Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2007

வெண்மணி தியாகிகள் தினம் ( டிசம்பர் 25 )
என்.ராமகிருஷ்ணன்

முகம் தெரியா இருட்டில்...

இரவுக் காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்றுகள். சுற்றியுள்ள வயல்களில் ரீங்காரம் செய்யும் வண்டுகள். கண் சிமிட்டி மினுமினுக்கும் நட்சத்திரங்கள் நேற்று இந்த வானிலா இருந்தன என வியக்குமளவிற்கு இருட்டு.

சேரியை அடுத்துள்ள மணல்திட்டில் முணுமுணுக்கும் குரல்கள். அவற்றில் பயத்தின் இறுக்கம், வேதனையின் வெளிப்பாடு உணரப்படுகிறது. பண்ணை வீட்டில் வாங்கிய சவுக்கு அடியினால் தீயாக எரியும் ரணம் விம்மலாக ஒலிக்கிறது. உரத்த குரலில் அழுவதற்குக்கூட உரிமையற்ற மக்கள்.

காரிருள் சூழ்ந்த அந்நாள் அமாவாசை நாள். நடப்பதோ அமாவாசைக் கூட்டம். இப்படி ஒரு நாளில் இப்படி ஒரு கூட்டமா? ஆம்! அதுதான் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தஞ்சைத் தரணியை ஆட்டிப்படைத்துவந்த பண்ணை அடிமை முறையின் கோர முகம்!

Budha மருட்சியும், மிரட்சியும் விழிகளில் உருண்டோட, பண்ணையடிமை என்றழைக்கப்பட்ட அந்த ஆண்களும், பெண்களும், பண்ணை எஜமானர்களுக்கு முன் கைகட்டி, வாய்பொத்தி நின்றார்கள். அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியாது. தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள முடியாத ஊமை மக்கள். அவர்களை, பண்ணை அடிமையாக வைத்திருந்த பண்ணை உரிமையாளருக்கு, உழவு மாடுகளைப் போன்று அந்த வயல்வெளி மனிதர்களும் உழவடை மிருகங்களே!

பணியாத காளைமாட்டை சாட்டையால் அடிப்பது போல் அந்த பண்ணை அடிமைகளும் அடிக்கப்பட்டார்கள். அந்த மாடுகளின் சாணத்தை கரைத்து குடிக்கும்படி இம்சிக்கப்பட்டார்கள். உலகில் எங்குமே இல்லாத ஈனத்தனமான தண்டனை இது.

அந்தப் பண்ணையடிமைகள், தங்கள் கண்ணீரைச் சிந்தி, வேர்வையை ஆறாகக் கொட்டி விளைவித்த நெல் மணிகளின் செல்வத்தினால் உண்டு கொழுத்த உளுத்தர் கூட்டம் அந்த செல்வத்தைக் கொண்டு தங்கள் பொழுது போக்கிற்காக நாட்டிய தாரகைகளையும், இசைவாணர்களையும், நாடகக் கலைஞர்களையும், கூத்துக் காரர்களையும் உருவாக்கினர், பராமரித்தனர். கலை வளர்க்கும் தஞ்சை என்று பெருமை பேசினர்.

கலை, இலக்கியம், இசை, ஆடல், பாடல் என்ற சமூக மேல்கட்டமைப்பிற்கு அடித்தளமாக இருந்த பண்ணையடிமைகளை புழுப்பூச்சிகளாக, புன்மைத் தேரைகளாக நிலப்பிரபுக்களும், பண்ணையார்களும் கருதினர். அதைத்தான் கவிஞர் நவகவி பின்வருமாறு குறிப்பிட்டார்:
“பூ விரியும் காவிரியின் ஆற்றங்கரையில்
பொன் வயல்கள் விரியும் அடிவானம் வரையில்
.......................
காவியங்கள் இப்படித்தான் தஞ்சையைப் பாடும்
களஞ்சியங்கள் நிறைந்ததும் மக்கள் வயிறுகள் வாடும்
கழனிகளின் சேற்றடியில் புதையுண்டு போகும்
கால் சுவடாய் மறைந்ததிவர் சரித்திரமாகும்!’’

பண்ணையடிமைகளுக்குத் தெரிந்த இசை, காலேரிப்பாட்டு என்பதுதான். காலை கருக்கலில் தங்கள் (சேரி)களிலிருந்து வயலை நோக்கிச்செல்லும் பொழுது “புலர்காலே, புலருங்காலே’’ என்று சேர்ந்திசையில் பாடுவார்கள். அது, அவர்களுடைய இசைத்திறனை வெளிப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, மஞ்சத்தில் துயில்கொள்ளும் நிலப்பிரபுவிற்கு, பண்ணையடிமைகளான தாங்கள் வயலில் உழவுப்பணிக்கு இறங்கிவிட்டோம் என்பதை உணர்த்துவதற்காக.

குறித்த நேரத்தில் வேலைக்கு வரவில்லை என்றாலோ, நிலப்பிரவுவின் ஏஜண்டு சொன்னதைப் போல் செய்யவில்லை என்றாலோ, சவுக்கு அந்த அடிமைகளின் தோல்களை அறுத்து குருதி கொப்பளிக்கச் செய்யும் கூழாங்கல் பொருத்திய சவுக்கு நுனி அவர்கள் உடலை அறுத்தெடுக்கும்.

செய்வதறியாது மிரண்டு நின்ற அந்த உழைப்பாளி மக்கள், தங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் கொட்டி தீர்த்துக்கொள்ளும் நேரம்தான், மனப்பதிவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் நேரம்தான் அமாவாசை இரவு!

பின்னாட்களில் விவசாயிகள் சங்கம் வலுப்பெற்ற பின்னர், விவசாயத் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து போராடி அமாவாசை நாளை விடுமுறை நாளாகப் பெற்றனர். அந்நாளில் மட்டும் அவர்கள் வயல்களுக்குப் போக வேண்டியதில்லை. அவர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்காக, ‘சாதி நியாயம்’ பேசுவதற்காக இந்த அனுமதி. இந்த விடுமுறை நாள் பெறும் வரை அவர்கள் அமாவாசை நாளில், இருள் சூழ்ந்த பின்னர்தான் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவர்கள் மனவெடிப்பு, மனஉளைச்சல் என்பது அதுவரை காற்றில் கலந்த ஓசையாகவே
இருந்தது.

தங்கள் அடிமை வாழ்விற்கு விடியல் கிடையாதா, வாழ்நாள் முழுவதும் வேதனையிலேயே முடிந்து விடுமோ என அந்த அடிமை மக்கள் நொந்து கொண்டிருந்த நேரத்தில், நம்பிக்கை ஒளி எங்காவது தென்படுமா என அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு விடிவெள்ளி தோன்றியது செங்கொடியாகும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com