Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2008

பெரும்பான்மை சிறுபான்மை மட்டுமல்ல ஜனநாயகம்
எஸ்.கண்ணன்

கியூபா பயணம்-5

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் நாடு என்றால், அங்கே ஜனநாயகம் இருக்காது, என்பது ஊடக உலகின் தொடர் பிரச்சாரம் ஆகும். கியூபாவிற்கு நாங்கள் பயணம் மேற்கொண்ட போது, கியூபாவின் சமூகம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தாலும், அதற்கு முன்னதாகவே, கியூப புரட்சிகர கட்சி துவக்கப்பட்டு இருந்தது.

1869ம் ஆண்டிலேயே ஜோஸே மார்த்தி, கியூப புரட்சிகரக் கட்சியைத் துவக்கியிருந்தார். புரட்சியும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியும், உருவாகிட ஜோஸே மார்த்தி அமைத்திருந்த அடித்தளம் மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற கருத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமல்ல, அதை விடவும் ஆழமானது என்று ஃபிடல் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவிலும் தேர்தல், வாக்கெடுப்பு போன்றவை நடைபெற்று வருகிறது. அந்த தேர்தலில் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயகம் அனைத்துப் பகுதி மக்களையும் ஈடுபடுத்துவதாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தலும் (நகரசபை மட்டுமே) ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் சபை என்றழைக்கப்படுகிற நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.

மிக சமீபத்தில் கியூப நாடாளு மன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஃபிடல் காஸ்ட்ரோவும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஜனாதி பதிக்கான தேர்தல் நடைபெறவில்லை. கியூப மக்கள் ஜனாதிபதியினை நேரடியாகத் தேர்ந் தெடுப்பதில்லை. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களில் இருந்து ஒருவரைத் தலைவராகவும், இதர அமைச்சர்களையும் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்திய நாடாளுமன்றம் பின்பற்றுகிற முறை தான் என்றாலும், அவசரச்சட்டங்கள் இயற்ற முடியாது. மக்கள் சபையை கூட்டி விவாதிக்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை என்கின்றனர். கம்யூனிச நாடு என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி, கொள்கைகளையும், சட்டங்களையும் தீர்மானிக்கும் என்பது பொய்யான கருத்து என்கின்றனர்.

1.20 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், 9 லட்சம் பேர் மட்டுமே கம்யூனிஸ்ட்கள். கம்யூனிஸ்ட் அல்லாதோரே நாட்டில் அதிகம் உள்ளனர். புரட்சியில் ஈடுபட்ட பலரும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகாமல் உள்ளனர். புரட்சியிலும், சமூக மாற்றத்தை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்ட் அல்லாத பலருக்கும் பங்கு இருக்கின்ற காரணத்தால், கம்யூனிஸ்ட் கட்சி எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை.

வேட்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சி பரிந்துரைக்க முடியாது. ‘‘நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறேன் எனக்கு வாக்களியுங்கள்’’, என்று பிரச்சாரமும் செய்ய முடியாது. மாறாக வேட்பாளர்களை அந்தந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பரிந்துரை செய்வார்கள் அந்த வேட்பாளர்களின், வேட்பு மனுவையும் தகுதி மற்றும் இதர விவரங்களையும், கியூப தொழிற்சங்கத்தின் தலைவர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவர்.

614 பேர் கொண்ட மக்கள் சபைக்கு 60 ஆயிரம் வேட்பாளர்கள் வரையிலும் வேட்பு மனு தாக்கல் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறது. ஃபிடல் உள்ளிட்டு போட்டியைச் சந்திக்கின்றனர். வேட்பாளர்கள் சொந்தமாக செலவிட வேண்டியதில்லை. ஓட்டுகேட்டு, ஒலிபெருக்கி வைத்து, ஊர்வலம் நடத்தி மக்களை கவர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அதற்கான அனுமதி இல்லை. பிரச்சாரத்தை அரசே மேற்கொள்ளும்.

மக்கள் கூடும் இடங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் விவரங்கள் அனைத் தும், அவர்களுடைய தகுதி உள்ளிட்டு தெரிவிக்கப்படும். இத்தகைய விபரங்களைக் கொண்ட விளம்பர பலகைகள் அரசு வெளியிடும். மக்கள் அவற்றைப் பார்த்து, தனக்கு விருப்பப்பட்டவரை தேர்ந்தெடுக்கலாம்.

16 வயதுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், ஓட்டும் போடலாம். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மற்றும் மனநிலை சரியில்லாதவரைத் தவிர யார் வேண்டுமாலும் போட்டியிடலாம். போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு சில அந்தஸ்து இருந்தாலும், ஊதியமோ, ஓய்வூதியமோ வழங்கப்பட மாட்டாது. அவரவர் வேலை செய்யும் இடங்களில் இருந்தே மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். காவல்துறை, ராணுவம் என எந்த துறையில் பணியாற்றினாலும் வேலையை ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.

ஒரே விஷயம் அவர்கள் இரண்டு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அதாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், நாடாளுமன்ற பணியை சேவையாக நினைத்து செயல்பட வேண்டுமே அல்லாது, சிறப்பு சலுகைகளை எதிர்பார்த்து போட்டியிட முடியாது. தேர்தல் அன்று காவல்துறையோ, ராணுவமோ அழைக்கப்பட்டு மக்களையும், போட்டியாளார்களையும் கட்டுப்படுத்தும் நடைமுறை கியூபாவில் இல்லை என்று சொல்கின்றனர்.

மக்கள் சபையில், பெண்கள், இளைஞர்கள், மதத் தலைவர்கள், கறுப்பு, வெள்ளை இனத்தின் பிரதிநிதி கள் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுவர், தற்போது கியூப மக்கள் சபையில் 8 மாணவர் பிரதிநிதிகள் இருப்பதாகவும் அதில் ஒருவருக்கு 18 வயது என்றும் குறிப்பிடுகின்றனர். முடிவு எடுப்பது மட்டுமில்லை அமலாக்கமும் உண்மையின் அடிப்படையில் நடைபெறுகிறது.

கியூபாவில் பொதுவாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. 37 சதமான பெண்கள், அமைச்சரவை மற்றும் இதர பொறுப்புகளின் துணைப்பொறுப்பாளர்களாக உள்ளனர். 38 சதமான பெண்கள் மக்கள் சபை உறுப்பினராக உள்ளனர். 60 சதமான பெண்கள் அரசுத்துறையின் பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியில் 30 சதமான பெண்கள் இருப்பதாகவும், 54 சதமான பெண்கள் கட்சியில் பல்வேறு மட்டங்களில் பொறுப்பு வகிப்பதாகவும் கூறுகின்றனர்.

கியூப மக்கள் சபையில், கொள்கைகளை வடிவமைப்பதற்கென பல ஆலோசனைக் குழுக்களைக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆலோசனைக் குழுக்கள் சம்மந்தப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி அதன் பின்னரே கொள்கையை வடிவமைப்பதற்கு முன் 200 விவசாயிகளை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். அதன் பின் நகலைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதித்து இறுதிப் படுத்தியுள்ளனர்.

இவையனைத்தும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் நடவடிக்கையே ஆகும். இத்தகைய செயல்கள் அங்கே இருப்பதன் காரணமாகவே அனைத்துப் பகுதி மக்களும் அரசியலில், கொள்கைகள் குறித்த புரிதலில், ஏகாதிபத்திய எதிர்ப்பில், வறுமையை அல்லது கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வதில், என எல்லாவற்றிலும் இணைந்தே இருக்கின்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com