Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

தவிர்க்க முடியாத தீமையா...
ஹேமலதா

“நான் பஞ்சாபில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவன். எங்களுக்கு நிலம் இல்லை. எங்கள் குடும்பத்தினர் விவசாயக் கூலிகள், எனக்கு 9 வயதாகும்போது என்னைப் பள்ளியைவிட்டு நிற்கச் செய்து வேலைக்கு அனுப்ப என் தந்தை உறுதியாக இருந்தார். நான் தொடர்ந்து படிப்பேன் - நிறுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினேன். வறுமைக்கு விடிவு என் கல்வியே என நம்பினேன்” -உத்திரப்பிரதேச தொழிலாளர்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உண்மைக் கதை இது.

இந்தியாவில் பள்ளியில் இருக்க வேண்டிய குழந்தைகளில் 82.2 மில்லியன் குழந்தைகள் பள்ளிகளில் இல்லை. (6 முதல் 14 வயதினர்- 1990 கணக்கெடுப்பு) இவர்கள் வேறு எங்கே இருக்கிறார்கள்?

பிரோசாபாத் கண்ணாடி தொழிற்சாலைகளில் 180*C கொதிநிலை கலன்களின் அருகில்.

சிவகாசி தீப்பெட்டி - பட்டாசு தொழிசாலைகளில் (45000 குழந்தைகள்) - காஷ்மீர் தரைவிரிப்பு உற்பத்தி மையங்களில் - உத்திரப்பிரதேச குக்ஷீரா பானை உற்பத்தி மையங்களில் - கல்கத்தா, பம்பாய், சென்னை போன்ற பெரிய நடுத்தர நகரங்களில் பிச்சைக்காரர்களாக, குப்பை பொருக்குபவர்களாக, விபச்சாரத் தொழில் புரிபவராக, குடும்பக் கூலியாக மற்றும் குடிசைத் தொழில் மையங்களில் ரோட்டோரக் கடைகளில், உணவகங்களில், கிராம விவசாயப் பணியில்.....

என்னவாக இருக்கிறார்கள்? குழந்தைகளாக அல்ல...குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.

ஐ.எல்.ஒ வின் கணக்கெடுப்பின்படி உலகத்தில் 246 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். (14 வயதிற்குள்) இதில் 180 மில்லியன் குழந்தைகள் ஆபத்தான தொழில்களில் பணியாற்றுகின்றனர். உலகிலேயே இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம்...UNICEF கணக்கெடுப்பின்படி 35 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். 5-14வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் இது 14 சதம்.
அரசு தரும் இது தொடர்பான புள்ளிவிவரத்திற்கும் உண்மைக்கும் இடையில் மலையளவு வித்தியாசமுள்ளது. அரசுசாரா கணக்கெடுப்பில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 60 மில்லியன் முதல் 125 மில்லியன் வரை உள்ளது.

முறைசாரா செயல்களில் சேவைத் துறையில் குழந்தைத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பின் கண்களில் வராமல் உள்ளனர். நகரத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் 10 சதம் என்று ஜெயந்தி கோஷ் குறிப்பிடுகிறார் விவசாயத்தில், குடிசைத் தொழில்களில், குடும்ப மரபு தொழில்களில், தேயிலைத் தோட்டத் தொழில்களில் அதிகம் காணப்படுவதாகவும் கொத்தடிமை முறையில் ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் சிக்கிக் கிடப்பதாகவும் குறிப்பிடுகிறார். இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976, இதை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதிர்ச்சியான விசயங்கள்:

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட எந்த கமிஷனும் குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. பல கமிஷனின் ஆய்வு முடிவுகள் வெளிச்சத்திற்கே வரவில்லை. தமிழ்நாட்டில் ஹர்பன் சிங் அறிக்கைக்கும் இதே கதிதான். சிமித்து கோத்தாரி என்ற சமூகஆய்வாளர் துருவியெடுத்து இவ்வறிக்கையை அம்பலப்படுத்தினார்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஓழிப்பு என்பது சாத்தியமே இல்லை என்று அரசே அடித்து சொல்கிறது.

உதாரணம்: உத்திரபிரதேச அரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம் தரைவிரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிய Apprentice பயிற்சியை தருகிறது. தரைவிரிப்பு தயாரிப்பு போன்ற ஏற்றுமதி சார் தொழிற்கூடங்களில் குழந்தைத் தொழிலாளர் பணிக்கு அனுமதிக்கப்படுவதால், உற்பத்தி செலவைக் குறைத்து ஏற்றுமதி போட்டியில் நம் நாடு தாக்குப் பிடிக்க இயலும் என்று சொல்கிறது.

பல்வேறு அரசுக்குழுக்களும் கமிட்டிகளும் அதிகாரிகளும் குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பை பற்றி பேசுவதற்கு பதில் குழந்தை உழைப்பை முறைப்படுத்துதல் மற்றும் பணி நிலைகளை மனிதாபிமானமிக்கதாக அமைத்து தருவது பற்றியே பேசியுள்ளனர்.

1979-சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வுகள் அதிகம் செய்யப்பட்டது பெரிய தீர்வு எதையும் உருவாக்கவில்லை.

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர் தொடர்ந்து இருப்பது அவசியம் என்று உற்பத்தியாளர்கள் வாதிட்டு வருகின்றனர். Wimco என்ற பன்னாட்டு கம்பெனியை போட்டியில் சந்திக்க, வீழ்த்த உள்ளூர் தொழிலை பாதுகாக்க குறைந்த கூலியில் கிடைக்கும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்வது அவசியம் என்று சொல்வதை அரசும் தலையாட்டிக் கேட்டுக் கொள்வதாக தெரிகிறது. சட்டங்கள் பாயவில்லை.
இதே வாதத்தை பல முதலாளிகள் முன்வைக்கின்றனர். கிரிஜா ஈஸ்வரன் என்ற தொழிலாளர் துறை அதிகாரி (1990) குழந்தைத் தொழிலாளர்கள் அகற்றப்படுவதால் தொழிற்சாலைகளின் லாபம் சரியும், மூடப்படும் என்று சொல்லப்படுவது உண்மையா என ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

ராஜிவ்காந்தி குழந்தைகளுக்கு கல்வி தான் அவசியம் என்பது குறுகிய பார்வையாக தனக்குப்படுவதாக குறிப்பிட்டது, அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டம் என்ன?

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முற்றிலும் ஒழிப்பு சட்டம் இல்லை. சில துறைகளில் பணிகளில் ஈடுபடுத்துவதை மட்டுமே தடை செய்யும் சட்டம் உள்ளது. பிறவற்றிற்கு வயது வரம்பு சொல்லப்பட்டுள்ளது. குழந்தைத் தொழில் (தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டம் - 1987) சில பணிகளில் சில உற்பத்தி முறைகளில் மட்டுமே தடை செய்கிறது. இதர சில பணிகளில் முறைப்படுத்துதல் பற்றி மட்டுமே பேசுகிறது. பீடி தயாரிப்பு, தரைவிரிப்பு நெய்தல், சிமெண்ட் உற்பத்தி, சாயம் ஏற்றுதல் மற்றும் நெய்தல், தீப்பெட்டிதொழில், வெடிப்பொருட்கள் மற்றும் பட்டாசு உற்பத்தி, மைக்கா பிரித்தல் மற்றும் வெட்டல், எசலாக் உற்பத்தி சொப் உற்பத்தி, தோல் பதனிடுதல், கட்டுமானத் தொழில் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளரைத் தடை செய்கிறது (14 வயதிற்குட்பட்ட குழந்தைகள்).

இந்தப் பட்டியலில் மத்திய அரசு Child Labor Technical Advisory Committee-யின் பரிந்துரைப்படி வேறு சிலவற்றையும் இணைக்கலாம். அக்டோபர், 10-2006யில் இப்பட்டியலில் வீட்டுவேலை, உணவகங்களில் குழந்தை ஒழிப்பு கூடாது என சேர்க்கப்பட்டுள்ளது. இச்சட்டம் குறித்து ஏராளமான அதிருப்தியும் விமர்சனமும் நிலவுகிறது. சில துறைகளில் மட்டுமே தடை என சொல்வதின் மூலம் குழந்தை தொழிலாளர் முறை சட்டபூர்வமாக்குகிறது என்பது ஓர் விமர்சனம். அரசு உதவியுடன் நடத்தப்படும் பணியிலும் குடும்பத்தாரால் நடத்தப்படும் தொழிலிலும் விதிவிலக்கு என்பது மோசமான சரத்தாகும்.

இந்தியாவில் இச்சட்டம் இதரப்பணிகளில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த அணுகுமுறையை மனிதாபிமான பணி நிலமை என்ற அளவில் வைத்துள்ளது. வேலை நேரம், மூன்று மனிநேரத்திற்கு ஒரு மணிநேரம் ஓய்வு, உழைப்பு நாள் அளவு போன்றவற்றில்தான் கவனம் காட்டுகிறது.

இந்தியாவில் முதல் குழந்தை தொழிலாளர் சட்டம் 1938யில் உருவானது. The Employment of Children Act 1938. இதன் பல அம்சங்கள் 1987 ஆம் ஆண்டு சட்டத்தில் அப்படியே கொண்டுவரப்பட்டது. இந்திய அரசியலமைப்பு அசெம்பிளி குழந்தைகள் பாதுகாப்பிற்கு குறிப்பான சரத்துகளை அரசியலமைப்பில் ஏற்றியிருந்தது.

பிரிவு 24 (Article 24)- 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் யாரும் தொழிற்சாலையிலோ சுரங்கத்திலோ வேறு ஆபத்தான தொழில்களிலோ பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

பிரிவு 39 (Article 39) - குழந்தைகள் சுரண்டப்படக்கூடாது. தங்கள் வயது மற்றும் வலுவுக்கு மீறிய தொழில்களில் பொருளாதார தேவையால் ஈடுபட நிர்பந்திக்கப்பட கூடாது.

பிரிவு 39 (Article 39) -ஆரோக்கியமான முறையில் சுதந்திரத்துடனும், கௌரவத்துடனும் வளர தேவையான வசதிகளும் வாய்ப்புகளும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

பிரிவு 45(Article 45) - 1960 ஆம் ஆண்டிற்குள் இலவச, கட்டாயக் கல்வி எல்லா குழந்தைகளுக்கும் வழங்கப்படும்.

தவிர்க்க முடியாத தீமையா?

குழந்தை தொழிலாளர்கள் முறை நீடிக்க வறுமையே காரணம் என்றும் வறுமையை ஒழிக்காமல் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது. எனவே தவிர்க்க இயலாத இத்தீமையை சகித்துக் கொள்ள வேண்டும் என்று பரவலாக கருத்துரைக்கப்படுகிறது. இது உண்மையில்லை.

ஒரு தலைமுறை காலத்திற்கு முன்வரை நம்மைவிட மிகுந்த வறுமை தலை விரித்தாடிய தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இன்று அனைவருக்கும் கல்வி சாத்தியமாகியுள்ளது. நம்மைவிட தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் கல்வி தளம் விரிவடைந்துள்ளது. பெபாட்ல்ஸானா, கேமிரோன்ஸ், கேபான், கேம்பியர், கானா, ஐவேரிகோஸ்ட், லிசோதா, லிபியா, மதகாஸ்ர், மாருதிஸ், ஸ்வாஸிலேஸ்ட், ஸேம்பியா போன்ற நாடுகளில் 75 சதம் வரை எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

கல்வி தளம் விரிவடையாததால் இந்தியா உலகில் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளது. குழந்தைகளின் பள்ளி வருகையும் குறைவாக உள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் அளவிற்கு இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர் அன்று ஆண்ட ஆங்கிலேய அரசை இலவசக் கட்டாய கல்வி தர நிர்பந்தித்த வரலாறு இருந்தாலும், இந்தியாவில் இன்னும் கல்வி நிலை கீழ் முகமாகவே உள்ளது.

இலவச கட்டாயக்கல்வி உத்திரவாதம் தீர்வாக முடியும் குழந்தைகளை பள்ளிகளுக்கு இடம் பெயர்க்கும்.
சிறுவயதிலேயே தொழில் பயிற்சியில் புகுத்தப்பட்டால், பணியில் வல்லவனாகி இளைய வயதில் அதிக கூலி பெறமுடியும் என்ற மாயை உடைக்கப்பட வேண்டும். குழந்தையாக பணிக்கு சேர்ந்தவன் இளைஞனான பருவத்தில் பெறும் கூலியும் இளைஞனாக பணியில் சேருபவன் பெறும் கூலியும் ஒன்றே என்று ஆய்வுகள் சொல்கிறது. குழந்தைத் தன்மைப் பற்றிய புரிதல் தேவை. ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க முடிபவன், சினிமாவுக்கு போகக் கூடியவன், மக்களோடு உரையாட முடிபவன், வேலை செய்யக் கூடியவன் குழந்தையில்லை என்று கிராமத்தில் கருத்து நிலவுகிறது. இதனால் குழந்தை தொழிலாளர் முறை கொடுமை என்று பார்க்கப் படுவதில்லை.

குழந்தைகள் சங்கம் சேரமாட்டார்கள் என்பதும் குழந்தை உழைப்பிற்கு காரணமாகிறது. குடும்பத்தில் உள்ள உழைக்கும் மக்களுக்கு உரிய நியாயமான கூலி கிடைத்தால் அவ்வீட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com