Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

2020 இந்தியா இளைஞர்கள்
மாதவராஜ்

3.உண்மையிலிருந்து வெளிப்படாத வார்த்தைகள்

இந்தியன் டொபொக்கோ நிறுவனம் (ஐ.டி.சி) இன்று புகையிலையை மட்டும் தயாரிக்கவில்லை. சாம்பார் பொடியிலிருந்து சகலத்தையும் தயாரித்து, இந்தியச் சந்தையை தனது பாக்கெட்டுக்குள் அள்ளிப் போட கைகளை அகல விரித்து நிற்கிறது. அங்கு பணிபுரியும் உயர் அதிகாரி சொன்ன ஒரு விஷயம் தொழிலாளர் இயக்கத்துக்கு மிக முக்கியமானச் செய்தியாக இருக்கிறது. ஒவ்வொரு பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் போதும், உயர் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒரு பெரிய அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் பெரிய திரையில் காண்பிக்கப்படுமாம். வேறு வேலைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது. பார்த்து, விவாதித்து, இரண்டு நாட்களில் அடுத்த ஒரு வருடத்திற்கான திட்டமிடுதல் நடக்குமாம். பட்ஜெட்டிற்கேற்ப நெளிவு சுழிவுகளோடு ஒரு வியாபார யுக்தி வகுக்கப்பட்டு விடுகிறது.

இது ஐ.டி.சியில் மட்டுமில்லை. மிகப் பெரிய கம்பெனிகளில் இப்படியான சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மிக விரைவில் அவர்கள் சந்தையில் தங்கள் அடுத்தக் கட்டத் தாக்குதலுக்கு தயாராகி விடுகிறார்கள். தாக்கப்படுகிற சாதாரண மனிதர்களுக்கு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டதும் தெரியாது, என்ன வரி என்பதும் புரியாது. அடுத்த வேளைச் சோற்றுக்கு கவலைப்படுவதிலேயே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. சரி. படித்த ஞானம் பெற்ற முற்போக்காளர்களாவது இப்படி கூடி, உட்கார்ந்து பேசி, விவாதித்து, சதிகளை உடனடியாக அமல்படுத்த முடிகிறதா என்றால், இல்லை. அரசியல்வாதிகளின் அறிக்கைகளை இங்கு யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதே கிடையாது. நரசிம்மராவ் போன வழியிலேயே வாஜ்பாயும் போவார். அடுத்தது மன்மோகனும் அதே வழியில்தான் வேகமாகப் போவார். ஆனால் இவர்கள் தத்தம் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி நிலைபாடுகளுக்கேற்ப அறிக்கை விட்டு லாவணி பாடிக்கொள்வார்கள். பொறுப்போடு முன்வைக்கிற இடதுசாரிகளின் கருத்துக்களை ஊடகங்கள் எங்காவது ஒரு மூலையில், போகிற போக்கில் சொல்கின்றன. நமது தொழிற்சங்க இயக்கங்கள், ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இப்படி கூடி உட்கார்ந்து விவாதித்தால் பெரும் மாற்றங்களுக்கான அடையாளமாக மாறும் எனத்தான் தோன்றுகிறது.

இந்த தேசத்தில் மேலே நடப்பவைகள் கீழே உள்ள சாமானியர்களுக்குத் தெரிவதேயில்லை. வெளிப்படை என்பது வேறு செய்திகளில் இருக்கின்றன. நமக்குத் தெரிய வேண்டிய விஷயம் யோபு சரவணன்தான் என்பதை அவர்கள் தீர்க்கமாக முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கான உரையாடல்களை தருபவராக யோபு சரவணன் இருப்பார். நாளைக்கு இன்னொருவர் பத்திரிக்கைகளில் வருவார். இப்படியே சின்னஞ்சிறு கதைகள் பேசி பெரும் கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதராய் வீழ்ந்து போக வேண்டியதுதான். எதை நமது இளைஞர்கள் பேசுகிறார்கள். எதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். நமது கவனங்களை சிதறடித்து விட்டு, அவர்கள் உட்கார்ந்து நிதானமாக இந்தியா 2020 என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 2020ல் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டாமா? நாம் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மட்டுமே திட்டமிடுவதால்தான் நாம் இப்படி இருக்கிறோம்.

‘2020-இந்தியா' என்னும் இந்த ஆவணம் திட்டக்கமிஷன் உறுப்பினர் குப்தா தலைமையில் முப்பது பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 2000ம் ஆண்டில் அமைக்கப்பட்டு இரண்டு வருட தீவிர சிந்தனைக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தப்பட்டு இந்த தேசத்தின் மக்களின் பார்வையையை புரிந்து கொண்டு தயாரிக்கப்பட்டதாக குப்தா கூறுகிறார். நமக்குள் இருக்கிற தொன்மையான ஆன்மீக, கலாச்சார பலங்கள் விழித்துக்கொள்ள இந்த ஆவணம் முயற்சிக்கிறதாம். முரண்பாடான கருத்துக்களுக்கும், சக்திகளுக்கும் இடையில் தராசை வைத்தபடி நின்றபடி தன்னிறைவு அடைய வழி வகுக்கிறதாம். கடந்தகால தடைகளையும், உடனடியான கற்பனைகளையும் மீறி, முன் வந்து நிற்கிற வாய்ப்புகளையும், வளங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாம். உண்மையான பார்வை என்பது உறைந்து போன வார்த்தைகளில் இருக்காதாம். அது மக்களின், தலைவர்களின் அறிவிலும், இதயங்களிலும் துடிக்கிற வாழ்க்கையிலிருந்து வெளிப்படுமாம். இவ்வளவையும் சொல்லிவிட்டு 'இந்தியா-2020' என்னும் இந்த ஆவணம் அப்படி ஒரு முழுமை பெற்ற பார்வையாக இல்லாவிட்டாலும், ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்றும், பெரும் பாதைகள் அமைப்பதற்கான கோடுகளைப் போடுகிறது என்றும் வியாக்கியானம் செய்யப்படுகிறது. இந்தியா 2020ல் எப்படி இருக்கப் போகிறதோ அதை அப்படியே வடிப்பதாகவும் இல்லை, கண்ணை மூடியபடி செய்கிற கற்பனைகளும் இல்லை இந்த ஆவணம் என முன்னுரைக்கிறார்கள். மனித சக்தியாக, தொழில்நுட்பத் திறமையாக, நிதியாதாரமாக தேசமெங்கும் குவிந்து கிடக்கும் நமது வளங்களின் மூலம் எதைச் சாதிக்க முடியும் என்று தாங்கள் நம்புவதை இந்த முப்பது பேர் கொண்ட குழு முன்வைத்திருக்கிறார்களாம்.

புதிய நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்னும் இந்த பார்வையை தயாரிப்பதற்கு சமீப காலமாக தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கான காரணிகளை அடையாளம் கண்டு அதன் போக்கில் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வது அவசியம் எனவும் இந்த ஆவணம் கூறுகிறது. சர்வதேச அளவில் இந்த மாற்றங்களை பெரும் சக்திகள் துரிதப்படுத்துவதாகவும், கல்வி, தொழில்நுட்பம், குறைந்த கட்டணத்தில் தொலைத் தொடர்பு இவைகள் சாத்தியமாவதாகவும் ஆவணம் பேச ஆரம்பிக்கும் போது மெல்ல மெல்ல அவர்களின் நோக்கம் பிடிபட ஆரம்பிக்கிறது. ஆனால் இந்த மாற்றங்கள் உற்பத்தியை சேவைக்கானதாகவும், நிதிமூலதனத்தை மனித அறிவு மற்றும் மனித வளமாகவும் மாற்றுவதாக கதைக்கும் போது மீண்டும் குழப்பம் ஏற்படுகிறது. இந்த மனித வளமும், தொழில்நுட்பத்திறனுமே புதிய உலகத்தை நிர்மாணிக்கப் போகிறது என்று மேலும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் எப்படி சாத்தியம். நிதிமூலதனத்தின் உயிர்மூச்சே லாபம்தான். அது எப்படி மக்களுக்குச் சேவை செய்வதாக மாறும்? அறிவு உலகத்தையாள மூலதனம் எப்படி அனுமதிக்கும்? ஆவணத்தின் பார்வை திசை மாறுகிறது. உலகமயமாக்கலை ஆதரிப்பவர்கள் இதுவரை அதைத் தூக்கி வைத்து என்னவெல்லாம் கொண்டாடி இருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொண்டால்தான் இந்த 'இந்தியா-2020' என்கிற அவர்களின் பார்வையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த பித்தலாட்டங்களோடு விரியும் இந்தியா-2020 குறித்த திட்டக்கமிஷனின் அறிக்கையில் மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதை வரிகள் வருகின்றன. தேசம் குறித்த அவரது பார்வையாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வேடிக்கையைவிட வேதனையே மிஞ்சுகிறது. "எங்கே சிந்தனை அச்சமற்று இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ, எங்கே உலகம் குறுகியச் சுவர்களால் பிளவு படாமல் இருக்கிறதோ, எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழத்திலிருந்து வெளிவருகிறதோ என்ற ஏக்கத்தோடு தன் நாடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என கனவு கண்டவர் அவர். திட்டக்கமிஷன் ஆவணம் அந்த மாகவியின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கப் போவதாக பாவனை செய்கிறது. சிரிப்பு வரவில்லை.

(பேசுவோம்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com