Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2007

8வது அகில இந்திய மாநாட்டின் அரசியல்
எஸ்.கண்ணன்

இந்திய இளைஞர்களுக்கு நேற்று, இன்று, நாளை என முக்காலமும் பொருந்துகிற, தலைவனாக பகத்சிங்கும், கொள்கையாக அவரின் நண்பர்களுடன் இணைந்து தொகுத்தளித்த அறிக்கையும் விளங்குகிறது. கல்வியும், வேலையும் பிறக்கிற ஒவ்வொரு மனித ஜீவராசிக்கும் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும், என்ற முழக்கத்தை எழுப்பிய வீரர்கள், பகத்சிங்கும், அவரது நண்பர்களும் மாவர். இதே முழக்கத்தை தனக்கே உரிய பாணியில், வேறு விதமாக சொன்னவர் மகாத்மா காந்தி. 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வீறு கொண்ட போது, மாணவர்களிடம் படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? அடிமை இந்தியாவில் என்ன வேலைக்கு போகப் போகிறீர்கள்? என்ற கேள்விகளை முன் வைத்தார். 1936ம் ஆண்டு, ஆகஸ்ட் -12ம் நாள் இந்திய நாட்டில், அமைப்பு ரீதியான மாணவர் இயக்கத்தினை (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்) முகமது அலி ஜின்னா தலைமயில், ஜவஹர்லால் நேரு துவக்கி வைத்த போது, கல்வியும், வேலையும் இந்திய மண்ணில் அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம் என்றார்.

தமிழகத்தின் தந்தை பெரியார் வேலை, கல்வி உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்பதோடு உத்திரவாதமான வேலை கிடைக்கும் வரை, உதவித்தொகை கொடுக்க வேண்டும், என 1940களில் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். மகாத்மா காந்தி கேள்விகளோடும், ஜவஹர்லால் நேரு முழக்கதோடும், தந்தை பெரியார் எழுத்துக்களோடும் நிறுத்திக் கொண்டனர். ஆனால் பகத்சிங்கும் அவருடைய நண்பர்களும் மாற்றுக் கொள்கையை முன்வைத்தனர். விடுதலை இந்தியா என்பது சமூக மாற்றத்தோடு இணைந்து இருக்க வேண்டும். அப்போது தான் அனைவருக்குமான கல்வியும், வேலையும் உறுதி செய்யப்படும், என்றார். இது போன்று நீட்டி முழக்கமிடும் வித்தைகள், வெள்ளையன் வெளியேறியதோடு நின்று விடவில்லை.

விடுதலை தேசத்திலும், தேசியக் கொடியை ஏற்றுகிற போதெல்லாம் நம் தலைவர்கள் முழங்கிக் கொண்டே இருக்கின்றனர். கல்வியும், வேலையும் ஒரு சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் செல்வங்கள். அந்தத் தன்மையில் நமது தலைவர்கள் அணுகவில்லை. இந்திரா காந்தி அம்மையாரும், ராஜீவ்காந்தியும் ஹரீபி கட்டாவ் (வறுமையே வெளியேறு) பேக்காரி கட்டாவ் (வேலையின்மையே வெளியேறு) என்ற கோஷங்களை முன் வைத்தனர் அதன் பிறகு வந்த ஒவ்வொரு தலைவரும், இப்போது செய்து முடிப்போம், இன்னும் 10 ஆண்டுகளில் சாதிப்போம், என்றெல்லாம் பேசிவிட்டனர். ஆனால் முடிந்த பாடில்லை. இப்படிப்பட்ட முதலாளித்துவ தலைவர்கள் உலகமெங்கும் முளை விடுவார்கள், என்று முன் கூட்டியே அறிந்ததனால்தானோ என்னவோ, காரல் மார்க்ஸ், “ தேவை தத்துவ விவாதங்கள் அல்ல, சமூக மாற்றம்’’ என்றார்.

அதே சமூக மாற்றத்தைத் தான் பகத்சிங்கும், குறிப்பிட்டார். வேலையும், கல்வியும் கிடைக்காத போது மனிதர்கள் பந்தாடப்படுகிறார்கள். ஊரை விட்டு, வேறு ஊருக்கும், வேறு மாநிலத்திற்கும், வேறு நாட்டிற்கும் கூட பந்தாடப் படுகிறார்கள். பொருளாதார நிபுணர்கள் “ஊக வணிகத்தின் மூலம் நிதி மூலதனம் நாடுவிட்டு நாடும், கண்டம் விட்டு கண்டமும் பாயும்“ என்று குறிப்பிடுவார்கள். அது போல் மனிதர்களில், நிதி இல்லாதவரும், வயிறு காலியாணவர்களும் எங்கு வேண்டுமானாலும் பாயும் படி ஆட்டுவிக்கப்படுகிறார்கள். பெருகி வரும் காட்டாற்று வெள்ளத்தில் இருந்து, சிறு படர் கொடி காப்பாற்றும் என்று நம்புவதில்லையா? அப்படித்தான். ஊரை விட்டு வெளியேறுவது இளைப்பாறுதல் தருமே அல்லாது, நிரந்தரமாகக் காப்பாற்றாது. நிரந்தரமாக (இயற்கை மரணம் தவிர) காப்பாற்றுகிற வேலையும், கல்வியும் கிடைக்கும் வரை எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்பது கவர்ச்சிக்கரமான கோஷம் தான்.

நமது தலைவர்கள் இந்த கோஷத்தினை, தனது அரசியல் கவர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டதால், உழைப்பாளி மனிதருக்கு அவநம்பிக்கை சற்று இருக்கும் தான். ஆனால் இந்தியாவில் கவர்ச்சிக்காக இல்லாமல் இந்திய முன்னேற்றத்திற்க்காக மேற்படி கோரிக்கையை அமுல்படுத்த வேண்டும், என டி,ஒய்.எப்.ஐ. போராடி வருகிறது. பகத்சிங் முன்வைத்த கொள்கைக்கு உயிர் கொடுத்து, நாடு முழுவதும் இயங்குகிற இயக்கம் டி.ஒய்.எப்.ஐ. இப்படிப்பட்ட இயக்கத்திற்கு, முதலாளித்துவம் ஆளுமை செலுத்தும், ஊடகங்களில் இருந்து ஆதரவும், கவர்ச்சியும் கிடைக்கும் என்பது மூடநம்பிக்கையாக மட்டுமே இருக்கும்.

எந்த கவர்ச்சியான கோஷத்தை முன்வைத்து தமிழகத்தை அல்லது தேசத்தை ஆட்டுவிக்கிற அரசியல் இயக்கங்கள் எழுச்சி கண்டன என்றால் எதுவும் இல்லை. எதுமே இல்லாத காலி டப்பாக்களோடு, விஷயம் இருக்கிற டப்பா மோதினால், காலி டப்பாவில் இருந்துதான் சப்தம் வருமே அல்லாது, விஷயம் நிரம்பிய டப்பாவில் இருந்து அல்ல. எனவே “கவர்ச்சி’’ என்பதும், வெற்று டப்பாவில் இருந்து வரும் சப்தம் போல் தான் “ ஒரு வரி கோஷம்,, ஒரு ஊடகத்தின் வாயிலாக, ஒட்டு மொத்த மக்களையும் சென்றடைய செய்ய வேண்டும்’’, என்ற சிந்தனை, அறிவியல் பூர்வமான சிந்தனை கொண்ட ஒரு இயக்கத்திற்கு நிச்சயம் இருக்க முடியாது.. ஆகவே தான் டி.ஒய்.எப்.ஐ. உடனடி கவர்ச்சி மீது நம்பிக்கை கொள்ள வில்லை.

உலக வரலாற்றில் துவங்கி உள்ளூர் வரையிலும், அறிவியல் பூர்வ சிந்தனைக்கு உடனடியான அங்கீகாரம் கிடைத்ததில்லை. அப்படி கிடைத்திருந்தால் கலிலியோ முதற்கொண்டு எத்தனையோ பேர் இந்த பூமிப்பந்தில் சாகடிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அறிவியலுக்கு தான் அதிகமான நிரூபணங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. சோதிக்கப்பட்டு, நிரூபணம் செய்யப்பட்டிருக்கினறன. எந்த ஊடகங்களின் உதவியோடும், இத்தகைய நிரூபணங்கள் இடம் பெறவில்லை. டி.ஒய்.எப்.ஐ. அமைப்பிடம், இந்த இரண்டு மூலதனங்களையும் பயன்படுத்துவதற்கான ஊழியர்கள் நிறையவே இருக்கின்றனர். எனவே நிரூபணமும் சாத்தியமே. எல்லோருக்கும் கல்வியும், வேலையும் பெற்றுத்தருகிற சமூக மாற்றமும் சாத்தியமே.

“உலக நாடுகளின் வரலாறு அனைத்தும், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ரத்தத்தால் எழுதப்பட்டவையே“ என்று பகத்சிங் சொல்லி இருக்கிறார். இந்திய விடுதலையும் அப்படித்தான். இந்தியாவில் நடக்கப்போகும் சமூக மாற்றமும் அப்படித்தான். நம் சம கால மக்கள் தொகையில் 54 கோடிப்பேர் இளைஞர்கள் அதாவது, ஐம்பது சதமானம் இளைஞர்கள் என்று, அரசு புள்ளி விபரம் சொல்கிறது. இவ்வளவு அதிகமான மனித வளத்தைக் கொண்ட ஒரு நாடு இந்தியா தவிர வேறில்லை. இதை சரியாகப் பயன்படுத்தும் அக்கறை அரசுக்கு இல்லை என்பது உலகறிந்த உண்மை. ஆனால் இந்தியாவில் முதல் பெறும் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எப்.ஐ.க்கு அக்கறை அதிகம். டி.ஒய்.எப்.ஐ. யில் 1கோடியே 63 லட்சத்திற்கு 5ஆயிரத்தி 905 என்ற பெரும் எண்ணிக்கையில் உள்ள இந்த அமைப்பு இளைஞர்கள் எண்ணிக்கையில் 3.01 சதமான ஆகும். தமிழகத்தில் உள்ள 2.75 கோடி இளைஞர்களில் டி.ஒய்.எப்.ஐ யில் 7 லட்சத்திற்கு 77 ஆயிரத்தி 457 பேர். உறுப்பினர்களாக உள்ளனர். இது தமிழ்நாட்டு இளைஞர்களின் 2.82 சதமாகும். இந்த எண்ணிக்கையை உறுதி செய்வதும் இதிலிருந்து மேலும் முன்னேறுவதும் புதிய வரலாறு படைத்திட உதவி செய்யும்.

உறுதிப்படுத்தி விரிப்படுத்து (consolidation and expansion) என்ற கோஷத்தோடு தான், தமிழக டி.ஒய்.எப்.ஐ. தமிழகத்தில் நடைபெற உள்ள எட்டாவது அகில இந்திய மாநாட்டிற்கான பணிகளை துவக்கியுள்ளது. டிசம்பரிலிருந்து மாநிலம் முழுவதும் கிளை மாநாடுகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர் பதிவு முடிந்த அனைத்து இடங்களிலும் கிளை மாநாடுகளை முடிப்பது முக்கிய கடமையாகும். சுமார் 5 ஆயிரம் இடங்களில், கிராமங்களில், நகரங்களில், நகர கிராம வார்டுகளில், ஒரே வார்டுக்குள் இரண்டுக்கு மேல் கிளை அமைக்க வாய்ப்புண்டு. எனில் அதற்கான முயற்சி என அனைத்து வகையிலும் கிளை மாநாடுகளை நடத்திடுவது என்ற பிடிவாதத்தை டி.ஒய்.எப்.ஐ. ஊழியனிடம் எதிர்ப்பார்க்கிறோம்.

கிளை மாநாடு என்ற முதற் கட்ட பணியை தொடர்ந்து மாநாட்டிற்காக சுவரெழுத்து, விளம்பரம், நிதி வசூல்கள், சேர்த்த உறுப்பினர்களைச் சந்தித்தல், தெருமுனை கூட்டம் நடத்துதல், பேரணிக்கு அழைத்து வருதல் போன்ற பணிகளில் கிளை நிர்வாகி ஈடுபவார் ஆனால் உறுப்பினர், தீவிர உறுப்பினரும், ஊழியரும், சுயஉதவி குழுக்களில் உள்ள இளம் பெண்களையும், ரசிகர் மன்ற இளைஞர்களையும், விளையாட்டுக்குழு இளைஞர்களையும் சந்தித்து டி.ஒய்.எப்.ஐ. அகில இந்திய மாநாட்டு பணிகளை பிரச்சாரம் செய்தால் விரிவாக்கம் ஒரளவு சாத்தியமே. அதேபோல் மாநாட்டிற்காக திட்டமிட்ட ஒவ்வொரு பணிகளையும் இந்த நான்கு மாதத்தில் நாம் செய்தால் தமிழக டி.ஒய்.எப்.ஐ. தனது வளர்ச்சியில் அடுத்த தளத்தை அடையும். இதற்கான உழைப்பை மொத்த அமைப்பும் செய்ய துவங்கிவிட்டது. டி.ஒய்.எப்.ஐ. யின் வளர்ச்சி மட்டுமே எல்லோருக்கும் கல்வி, வேலையை உறுதி செய்யும். மிக சமீபத்திய உதாரணம் 12 ஆண்டு காலம் நிறைவேறாத வேலையில்லாக் கால நிவராணம் இப்போது வெற்றிப்பெற்று இருக்கிறது. ஒவ்வொரு மாநாட்டின் போதும் ஏதாவது ஒரு வெற்றியை முன்னிருத்தி இளைஞர்களின் நம்பிக்கை பெற்றது டி.ஒய்.எப்.ஐ.

மூன்றாவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெறும் போது இவ்வளவு அறிமுகம் இல்லை. இன்றைய அறிமுகத்தில் இருந்து எட்டாவது மாநாடு முடியும் போது நமது வளர்ச்சி தடையற்றதாக, தடுப்பு அரண்களை உடைத்து முன்னேறுவதாக சமூக மாற்றத்திற்கு துணைபுரிவதாக இருக்கும். இது நம்பிக்கையல்ல, அறிவியல்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com