Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2008

இலங்கை
ஷோபாசக்தி - அ.மார்க்ஸ் உரையாடலிலிருந்து

shobasakthi இத்தனை தியாகங்கள், உயிரிழப்புகள், புலப்பெயர்வுகளுக்குப் பின் இன்று ஈழப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ஷோபா : ஏற்கெனவே ஈழத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், சாதி ஒழிப்புப் போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றால் உணர்வு பெற்றிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தான் இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழர் தேசியப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க வந்தனர்.
`சோஷலிசத் தமிழ் ஈழம்' என்பது அன்று அவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது. இதற்குப் புலிகளும்கூட விலக்கல்ல. முக்கியமாக இந்தப் பண்பு பல அறிவுஜீவிகளை, இளைஞர்களை ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகத் திருப்பியது? ஆனால் போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்திலே, ஒரு பக்கம் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு பக்கம் இந்திய அரசுக்கு இந்த இளைஞர்கள் முழுமையாக அடிபணிந்தார்கள்.

ஒட்டுமொத்த இயக்கங்களின் ஆயுத பலத்தை மட்டுமல்லாமல், அவர்களின் போராட்ட நெறிகளையும் தீர்மானிக்-கும் சக்திகளாக `ரோ' அதிகாரிகளும், இந்திய ராஜதந்திரிகளும் விளங்கினர். ஆக போராட்டத்தைத் தொடங்கும்போதே இவர்கள் தாங்கள் வைத்திருந்த இடதுசாரி, சோஷலிசக் கருத்தாக்கங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டுக்கொண்டே வந்தார்கள். எந்த முழக்கங்களால் பரவலாக இளைஞர்களிடமும், வெகு ஜனங்களிடமும் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தார்களோ, அவை வெறும் வெற்று முழக்கங்களே என்பது எங்களுக்குப் புரியத் தொடங்கியது.

அனைத்துப் பெரிய இயக்கங்களுமே அப்பாவி மக்களைக் கொலை செய்தனர். எல்லோரும் எல்லோரையும் கொலை செய்தனர். சகோதர இயக்கங்களின் மீதும் படுகொலை நிகழ்த்தினார்கள். இந்தியாவின் கருணை, தங்கள் இயக்கத்தின் சொந்த வளர்ச்சி, இவற்றைத் தவிர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தோ, அங்கே நிலவிய சாதியச் சிக்கல்கள், தமிழ், முஸ்லிம் முரண்பாடு, வடகிழக்கு முரண்பாடு குறித்தோ இவர்கள் சிந்தித்தது கிடையாது. இடைவிடாது மாறிக்கொண்டுள்ள சர்வதேச அரசியலைக் கவனித்து அதற்கு ஏற்றவாறு அவர்களின் போராட்ட உத்திகளை வகுத்ததும் கிடையாது.

குறிப்பாக புலிகள் இயக்கத்தினுடைய அதிஉச்சமான அராஜகங்களாலும், மாற்று அரசியல் சக்திகளை அவர்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கியதாலும், விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி, தமக்கான பாதுகாப்பைத் தேடி மற்றைய இயக்கங்கள் இலங்கை அரசுக்கு அடிபணிந்ததாலும், அமைதிப்படை காலகட்டத்தில் அதை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திடம் புலிகள் தஞ்சம் புகுந்ததாலும் போராட்டத்திலிருந்து மக்கள் அந்நியப்பட்டனர். தமிழ் மக்களைப் போராட்ட சக்திகளாகக் கருதாமல் வெறுமனே தங்களுக்குக் கப்பம் கட்டும் மந்தைகளாகவும் தமது இராணு-வத்திற்குப் பிள்ளைகள் பெற்றுத் தருபவர்களாகவும் மட்டுமே புலிகள் ஆக்கி வைத்துள்ளனர்.

இன்றைய தமிழ் இளைஞர்களின் போராட்ட அரசியல் என்பது, சோஷலிசம், இடதுசாரித் தத்துவமல்ல. வேறெந்தத் தத்துவமும்கூட அவர்களுக்குக் கிடையாது. எல்லாவற்றிலுமே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட குட்டிக் குட்டி யுத்தப் பிரபுக்களின் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக இன்று அது மாற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் வெளிகளில், தமிழ் மக்களுக்கு நீதியுடனான சமாதானத்தை வழங்குவதற்கு அருகதையுள்ள, விசுவாசமுள்ள எந்த ஒரு அரசியல் சக்தியும் இன்று கிடையாது. நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.

இதிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் தென்படுகின்றனவா?

ஷோபா : யுத்தத்தின் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதில் முன் எப்போதையும்விட இன்றைய அரசு உறுதியாக நிற்கிறது. அது அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் வெற்றிமேல் வெற்றி-களைக் குவித்துக் கொண்டுள்ளது. கிழக்கு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. வடக்கில் புலிகளிடம் எஞ்சியிருக்கும் சிறு நிலப் பகுதியும்கூட எந்த நேரமும் இலங்கை இராணுவத்தால் வெற்றி கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தமிழீழம் நிராகரிக்கப்பட்டு `ஒற்றையாட்சி' என்பதை தமிழர்களின் பல்வேறு இயக்கங்கள், சக்திகள், அமைப்புகள் ஏற்றுக்கொள்கின்றன. கூர்ந்து அவதானித்தோமானால் விடுதலைப்புலிகள் உள்ளிட்டு எந்த இயக்கங்களும் நீண்டகாலமாகத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை முன் நிறுத்தவில்லை. இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகம் என்பதே பேச்சுவார்த்தைகளில் புலிகளின் கோரிக்கையாக இருந்தபோதும் அதையுங்கூட இலங்கை அரசு ஏற்கவில்லை.

புலிகள் தொடர்ந்து ஏகப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திக் கொண்டுள்ளனர். வேறு யாரையும் பேச அழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இலங்கை அரசும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாக இருந்த நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா முதலான நாடுகளும் அதை ஏற்றுக்-கொண்டன. இத்தனைக்குப் பின்னுங்கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, இந்த அர்த்தமற்ற போரை நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தோ, நிரந்தரமான சமாதானத் தீர்வை நோக்கி நாம் போகவேண்டிய அவசியம் குறித்தோ எந்தக் கரிசனையும் இல்லாமல், தங்களது இயக்கத்திற்கு அதிகாரங்களைப் பெற்றெடுப்பதிலேயும், இந்தப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி மாற்று அரசியல் இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதிலேயும் மட்டுமே புலிகள் குறியாக இருந்தனர். போர் நிறுத்த காலத்தில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களைப் புலிகள் கொன்றொழித்துள்ளனர். அன்று நீங்கள் உரையில் குறிப்பிட்டது போல அரசாங்கம் இன்று யுத்தத்தை மட்டுமே நம்பியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு புலிகள் தவிர்த்த மற்ற இயக்கங்கள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

இதர அம்சங்களைப் பொறுத்தமட்டிலாவது புலிகள் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக நடந்து-கொள்கிறார்களா?

ஷோபா : பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல, புலிகளும் நேர்மையாகவும், உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தை விரும்புகின்றனர். யுத்தத்தின் மூலமாகவே இருவரும் தமது அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இடையில் புகுந்து குட்டையைக் குழப்பும் அந்நிய வல்லாதிக்க சக்திகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மட்டுமல்லாமல், யுத்தத்தைத் தீர்மானிப்பதிலும் இவர்களுக்கு ஒரு பங்குள்ளது.

இன்று கிழக்கிலுள்ள நிலைமை குறித்து சற்று விரிவாகச் சொல்லுங்கள்.

ஷோபா : விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்த இரண்டு நாட்களில், இங்கே ஒரு வானொலி நிலையத்தில் அதுகுறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. கோவை நந்தன், தேவதாஸன் கலந்துகொண்ட அந்த உரையாடலில் நான் தொலைபேசி மூலம் என் கருத்துக்களைச் சொன்னேன்.

``பிரிந்து வந்தவுடன் கிழக்கு மாகாணத்தினர் தொடர்ந்து புறக்கணிப்புச் செய்யப்படுவது, கிழக்கின் சுயாட்சி பற்றியெல்லாம் கருணா பேசியது வரவேற்கத்தக்கதுதான் என்ற போதிலும், இந்தப் பேச்சு ஒரு தவறான மனிதரின் வாயிலிருந்து வருகிறது'' என நான் அன்று சொன்னேன். பிரபாகரன் ஒரு ஹிட்லர் என்றால் கருணா ஒரு முஸோலினி என்றும் சொன்னேன். தொடர்ந்து அவரது செயற்பாடுகளும், பேச்சுக்களும் அதை நிரூபித்தன. கிழக்கின் சுயாட்சி பற்றியவை தவிர அவரது மற்ற பேச்சுக்கள் எல்லாம் கிட்டத்தட்ட புலிகளைப் போலவே இருந்தன. ஆள் கடத்தல், கொலை செய்தல் இவை எல்லாம் தொடர்ந்தன. இராணுவத்துடன் சேர்ந்து செயல்படும் நிலையும் இருந்தது.

இந்நிலையில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றையும் அரசு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் `தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' தவிர மற்றெல்லா அரசியல் கட்சிகளும் பங்குகொண்டன. தேர்தலும் பெரிய அராஜகங்களின்றி நடைபெற்றது. அரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலமைச்சரானார்.
தொடர்ந்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. முதலில், பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக அங்கே போர் ஒழிந்து மக்கள் அமைதியாக உள்ளனர். கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக ஏராளமான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, போர்முனையில் நிறுத்திக்கொல்லப்படும் அவலம் நின்றுவிட்டது.

தவிரவும் இன்று கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் பல நல்ல, முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கெனவே நிறைய இழந்துவிட்டோம். போரில் களைத்துப் போய்விட்டோம். ஏராளமான விலையைக் கொடுத்துவிட்டோம். `பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்' என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துகின்றோம். இலங்கை அரசியலிலே கிட்டிய ஒரு அண்மை உதாரணம் ஜே.வி.பி. கடுமையான ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட ஜே.வி.பி. இன்றுள்ள அரசியல் சூழலில் அதைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஆயுதப் போராட்டத்தை நடத்தும்போது மக்களிடம் எந்த அளவு ஆதரவு பெற்றிருந்ததோ, அதைக் காட்டிலும் பலமடங்கு ஆதரவைப் பெற்றதோடு, இலங்கை அரசாங்கத்திலும் பங்கெடுத்துள்ளனர்.

நாளை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி, தேர்தலில் நின்றாரானால் அதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி தமிழ் மக்களுக்கு இருக்கமுடியாது. அதை நாங்கள் வரவேற்கிறோம். அந்த அடிப்படையிலேயே இன்று `தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்' தேர்தல் அரசியலுக்குத் திரும்பியதை நாங்கள் வரவேற்கிறோம். இதனுடைய அர்த்தம் சிவனேசதுரை சந்திகாந்தன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளர் இல்லை என்பதோ, அவர் ஒரு நீதிதேவன் என்பதோ அல்ல. அவரது அரசியல் நெறிகள் மீது நமக்குக் கடும் விமர்சனம் எப்போதும் உண்டு.

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகளை வரவேற்போம் எனக் கருணா இரண்டு நாட்களுக்கு முன் சொல்லியிருப்பது ரொம்பவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இந்த விமர்சனங்களுக்கப்பால் அவர்கள் ஒரு ஜனநாயக எல்லைக்குள் நின்று தம் அரசியலைச் செய்வது வரவேற்கத்தக்கதுதான்.
துக்ககரமான வேடிக்கை என்னவென்றால் ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட், ஈ.பி.டி.வி., டெலோ முதலிய அமைப்புகளெல்லாம் தேர்தல் பாதைக்குத் திரும்பியபோது மகிழ்ந்து வரவேற்ற யாழ் அறிவுஜீவிகளும், ஜனநாயகத்தைப் பேசுபவர்களும் இன்று சந்திரகாந்தன் தேர்தல் பாதைக்குத் திரும்பியதை அங்கீகரிக்க மறுப்பதுதான். தமிழ் மக்களின் முக்கிய அறிவுஜீவிகளாகவும், சிந்தனைப் பிரதிகளாகவும் உள்ள இவர்களே இதை மறுப்பது ஒன்றே கிழக்கு மாகாணத்தின் சுயாட்சி உரிமைக்கு நிரூபணமாகிறது.

(நன்றி: தீராநதி)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com