Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2008

குஜராத் 2002 இனப்படுகொலை
சண்முகசுந்தரம்

ஆயிரம் மனிதர்கள் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்படுகிறார்கள். கருவிலிருந்து குழந்தையை கொலைவாளினால் உருவி வெளியே எடுக்கிறார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக வன்புணர்வு செய்யப்பட்டு சாகடிக்கப்படுகிறார்கள். உடையின்றி, உணவின்றி நாட்கணக்கில் பெண்கள், குழந்தைகள் விரட்டப்படுகிறார்கள். ஆழமாய் பள்ளம் தோண்டி உயிருடன் புதைக்கப்படுகிறது ஒரு மனிதக் கூட்டம். உயிருடன் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, எரியும் தீயில் தூக்கி வீசப்படுகிறார்கள்.

ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம் ‘கொலைகளை வேகப்படுத்து, எரித்து சாம்பலாக்கு‘ என மதம் பிடித்து அலையச் செய்கிறது திரிசூலங்களுடன். இது பெருமையின் வரலாறா? மனித வரலாற்றின் எந்தப் பக்கத்தில் இதை எழுதுவது? நாகரீக சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய பின் நகர்தல் கோட்பாடாக எழுதவேண்டிய உண்மைகளை எந்த மொழியில் எழுதுவது?.

சட்டங்களாலும், அதிகாரத்தாலும் புதைக்கப்பட்ட உண்மைகள் மீண்டும் எழுந்து வந்து பேசுகின்றன தாங்கள் மயானங்களுக்கு அனுப்பப்பட்ட கொடுமைகளை. காலத்தின் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பிணங்கள் நம் முன் வந்து பேசுகின்றன. “நடந்ததை பேசிப்பயனில்லை’’ என்பவர்களே! நீங்கள் ஒரு ஓரமாய் ஒதுங்கி நில்லுங்கள்., என வரிசையாய் வருகிறது மனிதர்களாய் எரிந்து போன பிணங்கள்.

கொன்றவர்கள் கூறுகிறார்கள் ‘இது முடிந்து போனது’ என, வாழ்பவர்களே! கூறுங்கள்... இது முடிந்து போனதா? எனும் ஒரு கேள்வி ஓராயிரம் மனிதர்களால் எழுப்பப்படுகிறது. தீயின் நாக்குகள் உங்கள் நினைவுகளின் ஆழத்தில் இருக்கும் வெறுப்புகளை சுட்டுப் பொசுக்கும். ஆம் காலத்தின் பின்னால் என்றால், அது கடந்து போய்விட்ட காலம் மட்டுமல்ல. நிகழ்காலத்தின் நொடிகளிலும் எதிர் காலத்தின் திசைகளிலும் என ஓர் புதிய அர்த்தம் அனைத்து மொழிகளாலும் உணர்த்தப்படுகிறது. கொலைகாரர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அடுத்த சந்தர்ப்பம் எப்போது? என அரசை கேட்கிறார்கள். சொல்லுங்கள் இது முடிந்து போனதா?

ஒரு புத்தகம் என்ன செய்யும்? பாசிசம் இந்தியாவில் உள்ளதா? மதம் தேவையா? பதில் இதுதான். ‘குஜராத் 2002 இனப்படுகொலை’புத்தகம் படியுங்கள். என் இந்திய தேசத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும்? பதில் ஒன்றுதான்., குஜராத் படுகொலைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையெனில் நீ எதையும் செய்ய முடியாது.

அரசு அதிகாரத்தினால் பட்டை தீட்டப்பட்ட திரிசூலங்களின் கூர்மையின் நுனியில் உங்கள் கண்களை வைத்துப் பாருங்கள். மயானங்களில் பறந்து கொண்டிருக்கும் காவிக் கொடிகளின் கீழ் எழுதப்பட்டிருக்கும் வரிகளை வாசியுங்கள். ஆந்தைகளும் ஓநாய்களும் பேசும் வார்த்தைகளில் இருந்து அறிந்து கொள்ளுங்கள். ‘மீண்டும் இது நடக்கும். காத்திருங்கள் எதிர் கொள்ளுங்கள் அல்லது தற்கொலை செய்து இறந்து விடுங்கள். மீண்டும் அதிகாரத்தை நாங்கள் வென்றிருக்கிறோம் ! ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் பலர் உயிர் பெற்று எழுந்து பேசுகிறார்கள். அருகே இருப்பவரை காட்டுகிறார்கள், “இவர்தான் எங்களை உயிருடன் எரித்தவர் என’’. படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும், என்ன செய்யப் போகிறீர்கள் என.

ஆம். இது கொலைகாரர்களுடன் நடந்த உரையாடல் அல்ல. கொன்று எரிக்கப்பட்டவர்களின் வார்த்தைகளால் கூறப்பட்ட ‘மறுகூறல்‘ என்று கொள்ளலாம். ஏனெனில் இந்த உரையாடல்களில் இரண்டு அர்த்தம் உள்ளது. முதல் அர்த்தம் நீதிமன்றத்தால் வாசிக்கப்பட வேண்டியது. ஆனால் கண்களுக்கு பதிலாக கருப்பு துணி மட்டும் உள்ள நீதிதேவதையால் இதை வாசிக்க இயலாது. பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் கூட பயப்படுவார்கள். அல்லது தராசைக் கொண்டு பாதிப்பின் மறுதட்டில் பணத்தை வைத்து எடை போடுவார்கள்.

சட்டங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். இரண்டாவது அர்த்தம் நிகழ்காலத்தின் நம்மால் வாசிப்பில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. கொலைகாரர்களின் செயல்முறை விளக்கங்களை அல்ல, மாறாக கொலையுண்டவர்களின் கேள்விகளை. ஆம் இது எப்படி நிகழ்ந்தது? ஒரு மாநிலமே மனித குணமின்றி இப்படி மாறிப்போனதின் பின்னணி என்ன? அரசும், மதமும் இணைந்த பாசிசம் ஒர் தற்செயல் சம்பவமா? இந்த கொலைகளின் துவக்கம் எது? இவர்கள் தங்களுக்குள் குரோதத்தை வளர்க்க விதைத்தது எதை? ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம் ஓர் பெரும் மனித அழிவின் செய்தியா? கோவில் களில் என்ன ஓதப்படுகிறது? அங்கு யார் வாழ்கிறார்கள்? இவர்களின் கடவுள்கள் பசிக்கு மனித பிணங்களை உண்பவர்களா? தாகத்திற்கு மனித இரத்தம் குடிப்பவரா? மனித எரிப்பின் மீது மந்திரம் ஓதப்படுகிறதா? கடவுளின் கண்களில் இருந்து கொலைகளும் வன்புணர்வுகளும் அருளாக அளிக்கப்படுகிறதா?.

தலை குனிந்து தன் முகத்தை திரிசூலங்களால் மறைத்துக் கொண்டு ஜெய் ஸ்ரீராம் என வாஜ்பாய் ஒதிக்கொண்டிருப்பது நம் காதுக்கு கேட்கிறது. நரேந்திரமோடி மாலையுடன் ஆசிர்வதித்துக் கொண்டே நடந்துவருகிறார். “நல்லது செய்தீர்கள். இன்னும் நிறைய செய்யுங்கள் என கொலைகளுக்கு உத்வேகம் அளித்துக் கொண்டு வந்தவர், கொலைகாரர்களின் பெற்றோர்களை பார்த்து “நீங்கள் பாக்கியசாலிகள்’’ என ஆசிர்வதிக்கிறார்.

“அவர் இன்றி எதுவும் நடந்திருக்காது. அவர் தான் இதை துவக்கி வைத்தார். முதலமைச்சராக இல்லையெனில் அவரே வெடிகுண்டு வீசிருப்பார் என நரபலி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு கொலை வெறியுடன் புத்தகமெங்கும் வருகிறார் நரேந்திர மோடி. இவர் தான் கலவரத்தின் சூத்திரதாரியென புத்தகம் சந்தேகமின்றி ஒங்கிச் சொல்கிறது.

2002 பிப் 27 கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையாக்கப்பட்ட சில மணி நேரத்திற்குள், முதல் தற்காலிக தகவல்கள் உறுதியாவதற்கு முன்னரே, அம்மாநில முதல்வர் போரை அறிவிக்கும் பத்திரிக்கை செய்தி தருகின்றார். “இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது ஒரு மதவாதச் சம்பவம் மட்டுமல்ல ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் தீவிரவாதத்தாக்குதல்’’ என. இதன் உள் அர்த்தம் மிகச்சரியாக பரப்பப்படுகிறது “ஏற்றுக் கொள்ள முடியாத இச்சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும்’’ இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாம் அந்த மொத்த சமூகத்தையும் கொன்று குவிக்க வேண்டும் ’’என மோடியின் வாயில் வராத அவர் மன எண்ணங்கள் குஜராத்தின் மீது நெருப்பை பற்ற வைக்கிறது.

பிப் 27, 28ல் குஜராத் எங்கிலும் நடைபெற்ற “திட்டமிடும் கூட்டங்கள்’ எங்கு நடந்தன, யார் கலந்து கொண்டார்கள் என்பதில் துவங்கி ஆசிஸ் கேத்தனின் (தெகல்கா) புலனாய்வு அந்த சில நாட்களை முழுமையாக நமக்கு காட்டுகிறது. “அந்த யோசனை மோடியிடம் இருந்தே வந்தது’ என பல்கலைக்கழகத்தின் தலைமை தணிக்கைச் செயலாளர் தன் பங்கை விவரிக்கத் தொடங்கி இனி லத்தி பயன்படாது ஏகே. 56 எடுக்க வேண்டும். நம்முடைய எதிரி முஸ்லீம், கிறிஸ்தவர் மட்டுமல்ல சிகப்பு திமிங்கலமான கம்யூனிஸ்டுகளும் தான் ஏனெனில் கம்யூனிஸ்டுகள் வளர்கிறார்கள், ஆகவே ஒர் இந்து படையை உருவாக்க வேண்டும் என ஒவ்வொரு நிமிட திட்டமிடுதலை விவரிக்கிறார்.

எங்கள் விருப்பப்படி கொன்று அந்த இடத்தை சுடுகாடாக மாற்றி விட்டோம். நான் அதற்காக பெருமைப்படுகிறேன். தூக்கில் இடப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் நான் ஜூஹாபூரா சென்று வருகிறேன். அங்கு 78லட்சம் முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். நான் அவர்களை முடித்துவிடுவேன் எனத் துவங்கும் பஜ்ரங்கள் தலைவரான பாபு பஜ்ரங்கியின் கொலை ஒப்புதல் வாக்கு மூலங்கள்4கும் நமக்கு மோடி அரசின் புதிய நாற்காலிகள் யார் மீது போடப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.

அந்த கர்ப்பிணிப் பெண்ணை நான் தான் வகுந்தேன். எனக்கூறும் பாபுபஜ்ரங்கி மகிழ்ச்சியாக இருக்கிறது நான் அவர்களை கொன்று விட்டு வீடு திரும்பினேன். உள்துறை அமைச்சருடன் உரையாடி விட்டு உறங்கச் சென்றேன். ராணா பிரதாப்பை போல் உணர்ந்தேன் அவரது கதைகளை கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் அன்று செய்ததை நானே செய்தேன் என்கிறார். மதவாத வரலாறு போதிக்கப்பட்டதின் விளைவை, தன்னை ஒரு வரலாற்று நாயகராக கருதிக்கொண்ட உண்மையைக் கூறும் பாபு பஜிரங்கி உள்துறை அமைச்சருடன் பேசியதை மட்டுமல்ல நரேந்திர மோடி கலவர இடத்திற்கு வந்ததை, வாழ்த்தியதை மட்டுமல்ல தான் தலைமறைவான பின்பு மோடியுடன் பேசியதையும் அவர் கூறித்தான் சரணடைந்ததாகவும் கூறுகிறார். சரணடைந்த விதம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை விவரிக்கும் அவர், சிறைச்சாலை சொகுசுகளையும் கூறிவிட்டு ‘நீதியின்‘ தோலையும் உரித்து தொங்கவிடுகிறார். மூன்று நீதிபதிகளை எனக்காக நரேந்திர மோடி மாற்றினார். மூன்றாவது நீதிபதி என்னுடைய கோப்பு எதையும் பார்க்காமல், எனக்கு பிணை (ஜாமின் ) அனுமதித்தார் எனக் கூறும் பாபு கடவுள் இருப்பதை நம்புகிறேன் என்கிறார்.

இராக்கெட் செலுத்தும் கருவியை, வெடிகுண்டுகளை என் தொழிற்சாலையில் தயாரித்தேன். பஞ்சாப், உ.பி. ம.பி.யிலிந்து ஆயுதம் கடத்தி வந்தேன். எனக் கூறும் கோத்ரா எம்.எல்.ஏ. ஹரேஷ் பட் 1987 ல் பாபர் மசூதி இடிப்புக்காக பெரிய கட்டிடத்தை இடிக்கும் பயிற்சியை, துப்பாக்கி சுடும் பயிற்சியை நான் தான் அளித்தேன் என்றும் கூறி இது 1987க்கு முன்னதாக துவங்கி இன்னும் முடிவு பெறாத இந்து மதவெறி வரலாற்றின் தொடர்ச்சியென அழுத்தமாய் பேசுகிறார்.

நசீமா மிருதுவானவள், கனிந்தவள், அவள் மீது ஏறினேன். அவளைப் பாடம் செய்து ஊறுகாயாக மாற்றினேன். என தான் வன்புணர்வு செய்ததை அம்மன் படத்தின் முன் சத்தியம் செய்து ரிச்சர்ட் கூறுகையில் அவருடைய மனைவியும் அருகில் இருக்கிறார். ‘ஆர். எஸ். எஸ், வி.எச்.பி, சகோதரர்கள் ஈர்க்கப்பட்டிருப்பார்கள் இல்லையா, பழங்கள் கைவசம் இருந்தால் யாருக்குத்தான் ஆசை வராது என்கிறார்’ ஜெய் ஸ்ரீராம் எனக் கூறிக் கொண்டு. அவரை மிதித்து இழுத்து, பெரிய வாளால் வெட்டி, கை, கால்களை துண்டாக்கி உடல் மீது உயிருடன் நெருப்பு வைத்துக் கொன்றோம் காங்கிரஸ் எம்.பி., காப்ரியை கொன்றதை விளக்கும் மதன் சாவல் கலவரத்தில் ஈடுபட்ட முக்கியமான தலைவர்களின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை என்கிறார்.

எந்தநேரமும் மரணித்திட தயாராகவே இருந்தேன் எனக் கூறும் தெகல்கா ஆஷிஸ் கேத்தனின் மிக அதிர்ச்சிக்குரிய உரையாடல் அரவிந்த் பாண்டியா உடனானது. “கே.ஜி.ஷா ஒர் ஆர்.எஸ்.எஸ்காரர் நானாவதிக்கு பணம்தான் குறி“ என இந்திய நீதித்துறையின் மீது கருப்புப் போர்வையை வீசும் அரவிந்த் பாண்டியா யார் தெரியுமா? இக்கலவரங்களை விசாரிக்க அரசால் அமைக்கப்பட்டுள்ள கமிஷனின் முன் ஆஜராகும் மாநில அரசு வழக்கறிஞர்தான் இவர். இவர் கூறும் ஷாவும், நானாவதியும் தான் அந்த கமிஷனை தலைமை தாங்கும் இரண்டு நீதிபதிகள் எனக் கூறுவதிலிருந்து புரிகிறது, இக்கமிஷன் விசாரணை இன்னும் நூறாண்டானாலும் நிறைவு பெறாது?

அனைவரது வாக்குமூலங்களும் பல உண்மைகளை உணர்த்துகின்றன. எதிர்காலத்தின் ஆபத்துக்களைத்தான் இவர்கள் வாக்குமூலங்களாக தருகிறார்கள். பாசிசம் பேயாட்சி செய்யும் போது சாத்திரங்கள் பிணம் தின்கின்றன. இந்த வரலாறு இந்தியாவின் எதிர்கால ஆபத்தை நம் சமூகத்திற்கு எச்சரிக்கிறது. இக்கலவரங்களில் ஈடுபட்டது யார்?

திட்டமிட்டதும், வழிநடத்தியதும், பலன் அடைந்ததும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி தான். ஆனால் ஈடுபடுத்தப்பட்டது மலைவாழ் மக்கள், தலித் மக்கள், வேலையில்லாத ஏழை இளைஞர்கள். உணவுக்காக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் நீண்ட போதனை ஒரு தத்துவார்த்த போதை ஜெய் ஸ்ரீராம் எனும் வார்த்தையால் இவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது. ஆம். ஷாகா வகுப்பின் பாசிச சாரத்தை அரசின் அதிகாரம் இந்து மக்களின் மனதில் ஏற்றியுள்ளது. அதனால் தான் இந்துவாக உள்ள காங்கிரஸ்காரர்களும் கையில் வாள் ஏந்தி கிளம்பியிருக்கிறார்கள்

பாசிச அரசின் அதிகாரம் இந்து மக்களின் உணர்வுகளை வெறுப்பின் அரசியலாக மாற்றிய கொடூரம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட காலம். ஆனால் மாணவர்களுக்கு பாடமாக போதிக்க வேண்டிய வரலாறு இது. பழிக்கு பழியென்றும், மீண்டும் தொடரும் என்றும் இவர்கள் கூறுகையில் ஒன்று புலப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் கால் ஊன்றிய பகுதிகள் மற்றும் கலவர பகுதிகளின் பொருளாதார, பண்பாட்டு வரலாறு விமர்சனப்பூர்வமான ஓர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மை பாசிச இந்து மதவாதத்தை விதைப்பது ஆர்.எஸ்.எஸ் எனில் நீரூற்றி வளர்ப்பது யார்? சிறுபான்மை வகுப்பு வாதம் மற்றும அரசு அதிகாரம் இதில் என்ன பங்கு வகித்துள்ளது என ஓர் ஆய்வை மீனாட்சி புரம் துவங்கி கோவை வழியாக குஜராத் வரை நடத்தவேண்டியிருக்கிறது என இப்புத்தகம் சொல்லாமல் சொல்கிறது.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையும் மிக முழுமையான புலனாய்வுத் தகவல்களுடன் கூறியுள்ள இப்புத்தகம், முதல் தகவல் அறிக்கையில் உள்ள அனைத்தையும் விவரிக்கிறது. “அவர்கள் ஒரு நாள் போட்டி விளையாடி 60 ஓட்டகங்களை இலக்காக்கியுள்ளனர். நாம் டெஸ்ட் மேட்ச் விளையாடி நமது பலத்தை நிருபிக்க வேண்டும் என ரயிலில் இருந்த, இறந்த கரசேவகர்களின் தலைவர் பேட்டியை கூறும் புத்தகம்”, மதச் சார்பின்மையின் மீது நம்பிக்கையுள்ளவர்களை பார்த்து பல கேள்விகளை எழுப்பி, விடைகாணா சமூகத்தை நோக்கி செல்லுங்கள் எனக் கூறுகிறது. இந்து சகோதரர்களின் மரணத்திற்கு பழிக்குப் பழி எனக் கூறுபவர்கள், வன்புணர்வு, கொலை, கொள்ளை ஏன்? முஸ்லீம் வீட்டின் கதவை உடைப்பதைக் கூட இந்து மதத்திற்கான சேவையாக கருதும் மனநிலைக்கு மாற்றப்பட்டது எப்படி?

கோடிக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வெளியே கைகட்டி நிற்கிறார்கள். ஆயிரமாயிரம் இந்துக் குழந்தைகள் நிர்வாணங்களுடன் பிச்சையெடுத்துக் கொண்டு திரிகிறார்கள். கால் வயிற்றுக்கு உணவில்லாமல் பலர் மடிகிறார்கள். இவர்களை சகோதரர்கள் என்று பார்க்காமல் கரசேவகர்களை மட்டும் சகோதரர்கள் என்று பார்க்க கற்றுக் கொடுத்த பாசிச தத்துவம் எது?. இது இந்து மதத்தின் பெயரால் நிகழ்கிறது எனில் இன்று இந்து மதம் யாரின் பிடியில் இருக்கிறது?.

மரண அபாயம் கண்களை மறித்து நிற்கையில், தன் ஒன்பது மாதக் குழந்தையின் நினைவுகளே மூச்சுக் காற்றை உணரச் செய்தது என தன் மனைவியின் நேசிப்பில் நாட்களை கடத்தி இப்புலனாய்வை நடத்திய ஆசிஸ் கேத்தனின் கால்கள் நடந்துபோன கலவரப் பாதையில் பயணிக்கும் நாம் அச்சம் கொள்கிறோம். இனி இது நடவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இப்புத்தகத்தை நமக்கு அளித்த நமது மதிப்பிற்குரிய தெகல்கா ஆசிரியர் தருண். தே. தேஜ்பால், மொழி பெயர்ப்பாளர் அ. முத்துகிருஷ்ணன் ஆகியோர் நம்மிடையே சில அர்த்தமுள்ள கேள்விகளை முன் வைக்கிறார்கள். வெளியிட்டார்கள் வாசல், தலித் முரசு ஆகியோருக்கு நன்றி கூறும் நம்மை ஆக்ரோசத்துடன் இருக்கச் சொல்லும் இப்புத்தகத்தை நீங்கள் ஒரு முறை வாசியுங்கள்.

நீங்கள் மனிதரா? எனில் அழுகை, அச்சம் அதைவிட அதிகமாய் ஆத்திரம் வரும். கொலைகாரர்களின் வார்த்தைகள் உங்கள் மொழியை மறக்கச் செய்யும். நமது பிறப்பின் அடையாளத்தில் உள்ள மதத்தை வெறுக்கச் செய்யும். ரத்தம் தோய்ந்த திரிசூலங்கள் உங்கள் நினைவுகளின் நடுவில் ஆழமாய் ஊடுருவும். உங்கள் பெயர் உங்களுக்கு வெறுத்துப் போகும்.

மதம் இல்லாத பெயர், மதம் இல்லாத மொழி, மதம் இல்லாத பழக்க வழக்கம் என புதிய பண்பாட்டு வாழ்க்கையை மதத்திற்கு எதிராக துவங்கச் சொல்லும். மதம் ஒரு அபின் என கார்ல்மார்ஸின் வார்த்தைகளை வரலாற்று சாட்சிகளுடன் நிருபணம் செய்யும் தன் வாழ்நாள் எல்லாம் ஹேராம் என்று கூறிய காந்தியின் படுகொலையை நிகழ்த்திய அதே மதவெறி பாசிசமாய் மாறி இன்னும் மாய்க்கப்படாமல் உள்ள அபாயத்தை கூறும் . பாசிசம் பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com