Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2007

கடும் நெருக்கடியில் பாக். ஜனநாயகம்
( பழைய கள், புதிய மொந்தை )
எஸ்.வி.சசிக்குமார்

2007 நவம்பர் மாதம் பாகிஸ்தான் மக்களுக்கும், அரசிற்கும், ஜனநாயகத்திற்கும் சோதனைமிக்க காலமாக அமைந்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாகவே தொடர்ந்த பல விறுவிறுப்பான மாற்றங்களையும், நிகழ்வுகளையும் சந்தித்து வந்த அந்நாட்டு மக்கள் அவற்றின் உச்சகட்டத்தையும், உக்ரத்தையும் நவம்பர் முதல் வாரத்திலிருந்தே அனுபவப்பூர்வமாக உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

கடந்த காலங்களில் பிரதமர்களாகப் பணியாற்றிப் பல காரணங்களுக்காகப் பதவி இழந்து அமெரிக்காவிலும், துபாயிலும் அபயம் தேடிச் சென்று சமீபத்தில் சொந்த நாடு திரும்பியுள்ள பேநசீர் புட்டோ, நவாஸ் ஷெரீப் இருவருமே அரசியல் மாற்றங்களை உருவாக்கி 2008 ஜனவரியில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல்களைத் தங்கள் கட்சிகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே புதிய சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பேநசீர், நவாஸ் இருவருடைய ஆட்சிகளுமே அரசியல் ஜனநாயகத்தை உத்திரவாதம் செய்வதில் அப்படியன்றும் சாதிக்க முடியவில்லை என்றாலும் சுமார் எட்டு ஆண்டுகளாக இராணுவத்தின் தலைமையில் நடந்த பெயரளவிலான ஜனநாயக, பாராளுமன்ற ஆட்சியில் பல்வேறு வகைகளில் அவதியுள்ள மக்களுக்கு ஓரளவாவது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

இந்த இரு தலைவர்களின் வருகையும் இருவருக்கும் அளிக்கப்பட்ட பெரும் வரவேற்புகளே இதைத் தெளிவாகக் காட்டின. முஷாரபும், அக்டோபரில் நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இரு தலைவர்களின் வருகையையும் தாம் உளப்பூர்வமாக வரவேற்பாகக் கூறிக்கொண்டார்.

Pak Politicians ஜனவரி பொதுத்தேர்தலில் பங்குகொண்டு “முழுமையான ஜனநாயகம்’’ பாகிஸ்தானில் மலர பேநசீர், நவாஸ் தலைமையிலான அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆவன செய்யும் என்று நம்புவதாகவும் முஷாரப் அறிவித்தார். அவர் சொல்வதெல்லாம் உண்மைதான் என்ற பிரமை-யையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். ‘ஜனநாயகம்’ காக்கவே இந்த ஜனநாயகப் படுகொலை என்று மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார் முஷாரப்.

ஆனால், விரைவிலேயே முஷாரப்பின் உண்மையான விருப்பம் இதுவல்ல என்பது தெரியவந்தது. நவம்பர் 3ஆம் தேதி அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மக்களைப் பெரிதும் அச்சத்திற்குள்ளாக்கின. நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியைப் பதவிநீக்கம் செய்தார். உடனடியாக ஹமீத் டோகர் என்பவரைப் புதிய தலைமை நீதிபதியாக நியமித்து, பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். அது மட்டுமின்றி, சிந்து, லாகூர், பலுச்சிஸ்தான் உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகளையும் நியமனம் செய்தார்.

‘தற்காலிக அரசியல் ஆணை’யம் ஒன்றை உருவாக்கி அதன்கீழ் தான் ஹமீத் டோகர் தலைமை நீதிபதியாகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவசர நிலை சம்பந்தமான (எமர்ஜென்சி) விதியை தலைமை நீதிமன்றம் ஏற்கா-விட்டாலும், விதியைப் புறம்தள்ளி ‘எமர்ஜென்சி’ பிரகடனத்தை முஷாரப் வெளியிட்டார். அரசியல் சட்டத்தின் செயல்பாட்டையும் முடக்கி வைத்தார்.

இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கெல்லாம் முஷாரப் சொன்ன காரணங்கள் வேடிக்கையானவை. “கடுமையான உள்நாட்டுக் குழப்பம்’’ காரணமாக ‘நாட்டின் ஒற்றுமைக்கு’ ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் தீவிரமடைந்து அரசின் அதிகாரங்களைப் பயங்கரவாதிகள் கேள்விக்குள்ளாக்கி இருப்பதாகவும், அதனால்தான் அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தமது தொலைக்காட்சி அறிவியல் அவர் தெரிவித்தார். “கடுமையான முடிவுகளை, இன்று அவை நமக்கு சில வசதிக் குறைவுகளை ஏற்படுத்தும் என்றாலும்கூட, எடுத்துத்தான் ஆகவேண்டும். இன்றேல் பாகிஸ்தான் பெரும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும்’’ என்று அவர் மக்களுக்கு சமாதானம் கூறினார்.

ஆனால், உண்மை அதுவன்று. தலைமை நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் ஒரு வழக்கு தனக்குப் பாதகமாகப் போய்விடும் என்ற அச்சமே முஷாரப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு உண்மையான காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அது என்ன வழக்கு? கடந்த அக்டோபரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றதாக வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கு தான் அது.

சமீபகாலமாக முஷாரப் அரசின் பல்வேறு உரிமை மீறல்களைக் குறித்து கடும் விமர்சனம் செய்து தீர்ப்பளித்திருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தமக்கு எதிராகவே இந்த வழக்கில் தீர்ப்பளிப்பார் என்ற அச்சம் தான் முஷாரப்பை இந்தத் தீவிர முடிவிற்குத் தள்ளி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல, பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது தமக்குச் சாதமாக இருக்கும் என்ற நினைப்பிலேயே அவரை பாகிஸ்தானுக்குத் திரும்பிவர “ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையின் முஷாரப் ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் பேநசீர் வரவேற்புப் பேரணியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பும், உயிர்ச்சேதமும் பேநசீரின் செல்வாக்கையும், அவரது தேர்தல் வெற்றி வாய்ப்பையும் பெரிதும் பாதித்திருக்கின்ற நிலைமையில் முஷாரப் தனது தேர்தல் கணிப்பு தோல்வி அடைந்து தனது நிலைபாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகஅரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

1999இல் நவாஸ் ஷரீப்பின் ஆட்சியைக் கவிழ்த்துத்தான் அன்று முஷாரப் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே. எனவே, நவாஸ் ஷரீபின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் தான் ஜனாதிபதி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சாத்தியம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டுதான் முஷாரப் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க நேரிட்டதாகவும் சிலர் கூறி இருக்கின்றனர்.

முஷாரப்பின் அவசர நிலை பிரகடனம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. பேநசீர் புட்டோவும், நவாஸ் ஷரீப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு உடனடியாக அழைப்புவிடுத்தனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் பிற நீதிபதிகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதியையும், அவமானகரமான நடவடிக்கைகளையும் எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் வழக்கறிஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

அரசு எதிர்ப்பில் முன்னணியில் இருந்த எல்லாத் தனியார் தொலைக்காட்சிகளையும் முடக்கிவைக்க அரசாணைக்கு எதிராக செய்தியாளர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

அமெரிக்காவின் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ப் போரில் அந்நாட்டின் முக்கியமான, முன்னணி சக்தியாகப் பாகிஸ்தான் விளங்கிய போதிலும், ‘சில உள்நாட்டுப் பயங்கரவாதிகளும், தீவிர மதவாதி-களும்’ தனது முயற்சிகளை எல்லாம் வீணடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டதால்தான் அரசு இந்தக் கடும் நடவடிக்கை எடுத்தது என்றெல்லாம் முஷாரப் சொன்ன காரணங்கள் முழுமையான உண்மையல்ல என்பது சில நாட்களிலேயே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இராணுவத் தலைமையையும், அரசுத் தலைமையையும் ஒன்றாக வைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு எதிர்பார்ப்பது நியாயமில்லை என்ற புரிதல் சில வாரங்களுக்குள்ளாகவே ஏற்பட்ட காரணத்தினால் தான் முஷாரப் தனது முடிவுகளில் சில மாற்றங்கள் செய்ய முனைந்தார். அதன் விளைவுதான் நவம்பர் இறுதியில் அவர் எடுத்த புதிய தொடர் நடவடிக்கைகள். நவம்பர் 29 அன்று அவர் தனது இராணுவ உடைகளை எல்லாம் கழற்றி எறிந்தவிட்டு, புத்தாடை பூண்டு, புதுப்பொலிவுடன் தன்னைப் பாகிஸ்தானின் ‘சிவில்’ ஜனாதிபதியாக உருமாற்றிக் கொண்டார்.

சில வாரங்களுக்கு முன்னர் அவரால் நியமிக்கப்பட்ட புதிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முஷாரப்புக்கு ‘சிவில் ஜனாதிபதி’யாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். (இதற்கு முன்னால் முஷாரப் தனது தலைமைத் தளபதி (ஜெனரல்) பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துப் புதிய தலைமை தளபதிக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்).

‘சிவில் (உடையுடன் ஜனநாயகம் ‘காக்க’ மீண்டும் ‘ஜனாதிபதி’யாக வலம்வரத் தொடங்கவிட்டார் முஷாரப். நீதியிடமிருந்து தன்னைக் காக்க “எமர்-ஜென்சி’’ அவருக்குத் தேவைப்பட்டது. ஜனநாயகவாதிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் ‘சிவில்’ உடைதான். ஆடை மாற்றம் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருமா? ‘சிவில்’ ஜனாதிபதி அறிவித்துள்ளபடி டிசம்பர் 16இல் ‘எமர்ஜென்சி’ முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, ஜனவரியில் நியாயமான சுயேச்சையான ஜனநாயகப்பூர்வமான, பொதுத் தேர்தல் நடைபெற்றால் இதற்குப் பதில் கிடைக்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com