Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2008

சட்டக்கல்லூரி
ரேஜீஸ்குமார்

நவம்பர் 12 சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதலை தொலைக் காட்சிகளில் பார்த்தபோது தமிழக மக்களின் இதயத்துடிப்பு இரண்டு நிமிடங்கள் நின்று போயிருக்கும். எதிர்கால தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் மாணவர் சமூகம் கத்திகளோடும், தடிக் கம்புகளோடும் மோதிக் கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குக் காரணமென்ன?

law college அக்டோபர் 30, தேவர் ஜெயந்தி விழா, சட்டக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்காக வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் சுவரொட்டிகளில் கல்லூரியின் பெயர் ‘‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி” என்பதற்குப் பதிலாக ‘‘சென்னை சட்டக் கல்லூரி” என்று அச்சிடப்பட்டிருந்தது. கல்லூரியின் பெயர் அதிகாரப்பூர்வமாக டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று இருக்கும் போது ஏன் டாக்டர் அம்பேத்கர் பெயரை எடுத்துவிட்டு சென்னை சட்டக் கல்லூரி என்றுபோட வேண்டும். காரணம் டாக்டர் அம்பேத்கர் ஒரு தலித். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக டாக்டர் அம்பேத்கர் யெரைப் பயன்படுத்த மாட்டோம் என்கிற ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான், பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி, போஸ்டர், நோட்டீஸில் டாக்டர் அம்பேத்கர் பெயர் விடுபட்டது குறித்து வினவிய ஒரு பகுதி மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதன் எதிர்தாக்குதல் தான் நவம்பர் 12 சம்பவம்.

அக்டோபர் 30 துவங்கி கல்லூரிக்குள் மிகப் பெரிய மோதல் நடைபெற வாய்ப்புள்ளது என்கிற தகவல் கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தும், பிரச்சனைக்குக் காரணமான மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியமும், ஆதிக்க மனோபாவத்துடன் சாதி ரீதியாக மாணவர்களை பிளவுபடுத்த முயற்சிக்கும் சாதிய சக்திகள் உருவாக்கி வைத்திருந்த வெறுப்புணர்வும்தான் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு இட்டுச் சென்றது.
மாணவர்கள் கத்திகளோடும், தடிக்கம்புகளோடும் மோதிக் கொண்டபோது, ஏதோ சினிமா படப்பிடிப்பு காட்சிபோல் கைகட்டி வேடிக்கை பார்த்தது தமிழகக் காவல் துறை. தமிழகம் முழுவதும் மாணவர்கள் உரிமைக்காக, கல்வி வியாபாரத்திற்கு எதிராக, அமைதியான முறையில் போராடிய போதெல்லாம், போராடிய மாணவர்களை அடித்து நொறுக்கிய தமிழகக் காவல்துறை இரண்டு பிரிவு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களோடு கடுமையாக மோதிக் கொண்டபோது கைகட்டி, வாய் பொத்தி மௌனியாய் வேடிக்கை பார்த்தன் மர்மம் இன்னும் தமிழக மக்களுக்கு பிடிபடவில்லை.

நவம்பர் 12 சம்பவத்தைத் தொடர்ந்து பொது மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. பத்திரிகைகள் தலையங்கம் மூலமாகத் தங்கள் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டன. இதுபோன்ற பிரச்சனைகள் இனிமேலும் நிகழாமலிருக்க என்ன செய்யலாம் என பல்வேறு தரப்பிலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உயர்நீதிமன்றமும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு தனது தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இத்தகைய விவாதங்களும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் இந்தியாவின் சமூகச் சூழல், கல்வி நிலையச் சூழல், கல்வியின் தரம், சாதியின் தாக்கம், சாதிய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆழமாக இல்லை.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்பது வள்ளுவன் வாக்கு. ஆனால், தற்போதைய நடவடிக்கைகள் இந்த தன்மையில் இல்லை என்பது மட்டுமல்ல பிரச்சனையை திசைதிரும்பும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளன. மாணவர்கள் அரசியலற்ற தன்மையுடன் உருவாக்க வேண் டும். ஜனநாயகப் பூர்வமான செயல்பாடுகள் மாணவர்களுக்கு தேவையில்லை என்பதாவே உள்ளது. தேசவிடுதலைப் போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க வேண்டுமென காந்தி அழைத்தபோது பட்டங்களையும், படிப்புகளையும் தூக்கியெறிந்து விட்டு விடுதலை வேள்வியில் கலந்த வரலாறு மாணவர்களுக்கு உண்டு. இந்தி எதிர்ப்புப் போராட்டம், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம், சமூகப் பொருளாதார பிரச்சனைகளுக்கான போராட்டம் என ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான நல்வாழ்வுக்கான போராட்டங்களை நடத்திய வரலாறு மாணவர் சமூகத்திற்கு உண்டு. இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட மாணவர்கள் தங்களுக்குள்ளே சாதியின் பெயரால் மோதிக் கொண்டது ஏன்?

பெரும்பாலான விவாதங்கள் மாணவர்களை அரசியலற்ற தன்மையுடன் உருவாக்க வேண்டும். ஜனநாயகப் பூர்வமான செயல்பாடுகள் தேவையில்லை என்பதாகவே உள்ளது. மாணவர்கள் அரசியல் குறித்த தெளிவோடும், இந்திய தேசத்தின் ஜனநாயக மாண்புகள் குறித்த புரிதலோடும் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் சாதி, மத பிரிவினைவாத அமைப்புகளை புறக்கணிக்க உதவும். மேலும் மாணவர்களின் ஜனநாயகப்பூர்வமான நடவடிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கல்வி நிலையச் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அத்தகைய சூழல் உருவாக்கப்படும்போதுதான் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதைத் தடுக்க முடியும்.

தமிழக சட்டக்கல்லூரிகள் தொழிற்கல்விக்கான எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததாக, இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்ற தரமில்லாததாக உள்ளது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் ஒரே தொழிற்கல்வியாகச் சட்டக்கல்வி மட்டுமே உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டதாக கூறும், அதிமுகவும், திமுகவும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டபோதும், சட்டக் கல்லூரி, சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கடந்த காலங்களில் இந்திய மாணவர் சங்கம் தொடர்ச்சியாக போராடிய போதும், இவர்கள் தொடர்ந்து அலட்சியப் போக்கையே கடைபிடித்து வந்துள்ளனர்.

மாறாக இரட்டை டம்ளர் முறை உள்ளிட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் வாரிசுகளாக தங்களை காட்டிக் கொள்ளும் இவர்கள் சட்டக் கல்வியில் இரட்டைக் கல்லூரி முறையையே கொண்டு வந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இண்டர்நெட் வசதி, சட்ட இதழ்கள் கொண்ட நூலகம், முழுநேர வகுப்பு, மாதிரி நீதிமன்றம் என எல்லாவித வசதிகளுடன் வசதிபடைத்த மேல்தட்டு மக்கள் மட்டுமே கல்வி பயிலும் பி.எல். ஹானர்ஸ் ஒரு புறம். எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் சட்டக் கல்லூரிகள் மறுபுறம் என இரண்டு விதமான சட்டக் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பெரியாரின் சீடர்கள்.

குறிப்பாக சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 2,000 மாணவ, மாணவிகளுக்கு 12 முழுநேர பேராசிரியர்களும், 14 பகுதிநேர பேராசிரியர்களும் மட்டுமே உள்ளனர். பகுதிநேர பேராசிரியர்களும் வழக்கறிஞர் பணி புரிவதால் வகுப்புகளுக்கு சரிவர வராமல் உள்ளனர். இதனால், தினமும் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. இன்றைய சூழலுக்கு ஏற்ப திறமையான இளம் வழக்கறிஞர்களை உருவாக்குவதற்கான சூழல்கள் எதுவும் சட்டக்கல்லூரிகளில் இல்லை. ஆகவே, கல்வியின் தரம்
உயர்த்தப்பட வேண்டும், மாணவர்களை கல்வி குறித்த விசயங்களில் அதிகமாக ஈடுபடுத்தும்போது இது போன்ற பிரிவினைவாத போக்குகளைத் தடுக்க முடியும்.

ஆனால், உயர்நீதிமன்றம் இதுபோன்ற சமூக காரணிகளை, புறச்சூழலை கணக்கிலெடுக்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஒரு சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை நடைமுறைக்கு ஒவ்வாததாகவும், மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பதாகவுமே உள்ளது. நவம்பர் 12 மோதல் என்பது இரண்டு குழுக்களிடையே நடைபெற்ற மோதலாக மட்டுமே பார்க்கக் கூடாது. இரண்டு சாதிப்பிரிவுகளிடையே நடை பெற்ற சாதிய மோதல். இதற்கு முன்னரும் இது போன்ற மோதல்கள் நடைபெற்றுள்ளன. நவம்பர் 12 மோதலை கடந்த கால மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறையின் மூலம் சரி செய்துவிடலாம் என்று நினைத்தால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது. மாறாக மாணவர்களிடையே மேலும் பகை உணர்வை அதிகரிக்கவே செய்யும்.

அதுபோல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி விடுதியை மூடி விட முயற்சித்தனர். இதனை நிறைவேற்றும்படி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. சட்டக் கல்லூரி விடுதியின் தரத்தினை மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துகொடுப்பதோடு முழுநேர விடுதிக் காப்பாளரை நியமிப்பதன் மூலம் விடுதியிலுள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வமான தீர்வினை சொல்வதற்குப் பதிலாக விடுதியை மூடிவிட்டு சென்னை புறநகரில் வேறு இடத்தில் விடுதியை கட்டவேண்டுனெ உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைவலி வந்தால் வலிக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமே தவிர தலையையே எடுத்துவிட வேண்டும் என்பது எப்படி சரியாக இருக்கும்.

நீதித்துறையின் நடவடிக்கை இப்படியென்றால் தமிழக அரசின் நடவடிக்கையோ இதைவிட மோசமானதாக உள்ளது. நவம்பர் 12 மோதலுக்குப்பின் கான்ஸ்டபிள் முதல் கமிஷனர் வரை பல்வேறு காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது தமிழக அரசு. மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தனிப்படை அமைத்து கைது செய்தது, செய்து கொண்டிருக்கிறது. விடுதியில் தங்கிப்படித்த காரணத்தாலேயே குற்றவாளிகள் எனக் கூறி கைது செய்யும் தமிழக காவல் துறை பிரச்சனைக்கு மூலக்காரணமான ஆதிக்க சாதிய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டுவது ஏன்?

இறுதியாக நவம்பர் 12 நிகழ்ச்சி இனிமேலும் நடக்காமலிருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு செல்ல வேண்டும் அதற்கு உதவியாக நீதித்துறையின் வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும். மாறாக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து அடக்கி ஒடுக்க நினைப்பது பிரச்சனைக்கு தீர்வாகாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com