Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

பகத்சிங்கின் இலட்சியப் பாதை
இல.சண்முகசுந்தரம்

“ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டில் ஆளும் வர்க்கமாக இருக்கும் வரை ஆங்கிலேயர்களின் வருகையால் விளைந்த நற்பலன்களை இந்தியர்கள் அனுபவிக்க முடியாது. அவர்கள் பலன்களை அனுபவிக்க வேண்டுமென்றால், ஆங்கிலேய முதலாளிகளின் ஆட்சி தொழிலாளி வர்க்கத்தால் தூக்கியெறியப்பட வேண்டும் அல்லது இந்தியர்கள் வலிமை பெற்று ஆங்கிலேயர்களின் நுகத்தடியை ஒட்டு மொத்தமாக தூக்கியெறியும் வரை காத்திருக்க வேண்டும்”.
- மாமேதை கார்ல் மார்க்ஸ்

1853 ஆகஸ்டு 8 ல் நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் பத்திரிக்கையில் இந்திய விடுதலைப் போருக்கான பாதை குறித்து தன் கருத்தை இவ்வாறு எழுதியுள்ளார். அவ்வப்போது சில போராட்டங்கள் எழுந்தபோதிலும் சுதந்திரம் என்ற இலக்கில்லாமல் மக்கள் பங்கேற்பே இல்லாத காலத்தில்தான் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார். இத்தகைய மார்க்சியப் பார்வையே உண்மையென வரலாற்றில் நிரூபிக்கப்பட்டது. இத்தகைய போராட்டத்தை முன்னின்று நடத்தியர்களில் மிகவும் முக்கியமானவர் மாவீரன் பகத்சிங். காந்திக்கு இணையான மதிப்பும், செல்வாக்கும், பிரபலமும் உடையவராக அக்காலத்தில் விளங்கிய பகத்சிங்கின் வரலாற்று பங்களிப்புகள் மற்றும் தத்துவப் பார்வையே விடுதலை இந்தியாவின் போராட்ட பாரம்பரியத்திற்கு அடித்தளமிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல!

1930 முதல் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த புரட்சியாளராக, அபிமானமும் மதிப்பும் பெற்றவராக உள்ளவர். உயிர்ப்போடும், பெருமையோடும் மக்கள் உணர்வில் கலந்தவர். அடிமைத்தளைக்கு எதிரான குறியீடாக கோஷமாக இன்றும் அடையாளங் காணப்படுபவர் பகத்சிங். மரணத்தை தழுவிய எந்த இந்திய போராளிக்கும் கிடைக்காத ஓர் பெருமை பகத்சிங்கிற்கு கிடைத்ததற்கு ஒரு வரலாற்று ரீதியான உண்மை உண்டு. அதுஎன்னவெனில் உலகளாவிய அளவில் போற்றப்பட வேண்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சியாளர் இந்தியர்களில் தலையானவர் தோழர். பகத்சிங் என்பதே!

மகாராணியின் அனுகூலமான என்றும் மறப்பதற்கு அரிய கீர்த்திமிக்க ஆட்சியில் பல ஆண்டுகள் ஆளவேண்டுமென்று வாழ்த்துகிறோம் என 2 வது மாநாட்டில் தீர்மானம் போட்ட காங்கிரஸ் கட்சி 1920 வரை சுதந்திரத்திற்காகப் போராடவில்லை. 1920 செப்டம்பர் 10 ல் முதன்முறையாக ஓராண்டிற்குள் சுயராஜ்யம் என இந்தியாவில் எழுதுகிறார் காந்தி. 1927 ல் சென்னை காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதை எதிர்த்து

1928 ல் வாபஸ் பெற்றவர் காந்தி. சட்ட மறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்பு சத்தியாகிரகம் என காந்தி அறிவித்த போராட்டத்தை அவர்களே வாபஸ் பெற்றனர்.

ஆனால், இந்தியாவில் இரண்டு இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளில் மிகப் பெரும்பான்மையோர் உயிர் நீத்த புரட்சியாளர்கள். இந்துஸ்தான் சோசலிச குடியரசு ராணுவம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற இயக்கங்களே அவை. அதிலும் குறிப்பாக தோழர். பகத்சிங் அவரது தோழர்களும் நடத்திய போராட்டமும், மரணமும் மிகவும் பிரபலமானதாகும்.

புரட்சி ஓங்குக
ஏகாதிபத்தியம் ஒழிக
உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்

இதுதான் பகத்சிங் எழுப்பிய கோஷங்கள். டில்லி மத்திய சட்ட சபையில் வெடிகுண்டு வீசியபோதும், நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்ட போதும், சாண்டர்சனை சுட்ட-போதும், தூக்குமேடை ஏறிய போதும் எழுப்பிய கோஷங்கள் இவைதான். அன்று மிகவும் புதிய கோஷங்களாக மக்களுக்கு அறிமுகமான ரஷ்ய புரட்சியின் வெளிச்சத்தில் இருந்து உருவான இந்த வார்த்தைகள் ஒரு புதிய அரசியல் தத்துவப் பார்வையை ஈர்ப்பை எழுச்சியை வரலாற்று ரீதியாக இளைஞர்களுக்கு வழங்கியது.

கம்யூனிஸ்ட்டுகள் அதற்கு சற்று முன்பாக எழுப்பத் துவங்கிய இக்கோஷங்கள் மக்களை பிரபலமாக சென்றடையவில்லை. ஆனால் பகத்சிங் எழுப்பிய போது புரட்சிகரமான-தாய் எதிர்பார்ப்புகளை அது உருவாக்கியது. லாகூர் சதி வழக்கு விசாரணை பகத்சிங்கும் அவர்களது தோழர்கள் மீது நடந்து கொண்டிருந்த அதே காலத்தில் தான், உத்திரப்பிரதேசத்தில் மீரட் சதி வழக்கு விசாரணை நடந்து வந்தது. பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டிவிட்டதாக கம்யூனிஸ்ட்டுகள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அது. அறிக்கை விடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய கம்யூனிட்டுகள் திட்டமிட்டனர்.

பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி ஒரு புரட்சி செய்வதன் மூலம் நாட்டை விடுவிக்க தங்களுக்கு உரிமை உள்ளது என்றும், தீவிரமான போராட்டம் மூலமாக தொழிலாளர், விவசாயிகள் மற்றும் இதரப் பகுதி மக்களைத் திரட்டி அரசை தூக்கியெறிந்து விட்டு சுதந்திரம் அடைவதன் மூலம் சோசலிச சமூகத்தை நோக்கி முன்னேற்றமடைவதே தங்கள் லட்சியம் என்றும் மீரட் சதி வழக்கில் கம்யூனிஸ்ட்டுகள் வாதாடினர். ஏராளமான தத்துவ கருத்துக்களை முன்வைத்து வாதாடினர். ஆனால், பத்திரிக்கைகளால் அந்த கருத்துக்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் லாகூர் சதி வழக்கு விசாரணையில் பகத்சிங் எழுப்பிய கருத்து விவாதங்கள் நாட்டை உலுக்கி எடுத்தன.

புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக என்று எங்களது வாதத்தில் நாங்கள் தெளிவாக விளக்கியுள்ளோம். முதலாளித்துவத்தின் அவலத்திற்கு முடிவு கட்டுவதே புரட்சி என்று நாங்கள் நம்புகிறோம். பிரிட்டிஸ் நீதிமன்றத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு மேடையாக்கி, தத்துவப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பகத்சிங்கின் பல கருத்துக்களை பிரசுரிக்க பத்திரிக்கைகள் மறுத்தன. ஆனால், பகத்சிங் ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரத்தில் மிக உறுதியுடனும் செயல் வேகத்துடனும், பல தந்திரங்களை கையாண்டார். வரும்போதும், போகும் போதும், விசாரணை இடையேயும் வலுவான கோஷங்களை எழுப்பினர். தினந்தோறும் பிரிட்டிஸ் போலீஸ், ஆட்சியாளர்களின் மனித விரோத செயலை கண்டித்தனர். கிரிமினல்போல சிறைக்காவலில் நடத்தக் கூடாது என போராடினர். தினந்தோறும் போலீசோடு மோதல், கைகலப்பு, தாக்குதல்கள் என கோர்ட் மற்றும் சிறைச்சாலைகளில் போராடினர்.

இந்த தந்திரத்தை எந்த இந்தியப் போராளியும் மேற்கொண்டதில்லை. பகத்சிங் மேற்கொண்ட தன் நோக்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் வலுவான போர்க்குணமாகும். தேசமெங்கும் போராளிகளும், தியாகிகளும் நிறைந்த அக்காலத்தில் வலுவான தத்துவப் பிடிப்புள்ள போர்க்குணம் மிகவும் அரிதானதாகவே இருந்தது.

ஆனால், 1917 ரஷ்யப்புரட்சிக்குப் பின் நிலமை மாறத்துவங்கியது. முதல் ஒத்துழையாமை இயக்கம் துவங்கி முடிந்திருந்த காலத்தில் காங்கிரஸிற்குள் சுதந்திரம் என்ற குரல் ஒலிக்கத் துவங்கியது. மக்கள் முதன்முறையாக அரசியலில் பங்கேற்ற போராட்டம் பல மாற்றங்களின் அடித்தளமாக மாறியது. கம்யூனிடுகளுடன் விவாதங்களில் ஈடுபடவும் இயக்கத் தொடர்பு கொள்ளவும் பல இளைஞர்கள் முன் வந்தனர். 1925 ல் துவங்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசு ராணுவம், சேவைத்துறைகள், இரும்பு, கப்பல், கனிம வளங்கள் உட்பட அனைத்தையும் தேசிய மயமாக்க வேண்டும் என்று அறிவித்தனர். இது தான் சோசலிசத்தை நோக்கிய முதல் அறிவிப்பாக வெளிவந்து புரட்சி எண்ணங்களை பரப்பியது.

1926 செப்டம்பர் 8 ல் டில்லியில் நடைபெற்ற நவஜவான் பாரத் சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஓர் செயல்திட்டத்தை உருவாக்கும் விவாதத்தை எழுப்பியது. சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதே மாற்று லட்சியம் என்றும் தனிப்பட்ட போராட்ட செயல்களை நிறுத்திக் கொள்வது என்றும், தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவு ஜீவிகள், நடுத்தர வர்க்கத்தை அணிதிரட்டுவது எனவும் முடிவெடுக்கப்படுகிறது. 1926 - 27ல் சோசலிசத்தை நோக்கிய விவாதங்கள் வலுப்பெறுகின்றன. இக்காலத்தில் தொழிலாளர் போராட்டங்கள் எழுச்சிகரமான வடிவத்தை அடைகின்றன. சோசலிசப் போராட்டங்கள் ஒரு அரசியல் வடிவம் பெறும் காலமாக அவை மாறுகின்றன. இதில் பகத்சிங் பங்கு முதன்மையானதாகும்.

1920 ல் அக்டோபர் 7 ல் தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை இந்தியாவில் ஒரு ஸ்தாபன வடிவத்தை அடைய முயற்சித்ததும் இந்த காலத்தில் தான். 1928 டிசம்பர் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட கம்யூனிஸ்டு போராளி சோகன் சிங் ஜோசை பகத்சிங் சந்தித்து பேசும்போது உங்கள் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளில் முழுமையாக நாங்கள் உடன்படுகிறோம். ஆனால் மக்கள் எழுச்சியை நம்பிக்கையுடன் உருவாக்க ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் மூலம் எதிரிகளின் ஒவ்வொரு தாக்குதலிலும், எதிர் தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வாதிடுகிறார்.

1928 ல் நவஜவான் பாரத் சபா பிரகடனமும், 1929 வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங் மற்றும் பி.கே, தத் வெளியிட்ட துண்டு பிரசுரங்களும், 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் விவாதத்தில் விநியோகிக்கப்பட்ட எச்.எஸ்.ஆர்.ஏ வின் பிரகடனமும், 1930 ஜனவரியில் வெடிகுண்டின் தத்துவம், நான் ஏன் நாத்திகன் ஆனேன் ஆகியவை அக்காலத்தில் மிகவும் பிரபலம் பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆவணங்களாகும். இந்தியாவில் விடுதலைப் போராட்ட பாதை மற்றும் எதிர்கால இந்திய சமூக அமைப்பு என்பது சோசலிச சமூகமே என மார்க்சிய தத்துவத்தின் விஞ்ஞான சோசலிச கண்ணோட்டத்துடன் பகத்சிங் படைத்த படைப்புகளே இவையாவும். சுதந்திரப் போரில் மகத்தான பங்களிப்பை இந்த ஆவணங்கள் அளித்தன. தனது 20, - 23 வது வயதில், பெரும் புரட்சிகர பணிகளுக்கு இடையே அடக்குமுறை ஆட்சியின் கீழ் புத்தகங்கள் தடைசெய்யப்பட்ட போது எழுதப்பட்டது எனும்போது நமக்கே ஆச்சரியம் எழுகிறது.

மிகவும் பிரச்சித்தி பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டது பிரிட்டிஸ் நீதிமன்றத்தில் தான். ஏகாதிபத்தியத்தின் கொடுஞ் சுரண்டலையும், மக்கள் அனுபவிக்கும் அவலங்களையும் எடுத்துரைத்த அவர், சோசலிச அடிப்படையிலான சமூக மாற்றத்தை கொண்டு வருவது ஒரு மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரின் கடமை. இல்லையெனில் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையும், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டும் கொடுமையும் தொடரும். துன்பங்கள் மற்றும் படுகொலைகள் மூலம் மனிதநேயத்தை முதலாளித்துவம் சிதைக்கும் என்றார். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது உலகளாவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே என்றும் வாதிட்ட அவர் இப்பின்னணியிலேயே புரட்சி ஓங்குக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெல்லட்டும், ஏகாதிபத்தியம் ஒழிக என்ற கோஷங்களை முழங்கினார். அதற்கான விளக்கங்களையும் அவரே அறிவித்தார். முதல் கோஷமான புரட்சி என்பது சுதந்திரப் போராட்டத்துடன் நிறைவடையாது என்றும், சுரண்டலற்ற சமூக பொருளாதார அமைப்பை உருவாக்கும் வரை போராடுவதென்றும் கூறினார்.

இரண்டாவதாக உழைக்கும் பாட்டாளி வர்க்கமே புரட்சிக்குத் தலைமை தாங்கி சோசலிச சமூகத்துக்குப் போராடும் என்றார்.

மூன்றாவதாக எழுப்பிய கோஷத்தில் தான் அவரின் தத்துவார்த்த தெளிவின் ஆழம் அடங்கியுள்ளது. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் ஒழிக என்று ஒருபோதும் பகத்சிங் குரல் எழுப்பியதில்லை. மாறாக, ஏகாதிபத்தியம் ஒழிக என்று கூறுவதன் மூலம் குறுகிய தேசியவாதம் தனக்கு இல்லையென்றும, காலனியாதிக்கத்தை முழுமையாக வீழ்த்துவதன் மூலம் உலக மக்களுக்கான விடுதலை என்பது தமது கொள்கை என்றும் தெளிவான கருத்தை முன் வைக்கிறார்.

இதற்கான போராட்ட வியூகங்களை வகுக்கும் போது இளைஞர்கள், மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிறையில் இருந்தே அறைகூவல் விடுக்கிறார் பகத்சிங்.

1931 மே 2 ல் இளம் அரசியல் ஊழியர்களுக்கு என்ற கட்டுரையில் உண்மையான புரட்சிப்படை என்பது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள், கிராமங்களில் உள்ள விவசாயிகளுமே என்றும், அவர்களைத் திரட்டுவதே இளைஞர், மாணவர் அமைப்புகளின் கடமையாக இருக்க வேண்டும் என்கிறார். இதுவே நம் ஒவ்வொருவருக்குமான லட்சியப் பாதையாகட்டும்....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com