Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2008

விளையாட்டின் அரசியல், இது விளையாட்டல்ல

கிராமப்புறங்களில் விளையாடப்படும் பல்லாங்குழி விளையாட்டு என்பது தற்போது அருகி வருகிறது. ஆனால் சமீபகாலம் வரை கிராமங்களில் எல்லா வீடுகளிலும் விளையாடப்படும் ஒரு முக்கியமான விளையாட்டாகவே அது இருந்து வந்தது. அந்த விளையாட்டுக்கு உள்ளே ஒரு சமூகரீதியான அநீதியை நியாயதர்மமாக ஏற்கச் செய்யும் அரசியல் சூட்சுமம் பொதிந்திருக்கிறது என்பதை ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த விளையாட்டில் எதிரும், புதிருமாக இருவர் அமர்ந்து விளையாடுவர். அந்த பல்லாங்குழி பலகையில் மொத்தம் பதினெட்டு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தலா 9 குழிகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு குழியிலும் நான்கு நான்கு முத்துக்கள் என சம அளவில் வைக்கப்படும். அந்த முத்துக்களை ஒரு குழியில் இருந்து அள்ளி வலமிருந்து இடமாக குழிக்கு ஒன்றாக போட்டுக் கொண்டே செல்ல வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாகச் செல்லும்போது எப்போது நாம் போட்டு வரும் முத்துக்கள் தீர்ந்து, குழியில் இருந்த முத்துக்களும் தீர்ந்து போகிறதோ அதற்கடுத்த குழியில் குவிந்திருக்கும் முத்துக்களை நாம் அள்ளிக் கொள்ளலாம். இந்த விளையாட்டு விளையாடி முடிக்கும்போது ஒருவர் பாண்டியாகி விடுவார், மற்றொருவர் போண்டியாகிவிடுவார்.

அதாவது இதில் உள்ளே பொதிந்திருக்கும் அரசியல் தர்மத்தை தொ.பரமசிவன் விளக்குகிறார். ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் எல்லோரும் சமமானவர்களாக இருந்தனர். அவர்களுக்கென்று எந்த தனிச் சொத்தும் இருந்ததில்லை. சமுதாயத்தின் சொத்தையே அனைவரும் கூட்டாக சுவீகரித்து வந்தனர். வரலாற்றில் இந்த ஆதிப் பொதுவுடைமை சமுதாயம் தகர்ந்து தனிச் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட அடிமைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவச் சமுதாயம், முதலாளித்துவச் சமுதாயம் என வளர்ந்து வந்துள்ளது.

பல்லாங்குழி விளையாட்டில் இருபக்கமும் இருப்பவர்களுக்கு சமகுழிகளும், சம முத்துக்களும் இருந்தது ஆதிப் பொதுவுடைமை சமுதாய அமைப்பு முறையைக் குறிக்கிறது. அந்த விளையாட்டின் தர்க்கத்தில், ஒரு கட்டத்தில் ஒருவரது முத்துக்கள் முழுமையாகப் பறிக்கப்பட்டு விடுவதும், மற்றொருவர் முத்துக்களை தனிப்பட்ட முறையில் குவித்துக் கொள்வதும் நடக்கிறது.

இதில் ஒருவர் சொத்து ஏதும் இல்லாதவராக அடிமைப்படுவதும், மற்றொருவர் சொத்துக் குவிப்பவராகவும் மாறிவிடுகிறார். இதன் மூலம் தனிச் சொத்துடைமை என்பதை மனரீதியாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான ஒரு பண்பாட்டு நிகழ்வாக இந்த விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது என்று பரமசிவன் கூறுகிறார்.

இப்படியாக சமூகத்தில் இருக்கும் விளையாட்டுக்கள்கூட குறிப்பிட்ட சமூக உறவின் அடையாளத்தை பிரதிபலிப்பதோடு, அந்த சமுதாயத்திற்கான ஏற்றத்தாழ்வை மனோரீதியாக ஏற்கச் செய்யும் ஒரு பண்பாட்டு நிகழ்வாகவும் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.

ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை ஆளப்படுபவர்கள் ஏற்றுக் கொள்ள வைக்க, பல தளங்களில் செய்யப்படும் முயற்சிகளில் ஒன்றாகவே விளையாட்டும் இருக்கிறது. இது ஒரு பண்பாட்டு நிகழ்வாக ஆளப்படுவோரின் ஒப்புதல் என்பது அவர்களை அறியாமலேயே விளையாட்டு என்ற முறையில் ஆள்வோருக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது டபிள்யூ.டபிள்யூ.எஃப். (W.W.F) எனப்படும் ரிஸ்ட்லிங் விளையாட்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கிறது. இதை விளையாட்டு என்றே சொல்ல முடியாது. நம் வீட்டுக் குழந்தைகள், இளைஞர்கள் பலரும் இந்த விளையாட்டைக் காண்பதில் தீராத ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த விளையாட்டில் என்ன தார்மீகம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், யார் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் முரட்டுத்தனமாக ஒருவரை அடித்து வீழ்த்துகிறாரோ அவரே (சில சமயம் நடுவர்களையும் அடித்து வீழ்த்தி விடுவர்) வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். இதன் அரசியல் தாத்பர்யத்தை, ஈராக் நாட்டை எந்த அரசியல் நெறிமுறைக்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக (ஐ.நா.வின் அனைத்து எதிர்ப்பு களையும் நடுவரை வீழ்த்துவதைப் போல் வீழ்த்திவிட்டு) அழித்து காட்டுமிராண்டித்தனம் செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயலை ஏற்கச் செய்யும் ஒரு பண்பாட்டு விசயமாக W.W.F பார்க்கலாமோ?

N.T.M. முற்போக்கு வாசகர் வட்டம், திருப்பூர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com