Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

துலுக்க நாச்சியார்:
தொ.பரமசிவன்

தமிழ்நாட்டிற்கு இசுலாம் வாளோடு வந்த மதம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். பதினாலாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசுலாமியர்கள் வாளோடு நுழைந்தது வரலாற்று உண்மைதான். ஆனால் இசுலாம் அதற்கு முன்பே வணிகர்கள் வழியாக வந்திருக்க வேண்டும். பிற்காலச் சோழர்கள் ஆட்சியின் போதே அஞ்சுவண்ணம் என்ற வணிகக்குழு இருந்திருக்கிறது. முதலாம் இரா-சராசன் கல்வெட்டில், சோனகன் சாவூர் பரஞ்சோதி என்பவன் குறிக்கப் பெறுகின்றான். சோனகச் சிடுக்கின் கூடு என்று காதில் அணியும் நகை ஒன்றும் அவனது கல்வெட்டில் குறிக்கப்படுகின்றது. சோனகர் என்பது அரபியரைக் குறிக்கும்.

அரபியர்களும் தமிழர்களைப் போலவே ஒரு பழைய நாகரிகத்தின் வழிவந்தவராவர். எனவே இசுலாமிய சமயத்திற்குத் தமிழ்நாட்டிற்குக் கொடுப்பதற்கும் கொள்வதற்கும் சில உண்மை களும் நெறிகளும் இருந்தன. யுனானி என்னும் மருத்துவ முறையும், அல்வா, பிரியாணி போன்ற உணவு வகைகளும் இசுலாமியர் வழித் தமிழகத்திற்கு வந்தவையாகும். படைப் போர், கி°ஸா (கதை), முனஜாட் (வாழ்க்கைச் சரிதம்), நாமா (போற்றிப் பாடல்) முதலிய இலக்கிய வகைமைகளும் தமிழுக்கு இசுலாத்தின் பங்களிப்பே.

இந்தியாவின் மிகப்பெரிய வழிபாடான திருமால் நெறியின் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தன் பங்கைச் செலுத்தியுள்ளது. வங்க நாடு திருமாலோடு ராதையை இணையாகச் சேர்த்தது. தமிழ்நாட்டு வைணவம் ஆண்டாளைத் திருமாலுக்கு இணையாகச் சேர்த்தது. இசுலாத்தின் செல்வாக்கால் தமிழ் வைணவத்தில் துலுக்க நாச்சியார் கதை பிறந்தது.

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் அழகர் கோவில் அழகரைப் பற்றிய கதை ஒன்று வழங்கி வருகிறது. தன் தங்கை மீனாட்சி திருமணத்தைக் காணவரும் அழகர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிறார் என்பது அக்கதையாகும். உண்மையில் அவ்விடத்தில் துலுக்க நாச்சியார் கோவில் என்று எதுவுமில்லை. ஆனால் கதை மட்டும் வலிமை உடையதாக விளங்குகிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை வண்டியூர்ப் பகுதியில் இசுலாமியர் வாண வேடிக்கைகள் நடத்தி அழகரை வரவேற்றிருக்கின்றனர். இந்த கதை தந்த நம்பிக்கையே அதற்கு காரணமாகும். திருவரங்கத்திலும் துலுக்க நாச்சியார் கதையும் ஒரு சந்நிதியும் உண்டு..

திருமாலின் சிலை மீது ஆசைகொண்ட சுல்தான் மகளொருத்தி அந்த சிலையைப் பிரிந்த சோகத்திலே உயிர்விட்டாளாம். இந்த கதையைக் குறிப்பிடும் திருவரங்கம் கோயில் ஒழுகு பெருமாள் நியமனத்தினாலே ராஜமகேந்திரன் திரு வீதியில் வடகீழ் மூலையிலே திருநடை மாளிகையிலே அறையாக தடுத்து அந்த டில்லீசுவரன் புத்திரியான ஸூரதரிணியை சித்ரரூபமாக எழுதி வடைது ப்ரதஸ்டிப்பிட்து என்று கூறுகிறது. துலுக்க நாச்சியாருக்கு சாந்து நாச்சியார் என்றும் பெயர்.

திருவரங்கம் கோயில் ஒழுகைப்பற்றி ஆராய்ந்த ஹரி ராவ் என்ற அறிஞர் துலுக்க நாச்சியார் கதையினைக் குறிப்பிட்டு, நாட்டுப்புறப் பண்பாட்டியல் ஆய்வு மாணவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்கிறார்.

இசுலாமியர் அல்லாத தமிழர்கள் நாகூருக்குச் சென்று வழிபடுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் விருத்தாசலத்தை அடுத்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் நெடுங்காலமாக இசுலாமியர்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறார் கள். இது பலர் அறியாத செய்தியாகும். அக் கோயில் இறைவன் கடலாடச் செல்லும் போது கிள்ளை என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தர்க்காவுக்குக் கோயில் மரியாதையாக மாலை தருகிறார்கள்.

தமிழ்நாட்டின் சிற்றூர்புறங்களில் இப்படிப் பல எடுத்துக் காட்டுக்களைச் சொல்ல முடியும். மத அடிப்படை வாதம் வன்மத்தோடு வளர்க்கப்பட்டு வரும் இந்நாளில் இத்தகைய கதைகளையும் நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய கடமை நமக்குண்டு.

முனைவர். தொ.பரமசிவன் அவர்கள் எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்தில் இருந்து...

பெட்டிச் செய்திகள் தயாரிப்பு:
என்டீயெம்.. (முற்போக்கு வாசகர் வட்டம்) திருப்பூர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com