Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

வளரும் தலைமுறையை சீரழிக்கும் புதுக் கலாசாரம்:
உ.ரா. வரதராஜன்

உலகமயப் பொருளாதாரம் நம் நாட்டில் செலுத்தி வரும் தாக்கத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து ஆழ்ந்த அக்கறையோடும், உள்ளார்ந்த கவலையோடும் பரிசீலிக்க வேண்டியது இன்றியமையாததாகிவிட்டது.

இன்றைய உலகமயத்தால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டு, அதன் பலன்களைப் பெற்று அனுபவிக்கும் ஒரு சிறு பிரிவினர் செழிப்பிலும் களிப்பிலும் மிதமிஞ்சித் திளைத்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இந்தப் பிரிவினருக்காக என்றே உருவாகியுள்ள பெரும் அங்காடி வளாகங்கள், பல நாட்டு உணவு - மது வகைகளைப் பரிமாறும் நட்சத்திர உணவகங்கள், கேளிக்கைக் கூடங்கள் போன்றவற்றில் நிரம்பி வழியும் வளரும் தலைமுறையினரின் நடை உடை பாவனைகள் மேலைநாட்டுக் கலாசாரத்தின் சாயல் முழுமையாகப் படிந்து வருவதைக் காட்டுகிறது.

இன்னொரு புறத்தில், இந்த உலகமயத்தால் உதறித்தள்ளி ஓரங்கட்டப்பட்டு வரும் பெரும்பகுதி சமுதாயம், வறுமை, வாய்ப்புகள் மறுப்பு, வசதிகள் ஏதுமற்ற வாழ்நிலை என்று முற்றிலும் நம்பிக்கை வறட்சியில் அழுத்தித் தள்ளப்பட்டுத் தத்தளித்து நிற்கிறது.

இந்த இரண்டு பிரிவையும் சார்ந்த இளைய இந்தியா ஒரு சீரழிவுக் கலாசாரத்தின் பிடியில் வேகவேகமாகச் சிக்கிக்கொண்டு வருவதை மறுப்பதற்கு இல்லை.

தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான செய்தி, ஒரு பள்ளிச் சிறுவனைப் பற்றியது. ‘வீடியோ கேம்’ விளையாட்டில் தன்னையே இழந்து விட்ட அந்தச் சிறுவன் வீட்டை விட்டு, பள்ளிக்கூடத்தை விட்டு விலகி, எங்கெல்லாமோ திரிந்து அலைந்து, கையில் கிடைக்கிற காசையெல்லாம் இணையதள மயங்களில் "வீடியோ கேம்' ஆர்வத்தை தணித்துக் கொள்ளவே செலவிட்ட நிலையில் காவல்துறையினர் அவனைக் காப்பாற்ற முயன்றனர்.

தன்னை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண் காவலரை கெஞ்சியும், விஞ்சியும் எப்படியாவது ஒரு பத்து ரூபாய் அளவுக்கு ‘வீடியோ கேம்’ ஆடிவிட்டு வருவதற்காக வெறிப்பிடித்து எகிறிய அந்தச் சிறுவனுக்கும், போதை மருந்தில் வாழ்வைப் பறிகொடுத்து நிற்பவனுக்கும் வேறுபாடு இல்லையே!

ஒரு வெள்ளை எலி'யின் முதுகில் விரலைத் தட்டினால் ஒரு நூறு பல்கலைக்கழகங்களில் கூடப் பெறமுடியாத அறிவை - தகவல்களைத் தருகின்ற கணினி - இணையதளத் தொழில் நுட்பம், இதுபோன்ற எத்தனை சிறுவர்களின் சீரழிவுக்கும் காரணியாக அமைந்து தொலைக்கிறது!

இந்தியப் பொருளாதாரத்தில், விவசாயத்தையும், தொழில் துறையையும் தொலைதூரத்திற்குப் பின் தள்ளி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருவது நம் நாட்டின் சேவைத்துறை. இதில் முன்னணிப் பங்கு வைப்பது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள்.

இந்தப் பணியிடங்கள் பளபளப்பும், அவற்றின் பணிக்குச் செல்பவர்களுக்காக நமது நகர்ப்புறங்களில் பவனி வரும் சொகுசு கார்கள் - ‘வால்வோ’ பேருந்துகளின் மினுமினுப்பும், பார்க்கவே பிரமிப்பாகத் திகழ்கின்றன. இவற்றில் பணிபுரியும் இளைஞர்ககளில் ஒரு பிரிவினர் பெற்று வரும் சம்பளமும், சலுகைகளும் மலைப்பைத் தரும் அளவுக்கு உயர்ந்துள்ளன.

ஆனால், பணத்தை வாரி வழங்குகிற இந்தத் துறை, அங்கு பணியாற்றும் இளைய தலைமுறைக்கு சேர்த்துத் தருகின்ற குணக்கேடுகளும் கொஞ்சநஞ்சம் அல்லவே!

சிங்காரச் சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரைத் தாண்டி மாமல்லபுரம் வரை முளைத்து நிற்கிற கடலோர விடுதிகள், விருந்தினர் மாளிகைகளில் ஒவ்வொரு வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகின்ற இளைய தலைமுறையினர் தங்களின் மன இறுக்கத்தை எவ்வாறெல்லாம் தளர்த்திக் கொள்கிறார்கள் என்று வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன.

இதே கணினி சார் தொழில் துறையில் போட்டி போட்டு முன்னேறும் பெங்களூர், தில்லி, கோல்கத்தா, ஹைதராபாத் போன்ற இதர நகரங்களிலும் இத்துறைப் பணியாளர்கள் மத்தியில் நிகழ்ந்து வரும் கலாசார ரீதியான மாற்றங்கள், சீரழிவுத் திசையிலேயே இந்தத் தலைமுறையை உந்தித் தள்ளி விடுகின்றன. இத்துறையில் பணியாற்றும் தங்கள் வீட்டுப் பெண்கள், பிள்ளைகள் ஒழுக்கக் கேடான செய்கைகளில் ஈடுபட்டு, எதிர்கால வாழ்வையே சிதைத்துக் கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் எண்ணற்ற குடும்பங்களில் பெற்றோர்களைக் கவ்வி விட்டது. பெற்றோர்களே தனியார் உளவு அமைப்புகள் மூலம் தங்கள் பிள்ளைகளைக் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பெங்களூரில் இத்துறையில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவரை, அவரை ஏற்றிச் செல்லும் கார் ஓட்டுநரே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கி, படுகொலை செய்துவிட்ட செய்தி படித்தவர்களின் நெஞ்சங்களை உறைய வைத்தது.

கோல்கத்தாவில் இத்தொழிலில் பணியாற்றிய ஒரு இளம் பெண், தன் மன இறுக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அலுவலகத்தின் மேல்மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டது இதே அதிர்ச்சியின் இன்னொரு பரிமாணம்!

இந்த நவீனத் தொழில்களில் வளமான வருமானத்தை ஈட்டும் வாய்ப்பு, சமூகக் கலந்துறவாடல் என்ற பெயரில் ‘பார்’ ஓட்டல்களில் குடித்துக் கூடி நடனம் ஆடும் "டிஸ்கோத்தே' ஜுரத்தையும் வேக வேகமாகப் பரப்பி வருகிறது. இதன் தொடர்ச்சியாக உடலுறவு விவகாரங்களில் கட்டுப்பாடற்ற ஈர்ப்புகளும், தேடல்களும் வந்து விடுகின்றன. சின்னத்திரை நடிகை ஒருவரும், மென்பொருள் பொறியாளர் பெண்மணி ஒருவரும் இதையொட்டி எழுந்த போட்டி - பொறாமை காரணமாக குடிபோதையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட நிகழ்ச்சியும் ஒரு நட்சத்திர ஓட்டல் செய்தி!

இன்றைய இளைய தலைமுறையின் அதி நவீன நாகரிகத்தின் சின்னமாக விடிந்திருப்பது செல்போன்கள். இது இப்போது பேசுவதற்கு மட்டுமின்றி, படமெடுக்கவும் பயன்படுவது அந்தத் தொழிலின் பகாசுர வளர்ச்சி. ஆனால், இந்த செல்போன்கள் பெறும் தகவல் பரிமாற்றம் என்ற பயன்பாட்டைத் தாண்டி, சீரழிவுக் கலாசார சாதனமாக மாறிவிட்டிருக்கிறது. செல்போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்கள், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக சில பலவீனத்துக்கு ஆட்படும் இளம் பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தும் கிரிமினல் சதிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆபாசப்பட இணைய தளங்களின் எண்ணிக்கைக்குக் குறைவேயில்லை. மூலைக்கு மூலை முகிழ்த்துவிட்ட ‘இண்டர்நெட் கபே'க்களில் இந்த ஆபாச இணைய தளங்களுக்கே மவுசு அதிகம். இளைய தலைமுறையினரை - பருவத்தை மீறிய - உடலுறவு விவகாரங்களைத் திரையிலும், பிறகு அதன் வழியே சுலபத்தில் ஏற்படுத்திக் கொள்ள முடிகிற தொடர்புகளின் வாயிலாக நேரடியாகவும் பார்த்து, பங்கு கொண்டும் இன்புறுகிறவர்களாக மாற்றி விடுகிறது. மனமும், உடலும், பாழாகி நிற்கும் இந்த இளைஞர்கள் இன்றைய சமுதாயத்தின் விபரீதங்கள்!

‘இண்டர்நெட் கிரைம்’ ஒரு புதிய வகைக் குற்றப்பிரிவாகக் காவல்துறையின் செயல்பாட்டில் இடம்பெற்றுவிட்டது. ‘கடன் அட்டை’ மோசடியிலிருந்து, இணையதள ‘பிளாக்மெயில்’ வரை, புதிது புதிதாகக் குற்றச் சம்பவங்கள் பெருகிவருவது, காவல் துறையினரையே திக்குமுக்காடச் செய்கின்றன.

நமது சமுதாயத்தில் நீண்டகாலமாக நீடித்திருந்த கூட்டுக் குடும்ப அமைப்பு சிதறுண்டு விட்டது. நவீன யுகத்தின் வேகமான நாகரிகச் சுழற்சியில் சிக்கிவிட்ட மூத்த தலை முறையினரில் ஒரு பெரும் பகுதியினருக்கு, இளைய தலை முறையோடு குடும்ப மட்டத்திலான நெருக்கமான தொடர்புகளே கூட அருகி விட்ட சூழலை உருவாக்கி விட்டன. குணக்கேடுகள் சூழ்வதைத் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே காலத்தே உணர்ந்து தவிர்ப்பதற்கான வாய்ப்பு மெல்ல மெல்ல இற்று வருகிறது.

வெளி உலகத்துக்கு வாயிலையும், ஜன்னலையும் திறந்து வைப்பது கட்டாயமாகிவிட்ட இன்றைய சூழலில், அவற்றின் வழியாக அறிவியல் புதுமைகளோடு சேர்ந்து, சீரழிவுக் கலாசாரப் பழக்கவழக்கங்களும் மிக எளிதாக நுழைந்து விடுகின்றன.

இந்தியாவில் இளம் தலைமுறையினர் எண்ணிக்கை மிகுதி என்பது, இன்றைய உலகமயச் சூழலில் ஒரு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. அந்த இளைய தலைமுறையை சீரழிவுக்கு இரையாக அனுமதித்தால், அந்த ‘சாதகமே’ பெரும் பாதகமாக முடிந்துவிடும்.

ஆட்சியாளர்களிலிருந்து சமூக ஆர்வலர்கள் வரை அனைவரும் உள்ளார்ந்த கவலையோடும், உணர்வுபூர்வமான பதைபதைப்போடும் தலையிட வேண்டிய அவசர அவசியமான பிரச்னை இது. ஆனால் இந்தத் தலையீட்டின் தொடக்கம் ஒவ்வொரு குடும்பத்திலேயும் இடம்பெறுவதே சாலச் சிறந்தது!

(நன்றி: தினமணி)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com