Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2008

வாஷிங்டன் நெருக்கடியும், வாடிப்பட்டி செல்வராசும்
க.சுவாமிநாதன்

செல்வராசு ஒரு போக்குவரத்து தொழிலாளி. அவருடைய ஒரே சொத்து அவரது பூர்வீக நிலம். இன்னும் இரண்டாண்டுகளில் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்ற கவலையோடு பணத்தைப் புரட்ட ஆரம்பித்தார். பூர்விக நிலத்தை விற்றார். ரூ 2,70,000 கிடைத்தது. அதைச் சேமிப்பதற்காக வங்கிக்குப் போனார். அங்கே இருந்த ஒருவர் டெபாசிட்டுகளுக்கெல்லாம் வட்டிக் குறைவாக உள்ளது. எங்க வங்கி நடத்துகிற இன்சூரன்ஸ் கம்பெனியில் பங்குச் சந்தையோடு இணைக்கப்பட்ட திட்டம் உள்ளது. அதில் போட்டால் ஐந்து வருசத்துல 10 லட்சம் கிடைக்கும் என்றார். செல்வராசும் அந்நியக் கம்பெனி ஒன்றோடு கூட்டுச் சேர்ந்து வணிகம் செய்யும் அந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் மொத்த பணத்தையும் போட்டார். இது நடந்தது 2007 சனவரியில்.

woman_child 2008 சனவரியில் அத்திட்டத்தில் தனது சேமிப்பின் மதிப்பு எவ்வளவு ஆகியிருக்கிறது என்று பார்த்தார். 4,00,000 ஆக உயர்ந்திருந்தது. செல்வராசுக்கு சந்தோசம் தாங்கவில்லை. 2008 செப்டம்பர் வந்தது. நாளிதழ்களிலெல்லாம் பரபரப்பாக நிதி நெருக்கடி பற்றிச் செய்திகள் வந்தன. அவர் முதலில் கவலைப்படவில்லை. ஆனால் இந்திய பங்குச்சந்தையும் சரிவதாகச் செய்திகள் வந்தவுடன் பதறிப்போனார். இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஓடினார். தனது சேமிப்பின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டார். கம்ப்யூட்டரை தட்டிப் பார்த்துச் சொன்னார் ஒருவர். இப்போது 1,90,000 என்று ... செல்வராசின் காலுக்கடியில் பூமியே நழுவுவது போல இருந்தது. பணத்தை 2010ல் தான் எடுக்கமுடியும். அதற்குள் இன்னும் என்னாகுமோ! என்ற பயத்தில் தூக்கம் வராமல் தவிக்கிறார். செல்வராசுக்கு ஏன் இந்த நிலைமை? போட்ட பணத்திலேயே ரூ.90,000 குறைந்தது ஏன்? வாஷிங்டனில் ஏற்பட்ட நெருக்கடி வாடிப்பட்டிக்காரரை பாதித்தது எப்படி?

மணல் கோட்டைகளா!

அமெரிக்க நாட்டின் நிதி நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் என அமெரிக்க நிதித்துறையின் அத்துணை அங்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்ததை பலராலும் நம்பமுடியவில்லை. ஏனெனில் வீழ்ந்தவையெல்லாம் சாதா, சோதா நிறுவனங்கள் அல்ல. அவை-யெல்லாம் அமெரிக்க நிதித்துறையின் கோட்டை, கொத்தளங்கள் போன்றவையாகும். வீழ்ந்திருக்கிற நிறுவனங்களின் வயது என்ன தெரியுமா?

ஜே.பி. மார்க்கன் 184 ஆண்டுகள், லேமேன் பிரதர்ஸ் 158 ஆண்டுகள், வாச்சோவியா வங்கி 140 ஆண்டுகள், ஏ.ஐ.ஜி 89 ஆண்டுகள், பியர் ஸ்டியர்ன்ஸ் 85 ஆண்டுகள் இப்படி பல நிறுவனங்-கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. திவாலின் விளிம்பிற்கு பல சென்றுள்ளன. பல வீழ்ந்துள்ளன. ஏன் இந்த வீழ்ச்சி? மணற்கோட்டைகள் போல சரிந்தது எப்படி?

பபுள் நிலைக்குமா!

பபுள்கம் மென்று விட்டு வாயில் பலூன் போல ஊதுவதைப் பார்த்திருக்கிறோம். அது கொஞ்சநேரம் அழகு காட்டிவிட்டு வெடித்துச் சிதறிவிடும். அதுபோல உலகப்பொருளாதாரத்தைப்பற்றி பபுள் பொருளாதாரம் என்ற வார்த்தை தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அதாவது உலகப் பொருளாதாரத்தில் உற்பத்தி சாராத நிதி மூலதனம் அதீதப் பெருக்கத்தோடு விளையாடி வருகிறது என்பதன் வெளிப்பாடே இது.
தொழில் மூலதனம் என்றால் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவது. வியாபார மூலதனம் என்றால் வர்த்தகத்தில் ஈடுபடுவது. தொழில், வியாபார மூலதனங்களில் புழங்கி பல நிறுவனங்கள் பகாசூர கம்பெனிகளாக வளர்ந்துள்ளன. உதாரணம்: தொழில் மூலதனம் பிராக்டர் அண்டு கேம்பிள், கொக்க கோலா, பெப்ஸி, போர்டு, ஜெனரல் எலக்ட்ரிக், எல்.ஜி.

வியாபார மூலதனம் - வால்மார்ட், கேரிஃபோர், மார்க் அண்டு ஸ்பென்ஸர். நிதி மூலதனப் புழக்கம் என்பது தொழில், வர்த்தக நடவடிக்கைகளின் அளவோடு ஓர் குறிப்பிட்ட சமன்பாட்டில் அமைய வேண்டும். ஆனால் உண்மையில் நிதிமூலதனம் எவ்வளவு புழக்கத்தில் இருக்க வேண்டுமோ அதைப்போல 72 மடங்கு அதிகமாக உள்ளது. உற்பத்தியிலும், வியாபாரத்திலும் அது ஈடுபட முடியவில்லை. மூலதனம் சும்மா இருக்குமா? லாபத்திற்கு என்ன வழி? அதுதான் சூதாட்ட மூலதனமாக பங்குச் சந்தை, பணச்சந்தையில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நிதி மூலதனத்தைக் கையாள்கிற பன்னாட்டு வங்கிகளும் பெருமளவு வளர்ச்சியடைந்தன. (உ.ம்) ஜே.பி. மார்க்கன், கோல்ட்மேன் சாக்ஸ்
இவர்கள் பங்குச் சந்தையில் புகுந்து செயற்கை-யாக விலைகளை ஏற்றவும், இறக்கவும் செய்-கிறார்கள். இவ்விளையாட்டில் ஈடுபடுகிற அந்நிய மூலதனத்-தையே அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என்கிறோம். இந்நிறுவனங்களும் இப்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.

சூடான பணம் வண்ணத்துப் பூச்சி மூலதனம் என்ற சொல்லாடல்கள் எல்லாம் இதனோடு தொடர்புடையவையே. உலகப் பொருளாதாரத்தில் இத்தகைய நிதி மூலதனத்தின் அதீதப் பெருக்கமே அதன் வீழ்ச்சிக்கான முக்கிய காரணிகளாகும். இப்படி இப்பலூன் வெடித்துச் சிதறுமென்பதை முற்போக்கு அமைப்புகள் பத்தாண்டுகளுக்கு மேலாக எச்சரித்து வந்துள்ளன என்பது தனிக்கதை.

வீடு முதல் காடுவரை...

cow அமெரிக்காவில் இந்நெருக்கடி எங்கு துவங்கியது? இம்முறை வீட்டுக்கடன் சந்தையில் துவங்கியது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பே டாட் காம் பபுள் வெடித்துச் சிதறி வேர்ல்ட் காம் போன்ற நிறுவனங்கள் திவாலாகின. அதுபோல நோபல் அறிஞர்களை ஆலோசகர்களாக கொண்ட எல்.டி.சி.எம். என்ற நிதி நிறுவனம் சிக்கலுக்கு ஆளானது. அமெரிக்காவில் மட்டுமல்ல, மற்ற நாடுகளிலும் இத்தகைய அனுபவம் உண்டு. நிக்லீசன் என்ற தனிநபரின் மௌஸ் கிளிக்குகளால் பேரிங்ஸ் வங்கி என்ற பாரம்பரிய நிறுவனம் வீழ்ந்ததைக் கண்டோம். சரி அமெரிக்காவிற்கு வருவோம். அமெரிக்காவின் கடன் சந்தை மொத்தம் 12 டிரில்லியன் டாலர்களாகும். (இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே கோடி- 6க்குப் பின்னால் 14 சைபர்கள்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல (நிஞிறி) 12 மடங்கு. இதில் முக்கால் வாசி வீட்டு வசதிக் கடன்களே. அதில் முக்கால் வாசி கடன்களை (5.4 டிரில்லியன் டாலர்கள்) வழங்கியிருந்த பென்னி மே, ப்ரடி மேக் என்ற இரண்டு நிறுவனங்களின் வீழ்ச்சியே இந்த சீரழிவு சுற்றினைத் துவக்கை வைத்தது. இதையே சப் ப்ரைம் நெருக்கடி என்கிறார்கள்.

சப் ப்ரைம் கடன்கள் என்றால் தகுதியற்ற கடன்கள் என்று புரிந்து கொள்ளலாம். நம்ம வங்கிகளில் கடன் வாங்குவதென்றால் இன்கம் சர்டிபிகேட் கொண்டுவா! ரேசன் கார்டு கொண்டுவா! சுயூரிட்டி யார்? அவர் வருமானம் என்ன? என்று குடைந்து விடுகிறார்கள் அல்லவா! ஆனால் அமெரிக்க வீட்டு வசதிக் கடன்கள் நிஞ்சாக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அதாவது வருமானம் இல்லை, வேலையில்லை, சொத்து இல்லை இவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கப் பட்டால் உருப்படுமா? இக்கடன்கள் வழங்கப்படுவதற்காக வட்டி விகிதங்கள் செயற்கையாகக் குறைக்கப்பட்டன. வீட்டுக் கட்டுமானத் தொழில் துவக்கத்தில் ஜாம் ...ஜாம்... என்று வளர்ந்தது. இது முதற்கட்டம்.

இப்படி யாராவது கடன் தருவார்களா! என்று ஆச்சரியம் வரலாம். கடன் நிறுவனங்கள் கடன் வசூலிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாததற்கு காரணம் உண்டு. ஏனெனில் அக்கடன்களை 50,60 கடன்களாகப் பொட்டலம் கட்டி பத்திரங்களாக மாற்றி விற்றுவிடுவார்கள். அதில் மார்ஜின் நான்கைந்து சதவீதம் கிடைப்பதால் முதலீட்டு வங்கிகளும் போட்டி போட்டு வாங்கினார்கள். இப்பத்திரங்களுக்கு பெயர் சி.டி.ஓக்கள் ஆகும். இதை வாங்கிய வங்கிகளுக்கு கடனின் தரம் பற்றித் தெரியாது. கடன் தரம் பற்றித் தெரியாமல் எப்படி இவர்கள் பத்திரத்தை வாங்குவார்கள்? என்று புருவங்கள் உயர்கிறது அல்லவா! இக்கடனில் ஏற்படும் ரிஸ்க்கை சமாளிக்க பல ஏற்பாடுகள் உள்ளது. ஏ.ஐ.ஜி போன்ற இன்சூரன்ஸ் கம்பெனிகள் இப்படிப்பட்ட பாதுகாப்பை தந்தனர். இப்போது புரிகிறதா?

முதற்கட்டத்தில் கடன் தருகிற நிறுவனங்களுக்கு வசூலிக்கிற பொறுப்பு கிடையாது. இரண்டாவது கட்டத்தில் பத்திரங்களாக வாங்கிய முதலீட்டு வங்கிகளுக்கு கடனின் தரம் பற்றித் தெரியாது. மூன்றாவது கட்டத்தில் ரிஸ்கை எடுத்துக் கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தங்களின் ரிஸ்க் எவ்வளவு என்பதே தெரியாது. துவக்கத்தில் வீட்டுக் கட்டுமானத் தொழில் அமோகமாக வளர்ந்தது. பத்திரங்கள் பரபரப்பாக விற்றன. வீட்டுக் கடன் நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் கொடிகட்டிப் பறந்தன. வீட்டின் சந்தை மதிப்பு கூடினால் கூட கூடுதல் கடன் தரப்பட்டது. அதை வாங்கியவர்கள் அதை வீட்டின் மேல் முதலீடு செய்யவில்லை. தங்களின் நுகர்வுத் தேவைகளுக்குப் பயன்படுத்தினர். இது எவ்வளவு நாள் ஓடும்?

சிலரால் வட்டி கட்ட முடியவில்லை. இந்த எண்ணிக்கை வளர்ந்தது. லட்சக்கணக்கானோர் கடன் கட்ட முடியாமல் திணறினர். நிதி நிறுவனங்கள் நெருக்க ஆரம்பித்தன. என்ன வழி? ஒரே நேரத்தில் எல்லோரும் வீடுகளை விற்க முனைந்தால் என்ன ஆகும்! வீடுகளின் விலைகள் மடமடவென்று சரிந்தன. சந்தை மதிப்பிற்கு கடன் வாங்கப்பட்டிருப்பதால் வீடும் போச்சு... கடனும் தீரவில்லை... கடன் வசூலிக்கப்படாததால் வரிசையாய் கடன் நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் தொப்...தொப்... என்று விழுந்தன. வீட்டில் துவங்கிய நெருக்கடி சில நிறுவனங்-களை சுடுகாடு வரை அழைத்துச் சென்றுள்ளன.

பெயில் அவுட்டா? கெட் அவுட்டா?

பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்பதுதான் உலகமயத்தின் தாரக மந்திரம். ஆனால் அது மக்கள் நலன் என்று வரும் போது சொல்லப்பட்டதுதான். விவசாயிகளுக்கு மானியமா? வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணமா? சிறு தொழில்களுக்கு ஆதரவா? இதிலெல்லாம் அரசாங்கம் தலையிடக் கூடாது. அதுதான் உலகமயம். ஆனால் பன்னாட்டு மூலதனம் தத்தளிக்கும் போது கோட்பாடாவது! புடலங்-காயாவது! 700 பில்லியன் டாலர்களோடு- 35 லட்சம் கோடிகளோடு அமெரிக்க அரசு களத்தில் இறங்கியது. ஏ.ஐ.ஜி என்கிற இன்சூரன்ஸ் கம்பெனிக்கு மட்டும் 70 பில்லியன் டாலர்கள்- 3.5 லட்சம் கோடிகள் தரப்பட்டது. எப்படி தரப்பட்டது என்பதுதான் வேடிக்கை! அந்நிறுவனத்தின் 80சதவீத பங்குகளை வாங்கிக்கொண்டு தரப்பட்டது. இதற்குப் பெயர் என்ன தேசியமயம் தானே!

இந்தியாவில் எப்படி பிற்போக்குத்தனமாக கணவன் பெயரை மனைவி சொல்லக் கூடாது என்பார்களோ அது போல அமெரிக்கப் பொருளாதார அமைப்பில் தேசியமயம் என்ற வார்த்தையைச் சொல்ல மறுக்கிறார்கள். அது சரி! பெயிலவுட் பணம் எங்கிருந்து வருகிறது? மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் ... ஆனால் பெயில் அவுட்டால் மக்களுக்கு என்ன பயன்? பெயில் அவுட் கம்பெனிகளுக்குத்தான். தொழிலாளர்களுக்கு அல்ல. அவர்களுக்கு கெட் அவுட்தான். ஒரு உதாரணம். சிட்டி குரூப் கம்பெனிக்கு 20 பில்லியன் டாலர் - அதாவது 1 லட்சம் கோடி ரூபாய் பெயில் அவுட் உதவி தரப்பட்டுள்ளது. ஒரு கையில் அதை வாங்கும் போதே மறுகையால் 52,000 தொழிலாளர்களின் வேலையிழப்பிற்கான முடிவிலும் அக்கம்பெனி கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் சிட்டி பேங்கில் உள்ள 12,000 தொழிலாளர்களின் எத்தனை பேருக்கு சீட்டுக் கிழியுமோ தெரியவில்லை. இதுதான் பெயில் அவுட்டிற்குள் ஒளிந்துள்ள அரசியல். சாமானியர்களின் பாக்கெட்டுகளிலிருந்து பன்னாட்டு மூலதனத்திற்கு செல்வம் பறிபோகிற விந்தை வெளிச்சமாகியுள்ளது.

அங்கே மழை ...இங்கே குடை...

இந்தியப் பொருளாதாரத்திலும் இதன் விளைவுகள் கடுமையாக உள்ளன. ஒன்று கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்திய பங்குச்சந்தை. 21,000 புள்ளிகள் வரை ஏறிய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் அந்தர் பல்டி அடித்து 8,500க்கு விழுந்துவிட்டது. செப்-1 முதல் நவம்பர் -15 வரை 22,000 கோடிகளை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நிகரமாக எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார்கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ 3,200 லிருந்து ரூ 850க்கு விழுந்திருக்-கின்றன. இன்னும் பல பெரிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இதனால் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களுக்குப் பலத்த அடி. போக்குவரத்து தொழிலாளி செல்வராசுவின் பணமும் விமானம் ஏறிய கதை இதுதான்.

இரண்டாவது, இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் துவங்கிய வீழ்ச்சியால் டாலர் மதிப்பல்லவா சரிய வேண்டும்! ஆனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதுதான் டாலரின் பலம். அதன் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு. டாலரின் மதிப்பு ரூ 39 ஆக இருந்ததிலிருந்து தற்போது ரூ 50 ஆக மாறியுள்ளது. என்ன அர்த்தம்? ரூ 100 பெறுமான பொருள் ஏற்றுமதியானால் முன்பு இரண்டரை டாலர் கிடைக்கும். இப்போது இது இரண்டு டாலர்கள்தான் கிடைக்கும். அகமதாபாத்தின் வைரத்தொழில், திரூப்பூர் டெக்ஸ்டைல்ஸ், கோயம்புத்தூர் பொறியமைவு தொழில் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு. இன்போசிஸ் போன்று அமெரிக்க பங்குச் சந்தையிலேயே முதலீடுகள் செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கிளைகளை வைத்திருந்த இந்திய நிதி நிறுவனங்கள் அங்கு ஊக வணிக நடவடிக்கைகளில் கட்டுப்பாடின்றி உற்சாகமாக விளையாடியதால் ரூ 2,500 கோடிகள் வரை இழந்துள்ளன. செப்- அக்டோபரில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளின் ஏ.டி.எம்.கள் செயல்பட ரிசர்வ் வங்கி பண உதவி செய்ததாகச் செய்திகள் வந்துள்ளன. மொத்த இழப்பில் ஐந்தில் ஒரு பங்கே பொதுத்துறை வங்கிகளுடையது. இந்திய நாட்டில் நிதித்துறை சீர்திருத்தங்களுக்கு இடதுசாரிகள் நான்கு ஆண்டுகளாகப் போட்ட கடிவாளமே நெருக்கடி குதிரையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவியுள்ளது. நான்காவது வேலைவாய்ப்புகளில் சரிவாகும்.

அகமதாபாத்தின் வைரத்தொழிலில் செப்டம்பரில் மட்டுமே 30,000 பேர் வேலையிழந்துள்ளனர். டாடா மோட்டார்ஸ் தனது பூனா கிளையில் ஏழு நாட்களும், ஜாம்செட்பூர் கிளையில் மூன்று நாட்களும் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்க வேலைவாய்ப்பு கனவுகளும் தகர்கின்றன. சொர்க்கப்புரியாக கருதப்பட்ட சிலிக்கான் பள்ளத்தாக்கு அழுது வடிகிறது. அங்கு 1,20,000 வேலையிழந்துள்ளனர். சென்னையில் ஸ்டார் ஹோட்டல்கள் காலியாகக் கிடக்கின்றன. 40 சதம் வரை வாடகைத் தள்ளுபடி செய்யப்பட்டும் ஆள் வரவில்லை. கட்டுமானம் , உருக்கு , சுற்றுலா என எல்லாத் துறைகளிலும் பாதிப்புகள்... வேலையிழப்புகள்...

அதிக இணைப்பெனில் அதிக நாசம் என்பதே உலகமயத்தின் அனுபவமாக மாறியுள்ளது. எங்கேயெல்லாம் கண்மூடித்தனமான இணைப்புகள் உலகமயத்தோடு செய்யப்பட்டதோ அங்கேயெல்லாம் அழிவு என்பதே பாடம். பாடம் கற்குமா? மைய அரசு பாடம் கற்குமா என்பது நியாயமான சந்தேகமே. ஏனெனில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வைக் கொண்டு வரப் போவதாக அது அறிவித்துள்ளது. அந்நிய முதலீட்டிற்கு கட்டுப்பாடு, வங்கித்துறையில் வாக்குரிமை மீதான வரம்பு, இன்சூரன்ஸ் - பென்சன் நிதிகளை வெளிநாடுகளில் முதலீடு செய்ய அனுமதியின்மை, பென்சன் நிதி நிர்வகிப்பில் அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி தராமை, முழு மூலதனக் கணக்கு மாற்று அறிமுகப்படுத்தப்படாமை போன்ற பாதுகாப்பு வளையங்கள் தான் பெருமளவிற்கு இந்திய நிதித் துறையை அபாயங்களிலிருந்து காப்பாற்றியிருக்கிறது என்பது உண்மை. இப்பாதுகாப்பு வளையங்களை உருவாக்கியது யார்? உடைக்க முயற்சித்தது யார்? என்பது உலகறிந்த உண்மை.

சில பேர் ஆச்சரியமாக கேட்கிறார்கள். என்னாச்சு சிதம்பரத்திற்கு? இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இப்படி செய்கிறாரே! என்று ... இன்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ சந்தை சுருங்கியிருக்கிறது. எனவே அவர்கள் மூன்றாம் உலக நாடுகளில்தான் சந்தையைத் தேட வேண்டியிருக்கிறது. இரயில் பயணங்களில் சில கனவான்கள் பெரிய பெரிய சூட்கேஸ்களோடு வருவதைப் பார்ப்போம். அச்சுமைகளைக் காணும் போது நமக்கு மலைப்பாக இருக்கும். ஆனால் இரயிலை விட்டு இறங்கியவுடன் போர்ட்டர்கள் முதுகில் ஏற்றிவிடுவார்கள். அது போலவே பன்னாட்டு கம்பெனிகளும் தங்களின் நெருக்கடிகளைச் சுமப்பதற்கு முதுகுகளைத் தேடுகிறது. மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கிறார்கள், நாம் என்ன செய்யப் போகிறோம்? குனியப் போகிறோமா! குமுறி எழப் போகிறோமா!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com