Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

இளைஞர்களும் சவால்கள் நிறைந்த அரசியலும்:
எஸ். கண்ணன்

Youthதனக்குப் பின் யார்? என்ற கேள்வி, குடும்பம் துவங்கி, அரசியல் வரை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குடும்பம் குறுகிய எல்லைக்குள்ளும், சொத்துக்கள் சார்ந்தும் இருக்கிற காரணங்களில், ஒன்று அல்லது இரண்டு நபர்கள் தீர்மானித்து விட முடியும். அரசியல், பரப்பு எல்லைப் அதிகமாக கொண்டிருக்கிறது. பல லட்சம் குடும்பங்கள் உள்ளடக்கியது. ஆகவே ஒன்றோ இரண்டோ தனி நபர்கள் போதாது. ஆனால் இன்றைய அரசியல் ஒன்று அல்லது இரண்டு நபர்களை முன்னிறுத்தியே, வளர்க்கப்படுகிறது. ஊடகம் அதில் பிரதான பங்கு வகிக்கிறது. நபருக்கு வரலாற்று ரீதியில் பங்கு இருந்தாலும், ஜனநாயகப் பரப்பில் எவ்வளவு அதிகம் பேரை தலைமையேற்க செய்கிறோம்? என்ற கேள்விக்கான விடையிலிருந்தே, அரசியல் விரிவான எல்லையைக் கொண்ட தளமாகக் காட்சியளிக்க முடியும். இதில் அடுத்தடுத்த தலைமுறை பலதரப்பட்ட குடும்பங்களில் இருந்து ஈர்க்கப் பட வேண்டுமானால், அந்த அரசியலில் கொள்கை கால எல்லைகளையும் கடந்து நிற்க வேண்டும்
.
இன்று இந்திய அரசியலில் கொள்கைப் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அரசியலின் லட்சியம் அரியணையில் அமருவது, என்ற மிகக் குறுகிய எல்லையைக் கொண்டிருப்பதால், குறுகிய காலத்திலேயே ஈர்ப்புத் தன்மை குறைந்தோ, அல்லது அம்பலமாகியோ பலர் காணாமல் போய் விடுகின்றனர். தமிழகத்தில் சாதி அரசியல், பிரதான முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கான வாக்கு வங்கியாக இருந்து, பின்னர் தானே அரியணை ஏற முடியும் என முயற்சிக்கின்ற காரணத்தால் சில பத்து ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றன. சில காணாமல் போய் விட்டன. அதே சாதி அரசியலுடன் உருவாகும் புதிய தலைமுறையும், புதிய பாட்டிலில் அடைத்த பழைய மொந்தையுடனேயே உருவாகின்றன. எனவே குறிப்பிட்ட சாதிய கட்சிகளில் அடுத்த தலைமுறை என்ற தொடர்ச்சி உருவாகும் அடிச்சுவடு அழித்தொழிக்கப் படுகிறது
.
இத்தகைய அனுபவங்களைக் கடந்தது முதலாளித்துவ அரசியல் கட்சி, அதுவும் அரியாசனத்தில் இருந்து ஆட்சி நடத்தி பழக்கப் பட்டவர்கள், அடுத்தடுத்த தலைமுறையையும், ஏதாவது ஒரு வாக்கு வங்கியையும் உருவாக்கி வைத்திருந்த காரணத்தால், கட்சி அரசியல் நடத்துவது சாத்தியமானதாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய பெரும் முதலாளித்துவ கட்சிகளுக்கும் சில சவால்கள் முன்னுக்கு வந்துள்ளன. குறிப்பாகப் புதிய இளம் தலைமுறையினரை ஊழியராக உருவாக்குவதில் ஆளுகிற முதலாளித்துவக் கட்சிகளும் சிரமங்களை எதிர் கொள்கின்றன. டில்லி துவங்கி உள்ளூர் பஞ்சாயத்து வரை வாரிசு அரசியல் வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று அரசியல் தலைவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சொத்து மற்றும் செல்வாக்கு. இரண்டு அரசியலில் உலகமயமாக்கல் கொள்கைக்குப் பின், வளர்ச்சி பெற்றுள்ள புத்திஜீவிகளின் பற்றாக்குறை.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாகத் துவங்கிய பின், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்களும், முதலாளித்துவ அரசியல் இயக்கத் தலைவர்களும் தான் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாக்க வாரிசுகளை ஈடுபடுத்தியதைப் போலவே, அரசியலிலும் ஈடுபடுத்துவதைப் பார்க்க முடிகிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களை விடவும், அரசியலின் பக்கமே எட்டிப்பார்க்காத பலர் இன்றைய தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் துவங்கி அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமித்து இருப்பது கண்கூடு. இதற்கு பக்க பலமாக அவர்கள் சார்ந்த அரசியல் இயக்கங்கள் இருக்கின்ற காரணத்தால், தீர்மானிக்கிற சக்தியாக இயங்க முடிகிறது.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை கல்வியை வணிகமயமாக்கி வைத்திருப்பதனால், அரசு மற்றும் கார்பரேசன் பள்ளிகளில் பயின்று வளர்ச்சி பெறும் இளைஞர்கள், அவர்களின் தாய், தந்தையரைப் போலவே அரசியலில், அடிமட்டத் தொண்டர்களாகப் பணியாற்றுகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று, முதலாளித்துவ அரசியலில் ஈடுபட்டு, பதவிகளுக்கும், அதிகாரத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை இப்போது குறைந்துள்ளது.

மாறாக இத்தகைய படிப்பு கொண்ட இளைஞர்களின் கல்வித் தகுதி, தனியார் நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்குச் செல்லத் தடையாக இருப்பதும், அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டதன் காரணமாகவும், கிடைக்கிற வேலைகளுக்குச் செல்வது தவிர்க்க இயலாததாகி விட்டது. 12 மணி நேரங்கள் பிழைப்பிற்காக உழைக்க வேண்டியிருப்பதால், பொது வாழ்வில் ஈடுபடுவது குறைந்துள்ளது. இதுபோன்ற சாதாரண குடும்ப சூழலில் இருந்து வரும் இளைஞர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இருந்தாலும், தேர்தல் காலங்களில் மட்டும் ஈடுபடுகிறார்களேயொழிய, மற்ற காலங்களில் முழுமையாகப் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர். இதன் காரணமாக ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் உழைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் மனநிலைக்கு வருகின்றனர். இதுவும் வாரிசு அரசியலை அங்கீகரிக்க உதவி செய்கிறது
.
மேற்படி பின்னணியில் இருந்தே சமீபத்தில் நெல்லையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டினையும், இதர முதலாளித்துவக் கட்சிகளின் முயற்சியையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2.88 கோடி, இவர்களில் 10 லட்சம் இளைஞர்களை ஒரு மாநிலத்தை ஆளுகிற கட்சியின் சார்பில் திரட்ட முடிந்தது என்றும். 44 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மொத்த இளைஞர் எண்ணிக்கையில் திமுக திரட்டியது 4 சதம் (10 லட்சம் என்றால்) மட்டுமே. அதிலும் 35 வயதைக் கடந்தவர்களை விலக்கிவிட்டு கணக்கிட்டால் 2 சதம் மட்டுமே இருக்கும். இந்தக் கணக்கீடு பொதுவாக பெரும் இளைஞர் கூட்டம் விலகியே இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

சவாலுக்குரிய விசயம் விலகி-யிருக்கும் இளைஞர்களை ஈர்ப்பது மட்டுமே. இன்னும் ஒரு கணக்கீடு சொல்லும் தகவல், ``சுயஉதவிக் குழுக்கள், ரசிகர் மன்றங்கள், விளையாட்டுக் குழுக்கள் என்ற பெயரில், பொதுத்தளத்தில் உறுப்பினராகியுள்ள இளைஞர்-களின் எண்ணிக்கை சுமார் 1.75 கோடி’’, என்பதாகும். கிராமங்களில், நகரில் சில இடங்களில் நடைபெறும் கோவில் விழாக்களில் இளைஞர்கள் முன்னின்று செயலாற்றுவதைக் கவனிக்க முடியும். எனவே, பொதுத் தளங்களில் இருந்து இளைஞர்கள் விலகவில்லை, அரசியலில் இருந்து பணியாற்ற ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. காரணம் அரசியல் கொள்-கைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. கொள்கை, கோட்பாடு போன்றவை இல்லாததே அரசியல் என்றாகிவிட்டது.

அரசியல் லஞ்சம், ஊழல் போன்றவற்றை உரமிட்டு வளர்க்கிறது, என்ற எண்ணம் இளைஞர்-களிடம் ஆழப்பதிந்துவிட்டது. எல்.கே.ஜி. துவங்கி வசூலிக்கப்படும் கட்டணக் கொள்ளை, சாதி, பிறப்பு, இறப்பு, வருமானம் போன்ற எந்த சான்றிதழ் வாங்கச் சென்றாலும் லஞ்சம். அரசு மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம் ஆகிய அனைத்தும் வெறுப்பூட்டுவதாகவே இருக்கிறது. இத்தகைய சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய இடங்களில் தான் இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். வரலாறு உலகெங்கும் இத்தகைய செய்தியைத் தான் முன்னிறுத்துகிறது.

எனவே, இளைஞரணி மாநாடுகள் பாடம் நடத்தும் இடமாக இருக்க வேண்டுமே அல்லாது, பாழடிக்கும் இடமாக மாறிவிடக் கூடாது. சமீபத்தில் நடந்த ஒன்றிரண்டு மாநாடுகளில் `டாஸ்மாக்’ விற்பனையின் அளவில் இருந்தே பாலடிக்கும் என்ற வார்த்தை பிரயோகம் முன்னுக்கு வந்தது. எப்படி இருந்தாலும் இளைஞர்கள் ஒன்றிணைவதும், போராடுவதும் தவிர்க்க இய லாத ஒன்று.

டில்லியில் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, சென்னையில் மு.க.°டாலின், மு.க.அழகிரி, மு.க.கனிமொழி, மு.க. தமிழரசு, ஜி.கே.வாசன் என்பவை மிக வெளிப்படையான ஒன்று. அதேபோல் பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இவர்கள் இல்லாமல், மாநிலத்தில் வாரிசுகள் வளர்ந்து வருவதையும் கவனிக்க முடியும். கார்த்திக் சிதம்பரம் தனது பிறந்த நாளுக்கு வைக்க ஏற்பாடு செய்த கட் அவுட்கள் ஏராளம். காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிக்கு செயலாளராக உள்ளவர்களில் ஒருவரான திருமகன் ஈ.வெ.ரா. இவர் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் புதல்வர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லை. பூந்தமல்லி எம்எல்ஏ அருள், செய்யாறு எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு பதவி அவர்களின் தந்தை செல்வாக்கால்தான் வந்தது. திமுகவில்..

Stalin 1. சேலம்-வீரபாண்டி ஆறுமுகம்-வீரபாண்டி ராஜா
2. ஈரோடு-என்.கே.பி.பெரியசாமி-என்.கே.பி.பி.ராஜா
3. கோவை-பொங்கலூர் பழனிச்சாமி-பாரி
4. திண்டுக்கல்-ஐ.பெரியசாமி-ஐ.பி.செந்தில்குமார்
5. திருச்சி-அன்பில் குடும்பம்
6. ராமநாதபுரம்-சுப.தங்கவேலன்-சுப.த.சம்பத்
7. திருவாரூர்-கலைச்செல்வன்-கலைவாணன்
8. விழுப்புரம்-பொன்முடி-கௌதமசிகாமணி பொன்முடி
9. கடலூர்-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-எம்.ஆர்.கே.அன்பரசி, கே.ஆர்.செந்தில்குமார்
இப்படி ஆராயத் துவங்கினால் இடம் போதாது. எனவே, மாதிரிக்காக இவற்றை கணக்கில் கொள்ளலாம்.

திமுக (இளைஞரணி முதல் மாநில) மாநாடு

மாநாட்டு அரங்கத்திற்குள் செல்வதற்கு 20 ரூபாய் டிக்கெட் (20 ரூபாய்க்கு எந்த பிரயோஜனமும் இல்லை) படம் ஃபிலாப். இந்த மாநாட்டை இளைஞரணி மாநாடு என்று சொல்வதை விட திமுகவின் மாநில மாநாடு என்று சொல்வதே பொருந்தும்.

வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இத்தனை ஆடம்பரமான மாநாடு என்ன கோரிக்கையை முன்வைத்தது என்று கேட்கலாம். ஆனால் திமுக-வை பொறுத்தவரை மாநாடு வெற்றி. மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்த நினைத்தனர். அதை வெற்றிகரமாக செய்து விட்டனர். குறிப்பாக மு.க.அழகிரி ஆதிக்கம் செலுத்தும் தென் மாவட்டத்தில் நடத்தி விட்டனர் என்பதுதான்
.
முதலில் கருணாநிதி பேசும் போது குறிப்பிட்டது போல் ‘‘ ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்துள்ளேன். அதேபோல் அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்’’ என்றும், ‘‘சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன்...’’ என்றும் பேசினார். இதிலிருந்து மாநாட்டின் ‘‘பொதுநல’’ விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

இதுதவிர பாமகவின் இளைஞரை திரட்டும் முயற்சி, தேமுதிகவில் (பதவிக்காக) இளைஞர்களின் படை எடுப்பு போன்றவையும் மாநாட்டிற்கான துணை காரணம் என்று மதிப்பிடலாம்.

மாநாட்டிற்கு டிக்கெட் எடுத்து (பிரதிநிதியாக) உள்ளே சென்றதில் தீர்மானங்களை குறிப்பெடுத்தது நான் மட்டும்தான் என்று நினைக்கிறேன். (எல்லோரும் ஸ்டாலின் வாழ்க, கலைஞர் வாழ்க என்று குரல் கொடுத்தே களைத்து போனார்கள்)தீர்மானங்களில் தமிழக அரசுக்கு (கருணாநிதி க்கு) நன்றி சொல்லி முடித்த தீர்மானங்களுக்கு பிறகு உருப்படியான தீர்மானங்கள் கொஞ்சம்தான்.( நிறைவேறியது 25 தீர்மானம்)
கல்வி வேலையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

சச்சார் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.ஓபிசி இடஒதுக்கீடு வேண்டும். (பல துறைகளில்) தமிழக மாவட்டங்களில் உள்ள கனிம வளங் களை பயன்படுத்தி தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.என்ற தீர்மானங்கள் வரவேற்கத்தக்கவையாகும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தீர்மானம் தலைவர்களின் அங்கீ காரத்திற்குப் பின் நிறைவேறும் என்று நம்புவோம்.

- ச.லெனின்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com