Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2008

ஆஜாத் என்றால் சுதந்திரம்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு

அந்த வாகனம் புறப்பட்டது. அது ஒரு காவல்துறை வாகனம், அலைபாயும் இதயத்துடனும் வேட்டைக்குச் செல்லும் துடிப்புடனும், ஏகாதிபத்திய கைகூலி காவல்துறை யினர் தமக்குள் பேசிக்கொண்டனர். இன்று கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது.

1931ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அலகாபாத் நகரில் உள்ள ஆல்பிரட் பூங்காவை சுற்றி சாதாரண உடையில் போலீசார் இரைதேடும் கண்களோடு காத்துக்கொண்டி ருந்தார். இடுப்பில் துப்பாக்கியை இறுக பற்றிக் கொண்டு பல்லாண்டு காலம் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்மசொப்பனமாய், சவால் விட்டுக்கொண்டிருக்கும் அந்த வீரனை வீழ்த்தும் தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தனர்.

பூங்காவின் மரங்களின் மீது இருந்த பறவைகள் ஏதோ சம்பவத்தை எதிர்ப்பார்ப்பதுபோல சிறகுகளை மெல்ல அசைத்தபடியே இடம் மாறி அமர்ந்தன. சூரியன் விடைபெற நேரம் இருந்தது.

அதோ பூங்காவினுள் இரண்டு உருவங்கள் நுழைகின்றன. அதில் ஒருவன் தன் பக்கத்தில் வரும் ஆஜானுபாகுவான உருவத்தை காட்டி சைகை செய்து மறைவதற்குள், காவல்துறையினரின் தோட்டாக்கள் சீறிப்பாய்கின்றது. சுதாரித்துக் கொண்ட அந்த மாவீரன் ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்டு தன்னுடைய தோட்டாக்களால் பதில் சொல்ல துவங்குகிறான்.

ஒருவனின் தோட்டாவை எதிர்த்து பலர் சுடுகின்றனர். சிலர் மாண்டனர். சிறிது நேரம் கழித்து மயான அமைதி. மரத்தின் பின்னாலிருந்து குண்டுகள் வரவில்லை... எனினும் காவல்துறையினருக்கு அச்சம். 30 நிமிடங்கள் யாரும் அந்த மரத்தை நெருங்க துணியவில்லை... பின் அங்கு சென்று பார்த்த போது அமர்ந்த நிலையில், இறுதிவரை போராடி உலகிலிருந்து ஆஜாத் பெற்றிருந்தான் ஆஜாத்... புரட்சியாளர்கள் தங்கள் மரணம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது, தன் துப்பாக்கியை காட்டியபடியே ஆஜாத் சொல்லுவான் ‘’இது இருக்கும் வரை என்னை யாரும் உயிரோடு பிடிக்க முடியாது’’

அவன் சொன்னதை செய்து காட்டினான்.

அவன் உதிரம் சிந்திய அந்த மண்ணை, தோட்டாக்கள் துளைத்தெடுத்த அந்த மரத்தை தரிசிக்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருந்தனர். ஆஜாத்தை கண்டு மிரண்ட காவல் துறையினர் அவன் மரணித்த மரத்தையும் பார்த்து மிரண்டனர். அந்த மரம் மக்களுக்கு கோபத்தை, போராடும் உந்துதலை விதைத்தது. அந்த மரம் ஏகாதிபத்திய காவல் துறையால் வெட்டப்பட்டது. இருப்பினும் கூட்டம் நிற்கவில்லை.

ஆல்பிரட் பூங்காவை ஆஜாத் பூங்கா என்று பெயர்மாற்றம் கொண்டது.

ஆஜாத் குறித்து சிவவர்மா கூறியது இன்றுவரை காற்றில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. ‘’நாங்கள் ஆயுதந்தரித்த புரட்சிப் பாதையிலே நடை போட்டு வந்தோமென்பது உண்மைதான்’ ஆனால் மனிதர் எல்லோருக்குமே மகிழ்ச்சிகரமான, அமைதி தவழும் புதிய சூழ்நிலையைத் தோற்றுவிப்பதே புரட்சியின் முக்கிய நோக்கமாகும், ‘’யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ ‘’உலகமெல்லாம் ஒரே குடும்பம்’’ என்பதே எங்கள் லட்சியம் ஆகவே எல்லா மனிதர்களின் உயிர்களும் எங்களுக்குப் பிரியமானவைதான்.

நாங்கள் இன்றைய சமுதாய அமைப்பை எதிர்க்கி றோமே தவிர, தனிப்பட்ட நபர்களுக்கு எதிரிகளல்ல தனிநபர்கள், ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இருந்து வரும் அரசியல் பொருளாதார அமைப்பின் பிரதிநிதிகளாக நடந்து கொள்ளும்போதே நாங்கள் அவர்களைப் பகைவர்களாகக் கருதுகிறோம். தனிநபர் கொலைகள் எங்கள் குறிக்கோளல்ல. மாமிசத் துண்டுகளைப் பார்த்து, ஆட்டுக் குட்டியைக் கற்பனை செய்து கொள்ளும் மிருதுவான சுபாவம் படைத்தவர்களில் சந்திரசேகர் ஆஜாதும் ஒருவர்.

‘’அனைவருக்காகவும் கண்ணீர் சிந்தாதவர்கள், அனைவரையும் இதயபூர்வமாக நேசிக்காதவர்கள் சுரண்டுகிறவர்களுக்கும். கொடுமைக்காரர்களுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள் என்பது உண்மை’’ வன்முறையும், அகிம்சையும் ஒரே சித்திரத்தின் இரண்டு பகுதிகளாகும். அவை காலத்தையும், சூழ்நிலையையும், பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். ஒரு சமயத்தில் வன்முறையாகக் காணப்படலாம். ஒரு நேரத்தில் ‘’அகிம்சை’’ என்று பெருமையாகக் சொல்லிக்கொள்வது இன்னொரு நேரத்தில் வன்முறையாகவும் மாறலாம். இவ்விரு பகுதிகளின் சேர்க்கையே ஆஜாத் அவர் எங்கள் எல்லோரைக் காட்டிலும் சிறந்தவரென்பது என் கருத்து’’.

ஆஜாத் என்றால் சுதந்திரம் என்று அர்த்தம், சுதந்திரம் என்றால் விடுதலை என்று பொருள். இந்திய சுகந்திர போரட்டத்தில் மறைக்க முடியாத ஒரு சிகப்பு நட்சத்திரம் சந்திரசேகர் ஆஜாத். பகத்சிங் சுகதேவ் ராஜகுரு சிவவர்மா பகவதி சரண்வோரா கிஷே£ரிலால் போன்ற விடுதலை வீரர்களின் நேசத்திற்குறிய தோழன், படை தளபதி சந்திரசேகர் ஆஜாத்.

துப்பாக்கி, தோட்டா, இரத்தம், மரணம் என்று எழுதுவதால் இந்த புரட்சியாளர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்த முடியாது. ஏனெனில் ‘’நாங்கள் வெடிகுண்டுகளை நம்பிய வன்முறையாளர்கள் அல்ல. மக்களின் எழுச்சியை நம்பிய புரட்சியாளர்கள்’’ என்று பிசிறற்ற குரலில் ஒங்கி ஒலித்தவர்கள்.

1921ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக சந்திரசேகர் என்ற அந்த சிறுவன் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டான்.

நீதிபதி கேட்டார் உன் பெயர் என்ன?
‘’ஆஜாத்’’
உன் தந்தை பெயர்?
‘’ஆஜாத்’’
உன் முகவரி?
‘’சிறைச்சாலை’’

இந்த பதில்களைக் கேட்ட மாஜிஸ்திரேட் எரிந்து விழுந்து, ஆஜாத்திற்குப் பதினைந்து கசையடி தண்டனை விதித்தார். தண்டனை அமல் செய்யப்பட்ட போது, ஆஜாத் ஒவ்வொரு கசையடிக்கும் ‘‘மகாத்மா காந்திஜிக்கு ஜே’’ என்று முழங் கினார். சிறுவனான சந்திரசேகர் எதிர் காலத்தில் தன் ஆஜாத் (சுதந்திரம்) பெயரையே நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார். ஆனால் ஒருநாள் கூட சிறைச் சாலையைத் தனது வீடாக்கிக்கொள்ளவில்லை.

1906ஆம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மத்திய பிரேதேசம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பாவ்ரா கிராமத்தில் பண்டிதா சீத்தாராம் திவாரி மற்றும் ஜக ராணிதேவி ஆகியோருக்கு பிறந்த ஐந்து குழந்தை களில் கடைக்குட்டியாக பிறந்தவன் ஆஜாத். சிறு வயதில் இருந்தே படிப்பில் அல்லாமல் வில் அம்பு பழகுவதிலும், துப்பாக்கி சுடுவதிலுமே ஆஜாத் விருப் பம் காட்டினார். ஆஜாத்தின் பெற்றோர்கள் வெறுப்ப டைந்து அவரை ஏதாவதொரு வேலையில் சேர்த்து விட எண்ணினர். வட்டார அலுவலகத்தில் ஒரு சிறு வேலையும் கிடைத்தது. ஆனால் இப்படிப்பட்ட தளைகளில் சிக்கிக்கொள்ளுமா என்ன? சுதந்திரம்

ஆனால் தன் மாணவ பருவத்தில் தன்னை சுற்றி யிருக்கிற விவசாயிகளும், பழங்குடிகளும், விவசாய தொழிலாளர்களும் படுகின்ற துயரங்களைப் பார்த்து அவனுக்கு கேள்விகள் பிறந்தது. பின்பு அங் கிருந்து பம்பாய் சென்று கப்பல் கட்டும் தொழிலில் பணியாற்றினார். நாளடைவில் இயந்திரத்தனமான பம்பாய் வாழ்க்கையும் ஆஜாத்துக்கு வெறுப்பு தட்டியது.

பின்பு அங்கிருந்து காசிக்கு சென்றார் அங்கு தான் ஏற்கனவே புரட்சி கட்சி உறுப்பினரருடன் இருந்த மன்மதநாத் குப்தா, பிரணவேஷ் சாட்டர்ஜி ஆகியோர் பழக்கம் ஏற்பட்டு புரட்சி கட்சி உறுப்பினர் ஆகிறார். அன்று முதல் வாழ்வின் இறுதிவரை அச்சமின்றி, உறுதியாக ஆயுதந்தரித்த புரட்சி பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தார் சந்திரசேகர் ஆஜாத்.

1925 ல் நடந்த காகோரி ரயில் கொள்ளையிலும், லால லஜபதி ராயை கொலை செய்த சான்ர்£ஸ் கொலை வழக்கிலும் பிரிட்டிஷ் காரர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவன் ஆஜாத். காசியில் தான் கசையடி பெற்றபோது மகாத்மா காந்தியை முழங்கி வலியை பொறுத்துக்கொண்ட ஆஜாத், பின் காந் திக்கு எதிரான பாதையில் நடைபோடத் துவங்கி யது எதிர்பாராமல் நிகழ்ந்தல்ல.

இந்த நாடு எந்த வழியில் சுதந்திரம் பெறவேண்டும் என்பதில் உறுதி யாக நின்றவர். கிடைக்கின்ற சுதந்திரம் இந்நாட்டு உழைப்பாளிகள் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என்று அயராது அவரது சகாக்களுடன் உழைத்தவர் ஆஜாத். காந்தி இவர்களின் பாதையை மறுத்த போதும் இவர்கள் மக்கள் தலைவர்களாக வளர்ந்தவர்கள். 1947ல் நாடு சுதந்திரம் அடைந்த போது தேச வரலாறு இவர்களை இதயத்தில் சுமந்தது.

அந்த மாவீரன் மறைந்து 77 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் அவனும் அவனது சகாக்களும் கண்டகனவு இன்றும் நிறைவேறாத கனவாகவே உள்ளது. சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் அவர்கள் சொன்ன “ஏற்றத்தாழ்வுகளை அடிப்படை யாகக் கொண்டு இருந்து வரும் அரசியல் பொரு ளாதார அமைப்பின்’’ நடைமுறை மாறவில்லை. அவர் கள் எந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி னார்களோ, அந்த ஏகாதிபத்தியம் இன்று ஆயுதம் தாங்கி வரவில்லை.

ஆனால் அதைவிட ஆபத்தான கலாச்சார ஆயுதங்களை கொண்டுவருகிறது. அன்று ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது நேரடியாய் தெரிந்ததால் இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்தனர். இன்று ஏகாதிபத்தியத்திற்கு கூலிவேலை செய்வதை பெருமையாய் கருதும் பொதுபுத்தியை தன் இயல்பாய் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏற்றத்தாழ்வான அரசியல் பொருளாதார அமைப்பை நம்பியே வாழ்க்கை நடத்தும் இந்த நாட்டின் முதலாளிகள், லாபம் கிடைத்தால் போதும் என்று மக்கள் வாழ்வை சூறையாடுகின்றனர்.

எந்த கிராமங்களை பார்த்து ஆஜாத் கோபம்கொண்டு போராட புறப்பட்டானோ, அந்த கிரா மங்கள் இன்று அமைதியாய் ஆள் அரவம் இல்லாமல் காட்சியளிக்கின்றது. ஒருவகையில் ‘’யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ மெய்பட்டுள்லது ஆனால் மிக சோகவடிவில். தினமும் ஆயிரக்கணக்கில் வட மாநில இளைஞர்கள் தமிழகம் நோக்கி படை எடுக் கின்றனர்.

நீண்டு வளரும் சாலையின் ஓரத்தில் குடில்களில், மொழிப் புரியாமல், உண்டு உறங்கி முப்ப திற்கும், நாற்பதிற்கும் உழைப்பை விற்கின்றனர். திருப் பூரும், கோவையும் அகலமாகிக்கொண்டே இருக்கின்றன, சுமங்கலித் திட்டத்தில் படித்த இளம் பெண் களோடும்.. அத்துக்கூலி இளைஞர்களோடும். இத்தகைய காட்சிகள், இதை உருவாக்கிய காரணங்கள் அடியோடு உடைத்தெறியப்பட வேண்டும். அதற்கு நமது சுதந்திரப் போராட்ட இளம் போராளிகள் வழிகாட்டுகின்றனர். அந்தப்பாதையில் நடைபயில நமது பாதங்கள் தயாராகட்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com