Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

தோஹாவிலிருந்து பாடம் கற்போம்!
மு.சங்கரநயினார்

தமிழக வீராங்கனை சாந்தி 800 மீட்டர் ஓட்டத்தில் வென்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்பட்ட சோகத்தை மறந்து விட்டு இதை நாம் படிக்கலாம். (போட்டிகள் துவங்குவதற்கு முன்பே இந்திய குண்டு எறிதல் வீராங்கனை சீமா அன்டில் ஊக்க மருந்து உட்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். விளையாட்டுப் போட்டிகளில் இது போன்ற செயல்கள் நடைபெறாவண்ணம் தடுக்க முறையான நடவடிக்கைகளை கறாராக அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும்.)

நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம்மை விட சில கோடிகள் அதிகம் மக்கள் தொகையைக் கொண்ட சீனா 165 தங்கம், 88 வெள்ளி, 63 வெண்கலம் என்று பதக்கங்களை அள்ளிக் குவித்த போது நமது இந்தியா 10 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என்று பதக்கப் பட்டியலை அளவோடு நிறுத்திக் கொண்டது. இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் நம்மை நாம் அறிவோம்.

நான்காண்டுகளுக்கு முன்பு பூசானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற 11 தங்கப்பதக்கங்களில் 7 தடகளப் போட்டிகளில் வென்றதாகும். இந்த முறை தடகளத்தில் நமக்குக் கிடைத்ததோ ஒரே ஒரு தங்கம் மட்டுமே. நான்காண்டு இடைவெளியில் 6 தங்கப்பதக்கங்களை இழந்திருக்கிறோமென்றால் நமது விளையாட்டின் வளர்ச்சி எங்கே நிற்கிறது?

கபடி, சதுரங்கம், பில்லியர்ட்ஸ், துப்பாக்கி சுடுதல்,டென்னிஸ் ஆகிய போட்டிகளில் பதக்கம் பெற்றது ஆறுதலளிப்பதாகும்.

கடந்த முறை நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற அஞ்சு ஜார்ஜ் இந்த முறை வெள்ளிப் பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று.

4ஒ400 தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் தங்கம் வென்று சாதித்துள்ளனர்.

386 பேர் கொண்ட குழுவுடன் தோஹாவிற்கு சென்ற இந்தியாவால் இவ்வளவுதான் சாதிக்க முடிந்தது என்பதை எண்ணும் போது விளையாட்டில் நாம் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அவசர அவசிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

முதலில் வீரர்கள் தேர்வு முறையில் பாரபட்சமற்ற நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். திறமையானவர்கள் சாமானியர்களாக இருந்தாலும் அவர்களை திட்டமிட்டு வளர்த்தெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கல்வியைப் போன்றே விளையாட்டும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒவ்வொருவரும் உணரும் வகையில் நமது அரசின் விளையாட்டுக் கொள்கைகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். விளையாட்டில் அரசியல் விளையாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லதாக இருக்கும்.

வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் நமது வீரர்கள் தங்களது சொந்த சாதனையைக் கூட முறியடிக்க முடியாமல் திணறுகிறார்கள். போதிய பயிற்சியின்மையே இதற்கு காரணமாகும். நீண்டகால பயிற்சியே வெற்றியைத் தேடித்தரும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும். மேலும் துடிப்பு மிக்க இளம் வீரர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பது எதிர்கால நமது வெற்றிக்கு பெரிதும் உதவக்கூடும்.

வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை விட அதிகாரிகள் என்ற போர்வையில் ஊர் சுற்றிப் பார்க்கச் செல்பவர்களைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். சீனாவில் இருந்து 126 பேர் கலந்து கொண்ட போது இந்தியாவில் இருந்து 150 பேர் கலந்து கொண்டார்கள் என்ற கணக்கு நம்மை அதிர்ச்சியுறச் செய்வதாகும்.

ஒரு காலத்தில் முடிசூடா மன்னர்களாக இருந்த ஹாக்கியில் 8 முறை ஒலிம்பிக் தங்கத்தை வென்றுள்ளோம் என்ற பழம் பெருமையை பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? உலகளவில் என்றோ பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்ட நமது ஹாக்கி ஆசிய அளவிலும் கேள்விக்குறியாகி நிற்கிறது. 2008ல் சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிச் சுற்று ஆட்டங்களிலிருந்து துவங்க வேண்டும் எனும் நிலைமையை எண்ணி வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த விசயத்தில் நாம் சீனாவிடம் பாடம் கற்றுக் கொள்வது நல்லது. உலக ஹாக்கியில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் இல்லை என்பது வேதனையிலும் வேதனையாகும்.

கால்பந்தைப் பொறுத்தவரையில் உலகத் தரவரிசையில் நாம் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறோம். எனவே கால்பந்தில் பதக்கம் வெல்வதைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை. அதே நேரத்தில் நீச்சல், செபக்தக்ரா போன்ற போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பி கேலிக்கூத்திற்கு ஆளாக வேண்டியதுமில்லை.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு மிகச்சிறந்த எதிரி இல்லாததால் ஏதென்ஸில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவை வரும் 2008ல் சொந்த மண்ணில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பின்னுக்குத் தள்ள முடியும் என்ற நம்பிக்கையை சீனா கொண்டுள்ளது. அந்த நம்பிக்கையின் முதல் படிதான் இரண்டாம் நிலை வீரர்களை களத்தில் இறக்கி 45 நாடுகள் பங்கு கொண்ட 15வது ஆசிய போட்டிகளில் சிகரத்தின் உச்சியில் நின்றது. முதல் இடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கும் தங்கப்பதக்கங்களின் இடைவெளி 100க்கும் மேல் என்பதிலிருந்தே சீனாவின் ஆதிக்கம் புரிந்திருக்கும்.

சீனாவைப் பின்பற்றி வெற்றிகளைக் குவிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com