Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2007

வெற்றி அல்லது வீர மரணம்
(கியூப புரட்சியின் வீரன் சேகுவேராவின் வரலாறு கவிதையில்)
கவிவர்மன்

அக்டோபர் 8
நதிக்கரையில்
புதியவர்கள் புழக்கம் இருப்பதாய்
துப்புக் கிடைக்கிறது.

Che Guevera அலைந்து அலுத்துப்போன
ராணுவ அதிகாரி
கரும்புக்காட்டை கண்ட யானைபோல்
பரவசமானான்

சேயும், தோழர்களும் ஓய்வெடுக்கும்
நதிக்கரை நோக்கி நகர்கிறது
பெட்டாலியன்.
அடுத்து யோசிக்க அவகாசமில்லாமல்
திடீரென படபடத்தன துப்பாக்கிகள்.

இரண்டு தோழர்களின்
இருதயத்தை துளையிட்டுப்போனது
தோட்டா
சேயின் கண்முன்
சடலமாகச் சரிந்தார்கள்.

மரணம் வரை போராடுவது தவிர
வேறேதும் யோசிக்கமுடியாத
இறுதி நிமிடங்கள்.

ஓய்வில்லாமல் ஓடிய சேயின்
காலை துளைக்கிறது தோட்டா
தலைக்கு வைத்தகுறி
தெப்பியை தூக்கியெறிந்தது
ஆயிரம்பேரை எதிர்கொள்ளும் சக்தியை
ஐந்தாறு கொரில்லாக்களிடம்
காட்டியது ராணுவம்
பத்தடிதூரத்தில் மிகப்பக்கத்தில்
சுற்றி வளைக்கப்பட்டனர்.
முதன்முறையாக
சேயின் முன்பு நேருக்கு நேராக
நின்ற ராணுவ அதிகாரி
ஆச்சர்யத்தில் அதிர்ந்துபோனான்.

வெள்ளை மாளிகையை
வெடவெடக்க வைத்தது இந்த உருவமா?
அமெரிக்காவின் ஆணிவேரை
ஆட்டிப்பார்த்தது இந்த தோற்றமா?
உறுதி செய்ததும் உறைந்துபோனான்.

சேயும் வில்லியும்
கைதுசெய்யப்பட்டனர்.
உடன் லாகிகுவாரா
கொண்டுவாருங்கள்
துள்ளலுடன் தலைமையிடத்து
தகவல் வருகிறது.

சிறைவைக்கிறார்கள்.
அது ஒரு பள்ளிக்கூடத்தின்
இருட்டறை.
ஒற்றை மெழுகுவர்த்தி
ஒளிர்ந்துகொண்டிருந்தது.
மெல்லிய இரவில்
அந்த அற்புத மனிதனின்
கடைசி நிமிடங்கள்
கடந்துகொண்டிருந்தது.

ரணமாகிப்போன பாதங்கள்......
சங்கிலியால் பிணைக்கப்பட்டு
கைகால்கள்.....
புரட்டைத் தலை....
அழுக்கேறிய உடை
கசக்கியெறியப்பட்ட கரித்துணியாய்.........
சேதாரமாகிக் கிடந்தான்.

சேயின் உயிரைப்போலவே
உருகிக்கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி.....
உடம்பின் வலியை மீறி
சேயின் மனக்கண்ணில்
மங்கிய ஓவியமாய்
கடந்தகால நினைவுகள்.....
கடந்து வந்த பாதைகள்.....

பசியின் கூக்குரல்.
அடிமை மக்களின் அழுகுரல்.
கோவம்கொண்டு கொதித்ததும்.....
ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்.....
எத்தனை அற்புதமான கணங்கள்.

லத்தின் அமெரிக்கா முழுமையும்
விடுதலை பெறுவதை
என் அன்புத் தோழன்
பிடலின் கண்கள் கட்டாயம் காணும்.

எங்கள் மரணம்
மீண்டும்...மீண்டும்
எங்களை விளைவிக்கும்
ஏகாதிபத்தியத்தின்
திசைகள் தீப்பிடிக்கும்
அதன் எரிந்துபோன சாம்பலை
காற்று எங்கள் கல்லறையின்
ஓரத்தில் கொண்டுவந்து குவிக்கும்.

மனதிற்கு
நாங்கள் தோற்றால்
தெம்பூட்டிக்கொண்டான்.
ஏகாதிபத்தியம் வென்றதாய்
அர்த்தமல்ல.

இனி
அநீதிக்கு எதிரான வேட்டுச்சத்தம்
கேட்டுக்கொண்டேயிருக்கும்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
ஓராயிரம் கைகள்
ஓங்கிக்கொண்டுதானிருக்கும்.

ஒளிர்ந்து உருகிய மெழுகு
உயிர்விட்டிருந்தது.
விடிந்தது.
அக்டோபர் 9 ஆம் நாள்.
இன்றும் புரட்சியின் திசைகளை
புதுப்பிக்கும் நாள்

ஏகாதிபத்தியம் கூடிவிவாதித்தது
பிறகு கொல்வதென முடிவெடுத்தது.
சேயின் மனக்கண்ணில்
அத்தனை பெரிய அமெரிக்கா
இத்தனை பயங்கொண்டது,
சே என்ற ஒற்றை
மந்திரச் சொல்லுக்கு மட்டும்தான்

கொல்லும்வரை
வெள்ளை மாளிகையில்
வியர்வை நிற்கவில்லை
சேயின் மரணத்தை
உறுதிசெய்யும்வரை
உச்சந்தலையில் தீயை வைத்ததுபோல்
திமிறியது அமெரிக்கா

அவசர அவசரமாக
அரங்கேற்றப்பட்டது தண்டனை.
கொல்ல வந்தவன் சேயின்
கண்னைப்பார்த்தான்.
கலவரமானான்
அறையைவிட்டு அலறி ஓடினான்

அடுத்தவன் வந்தான்
மதுவைக்குடித்து மனதிற்கு
மரியோஜேமி எனும்
அந்த ராணுவ சர்ஜனின்
துப்பாக்கி சேயை குறிவைக்கிறது.

சேயின் கடைசி வார்த்தைகள் கேட்டு
அவன் கைகள் நடுங்கியது.
உன்னிடத்தில் மண்டியிட்டு
உயிர்வாழ்வதை விட
எழுந்து நின்று உயிர்விடுவது மேல்
கோழையே சுடு
நீ சுடுவது சேயை அல்ல
ஒரு சாதாரண மனிதனை

அடுத்த கணம் தோட்டாக்கள்
சுழல்கிறது.
கண்சிமிட்டாமல்...... கலங்கமில்லாமல்.....
நெஞ்சில் ஏற்கிறான்.
ஒரு சரித்திர நாயகனின் மரணம்
சத்தமில்லாமல் நிகழ்த்தப்படுகிறது.

பலகோடி இதயங்களில்
பட்டாம்பூச்சியாய் படபடத்தவன்
ஒரு சாதாரண மனிதனாய்
சாகடிக்கப்பட்டான்.
கண்களை முடாமல்
ஏகாதிபத்தியத்தை வெறித்தபடியே....
தன் கனவு உலகை
அடைக்காத்தபடியே.....
அநீதியின் குரல்வளை
நெறியடுப்போவதை நினைத்தபடியே.

இனம்....மொழி....தேசம்....
கடந்து ஓடிக்கொண்டேயிருந்தவன்
உயிர் விடைபெற்றது.
உலகையே நேசித்த
அந்த உன்னத மனிதன்
துடிப்புகள் ..அடங்கிப்போனது.

(புயலின் பயணம் அடுத்த இதழில் ஓயும்......)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com