Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

இளம் புரட்சிவீரன் குதிராம்போஸ்
எஸ்.ஏ.பெருமாள்

நவம்பர் இதழின் தொடர்ச்சி

இந்தச் செய்தியை 16-06-1907 தேதியிட்ட ஜுகாந்தர் பத்திரிக்கை வெளியிட்டது.அந்தச்சிறுவன் மீது கசையடிவிழும் போதெல்லாம் வந்தே மாதரம் என்று கோக்ஷமிட்டுத் தன் வேதனையை குறைத்துக் கொண்டான். அரசியல் கைதிகளுக்கு தண்டனை கொடுப்பது எந்த நாட்டிலும் இல்லை. கொடூரமான ஆட்சி நடத்திய ஜார்மன்னனின் ரஷ்யாவில் கூட இல்லை என்று பத்திரிக்கைகள் எழுதின. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி கிங்ஸ்போர்டுக்கு மரண-தண்டனை விதிக்க வேண்டுமென்று ஜுகாந்தர் பத்திரிக்கை எழுதியது. பொதுமக்கள் அந்த நீதிபதியின் மீது கடுங்கோபத்திலிருந்தனர்.ஆனால் அரசு பொது மக்களின் கருத்துப்பற்றிக் கவலைப்படாமல் கிங்ஸ்போர்டுக்கு பதவி உயர்வு வழங்கியது. இது புரட்சி இயக்கத்தினருக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த ஆத்திரமூட்டியது.

பிரிட்டீஷ் நீதிபதி மீது யார் குண்டு வீசுவது என்று அனுசீலன்சமிதியில் விவாதித்தனர். தலைவர் தனக்கு நம்பிக்கையான, எதற்கும் அஞ்சாத பையன்களைத் தெரியுமென்றும் அவர்களை அதற்கு பயன்படுத்தலாம் என்றும் கூறினார். நீண்ட விவாதத்திற்கு பிறகு அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அனுசீலன் சமிதி நீதிபதி கிங்ஸ்போர்டுக்கு மரணதண்டனை வழங்க முடிவு செய்தது. தலைவர் சத்யன்பாசு கூறிய இரண்டு பையன்கள் குதிராம்போசும், பிரபுல்ல சாதியும் ஆவர். மரணதண்டனை வழங்கும் பொறுப்பை அந்த இருவரிடமும் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் அழைத்து அமர வைத்து சத்யன்பாசு முசாபர்பூரின் வரைபடத்தை விவரித்து விளக்கிக் கூறினார். பின்பு வெடிகுண்டுகளையும், ஒரு கைத்துப்பாக்கியையும் அவர்களிடம் கொடுத்தார். வெடிகுண்டு வீச்சில் நீதிபதி தப்பிவிட்டால் துப்பாக்கியால் அவனை சுட்டுக் கொல்லும்படி கூறினார். தலைவர் அவர்கள் இருவரையும் கட்டித்தழுவி வந்தே மாதர கோஷமிட்டு வழியனுப்பி வைத்தார். குதிராமும், பிரபுல்ல சாதியும் ரயிலில் புறப்பட்டு முசாபூர் போய் சேர்ந்தனர்.

இருவரும் முசாபர்பூரில் இறங்கி அங்குள்ள தர்மசாலாவுக்குச் சென்று தங்கும் வசதி கேட்டனர். தர்மசாலாவின் நிர்வாகி சத்திரத்தின் மூன்றாவது அறையில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். தர்மசாலாவுக்கு எதிரில் தான் நீதிபதி கிங்ஸ்போர்டின் பங்களா இருந்தது. நீதிபதியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு அந்த அறை வசதியாக இருந்தது.

நீதிபதி காலையில் குதிரைகள் பூட்டிய சாரட்டில் பாதுகாவலரோடு நீதிமன்றம் செல்வார். மதியம் பங்களாவுக்கு வந்து உணவு அருந்தி விட்டு சாரட்டிலேயே நீதிமன்றம் செல்வார். குதிராமும் பிரபுல்லாவும் நீதிபதியை எந்த இடத்தில் வைத்து தாக்குவது என்று ஆய்வு செய்தனர். மற்ற நீதிபதிகளைப்போல் இவன் காலையில் வாக்கிங்கோ, குதிரை சவாரியோ போவதில்லை. நீதிமன்றத்திற்குள்ளோ, சாலையில் செல்லும் போதோ குண்டு வீசினால் சம்பந்தமே இல்லாத அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள் என்று கருதினர். தொடர்ந்து கவனித்ததில் மாலை நேரத்தில் பிரபுக்கள் கூடும் கிளப்பிற்குச் சென்று சீட்டாடும் பழக்கம் நீதிபதிக்கு இருந்தது. அங்கு நீதிபதியின் நடமாட்டத்தை இருவரும் கண்காணித்து வந்தனர்.

30.4.1908ம் நாள் மாலையில் கிளப்பில் நீதிபதி கிங்ஸ்போர்டு ஒரு பெண்ணுடன் சீட்டாடிக் கொண்டிருந்தான். அவள் பெயர் திருமதி. கென்னடி. அவளும் அவளது மகளும் கிளப்புக்கு வந்திருந்தனர். சீட்டாட்டத்தில் அவளே ஜெயித்தாள். பின்பு அவள் தனது மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

வெளியில் இருளில் குதிராமும், பிரபுல்லாவும் நீதிபதியின் வருகைக்காக நெடுநேரம் காத்திருந்தனர். நீதிபதி கிளப்பைவிட்டு வெளியே வந்து சாரட்டில் ஏறிக் கிளம்பினான். அதற்கு முன்பாக திருமதி கென்னடியும் சாரட்டில் கிளம்பியிருந்தாள். குதிராமும் வெடிகுண்டை குறிபார்த்து வீசினான். குண்டு வெடித்து சாரட் சிதறியது.

குதிராமின் குறிதவறிவிட்டது. குண்டு வீச்சில் முதல் சாரட்டில் வந்த திருமதி கென்னடி கொல்லப்பட்டாள். அவளது மகள் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். என்ன நடந்தது என்று தெரியாமல் குண்டை வீசியதும் குதிராமும், பிரபுல்லாவும் ஓடிவிட்டனர். இரண்டாவது சாரட்டில் வந்தநீதிபதி கிங்ஸ்போர்டு இந்த சம்பவத்தினைப் பார்த்து கீழிறங்கி ஓடிவந்து பார்த்தான். அங்கு திருமதி கென்னடியும், அவளது மகளும் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து அதிர்ந்து கத்தினான்.

குதிராமும், பிரபுல்லாவும் இருளில் ஓடி மறைந்து விட்டனர். குதிராம் திடீரென “நாம் இருவரும் நமது செருப்புக்களை அங்கேயே விட்டு வந்துவிட்டோம்” என்றார். பிரபுல்லா “அதைவிடு, இப்போது நாம் இருவரும் ஒன்றாய் செல்லக்கூடாது; பிரிந்து செல்ல வேண்டு”மென்றார். இருவரும் பிரிந்து ஆளுக்கொரு பக்கம் ஓடினர். இரவு முழுவதும் ஓடி காலையில் பிரபுல்லா சமஸ்திபூரை அடைந்தார். அங்கு கடையில் புதிய ஆடைகளையும், புதிய பூட்சுகளையும் வாங்கி அணிந்து கொண்டு ரயிலில் ஏறினார். அவர் ஏறிய பெட்டியில் நந்தா லால் பானர்ஜி என்ற போலீஸ் அதிகாரியும் பயணம் செய்தார். பதட்டத்துடன் ஏறிய பிரபுல்லாவை பானர்ஜி தனக்கு எதிரில் இருந்த சீட்டில் அமரும்படி கூறினார். அவர் பிரபுல்லாவிடம் இளைஞர்களின் தேசபக்தியையும், வீரத்தையும் பாராட்டிப் பேசினார். பின்பு பிரபுல்லாவைப் பார்த்து “நேற்று முசாபர்பூரில் ஏன் இப்படிச் செய்தார்கள்?” என்று கேட்டார். பின்பு “அதுவும் இரண்டு வெள்ளைக்காரப் பெண்களை ஏன் கொலை செய்தார்கள்?” என்றும் கேட்டார். பிரபுல்லாவுக்கு பொறி தட்டியது. தவறான பெட்டியில் ஏறிவிட்டதை உணர்ந்தார். பிரபுல்லாவின் முகம் வெளிறிப் போனதை போலீஸ் அதிகாரி பானர்ஜியும் கவனித்தார்.

அடுத்த ஸ்டேசனில் வண்டி நின்றதும், போலீஸ் அதிகாரி போனில் தகவல் தெரிவித்தார். பிரபுல்லா ஹவுராவுக்கு டிக்கெட் எடுக்கப் போனார். அதற்குள் போலீஸ் வந்து விட்டது. உடனே ஓடத் தொடங்கினார். போலீசாரைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டார். ஆனால்தோட்டா யார்மீதும் பாயவில்லை போலீசார் நெருங்கிவிட்டனர். போலீசிடம் சிக்கிவிடக்கூடாது என்று கருதி தனது துப்பாக்கியைத் தனது நெஞ்சைக் குறிவைத்துச் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் பிரபுல்லாவின் இறந்த உடலைத்தான் சுமந்து செல்ல நேர்ந்தது.

குதிராம்போஸ் இதற்கிடையில் வைனி நகரை அடைந்தார். கடுமையான பசியில் ஒரு ஓட்டலில் நுழைந்து சாப்பாடு கேட்டார். சாப்பிடத் துவங்கியதும் இரண்டு போலீசார் உள்ளே வந்தனர். காலில் செருப்பு இல்லாமல் களைப்பாகத் தெரிந்த குதிராம் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்தது. குதிராமை போலீசார் விசாரித்தனர். அவர் சொன்ன பதிலிலிருந்து போலீஸ்காரர்களுககு சந்தேகம் வலுவானது. தங்களோடு போலீஸ் ஸ்டேசனுக்கு வரவேண்டுமென்று அழைத்தனர்.

குதிராம் உடனே தனது ரிவல்வாரை எடுத்து நீட்டினார். அதைப் போலீஸ்காரர் தனது தடியால் தட்டி விடவும் அது கீழே விழுந்து விட்டது. உடனே இரண்டு போலீஸ்காரர்களும் பசிக்கிறக்கத்திலிருந்த குதிராமைப் பிடித்துக் கைது செய்து விலங்கு மாட்டினர். போலீஸ்காரர்கள் குதிராமை முசாபர் பூருக்குக் கொண்டு வந்தனர். ரயிலை விட்டு இறங்கும் போதே குதிராம் வந்தே மாதரம் என்று பலமுறை கோஷமிட்டார். உடனே ரயில் நிலையத்தில் பெரிய கூட்டம் திரண்டுவிட்டது. சின்ன வயதுக்காரனாகவும், வீரனாகவும் தெரிந்த குதிராமைப் பார்த்துக் கூடியிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த வயதில் இத்தனை வீரமா என்று அதிசயித்தனர். பின்பு குதிராமைப் போலீசார் இழுத்துச் சென்றனர்.

பிரபுல்லாவின் மரணச் செய்தியும், குதிராம் கைது செய்யப்பட்ட செய்தியும் கல்கத்தாவை எட்டியது. உயர்போலீஸ் அதிகாரிகள் கூடி அனுசீலன் சமிதியின் மறைவிடங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். மாணிக்தலா தோட்ட வீட்டைத் தாக்கி அங்கிருந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளைப் போலீசார் கைப்பற்றினர். பரீந்திர கோஷ் உட்பட முப்பத்தி நான்கு புரட்சியாளர்களைக் கைது செய்தனர். பரீந்திர கோசுக்கு அவரது சகோதரர் அரவிந்த கோஷின் உதவி நிச்சயம் இருக்கும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கருதினர். அரவிந்த கோஷின் பேச்சும், எழுத்தும், புரட்சிகர ஆவேசத்தைத் தூண்டின. எனவே அவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சிலவாரங்கள் கழித்து முசாபர்பூர் நீதிமன்றத்தில் குதிராம் போசின் வழக்கு விசாரணை துவங்கியது. குதிராம் தனது வாக்கு மூலத்தில் “சாரட் வண்டியில் அந்தக் கொடூர நீதிபதி கிங்ஸ் போர்டு வருவதாய் கருதித்தான் நான் வெடிகுண்டை வீசினேன். ஆனால் இரண்டு அப்பாவிப் பெண்மணிகளின் சாவுக்குக் காரணமாகி விட்டேன். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று நீதிமன்றத்தில் கூறினார்.

நீதிமன்ற விசாரணை ஒரு சடங்குபோல நடத்தப்பட்டது. இறுதியில், குதிராமுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார். குதிராம் இந்தத் தீர்ப்பைக் கேட்டு எவ்விதப்பதட்டமும் அடையவில்லை. அமைதியாய் கம்பீரமாய் மௌனமாய் அதை ஏற்றுக்கொண்டார். இதைக்கண்ட நீதிபதி மிகுந்த ஆத்திரமடைந்து“இந்தத் தீர்ப்பினால் உனக்கு நேரப்போவது என்னவென்று தெரியுமா?” என்று குதிராமைப் பார்த்துக் கேட்டார். குதிராம் தலையை ஆட்டி சிரித்துவிட்டு வந்தே மாதரம் என்று கோஷமிட்டார்.

குதிராம் பின்பு நீதிமன்றத்துக்கு வெளியே கொண்டு வரப்பட்டார். வெளியே வந்து தனது வழக்கறிஞரிடம் “எனக்குள்ள ஒரே வருத்தம் அந்த நீதிபதி கிங்ஸ்போர்டு செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட முடியாமல் போனது தான். தூக்கு மேடைக்கு நான் அஞ்சவில்லை. என்தாய் நாட்டுக்காக மரணத்தைத் தழுவுவது எனக்குப் பெருமை தான்” என்று கூறினார்.

குதிராமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு அப்பீல் செய்யப்பட்டது. அங்கும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. 11.8.1908 ம் நாள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. குதிராம் தூக்குக்கயிற்றைத் தனது கழுத்தில் மாட்டுவதற்கு முன்பு “என் தாய் நாட்டின் விடுதலைக்காக மகிழ்வோடு மரணத்தைத் தழுவுகிறேன். என்தாய்த்திருநாடே, நான் மீண்டும் பிறந்து வருவேன் உன் விடுதலைக்காக! வந்தே மாதரம்” என்று முழங்கினார். அவரது மரணதண்டனை நிறைவேறியது.

இந்தச் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட புரட்சியாளர்கள் மீதான வழக்கு அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அவர்களுக்காக தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் பதினைந்து பேருக்கு நீதிமன்றம் தண்டனையளித்தது. அரவிந்த கோசும், வேறு சிலரும் விடுதலை செய்யப்பட்டனர். பரீந்திர கோசும் அவருடன் மற்றவர்களும ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

குதிராம், பிரபுல்லா சாதியின் தியாகம் வங்க இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அவர்களது தியாகத்தைப் போற்றும் பாடல்கள் புனைந்து மக்கள் பாடினர். விடுதலைப் போரில் வங்க மக்களை ஈர்த்ததில் இந்த இரு தியாகிகளும் புகழ் பெற்றனர். வந்தே மாதரம் என்ற கோஷம் வங்கம் முழுவதும் எதிரொலித்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com