Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2008

காதலினால்
கே.எஸ்.கனகராஜ்

என் காதலைப் பற்றி
கூற ஒன்றுமேயில்லை...
சுவாசித்தலை பற்றி
சிலாகித்துக் கூற
என்ன இருக்கிறது
-கவிஞர். கனிமொழி

கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. பிப்ரவரி மாதம் பிறந்தவுடனேயே வண்ணப் பக்கங்களோடும், வாலன்டைன் பாதிரியின் வரலாற்றோடும் சிறப்பிதழ் வெளியிட்டு காதலின் மகத்துவத்தை ஒரு இன்ச் உயர்த்தி விட்டதாய் இறுமாப்பு கொள்ளுகின்றன வணிக இதழ்கள் வார்த்தை மணக்கும் பக்கங்களோடும், உள்ளத்தை அள்ளும் வடிவமைப்போடும் சந்தையில் குவிகின் றன வாழ்த்து அட்டைகள்...

ஆடல், பாடல்களோடு சிறப்பு குத்தாட்டம் போட தயாராகி வருகின்றன சின்னத்திரை சேனல்கள். அன்பையும், ஆருயிரையும் கலக்கிச் செய்தது போல விதவிதமான பரிசுப்பொருட்கள் குவிகின்றன கடைகளில், காதலர்தின சிறப்பு வாரம் எனச் சொல்லி தள்ளுபடி விற்பனைக்கு தயாராகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

யாராலோ அறிவிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட தினங்களில் அதிகம் மூச்சுத்திணறுவது காதலர் தினம் தான். ‘உன்னதமான குடும்ப உறவுகளைக் கூட முதலாளித்துவம் வெறும் காசு பண உறவாய் சிறுமைப் படுத்திவிடும்’ என்றார் மாமேதை மார்க்ஸ்.

உறவுகளின் மகத்துவத்தை வெறும் வியாபார விந்தையாய் மாற்றிவிட்டது உலகமயம். வருடத்தின் எல்லா நாளும் கொண்டாடச் வேண்டிய அன்னையை, தந்தையை, நட்பை, காதலை தேதி குறித்து கொண்டாட சொல்லி பழக்கப்படுத்துகிறது வியாபார மூளை.

வெற்றுக்கூச்சல்களின் ஆரவாரத்திலும், பாலியல் சீண்டல்களின் அலறல்களிலுமாய் நம்மை கடந்து போன புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுவடுகள் மறையா நிலையில், அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார்கள் உலக வியாபாரிகள்.

50 கோடி இளைஞர்களின் சட்டைப் பையை நோக்கிய அடுத்த குறி தயாராகிவிட்டது. காதல் நமது வணிக இதழ்கள் கூறுவது போல புனித மானதோ, புதிரானதோ, மகத்துவமானதோ, இல்லை.

அது வீசும் காற்றைப்போல இயல்பானது மனித குலத்தின் அடுத்தடுத்த கண்ணிகளை இணைக்கின்ற பிணைப்பாய் இருக்கின்ற உயிரியல் அற்புதம். கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா படத்தின் பாடல் வரிகளான ‘காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா இந்த கருமம் எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா’ என்பதை நினைவுபடுத்திக் கொண்டேயி ருக்க வேண்டியுள்ளது. காதல் மகத்துவமானது எனச் சொல்லி வியாபாரம் ஆக்கி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கின்றன.

அன்றைய தினம் ரோஜாக்களில் தொடங்கி வாழ்த்து அட்டைகள், பரிசுபொருட்கள் என சந்தைகளில் குவியும் இவற்றை வாங்காத இளைஞனை ‘ மனித குல விரோதி’ என குற்றஞ்சாட்டாத குறையாய் திட்டித்தீர்க்கும் நமது பண்பலை வானொலிகள்.

மதவாதிகளும், பண்பாட்டு காவலர்களும் எதிர்ப்புக் குரலெழுப்பி எழுந்து நிற்கிறார்கள் காதலர்தின கொண்டாட்டங்கள் இவர்களை உடலெங்கும் நடுங்கச் செய்யும். காலம் காலமாய் வளர்த்த சாதிப் பயிரை வேலியே மேய்வதை எப்படி அவர்களாய் சகிக்க முடியும். ரோஜாக்களை கையிலெடுத்தவர்களை இவர்கள் கோடாரிகள் ஏந்தி விரட்டுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ். ஏபிவிபி, பிஜேபியும் காதலர் தின கொண்டாட்டங்களில் கலவரம் நடத்துவது தொடர்கதை ஆகி வருகின்றது. காதல் சாதியத்தை தகர்க்கும் என்பதாலும், சாதியத்தை பாதுகாத்தால் தான் இந்து மதத்தை காக்க முடியும் என்பதாலும் தான் இவர்கள் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள். அதேபோல் பண்பாட்டுக் காவலர்கள் கூட கூப்பாடு போடுவார்கள் பரபரப்பை விற்றுத் தின்று பிழைப்பு நடத்த.

வண்ண வண்ண விளம்பரங்கள், காதலை கொண்டாடச்சொல்லி, எப்.எம். ரேடியோக்களின் அலறல்கள், சின்னத்திரை சிறப்பு நிகழ்ச்சிகள், என இந்தியாவில் களைகட்டும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு முக்கியக் காரணம், இந்தியாவின் இளைஞர் சந்தை. 50 கோடி இளைஞர்களை கொண்ட நமது நாட்டில் அவர்களை வியாபார ரீதியில் சென்றடையவே இத்தனை களேபரம்.

நமது இளைஞர்களின் உண்மையான பிரச்சனைகளை கண்டு கொள்ளாத இவர்கள், வேலையின்மைக்கும், கிராமப்புற வறுமைக்கும், கல்வி வியாபாரத்திற்கும் எதிராக சிறப்பிதழ் வெளியிடாத நமது பத்திரிக்கைகளும் ஆரோக்கியமான காதல் உணர்வுகளை வளர்க்க காதலை சமூகவியல் நோக்கில், உளவியல் நோக்கில் இளைய சமூகத்திற்கு கற்றுக்கொடுக்க சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தாத ஊடகங்களும், சினிமாக் காதலை திரும்பத் திரும்ப சொல்லி வியாபாரம் வளர்க்கின்றன.

இந்த வியாபார சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி, சினிமா மயக்கத்திலிருந்தும், சின்னத்திரை சிறைச்சாலையிலிருந்து காதலை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை. நமக்கே உரியதை, நமக்குரியதாக்க, அர்த்தமுள்ளதாக காதலர் தினத்தை கொண்டாடலாம்.

இத்தனைக்கும் நடுவிலும் சாதி கடந்த காதலர்களை அழைத்து வந்து விருந்து கொடுக்கலாம். வரதட்சணை வாங்காமல் மணம் முடிப்பேன் என உரக்கக் கூறி உறுதி ஏற்கலாம்.

‘காதலர்கள் இதயம் வெளியே வந்து விழும் அளவிற்கு பேசிக் கொள்ள வேண்டும்’ என்பார் எழுத்தாளர் பிரபஞ்சன். மனம்விட்டு பேசுவது காதலில் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையை அதிகரிக்கும், நமது அரசுகளோ, உலகமயத்தை கைகள் நீட்டி வரவேற்றுவிட்டு, காதலர்களை மட்டும் கடற்கரையை விட்டும், பூங்காக்களை விட்டும் வெளியேற்றி பந்தோபஸ்து போட்டு யாரும் காதலிக்காமல் பார்த்துக் கொள்கின்றன.

காதலை கொண்டாடுகின்றோம் என்று சொல்லி காதலர் தினத்தை வணிக மயமாக்கி விட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு புறம். பண்பாட்டை காக்கின்றோம் என்று சொல்லி சாதியத்தை பாதுகாக்க காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்க்கும்மதவெறி கும்பல் ஒருபுறம் இவர்களுக்கிடையே, காதலர் தின கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக நாம் மாற்றுவழிகளில் முயல் வேண்டும்.

தந்தை பெரியாரும், அண்ணல்அம்பேத்காரும் உயர்த்தி பிடித்த சாதிய மறுப்பு, வரதட்சனை ஒழிப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்துகின்ற விழாக்களை பரவலாக நாம் நடத்த வேண்டியது காதலர் தின கடமையாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com