Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2008

மும்பை மாலேகாவ்
கணேஷ்

நவ.26, 2008. இரவு 9.30 மணி. ஒருகாலத்தில் ராணுவத்தினரிடமே மிகவும் அரிதாகக் காணப்பட்ட ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை சர்வ சாதாரணமாகத் தூக்கிக் கொண்டு நுழைந்த பயங்கரவாதிகள் மும்பையையே கதிகலங்கச் செய்துவிட்டனர். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கிகளால் சுட்டும் இந்தியாவின் வணிகத் தலைநகரை ரணகளமாக்கி விட்டனர். இவர்களின் தாக்குதல்களில் மூன்று காவல்துறை அதிகாரிகள், 18 வெளிநாட்டவர் உள்ளிட்ட சுமார் 195 பேர் கொல்லப்பட்டனர். இரவின் மடியில் அரக்கத்தனமான வகையில் ஆடித்தீர்த்து விட்டனர்.

"நேருக்கு நேர்; டுமீல்..டுமீல்," என்று பயங்கரவாத சம்பவத்தை திருவிழா செய்தி போல் சில நாளேடுகள் பிரசுரித்தன. தொலைக்காட்சிகள் இன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டன. "பாருங்க...பாருங்க... பாத்துக்கிட்டே இருங்க" என்று சொல்லாத குறையாக மும்பை சம்பவத்தை மட்டும் தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பி வந்தன. நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நிருபர்களுக்கு எல்லாம் விடுமுறை அளித்து விட்டார்கள் போலும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைந்த செய்தியைக் கூட தேர்வில் கேள்விகளை 'சாய்சில்' விடுவது போல விட்டுவிட்டார்கள்.

mumbai பயங்கரவாத செயலை யார் நடத்தியது என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது புறம் இருந்தாலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் புதிய உருவத்தை எடுத்துள்ளது. மறைந்திருந்து தாக்குவது அல்லது தற்கொலைப் படைத்தாக்குதல்களை நடத்துவது என்பதையெல்லாம் தாண்டி சினிமாக்களில் வருவதைப் போன்று ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ஈவு இரக்கமில்லாமல் அப்பாவி மக்களை சகட்டு-மேனிக்கு சுட்டுத் தள்ளியுள்ளனர்.

அதோடு நில்லாமல் தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆகிய மூன்று இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மும்பையையே ஸ்தம்பிக்க வைக்க முயன்றுள்ளனர். உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுடன் போராடிய அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளை வீழ்த்தினர். பயங்கரவாதிகள் எப்படி உள்ளே நுழைந்தார்கள், ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன, உளவுத்துறை என்ன செய்தது என்ற கேள்விகளெல்லாம் நியாயமாக இருந்தாலும், பயங்கரவாதிகளை வீழ்த்திய பாதுகாப்புப் படையினருக்கு 'வீர சல்யூட்' ஒன்று அடிப்பது பொருத்தமானதாகவே இருக்கும்.

இந்த பயங்கரவாதிகளை எதிர்கொண்ட நடவடிக்கைக்கு "ஆபரேசன் புயல்" என்று பெயர் வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட புயல் வேகத்தில்-தான் இந்த பயங்கரவாதிகள் வந்தார்கள். அவர்கள் ஏற்படுத்திய அழிவும் புயல்பாதிப்பு போல்தான் இருந்தது. "வந்தார்கள்...வென்றார்கள்" என்ற கதை போல் ஆகிவிடாமல் "ஆபரேசன் புயல்" வெற்றிகரமாக நடந்துள்ளது. மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் போன்ற தீரமான கமாண்டோவை நாம் இழந்துள்ளோம். உயிரிழப்பதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட மற்றொரு கமாண்டோவைக் கீழே தள்ளி எறிகுண்டு வீச்சிலிருந்து அவர் காப்பாற்றியுள்ளார். நாட்டைக் காக்கும் பணியில் எட்டு கமாண்டோக்கள் பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட எட்டு பகத்சிங்குகளை நாம் இழந்துவிட்டோம் என்று இணையதள விவாதத்தில் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகத்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான திருப்புமுனை சமீபத்தில் ஏற்பட்டது. பொதுவாக, ஒரு இடத்தில் குண்டு வெடித்தால் உடனேயே அது இஸ்லாமியர்கள்தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும் என்று பலரின் மனதில் விதைக்கப்பட்டு இருந்தது. இந்த வேலையை பெரும்பாலான ஊடகங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்தன. மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணை இந்துத்துவா அமைப்புகளை நோக்கி அழைத்துச் சென்றது. ஐதராபாத் மெக்கா மசூதி, கான்பூர், தென்காசி போன்ற இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள் மட்டுமில்லாமல் சம்ஜோதா எக்ஸ்பிரசில் குண்டு வெடித்ததும் இவர்களின் கைங்கர்யம்தான் என்ற சதி அம்பலமானது.

பயங்கரவாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டுமே பொறுப்பாக்குவது சரியல்ல என்று தொடர்ந்து கூறிவந்த இடதுசாரி மற்றும் ஜனநாயகவாதிகளின் கணிப்பை இது உறுதியாக்கியது. இந்துத்துவவாதிகளின் ஊடுருவல் ராணுவத்தையும் விட்டுவைக்கவில்லை என்பதும் அம்பலமாகியது. மாலேகான் குண்டுவெடிப்பில் பெண் சாமியார் பிரக்யா சிங்கோடு ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் புரோகித் மாட்டினார். சில நாட்களில் ஜம்முவில் மடம் நடத்திவந்த தயானந்த் பாண்டே என்பவர் கைதானார்.

மகாராஷ்டிர மாநிலம் பைன்சாலா என்ற இடத்தில் உள்ள ராணுவப்பள்ளியில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதற்கான பயிற்சியை புரோகித் பலருக்கு அளித்தார். 54 பேர் பயிற்சி பெற்றுள்ளார்கள். இந்த 54 பேர் யார், தற்போது என்ன செய்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் இன்னும் தெரியவில்லை. ராணுவத்துறைக்குள் வலுவான உளவு அமைப்பு இருந்தாலும் புரோகித் போன்றவர்கள் எவ்வாறு தப்பிக்க முடிந்தது என்று பலர் வியப்பு தெரிவிக்கிறார்கள். வேலியே பயிரை மேய்ந்தகதைதான். அத்தகைய வலுவான உளவுத்துறையின் முக்கியப் பொறுப்பில்தான் இந்த புரோகித் இருந்துள்ளார்.

போலி சாமியார் தயானந்த் பாண்டேயும் விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். துறவறம்(!) பூணும் ஆசையில் அதை விட்டு வெளியேறிய அவர், வாரணாசியில் உள்ள மடம் ஒன்றிற்கு 15 லட்சம் ரூபாய் நன்கொடை(!) கொடுத்து சங்கராச்சார்யா பட்டத்தைப் பெற்றுள்ளார். சாலையோரத்தில் மூலிகைக்கடை போட்டிருப்பவர் பல்வேறு புகைப்படங்களையும் பிரேம் போட்டு வைத்திருப்பார். அதேபோல முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்களுடன் புகைப்படம் எடுத்து மாட்டியுள்ளார் இந்த சதிக்குரு சங்கராச்சார்யா.

இதுவரை இல்லாத ஆபத்தான சூழல் உருவாகியிருப்பதை மாலேகாவ் குண்டுவெடிப்பு சதி காட்டியது. இஸ்லாமியர்கள்தான் தாக்குதல் நடத்தினர் என்று கிளப்பி விட இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொள்வது, குண்டுகள் வெடித்த இடத்தில் பச்சைத் தொப்பிகளை விட்டுச் செல்வது போன்ற உத்திகள் முன்பெல்லாம் கையாளப்படுவது வழக்கம். இதெல்லாம் பழைய பேஷன் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ, இஸ்லாம் என்று உதட்டில் உச்சரித்து செயலில் பயங்கரவாதத்தைக் காட்டுபவர்களிடமிருந்தே குண்டுகளை வாங்கி வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

பொதுவாகவே, சம்பவம் நடந்தவுடன் அது நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே விசாரணையின் போக்கு இருக்கும். இதனால்தான் புரோகித்தின் ராணுவ மூளை குயுக்தியாக வேலை செய்துள்ளது. யாருக்கெதிராக இவர்கள் இயங்குவதாகக் கூறிக் கொள்கிறார்களோ, அவர்களிடமே அழிவுக்கான வெடிமருந்தை வாங்கி கொலை செய்துள்ளார்கள். மதத்தின் பெயரால் இவர்கள் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்களிலும் கொல்லப்படுபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படவில்லை. தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்த மட்டுமே மதம் என்ற முகமூடியை இவர்கள் அணிந்து கொள்கின்றனர்.

மாலேகாவ் சம்பவத்தில் இந்தத் திருப்புமுனை ஏற்பட்டதில் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்பு அமைப்பின் தலைவர் கார்காரேவுக்கு பெரும் பங்கு உண்டு. பயங்கரவாதிகள் மும்பை தாஜ் ஓட்டலில் புகுந்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அங்கு விரைந்த அவர் வெறியர்களின் தோட்டாவுக்கு இரையாகி விட்டார். இந்துத்துவ அமைப்புகளின் பயங்கரவாத சதியை அம்பலப்படுத்திய இவர், இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. பயங்கரவாத எதிர்ப்பில் சமரசமற்ற போக்கைக் கடைப்பிடித்த கார்க்காரே வீர மரணம் அடைந்துள்ளார்.

தாஜ் ஓட்டலுக்குள் இருந்து பயங்கரவாதியின் குண்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த வேளையில் இணைய தளங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இதில் பங்கேற்பது வழக்கம். நியாயமாக, நேர்மையாக விவாதிப்பவர்களைக் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து அவர்கள் வெளியேற்றி விடுவர். அதன்பிறகு அவர்களாக அமர்ந்து கொண்டு முஸ்லிம்கள்தான் காரணம் என்று தீர்ப்பளித்துக் கொண்டிருப்பார்கள். இதிலும் அதுதான் நடந்தது. சிலர் ஒருபடி மேலே சென்று ஷாரூக்கான், அமீர்கான் மற்றும் சல்மான்கான் ஆகியோரின் திரைப்படங்களை இனி நாம் யாரும் பார்க்கக்கூடாது என்றார்கள். இந்தியக் கிரிக்கெட் அணியில் ஜாகீர்கான், இர்பான் பதான் ஆகியோர் விளையாடக்கூடாது என்றார் ஒருவர். என்னவொரு தேசபக்தி...?

மண்ணின் மைந்தன் ராஜ் தாக்கரே எங்கே என்றும் சிலர் தேடிக்கொண்டிருந்தார்கள். மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே மும்பை என்று தாக்கரேக்கள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்த வேளையில்தான் இந்தத் தாக்குதல் நடை-பெற்றுள்ளது. மும்பையைக் காக்க தமிழன், பீகாரி, மலையாளி, பஞ்சாபி, வங்காளி என்று பாகுபாடில்லாமல் இந்தியாவே ஒன்றுதிரண்டு எழுந்தது. இறந்துபோன பாதுகாப்புப் படையினரில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்கள் தான் அதிகம். தாக்கரேக்கள் தெளிந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. வெறியைத் தூண்டிவிடுவது அவர்கள் தொழில். அவர்களை நிராகரிக்க வேண்டியது நமது கடமை என்ற பொறுப்பு அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் புயல், மழை, வெள்ளம் என்றால் ஒரு நாலடிக் குச்சி மற்றும் காக்கி நிற அரை டிராயருடன் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லிக்கொண்டு சிலர் பாதிக்கப்பட்ட இடங்களில் வலம் வருவார்கள். மக்கள் பிரச்சனை என்றால் இம்மியும் நகராத சிலர் இதை மட்டும் வாய்வலிக்க சொல்லிக் கொண்டிருப்பார்கள். இப்போதெல்லாம் விளக்கெண்ணெய் விட்டுப்பார்த்தால் கூட இவர்கள் தட்டுப்பட மாட்டேனென்கிறார்கள். மாலேகாவ், கான்பூர், ஐதராபாத், தென்காசி என்று தங்கள் பயங்கரவாத பராக்கிரமத்தைக் காட்டிய இவர்கள் மும்பை சம்பவத்திற்காக தாங்களும் பல அப்பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ?

மும்பை சம்பவத்தால் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று எட்டிப்பார்த்துள்ளார் நரேந்திர மோடி. அவர் அளித்த பணத்தை உறுதியாக மறுத்த கார்காரேயின் மனைவி ஒருவேளை சிறுபான்மையினரை தாஜா செய்பவர் என்று கூட இந்துத்துவவாதிகளால் பிற்காலத்தில் சித்தரிக்கப்படலாம். இவர்களின் கருத்தை மறுப்பவர்கள் பயங்கரவாதிகள், தாஜா செய்பவர்கள், தேச விரோதிகள் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் அந்த வீரப்பெண்மணி காட்டிய உறுதி தேசப்பற்றுள்ளவர்களுக்கு அற்புதமான உத்வேகத்தை அளிக்கும்.

மொரிசியசைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்றெல்லாம் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் போடப்படுகின்றன. பலரின் தலைகளைக் கொய்த இந்த பயங்கரவாதச் சம்பவம் அதிகாரத்தில் உள்ளவர்களின் நாற்காலிகளையும் பதம் பார்த்து விட்டது. உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீல் பதவி விலகியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் பெயர் கெட்டுப்போயிருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகியுள்ளார். இந்த பதவி விலகல்களோடு மும்பை சம்பவம் தொடர்பான கோப்பு தூசிபடிந்து விடக்கூடாது. ஆணிவேராக இருந்தாலும் விஷமரமாக வளர்ந்துள்ள பயங்கரவாதத்தை அசைத்து, அசைத்தாவது பிடுங்கி எறிய வேண்டும். மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு யார் இதில் இறங்கினாலும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை. இதில் தாமதம் கூடாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com