சொல்லியதோடு, உண்மையை பேசி, தனக்கு என்ன தோன்றுகிறதோ, அல்லது எது சரி என்று படுகிறதோ அதை செய்வதிலும், பின்பற்றுவதிலும் உறுதியாக இருந்தார்.

ஏழை மக்கள் உடையின்றி வாழ்ந்ததைப் பார்த்து, தனது ஆடம்பர உடையை துறந்து, இந்திய விவசாயிகளின் உடைக்கு மாறினார். இந்து மதத்திற்குள் உள்ள தீண்டாமையை கடுமையாக எதிர்த்தார். தீண்டாமையை ஒழிக்கவும், ஏழ்மையை ஒழிக்கவும் போராடினார். இதன் விளைவு ஏழை மக்களின் மனதில் மகாத்மா குடியேறினார்.

வங்கக் கவிஞர் தாகூர் அவர்கள், காந்தியிடம் இயற்கையை பற்றியும், இசையை பற்றியும், கவிதைகளை பற்றி பேசிவிட்டு, நீங்கள் இதில் லயிப்பதில்லையே? நீங்கள் என்ன ரசனையற்றவரா? என வினவினார். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி வறுமையில் வாடும்போது, உடையும், இருப்பிடமும் இன்றி துன்பப்படும்போது அவர்களால் எப்படி சிரிக்க முடியும். அவர்கள் மகிழ்ச்சியில் என்று இருக்கிறார்களோ அன்றுதான் என்னால் இவைகளை ரசிக்க முடியும் என பதிலளித்தார்.

மக்களின் இத்தகைய குறைந்த பட்ச கோரிக்கை-களை வென்றெடுக்க நமது பத்திரிகைகள் தனது கடமையை செய்ய வேண்டும். மிகைப்படுத்தி வெளியிடக் கூடாது என பத்திரிகைகளை சாடுகிறார். அது இன்றவும் எவ்வளவு உண்மை எனபதை நம்மால் உணர முடிகிறது. 1947 துவக்கத்தில் இருந்தே விடுதலைக்கான ஆயத்தப் பணிகள் துவங்கியது. வங்கப் பிரிவினையையும், பாகிஸ்தான் பிரிவினையையும் காந்தி ஏற்கவில்லை. இதன் மூலம் வகுப்புவாத பிரச்சனைகள் வளரும் என காந்தி கவலைப்பட்டார். அவர் கவலைப்பட்டதற்கு மேலாகவே இந்து முஸ்லிம் மதவெறி கோரத்தாண்டவம் ஆடியது. இக்கலவரங்களில் மக்கள் கொல்லப்படுவதை பார்த்து கண்ணீர் வடித்தார்.

நால் வருண கொள்கையை ஆதரித்துக் கொண்டே தீண்டாமையை எதிர்த்தவர் காந்தி. அதேபோல் தன் மத நம்பிக்கைக்குள்ளும், கடவுள் வழிபாட்டிற்குள்ளும் இருந்து கொண்டே மதவெறியை எதிர்த்தவர் காந்தி. சில இடங்களில் இந்துக்கள் இஸ்லாமியர்களையும், இஸ்லாமியர்கள் இந்துக்களையும் தாக்கினார்கள். இவ்விரு மதவெறியர்களையும் கண்டித்தவர் காந்தி. வகுப்பு வாதமும், மதவெறியும் மாய்ந்து போகும் நாள் விரைவில் வரவேண்டும். அதை காண்பதற்காகவே நான் உயிர்வாழ விரும்புகிறேன் என்று சொன்னார் காந்தி. மதவெறியின் கோரத்தாண்டவம் தன் உயிரைப் பறிக்கும் என்பதை முன்னரே உணர்ந்திருந்தார்.

இஸ்லாமிய மக்களின் மதிப்புமிக்க தலைவராக காந்தி மாறினார். நாம் சார்ந்த மதம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்களாக வாழ வேண்டும். அவரவர் மதம் தனியாகவும், அரசியல் தனியாகவும் இருக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று கலக்கக்கூடாது. மதம் குறித்து காந்தியின் ஆணித்தரமான வாதத்தினால் இரண்டு தரப்பு மதவெறியர்களும் ஆத்திரமடைந்தனர்.

தேச பிரிவினைக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற மதக்கலவரங்களில், குறிப்பாக கல்கத்தா, நவகாளி, டெல்லி, அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் பாதிக்கப்பட்ட மக்களோடு பல நாட்கள் உடனிருந்தார். மதவெறி வேண்டாம், மத ஒற்றுமை வேண்டும் என குரல் கொடுத்தார். இதன் விளைவு தேசம் விடுதலையடைந்து 168 நாட்களில் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தேசப்பிதாவாக, அகிம்சாமூர்த்தியாக மக்கள் மனதில் இடம்பிடித்த மகாத்மாவின் மரணத்தை கூட ஒரு மதக்கலவரமாக மாற்ற இந்து மதவெறிக் கூட்டம் முயற்சித்தது. காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தனது கையில் தனது பெயரை ‘இஸ்மாயில்’ என பச்சை குத்தி வந்தான்.

மதவெறிக்கெதிராக குரல் கொடுத்த ஒரு இந்து ராம பக்தனையே மதவெறிக் கூட்டம் விட்டுவைக்க-வில்லையென்றால் அது யாரையும் விட்டுவைக்காது என்பதற்கு காந்தியின் படுகொலை ஒரு சாட்சி. அகிம்சைவாதி காந்தி பிறந்த குஜராத் மண்ணில் நான்காவது முறையாக மதவெறிக் கூட்டம் அதிகாரத்திற்கு வந்தது ஆபத்து என்பதை உணர வேண்டும். கருவில் இருந்த குழந்தை முதல் வயதான-வர்கள் வரை ஆண் பெண் வித்தியாசமின்றி 2-ஆயிரத்-திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை கொன்று குவித்து அதை நியாயப்படுத்தும் வகையில் மக்கள் மீண்டும் அவர்களை தேர்வு செய்தது என்பது இந்த தேசம் எதிர்கொள்ளும் ஆபத்து.

சமூக சீர்திருத்த கருத்துக்களை முன்னெடுத்து செல்ல தந்தை பெரியார் நமக்கு எவ்வளவு முக்கியமோ, சமூக நீதிக்கு அம்பேத்கர் நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல் மதவெறியை, தீவிரவாதத்தை ஒழித்திட காந்தி தேவைப்படுகிறார். ஜனவரி 30 காந்தியின் 60வது நினைவுநாள். மதவெறிக்கெதிராக தமிழக தெருக்களில் வெண்கொடியுடன் இறங்கிடுவோம். மகாத்மாவின் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com