Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2008

காலம் கடந்தாலும் நீதி வெல்லும்
எஸ்.வி. சசிகுமார்

காவிப்படையின் ஏவல் நாய்கள் நிகழ்த்திய நரபலி வேட்டை பற்றிய சமீபச் செய்திகளிலேயே மிகவும் சிறப்பானது மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்புதான். குஜராத் படுகொலைகளில் மிகக் கொடூரமானதாகக் கருதப்பட்ட வன்செயல்களில் ஒன்றான பில்கிஸ் பனோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 18 பேரில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து தனி நீதிமன்றம் ஜனவரி 21ல் அறிவித்த தீர்ப்பு நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

2002ம் வருடம் படுகொலைகள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில் பெரும்பாலானவற்றை சொத்தைக் காரணங்கள் கூறித் தள்ளுபடி செய்து, குற்றவாளிகளை விடுதலை செய்து அதிகார வர்க்கத்தைத் திருப்திபடுத்திய நீதிமன்றங்கள் போலன்றி மும்பை சிறப்பு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புக் கூறியது. உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது தான்.

ஆனால் இந்த வழக்கிலும் கூட ஏழு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுன்றி பெரிதும் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பனோ என்ற இஸ்லாமியப் பெண்மணிக்கும், அவர் பறிகொடுத்த 14 உறவினர்களுக்கும் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

குற்றத்தின் கொடூரத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் எவராலும் மறக்க இயலாது. தஹோத் மாவட்டத்தின் ரந்திக்பூர் கிராமத்தில் 2002 மார்ச் 3 ல் நடைபெற்ற அந்த மானக்கேடான செயலை யாரால்தான் மறக்க இயலும் இரண்டு ஜீப்களில் வந்து பில்கிஸ் பனோவின் வீட்டைச் சுற்றி வளைத்துப் பேயாட்டம் ஆடிச்சென்றது ஒரு பெருங்கூட்டம். வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து பில்கிஸ்ஸின் மூன்று வயதுக்குழந்தை உட்பட நான்கு குழந்தைகளையும் 10 உறவினர்களையும் கொன்று குவித்தன வெறி பிடித்த மனித மிருகங்கள். அது மட்டுமா?

நிலைகுலைந்து போய் நின்ற பில்கிஸ்ஸை கர்ப்பிணி என்றும் பாராது நிர்வாணப்படுத்தி கற்பழிக்கவும் தயங்கவில்லை அந்த வெறியர்கள். இரத்த தாகத்தையும், காமப்பசியை யும் தீர்த்துக் கொண்டு வெளியேறிய கூட்டம் செய்த ஒரே நல்ல செயல் பில்கிஸ்ஸை உயிரோடு விட்டது தான். அதனால் தான் கொடூரக் குற்றங்களுக்கு ஒரே நேர் சாட்சியாக இருந்த பில்கிஸ் நியாயம் கேட்டு நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டி இறுதியில் ஒரளவிற்காவது வெற்றியும் பெற முடிந்தது.

இது சாதாரண வெற்றியல்ல, பெரும் துயரங்களையும், பயமுறுத்தல்களையும் புறம் தள்ளி அஞ்சா நெஞ்சுடன், சலியாது உழைத்து அயராது சமர் புரிந்து, பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் பெற்ற பெரும் வெற்றி இது. அவருக்கு நீதி கிடைக்க விடாது தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த காவல்துறையினரும், சமூக விரோதிகளும், மதவெறியர்களும் வெட்கித் தலைகுனியச் செய்த மாபெரும் வெற்றி என்றால் மிகையல்ல. பில்கிஸ்ஸின் தொடர்ந்த முயற்சிதான் உச்ச நீதிமன்றம் குஜராத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பி வைக்கச் செய்தது. அதனாலேயே வழக்கு விசாரணையும் மும்பை தனி நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஓரளவிற்காவது நியாயம் கிடைத்த நிலையில் குஜராத்திலேயே தங்க விருப்பம் தெரிவித்த பில்கிஸ் பனோ அமைதியாக வாழ தனக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குஜராத் வன்கொடுமைச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர் என்பதை வெளி உலகிற்கு உணர்த்துவதாக இது இருக்கிறது. என்ன விலை கொடுத்தும் எத்தனை தேர்தல்களை வென்றாலும் மோடியும், காவிப்படையினரும் வெட்கத்தில் தலை குனிய வேண்டிய விஷயம் இது.

‘‘நள்ளிரவில் ஆபரணங்களுடன் தன்னந்தனியாக இளம் பெண் ஒருத்தி நகர்வலம் வரும் நிலை வந்தால் தான் உண்மையான சுதந்திரம் வந்து விட்டதாக என்னால் ஒத்துக் கொள்ளமுடியும்’’ என்று கூறிய காந்தி பிறந்த மண்ணிலேயே உண்மையான சுதந்திரம் இன்னும் வரவில்லை என்பதைத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக வாக்குமூலமும், சாட்சியமும் கூறிய காரணத்திற்காக அவர் மத வெறியர்களின் பயமுறுத்தல்களுக்கும், தொல்லை களுக்கும் ஆளாக நேரிட்டதையும், அவர் பயந்து பின்வாங்கிய போது வழக்குகள் தொடுத்து அவரை மேலும் தொல்லைப்படுத்தியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சால்வி. சதி செய்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், கற்பழித்தல் போன்ற குற்றங்களை எல்லாம் விசாரித்து 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது பரவலாக வரவேற்கப்பட்டாலும், சில கேள்விகளை எழுப்புகின்றன. குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரித்து வழக்குத் தொடுத்த மத்திய உளவுத்துறை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினாலும் நீதிபதி அதை நிராகரிக்க சொல்லிய காரணம் வேடிக்கையாக இருக்கிறது.

தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமானால் அந்த வழக்கு ‘அபூர்வமான வழக்குகளிலேயே மிகவும் அபூர்வமான’ (Rarest of Rare) வழக்காக இருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கை அப்படி ஒரு வழக்காக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை சிறப்பு நீதிபதி சால்வி வெளியிட்ட கருத்து. தூக்குத் தண்டனை சரியா, தவறா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டியதில்லை.

ஆனாலும், குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு கர்ப்பிணிப் பெண் மானபங்கம் செய்யப்பட்டு, பலரால் கற்பழிக்கப்பட்டதும் ‘‘அபூர்வமானவற்றுள் மிக அபூர்வமான’’ வழக்காக ஏன் எடுத்துக் கொள்ளப்பட முடியாது என்பது புரியவில்லை இந்தக் கொடுமையைவிடவும் கொடுமையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சட்டங்களின் நியாயத் தன்மையையே சால்வியின் கருத்து கேள்விக்குறியாக்குகிறது.

அது மட்டுமல்ல, சட்டத்தின் தெளிவற்ற தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது. இத்தகைய சட்டங்களின் அடிப்படையில் நீதிபதிகள் உசிதம் போல் முடிவெடுக்கும் நிலை எவ்வளவு ஆபத்தானது. என்பதையும் இது உணர்த்துகிறது. அரசு மற்றும் பணமும், செல்வாக்கும் பெற்ற பெரிய மனிதர்கள் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கும் வேளைகளில் நீதி மன்றங்களையே அவர்கள் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து தங்கள் விருப்பம் போல் தீர்ப்பைப் பெறுவதற்கும் இது போன்ற சட்டக் குறைபாடுகள் பயன்படுமோ என்று அஞ்ச வேண்டி யிருக்கிறது. மதவாதிகளுக்கும் சட்டம் வளைந்து கொடுக்கும் நிலையும் ஏற்படலாமல்லவா?

உதாரணத்திற்கு 2001 டிசம்பர் 13-ல் டில்லியில் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலும், அதைத் தொடர்ந்து 13 காவலர் பலியாகியதும் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர் முகம்மது அஃப்சல் அவர் குற்றத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாரா என்பதற்குப் போதிய வலுவான சாட்சியமும், சான்றும் இல்லை என்ற நிலையிலும் கூட அவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டிருப்பதைப் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

உச்ச நீதிமன்றமும் வேறுசில நீதிமன்றங்களும் அவர் எந்த பயங்கரவாத இயக்கத்துடனும் சம்பந்தப்பட்டவர் இல்லை என்று உறுதி செய்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றன. இந்நிலையிலும் அவருக்கு மரண தண்டனை டில்லி நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கொடுத்திருப்பதின் நியாய, அநியாயம் பற்றிய சர்ச்சையை ஒதுக்கிவிட இயலாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டையே இது போன்ற விஷயங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன.

எது எவ்வாறாயினும், பில்கிஸ் பனோ வழக்கு முடிவு நியாயம் கேட்டுப் போரிட்ட அந்த இளம் பெண்ணின் நெஞ்சுரத்திற்குத் கிடைத்த பெரும் வெற்றி என்பதை மறுக்கமுடியாது.

இன்னமும் ஏராளமான வழக்குகள் குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவ்வழக்குகளும் துரிதமாக விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் மதவெறியர்களின் பேயாட்டம் அங்கு மட்டுமின்றி வேறு மாநில அரங்குகளிலும் தொடரும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் புறக்கணிக்க முடியாதது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com