Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2008

என்ன செய்யப்போகிறார் ஒபாமா?
எஸ்.வி.சசிக்குமார்

பாரக் ஹ§சேன் ஒபாமாவை ஜனாதிபதியாகப் பெருவாரியான ஆதரவுடன் தேர்ந்தெடுத்து அமெரிக்கக் குடிமக்கள் புதிய வரலாறு படைத்திருப்பது உண்மையிலேயே பெரு மகிழ்ச்சிக்குரியது தான். ஏனென்றால் நெடிய அமெரிக்க வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாகக் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராக முடிந்திருக்கிறது. கடுமையான போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமா தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். நாட்டின் பல பகுதி மக்களின் பேராதரவும் அவருக்குக் கிடைத்திருப்பதும், ஒரு சாதனை தான். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உட்பட, பிறநாட்டு மக்களும் அவருடைய வெற்றிக்குத் துணையாக இருந்ததும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ‘மாற்றம், ‘நம்பிக்கை’ என்ற இரு இலட்சியங்களைக் கொண்டு தேர்தலில் வென்ற ஒபாமா, அமெரிக்க நாட்டில் மட்டுமின்றி பிறநாடுகளிலும் பெரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறார். எட்டு ஆண்டுகளாகத் தனது அதீதமான, முறைகேடான செயல்கள் மற்றும் அத்துமீறல்கள் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சி முடிகிறது என்பதே ஒரு பெரிய ‘மாற்றம்’தான். அதுவே உலக மக்களிடையே ஒரு ‘நம்பிக்கை’யை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது.

obama அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் ஒபாமாவிற்கு இருக்கின்ற பெரும் செல்வாக்கு, அம்மக்கள் மத்தியில் பெரிய அளவிற்கு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறதாகச் சொல்கிறார்கள். இந்திய ஊடகங்களும் ஒபாமா அரசு சர்வதேச உறவுகளிலும், குறிப்பாக இந்திய அமெரிக்க நல்லுறவிலும் விரும்பத்தக்க மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றன. இதுபோன்ற நம்பிக்கைக்குக் காரணம், தேர்தல் பிரச்சார காலத்தில் ஒபாமா பலமுறை இன்றைய உலகப் பொருளாதாரச் சரிவிற்கு புஷ் அரசின் தவறான கொள்கைகளே வழிவகுத்தன என்று கூறி வந்திருப்பதுதான். இன்னும் சில வாரங்களில் பதவி ஏற்றபின் ஒபாமா இச்சிக்கலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? அடிப்படைக் கொள்கை மாற்றம் ஏற்படவிருக்கிறதா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மூலக்காரணமான உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற கொள்கையில் மாற்றம் கொண்டுவர முன்வருவாரா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும். புதிய ஒரு பொருளாதாரக் கொள்கையின் மூலம் ‘மாற்றம்’ ‘நம்பிக்கை’ ஏற்படுத்த முடியும் என்று அவர் முடிவெடுத்து செயல்பட்டால் அது பிற நாடுகளில் என்ன ‘மாற்றம்’ஏற்படுத்த முடியுமென்பதும் இனிதான் தெரியமுடியும்.
தொழில்துறையில், குறிப்பாகச் சேவைத்துறையில் ‘’அயல் நாட்டுப் பணி ஒப்படைப்பு’முறையை எதிர்த்து அவர் பேசிவந்திருக்கிறார். இது அந்தப் புதிய முறையினால் வேலை இழந்தவர்களுக்குப் பலன் கொடுக்கும். ஆனால், அதனடிப்படையில் தோன்றிய கால் சென்டர்கள் பணியாளர்களை இது பாதிக்குமே? இந்தியாவி-லும் பிறநாடுகளிலும் இந்தப் புதிய முறையினால் பயன்பெற்றவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்-தாதா என்றெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களும், உழைப்பாளி மக்களும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

பொதுவாக இந்திய அமெரிக்க உறவில் மட்டுமின்றி அமெரிக்காவின் சர்வதேச உறவுகளில் அதிபர் மாற்றம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, வல்லுநர்களாலும், ஊடகங்களாலும் அலசப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் பொதுவாக அதிபர்கள் தேர்தல்களுக்குப் பின் ஏற்பட்டதில்லை என்பதுதான் கடந்தகால அனுபவம். அந்நாட்டின் இரு பெரிய கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் பெரும்பான்மையான விஷயங்களில் ஒத்த கொள்கைகள் உடையனவாகவே இருந்து வந்திருக்கின்றன. பல்லாண்டு காலமாக அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டதில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உதாரணமாகச் சில விஷயங்களைச் சொல்லலாம். 1990களின் தொடக்கத்தில் ஏற்பட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின்னர் சுமார் கடந்த 20 வருடங்கள் அமெரிக்கா தொடர்ந்து இந்த ஒற்றைத்துருவ உலகம் என்ற நிலையைக் காப்பாற்றித் தன்னுடைய ஏகாதிபத்திய முதன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தனக்குச் சமமான ஒரு அரசு உருவாகக் கூடாது என்பதில் அது பிடிவாதமாக இருந்து வந்திருக்கிறது என்பதைத் தான் பார்க்கிறோம். அதைப்போலவே உலகின் எப்பகுதியிலும் எந்நாட்டையும், இறையாண்மை கொண்ட எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்கும், ஆக்ரமிப்பதற்கும் உரிமை தனக்கு உண்டு என்றே அமெரிக்கா தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்திருக்கிறது. பல நாடுகளை நிலைகுலைய வைத்த பெருமை அந்த நாட்டிற்கு உண்டு.

கியூபாவிற்கு எதிராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தி, அந்நாட்டு மக்களைத் துயரத்தில் ஆழ்த்தி வருத்தியிருக்கிறது என்பதை மறக்க முடியாது. தனது மேலாதிக்கத்தை எங்கெல்லாம் செலுத்த முடியுமோ, அந்நாடுகளிலெல்லாம் அரசு பயங்கரவாதத்தை ஏற்படுத்தி மக்களின் உரிமைகளைப் பறித்து தொல்லை கொடுத்தே வந்திருக்கிறது அமெரிக்கா. இஸ்ரேலைத் தொடர்ந்து ஆதரித்து, பாலஸ்தீனிய மக்கள் தாங்கள் இழந்த தாய் நாட்டை மீட்க முடியாவண்ணம் பல்லாண்டு காலம் அராஜகம் செய்து வந்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அநேகமாக மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களிலும் குடியரசுக் கட்சியோ, ஜனாநயகக் கட்சியோ எதுவென்றாலும் ஒரே விதமான, எந்த மாற்றமும் இல்லாத முறையில் அமெரிக்க அரசு தனது நிலையில் உறுதியாக இருந்து வந்திருக்கிறது. ஒபாமாவும் இந்நிலையிலிருந்து மாற்றம் கொண்டு வருவார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. கியூபா மீதான பொருளாதாரத் தடை தொடரும் என்பதை அவர் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார். இவற்றைப் போலேதான் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்தியா மீதான நிர்ப்பந்தங்களை அமெரிக்கா அதிகரிப்பதற்கான வாய்ப்புதான் தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா விரிவான அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட உறுதியாக மறுத்து வந்திருக்கிறது. சமீபத்தில் கையெழுத்தான இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் விஷயத்தில் அமெரிக்கா தனது நிர்ப்பந்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிக்க வழி வகுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. ஒபாமா என்ன செய்யப் போகிறார் என்று இனிமேல்தான் தெரியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் காஷ்மீர் சம்பந்தப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் தனது கொள்கையில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. எந்த அந்நியத் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்பதில் இந்தியாவின் நிலை மாறவாய்ப்பில்லை. ஆனால், காஷ்மீர் விஷயத்தில் தீர்வு காண, தான் ஆர்வம் கொண்டிருப்பதாக ஒபாமா கூறியிருப்பது இந்தியாவிற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்காது. காஷ்மீர் பிரச்சனையில் எந்தத் தலையீட்டையும் இந்தியா ஏற்றுக் கொள்ள இயலாது என்ற நிலையில் ஒபாமாவின் ‘விருப்பம்’ எந்தவகையில் நிறைவேறும்?

பொருளாதாரக் கொள்கையில் புஷ்ஷின் கொள்கையை ஒபாமாதான் ஏற்கவில்லை என்று சொல்லியிருந்தாலும் அவரது மாற்றுக் கொள்கை எப்படியிருக்குமென்று சூசகமாகக் கூட அவர் இதுவரை சுட்டிக்காட்டியதில்லை. அமெரிக்காவின் ஏகபோக வர்த்தக நிறுவனங்களின், சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியோடு கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டுவரும் நாசகரக் கொள்கையான உலகமயமாக்கல் கொள்கையைக் கைவிடுவதற்கு, ஒபாமா தலைமையிலான அரசிற்கு என்ன மாற்றுக் கொள்கை இருக்கிறது என்பது புலப்படவில்லை. ஒபாமா அமெரிக்காவின் பொருளாதாரச் சிக்கலை எப்படித் தீர்த்து வைக்கப்போகிறார் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். புஷ்ஷைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருந்த கொள்கையின் செயல்பாட்டுப்போக்கிலேயே சென்று தற்போதையச் சிக்கலைத் தீர்க்க முடியுமென்ற நிபுணர்களின் நிலைபாட்டையே, நம்பி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ஒபாமா தேர்தல் பிரச்சார காலத்தில் சர்வதேச நிதிமூலதனமும், அதன் ஊக வணிக நடவடிக்கைகளுமே தற்போதைய நெருக்கடிக்கு மூலக்காரணம் என்று பேசிவந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் மிகத் தீவிர மாற்றங்களைக் கொண்டு வந்தாலொழிய நிலைமை சீர்பட வழியில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அதற்கு ஜனநாயகக் கட்சியிலுள்ள பழமையாளர்களும், குடியரசுக் கட்சியும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமாவிற்குத் தங்களின் ஆதரவை முழுமையாகத் தருவார்களா என்பது கேள்விக்குறியே. ஒபாமாவின் முடிவு எதுவென்றாலும் அது அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமின்றி இந்தியா உட்பட்ட பிற உலக நாடுகளின் பொருளாதார நிலையையும் பாதிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அது இந்தியாவிற்குப் பலனளிப்பதாக இருக்குமா? இல்லையா? என்பதெல்லாம் இப்போதே ஊகித்து அறிவது சாத்தியமில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com